விதியின் தன்மை

தமிழர் சமயம்  

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி–தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். - (மூதுரை பாடல் 19)

பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது விதியை பொறுத்தது

இப்பாடலின் பொருள், பாத்திரத்தின் கொள்ளளவுதான் அது கொள்ளும் நீரின் அளவை தீர்மானிக்கும். அது போல ஒரு மனிதனால் எவ்வளவு தாங்க முடியுமோ (நன்மையோ, தீமையோ) அவ்வளவு தான் அவனுக்கு விதிக்கப்படும் என்பதாகும்.

இப்போது விதியின் தன்மையை பற்றி மற்ற சமயங்களின் விளக்கத்தை பார்ப்போமா?

கிறிஸ்தவம் 
 
உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். - (1 கொரிந்தியர் 10.13)

இஸ்லாம்  
 
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்  - (குர்ஆன் 23.62)

இறைவனை தவிர மற்றவைகளை வணங்கலாமா?

தமிழர் சமயம் 

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4)

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள். 
 
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல 
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (கடுவெளிச் சித்தர் 27) 

இஸ்லாம் 

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (குர்ஆன் 2:21)

(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ( 21:108)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

கிறிஸ்தவம் / யூதம் 

வேறெந்த கடவுளையும் வணங்க கூடாது என்று பத்து கட்டளைகளில் யெகோவா சொல்லியிருந்தார். எந்தவொரு சிலையையும் வணங்க கூடாது என்றும் சொல்லியிருந்தார். (உபா. 5:6-10) 

 முடிவுரை

கடவுள் ஒன்று என்று பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் வாங்குதல் என்று வரும் பொழுது அதில் சிலைகளையும், நல்ல மனிதர்களையும், மற்ற சில உயிரினங்களையும், இயற்கையும் சேர்த்து கொள்கின்றனர். ஆனால் நான்மறைகள் அதை வன்மையாக கண்டிக்கிறது.


மறுமை பிறப்பு

தமிழர் சமயம் 

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே. (திருமந்திரம் 2852)

பொருள்சீவனுக்கு கிடைத்த உடல் கெட்டுவிட்டால் மற்றொரு நல்ல உடலை வழங்குவதற்கு இறைவன் இருக்கின்றான். அதிக மழை அதிக வறட்சி நிலவும் நாட்டை விட்டு விட்டு வேறு நாடு சென்று பிழைப்பர் மனிதர்கள். குடியேறிய வீடு பழுது பட்டால் வேறு வீட்டுக்கு குடியேறுவது போல சீவன் ஓர் உடலை விட்டுவிட்டு வேறு ஓர் உடலை எடுத்துக் கொள்ளும். சிவஞானம் பெற்றவர்கள் இதனை நன்கு அறிந்து கொள்வார்கள்.

இஸ்லாம் 

மனிதன் - (மடிந்தபின் உக்கிப்போன) அவனது எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணுகிறானா? அன்று! அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (குர்ஆன் 753-4)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும், கத்னா செய்யப்படாதவராகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “ நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்.” (குர்ஆன் 21:104)

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கிறார்கள்: அப்படியல்ல! அவனது (உயிர்கொடுத்து எழுப்புவதான) வாக்கு மிக உறுதியானதாகும்; எனினும், மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (குர்ஆன் 16:38)

கிறிஸ்தவம் 

3 அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.

4 அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.

5 இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6 ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. 7 நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ 8 காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார். (யோவான் 3)