ஆத்மா (அ) உயிர்

தமிழர் சமயம்


உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்பதன்முனம்?
உயிர் அதாவது ஏதடா? உடம்பு அதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதுடா?
உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா! (சிவவாக்கியர் பாடல்)

உடம்புக்குள் வருவதற்கு முன்னால் உயிர் எங்கே இருந்தது? உயிர் என்றால் என்ன? உடம்பு என்றால் என்ன? உயிர் ஏன் உடம்புக்குள் வந்தது? உயிரை உடம்புக்குள் இட்டது எது? 

ஒளி உடையவர்களைத் தேர்ந்தெடுங்கள். வாக்குக் கேட்டு வருகிறவரைத் தேர்ந்தெடுப்பது போலக் கண்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என்கிறார் திருமூலர். 
 
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...' (பாடல் 724)

உடல் அழிந்து விட்டால், உயிரும் உடலை விட்டு நீங்கி விடும்.பின், உயிருக்கு உற்ற துணையான, மெய்ஞ்ஞானமாகிய பரம்பொருளை சேர முடியாது. அதனால் உடம்பை பாதுகாக்கும் வழிகளை அறிந்து, உடம்பை காப்பாற்றி வளர்த்து, அதன் மூலம் உயிரையும் வளர்த்தேன் என்பது பொருள்.

எல்லோரும் உடம்பை சதைப் பிண்டம், உடல் தேவையற்ற பாரம் என்றே பாடியிருக்கிறார்கள்.

அழுகணிச் சித்தர்,

"ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ...'

என, உடம்பை துர்நாற்றம் வீசுகிற "ஊற்றைச் சடலம்' எனக் குறிப்பிட்டார். ஆனால், திருமூலரோ "உடலைப் பாதுகாக்க வேண்டும்' என்கிறார். அடுத்த பாடலில்,

"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' (பாடல் 725)

எனப் பாடுகிறார்.

இந்த உடம்பை பாவச்சுமை, இழுக்கானது என நினைத்திருந்தேன். இந்த உடம்பில் பரம்பொருள் இருப்பதை அறிந்தேன். உடம்புக்குள் உத்தமனாகிய பரம்பொருள் கோயில் கொண்டிருப்பதால், உடம்பினைப் பேணிப் பாதுகாத்து வருகிறேன் என்கிறார்.

நம் உடம்பை நல்லபடியாக வளர்த்து, பேணிப் பாதுகாத்தல் அவசியம். ஏனெனில் அது இறைவன் வசிக்கும் இடம்.

உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம்?

சாலையில் வாழைப்பழ வியாபாரி தலையில் வாழைப்பழங்களைச் சுமந்தபடி செல்கிறார். அவரை "வாழைப்பழம்... இங்க வாங்க' என அழைப்போம்... கீரை சுமந்து விற்பவரை அழைக்க வேண்டும் எனில், "கீரை....' எனக் குரல் கொடுத்து அழைப்போம். ஒருவர் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாரோ, அதைக் கொண்டு அவரை அழைப்பது வழக்கம். நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர். 

கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'

இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும்.

உடம்பை வளர்ப்பது என்றால் நன்றாகத் தீனி போட்டு வளர்ப்பது, விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வது என்று பொருள் அல்ல... இறைவனின் வசிப்பிடம் என்பதை உணர்ந்து, அதைத் தவறாக பயன் படுத்தாமல், நல்ல நெறிகளின் படி வாழ்வது, ஆரோக்கியமாக வைத்திருப்பது என்றே பொருள். 

 

இந்துமதம்


அவ்யக்தோ யமசிந்த்யோ யமவிகார்யோ யமுச்யதே ।
தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோ சிதுமர்ஹஸி ।। கீதை 25

இந்த ஆத்மாவானது புலன்களால் அறிய முடியாதது, சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என சொல்லப்படுகிறது. ஆத்மாவை இவ்விதம் அறிந்து துயரத்தை அகற்று.

 

இஸ்லாம்


(நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக. - (குர்ஆன் 85)

 செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன். - (குர்ஆன் 2:173)

 

கிறிஸ்தவம்


உயிரின் ஊற்று நீங்கள்தான்(சங்கீதம் 36:9)

ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது. -  (உபாகமம் 12:23)

ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. - (லேவியராகமம் 17:11)

 

சிறிய பொய் கூறலாமா?


கிறிஸ்தவம் 

''மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர், பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்'' (லூக்கா 16:10)

இஸ்லாம் 

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: – “நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

தமிழர் சமயம் 


பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (கற்பியல்,4)

மற்ற நூல்கள் 

https://www.tamilvu.org/library/nationalized/pdf/89-vellaivaranar/tholkappiyamkarpiyal.pdf 

https://www.tamilvu.org/ta/courses-degree-p104-p1043-html-p1043225-26816 

பயன்படா செல்வம்

தமிழர் சமயம்

தன்னது சாயை தனக்குஉத வாதுகண்டு
என்னது மாடுஎன்று இருப்பர்கள் ஏழைகள்;
உன்உயிர் போம்; உடல் ஒக்கப் பிறந்தது;
கண்அது காண்ஒளி கண்டுகொ ளீரே - (திருமந்திரம் 170)


பொருள்: வெயிலில் இருக்கும் பொழுது ஒதுங்குவதற்கு நிழல் தேடுகிறீர்கள்; அதுவோ ஒன்றுமில்லாத மொட்டைவெளி; உங்கள் காலடியிலோ உங்களுக்கென்றே அளவெடுத்துச் செய்ததுபோலக் கச்சிதமாய் உங்கள் நிழல். அதில் ஒதுங்க முடியுமா? உங்களது நிழல் உங்களுக்கு என்றைக்காவது உதவியிருக்கிறதா?


இஸ்லாம் 

“மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (அறிவிப்பாளர்:மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள்,  நூல் : முஸ்லிம்-5497)

என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!” என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்). (69:28-29)

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால் அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான். - (89:20-24)

மேலும், அவர் (நரகத்தில்) வீழ்ந்து விட்டால், அவருடைய செல்வம் அவருக்கு பயனளிக்காது. - (92:11)

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது - (100:8-9)

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். -  (104:1-4)

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். - (102:1-3)

“நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், (உங்களுக்குச்) சோதனையாயிருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனிடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான (வெகுமதி) நற்கூலி உண்டு என்பதையும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். - (8:28)

செல்வமும், குமாரர்களும் (யாதொரு) பயனளிக்காத (அந்த) நாளில், - (26:88)

உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மிடத்தில் சமீபமாக நெருக்கிவைப்பவர்கள் அல்லர்_ விசுவாசங்கொண்டு நற்செயல்களும் செய்தவரைத்தவிர_ அவர்களுக்கு அவர்கள் செய்த (நல்) வினையின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு, அவர்களோ (சுவனபதியிலுள்ள) உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியாக இருப்பவர்கள். - (34:37)

அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். - (58:17)

 ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள். 

ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், ” என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள்.

பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன;  பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி (1465, 2842)

கிறிஸ்தவம்  

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். -(மத்தேயு 6:19-21)

 24 ,“எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது. (மத்தேயு 6:24)

தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும். - (நீதிமொழிகள் 11:4)

யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும். பணம் உனது மனதை மாற்ற விடாதேயும். உனது பணம் இப்போது உனக்கு உதவாது. வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது.  (யோபு:36:18-19)



கடவுளுக்கு வழிபடாதோர்

வழிப்படுதல் என்றால் என்ன?


தமிழில் வணக்கவழிபாடு என்பது இரு சொற்கள் இணைந்த ஒருசொல்.

வணக்கம் - வணங்குதல், தொழுதல் 
வழிபாடு - வழிபடுதல், உபதேசத்தை பின்பற்றுதல் 

இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு சொல்லாக அடையாள படுத்துவதற்கு ஓர் நோக்கமுண்டு. கடவுளை வணங்குவது மட்டுமல்லால் அவன் மறை நூல்கள் சொல்லும் நெறிகளை பின்பற்றுபவதன் மூலம் அவனுக்கு வழிப்பட வேண்டும். நெறிநூல்களை பின்பற்றுகிறீர்கள் ஆனால் கடவுளை வணங்கவில்லை என்றால் அதற்கும் மதிப்பில்லை. இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் அவன் உண்மையிலேயே ஆன்மீகவாதி ஆவான். 
 

தமிழர் சமயம் 


தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

இஸ்லாம் 

 “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:32) 

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அத்தகைய அழகிய செயல் புரிவோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. (அல்குர்ஆன் 18:30)

'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (அல்குர்ஆன் 29:2,3)

கிறிஸ்தவம் 


அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன். - (சங்கீதம் 89:30)

தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். அவன் வஞ்சகன், பொய்யன். தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும். - (சங்கீதம் 43:1)

எத்தனை பிறவி உண்டு? / ஏழேழு ஜென்மாமா? ஒரே ஜென்மமா?

தமிழர் சமயம் 

 
பல பிறப்புகள் என்கிற வாதமுமும் இம்மை மறுமை என இரண்டே பிறப்புகள் என்றும் பலர் பல விதமான கொள்கைகளை முன்மொழிவதை நாம் காணலாம். அதற்கு ஆதாரமாக பல செய்திகளை அவர்களை கூறும்பொழுது அதன் மூலத்தையும் உண்மைத் தன்மையையும் ஆராய்வது அவசியமாகிறது. ஏனென்றால் பௌதீக விதிக்கு மீறிய நிகழ்வுகளாக பிறப்பும் அதன் இரகசியங்களும் இருக்கிறது. 
 
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை: 
ஒருமை-ஒருபிறப்பு,தனிமை; 
செயல்-செய்தல்; 
ஆற்றும்-செய்யும்; 
பேதை-அறிவிலி; 
எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்; 
தான்-தான்; 
புக்கு-புகுந்து; 
அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய; 
அளறு-நரகம், நிரயம்.

மணக்குடவர் உரை: : பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

எமது மாற்று உரை: அறிவிலி தனிமையில் செய்யும் செயலாலே, இவ்வுலகில் படும் துன்பத்துடன் மீண்டும் எழும் வாழ்க்கையிலும் அவன் நரகத்தில் புகுத்தப்பட்டு அழுத்தப்படுவான்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்கு சான்று இந்த குறள்.

    • "எழுமையில் அளறு" அதாவது "மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம்" என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எறிகிறது.
    • எழுமை என்பதனை "ஏழு" என்று பொருள் கொண்டால், ஏழு பிறவியிலும் நரகம் என்ற கருத்து வரும். ஏழு பிறவி என்பது இவ்வுலகில் நிகழும் என்றால், நரகத்தை நாம் இங்கு கண்டதுண்டா? அல்லது நம்முடன் வாழும் நபர் யாராவது நரகில் வாழ்கின்றனாரா?
    • முதல் பிறவியில் ஒருவன் பாவங்கள் செய்து இருந்தால் கூட அடுத்த ஆறு பிறவியில் தான் நரக வாழ்க்கை இருக்குமே தவிர இதில் குறிப்பிட்டது போல ஏழு பிறவியில் அல்ல.
    • நரகம் என்பது இடத்தை குறிக்கிறதா அல்லது வாழ்க்கை நிலையை குறிக்கும் சொல்லா என்று யோசித்தால் அது ஒரு குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட இடத்தை குறிக்கும் சொல் ஆகும்.
    • கடுமையான வாழ்கை நிலையை "நரகம்" என்று குறிப்பிடுவதாக கொண்டால் கூட வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் உள்ள யார் ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
    • நிதர்சனம் என்னவென்றால் நரகம் முடிவில்லாதது, நெருப்பு சூழ்ந்தது. அதற்கும் இவ்வுலகத்திற்கு தொடர்பில்லை.
    • எழுமையில் மனிதன் "வீடு" அல்லது "அளறு" என இரண்டில் ஒன்றை அடைவான் என்கிற இதன் மறைமுக பொருளானது எழுமையில் ஒருவன் புவியில் பிறப்பான் என்ற ஏழு ஜென்ம இந்துமத கருத்தை புறக்கணிக்கிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள். 
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’ (குறள் எண் 62) 

உரை: எழுபிறப்பினுந் (மறுமையினுந்) துன்பங்கள் சாரா: பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

‘சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.’ (குறள் எண் 98)

உரை: இனிய சொல்லானது இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் (எழுபிறப்பிலும்) இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)

உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை எழுமை எழுபிறப்பும் (மறுமையிலும்) நினைப்பர்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 126)

உரை: ஒரு பிறப்பில் ஆமை கூட்டுக்குள் ஒடுங்குவதுபோல் ஐம்புலன்களையும் ஒருவன் அடக்குவானாகில் அது அவனுக்கு எழுமையும் (மறுமையிலும்) சிறப்பு  சேர்க்கும்.

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 398)

உரை: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு இம்மையில் மட்டுமல்லாமல் எழுமையும் (மறுமையிலும்) உதவும் தன்மை உடையது.

‘மனநலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இன நலத்தின் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 459)

உரை:ஒருவனுக்கு மன நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனநலத்தால் மேலும் சிறப்புப் பெறும்.

‘இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.’ (குறள் எண் 1042)

உரை: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப ...’
 
என்று அகநானூறு (66 ஆம் பாடல்) மறுமை பற்றிப் பேசுகிறது.

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மினென் பாரே - நறுநெய்யுள்
கட்டை யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.’

‘மறு உலகத்தைப் பற்றிப் பேசாமல் இம்மையில் எல்லாச் சுகங்களையும் அனுபவியுங்கள் என்று சொல்பவர்கள் நறுமணம்   கொண்ட நெய்யில் செய்து பாகில் ஊறிய அடையை உண்ணக் கொடுக்காமல், செங்கல்லை உண்ணக் கொடுப்பவர்களைப் போன்றவர்கள்!’ என்கிறார்   மூன்றுறையரையனார் தம் பழமொழி நானூறு என்ற நூலில்.
 
‘எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழிநல் குரவே தலை’ ... (நாலடியார் 275)

கடல்நீர் அளவு அதிகமிருந்தாலும் அதை மக்கள் தேடிப் பருகுவதில்லை. சிறுகிணற்றின் ஊற்று நீரையே தேடிப் பருகுவார்கள். எனவே, மறுமை  இன்பத்தை நாடி  அறம் செய்யாதாரின் செல்வத்தை விட, சான்றோரின் வறுமையே போற்றத்தக்கது என்கிறது நாலடியார் வெண்பா.

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. - (சிவவாக்கியம் 47)

ஆவையம் பாவையும் மற்றற வோரையும் 
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் 
காவலன் காப்பவன் காவா தொழிவனேல் 
மேவும் மறுமைக்கு மீளா நரகமே (திரு .243)

பசு , பெண் , அறவோர் , துறவோர் முதலானோரை மன்னன் காத்தல் வேண்டும் என்கின்றது திருமந்திரம் ; அவ்வாறு  காக்கவில்லையெனில் அரசனுக்கு நரகமே கிட்டும் என்பதை 
எடுத்துரைக்கின்றது

மறுமை நோக்கின்றோ? அன்றே!
பிறர் வறுமை நோக்கின்று
அவன்கை வண்மையே! (புறநானூறு 141)

பொருள்: அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது. 

இஸ்லாம்  


“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் (உயிரை) கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (குர்ஆன் 32:11)

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். குர்ஆன்  2:4

'மனிதர்களே! (இறந்த பின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்: (என்ற நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படி செய்கிறோம்: பின்னர் உங்களை குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம்: பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்துவிடுகிறவரும் இருக்கின்றனர்: (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்த பின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கபடுபவரும் உங்களில் இருக்கின்றனர்: மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர்: அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொருவகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது' (17: 5) 
 

கிறிஸ்தவம் 


அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)

மறுஜென்மம் எனபது இறந்து எழுப்பப்படும் காலத்தை குறிப்பதை நாம் இங்கே அறியலாம். 
 

முடிவுரை

எனவே ஏழு ஜென்மம் எனபது ஒரு கற்பனைக் கதை. பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்கிற இறைவனிடமிருந்து வந்த புனித நூல்கள் கூறுவது இம்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான வாழ்வு, மறுமையில் முடிவில்லா பெருவாழ்வு. இம்மை வாழ்வும் அதன் தன்மைகளையும் நாம் அறிவும். மறுமையில் நிரந்தர சொர்கம் அலல்து நிரந்தர நரகம் வழங்கப்படும் அவரவர் செயலுக்கு ஏற்ப.

செயல், பண்ணுதல், அமல், வினை, கருமம் & கர்மா இவை அனைத்தும் ஒரே பொருளை கொண்டவை.