தமிழர் சமயம்
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (குறள்: 439)
பதவுரை:
வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல். வியவற்க - வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
தன்னை -தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை.
நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம்
நன்றி - நன்மை; உதவி; அறம்.
பயவா - பயக்காத, தாராத, பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத
வினை- செயல்
உரை: எந்தக் காலத்திலும் தன்னை வியந்து பாராட்டி நலலவனாகக்கருதி உயர்வாக நினைக்கும் நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் - [பொருட்பால், அரசியல், வலியறிதல்குறள் 474]
பொழிப்பு (மு வரதராசன்): மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
“எம்மை அறிந்திலீர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்” (நாலடி 165)
உரை: எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிக்கும் பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பொரியோர்' என மதிப்பதே பெருமையாகும்.
“கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாரட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன்என் றெள்ளப் படும்” (நாலடி 340)
உரை: ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து).
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்) பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப் படமாட்டார்கள். (குர்ஆன் 4:49)
அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
கிறிஸ்தவம்
ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறவனே நல்லவன். (2 கொரி 10:17-18)
இயேசு கூறினார் "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே" (மத்தேயு 19:17, மாற்கு 10:18)
கடவுள் பாவிகளின் ஜெபங்களுக்கு அவர்கள் நின்று, ஜெபித்து, தங்களைத் தாழ்த்தும்போது அவர்களுக்குப் பதிலளித்தார். “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ண கோவிலுக்குள் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். "பரிசேயன் நின்று தனக்குத்தானே ஜெபித்துக் கொண்டிருந்தான்: 'கடவுளே, நான் மற்றவர்களைப் போல அல்ல: மோசடி செய்பவர்கள், அநியாயக்காரர்கள், விபச்சாரம் செய்பவர்கள் அல்லது இந்த வரி வசூலிப்பவர்களைப் போல இல்லை. 'வாரத்தில் இருமுறை நோன்பு நோற்பேன்; எனக்குக் கிடைக்கும் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கிறேன்.' "ஆனால் வரி வசூலிப்பவர், சிறிது தூரத்தில் நின்று, வானத்தை நோக்கி தனது கண்களை உயர்த்தக்கூட விரும்பவில்லை, ஆனால் கடவுளே, பாவியான என்மீது கருணை காட்டுங்கள்!" என்று மார்பில் அடித்துக் கொண்டிருந்தார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் மற்றவனை விட நியாயமானவனாகத் தன் வீட்டிற்குப் போனான்; ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் தாழ்த்தப்படுவார்கள், ஆனால் தன்னைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார். - (லூக்கா 18:10-14)
54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். (யோவான் 8)
அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. (1 கொரி 13:4)
இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்! ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும். (1 சாமுவேல் 2:3)