தமிழர் சமயம்
சிறந்த இல்வாழ்க்கை தவத்தை விடச் சிறந்தது!
வினைகாத்து வந்த விருந்துஓம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச்
சொல்எதிர் சொல்லாள் எனில். (அறநெறிச்சாரம் 157)
விளக்கவுரை தீவினைகளைச் செய்யாமல் விலக்கி, தம்மிடம் வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனின் இல்வாழ்க்கை, தவத்தை விடச் சிறந்ததாகும். அலங்கரிக்கப்பட்ட கூந்தலையும் மென்மையான இயல்பையும் உடைய பெண்ணும் வந்த விருந்தினரைப் பேணி, கணவன் சொல்கின்ற சொல்லுக்கு மாறுபாடாக எதிர்த்து ஒன்றையும் சொல்லாதிருப்பாளாயின் சிறப்பு.
இல்லாளுக்குரிய இயல்புகள்
கொண்டான் குறிப்புஒழுகல் கூறிய நாண்உடைமை
கண்டது கண்டு விழையாமை - விண்டு
வெறுப்பன செய்யாமை வெ·காமை நீக்கி
உறுப்போடு உணர்வுடையாள் பெண். (அறநெறிச்சாரம் 158)
விளக்கவுரை கணவனின் குறிப்பறிந்து நடத்தலும், மங்கையர்க்குரிய நாண் உடைமையும், எப்பொருளையும் கண்டவுடன் விரும்பாமையும், கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையுமான இவற்றை மேற்கொள்வதுடன் அழகும் அறிவும் உடையவள் பெண் ஆவாள்.
கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத்
தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே,
வேல் வழி வெம் முனை வீழாது, மண் நாடு;
கோல் வழி வாழ்தல் குணம். (சிறுபஞ்ச மூலம் 13)
ஒழுகல் - நடத்தல்
விளக்கவுரை மனைவி கணவன் சொல்படியும், மகன் தந்தை சொல்படியும், சுற்றத்தார் அவனைப் போல நடத்தலும் நன்மையாகும். பகைவரோடு சேர்ந்து கொள்ளாமல் அரசன் எதிர்த்துப் போர் புரிவதும், நாட்டு மக்கள் அரசன் சொற்படி நடத்தலும் நன்மை தரும்.
மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,
ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு,-தொக்க
அலவலை அல்லாமை, பெண் மகளிர்க்கு - ஐந்தும்
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. - சிறுபஞ்ச மூலம் 51
தொக்க - கூடிய
அலவலை - அற்ப காரியம்
விளக்கவுரை மக்களைப் பெறுதல், அடக்கமுடைமை, அழகுடைமை, கணவன் கருத்துக்கு இசைதல், உணவின் மிகுதியை விரும்புதல் இந்த ஐந்து குணங்களும் பெண்டிர்க்கு இருத்தல் போற்றுதற்குரியது.
செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து. (திரிகடுகம் 98)
விளக்கவுரை அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக ஆள்வதும், தன் கணவன் குறிப்பின் வழியில் நடத்தலும், மாதம் தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை (குறள் 40)
குறிப்புரை: இது தெய்வத்தை தொழத்தேவை இல்லை என்று கூறவில்லை. அவ்வாறு பொருள் கொண்டால் தனக்குவமை இல்லாதான் குறள் 8-க்கு முரண்படும். தெய்வத்தை தொழவில்லை எனினும் கணவனுக்கு கட்டுபட்டால் பெய் என்று சொன்னால் மழை கூட பெய்யும் என்று கூறுவதன் மூலம் இது இவ்வுலகில் கணவனுக்கு கட்டுப்படுத்தல் குறித்த அவசியத்தை விளக்குகிறது. தெய்வத்தை தொழவில்லை என்றாலும் சொர்கத்துக்கு செல்ல முடியும் என்று இக்குறள் கூறவில்லை, கூறவும் கூறாது. கீழே உள்ள திர்மிதி நபிமொழியை ஒத்த குறள் இது.
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,
'பெய்' எனப் பெய்யும் மழை. திரிகடுகம் 96
விளக்கவுரை: கணவனுடைய குறிப்பறிந்து நடக்கும் மனைவியும், நோன்புகளை முறைப்படி செய்யும் தவசியும், நன்மைகளைச் செய்யும் அரசனும் பெய் என்று சொல்ல மழை பொழியும்.
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய. - (தொல்காப்பியம் சூ. 154)
விளக்கவுரை: தன்னைக் கொண்டவனுக்கு கட்டுபட்டு முதலாகத் தன் உயிரினும் சிறந்தவனாகக் குறிக்கொண்டொழுகும் மனத்திண்மையும் நிறைந்தியலும் காதற் பண்பும் நன்றின் பாலுய்க்கும் அறிவானே ஒழுகுதலும், மென்மைத் தன்மையாற் பிறர் குறையினைப் பாராட்டாத பொறையுடைமையும் மறைபிறரறியாமை நெஞ்சினை நிறுக்கும் திறனும், இன்னலும் இடும்பையும் நோக்காமல் ஒல்லும் வகையான் விருந்தினரைப் போற்றியளித்தலும் தலைவற்கும் தனக்கும் கேளிராயினாரையும் உறவாயின ரையும், ஆட்சிக்கு அங்கமாயினாரையும் பேணிக்காத்தலும் அவை போல்வனவாகிய தெய்வத்தையும் தென்புலத்தாரையும் தலைவனொடு அமர்ந்து ஓம்புதலும் குலமரபான் வந்த காமக்கிழத்தியரை வெறாது அவரான் மதிக்கப்பெறுதலும் பாணர் முதலாய வாயில்கட்கு அருளுதலும் ஊடலும் ஊடல்உணர்தலும் ஆகிய சால்புகளமைந்த தலைவியின் மாட்சிமைகளை முன்னின்று தலைவன் முகனமர்ந்து செவிமடுக்கும் முறையமையான் கூறும் கூற்றுக்கள், மனையகத்துப் புக்கு உரையாடும் மரபுரிமையுடைய பாணன் பாடினி, முதலாய வாயில்கட்கு உரியவாகும்.
“சொல் லெதிர் சொல்லல் அருமைத் தாகலின் / அல்ல கூற்றுமொழி அவள்வயி னான” (தொல். களவு. 108)
விளக்கவுரை தலைவன் சொல்லிற்கு எதிர்சொல் பேசும் உரிமை உடையவளாயினும் பேசுதல் முறையன்று.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறை வானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)
நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா, (நூல்: திர்மிதி 1079)
கிறிஸ்தவம்
அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். 2 உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். - (1 பேதுரு 3:1&2)
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோல, உங்கள் சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். (எபேசியர் 5:22)
எப்போதும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டில் வாழ்வதைவிட கூரையின்மேல் வாழ்வது நல்லது. (நீதிமொழிகள் 21:9)
முன்கோபமும் வாக்குவாதம் செய்வதில் ஆர்வமும்கொண்ட மனைவியோடு வாழ்வதைவிட பாலைவனத்தில் வாழ்வது நல்லது. (நீதிமொழிகள் 21:19)
எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள். அவளைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும். (நீதிமொழிகள் 27:15-16)