தமிழர் சமயம்
மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும்
அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
(தேவாரம், திருமுறை 1, 076 பொது, பாடல் 1)
பொருள்: அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.
நெஞ்சு நினைத்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. (திருமந்திரம் 2707)
பொருள் : தினமும் தூங்குவதற்கு முன் உள்ளத்தில் நினைத்து, வாயால் தெய்வமே என்று கூறி உன் துணையுடன் உன் திருவடியில் சரண் அடைகிறேன் என்று எண்ணி இருப்பின், வெண்மேகம் தவழும் வடக்கு எல்லையை உறைவிடமாக கொண்ட இறைவனை அஞ்சினால் அவனது அருள் பெறலாமே.
சொ.பொருள்: பிரான் - இறைவன், கடவுள், தெய்வம்; துஞ்சும் பொழுது - உறங்கும் பொழுது; மஞ்சு - வெண்மேகம்; வடவரை - வட + வரை = வடவரை; வட - வடக்கு; வரை - எல்லை; மீதுறை = மீது + உறை; உறை - இருப்பிடம்; அஞ்சி - பயந்து;
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே - திருமந்திரம் 810
விளக்கம்: இவனருள் வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன் கருணை பொழிவான், அறிவு மினுங்கப் பெறும். வான்கங்கை பாயப் பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்.
காய்ந்த அறிவு - மினுங்கும் அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி
கிறிஸ்தவம்
கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்: மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்: அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவரும் நல் அறிவை உடையவர்கள்: அவருடைய துதி என்றென்றும் நிலைத்திருக்கும். - (சங்கீதம் 111:10)
“மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். (மத்தேயு 10:28)
இஸ்லாம்
இப்னு மஸ்வூத் ரலி கூறினார்கள் ; "அறிவு என்பது அதிகமான செய்திகளை (ஹதீஸ் அறிவிப்புகள்) அறிந்து வைப்பதல்ல, உண்மையில் அறிவு என்பது அல்லாஹ்வை அஞ்சுதல் தான்" (இப்னு ஹிப்பான் - ரௌலத்தல் உகாலா 9)
அல்லாஹ் நாடினாலன்றி, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. (படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன். (குர்ஆன் 74:56)
நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (குர்ஆன் 5:44)
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (குர்ஆன் 9:13)