பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)
சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது
முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)
சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)
கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2)
பதவுரை:
சாதி - சாதி என்பது
இரண்டொழிய (இரண்டு + ஒழிய): இரண்டைத் தவிர
வேறில்லை - வேறு ஏதும் இல்லை
சாற்றுங்கால் (சாற்றும் + கால்): சொல்லும் பொழுது (சாற்றுதல் - சொல்லுதல்)
நீதி வழுவா - நீதி தவறாத (வழுவுதல் - விலகுதல்)
நெறிமுறையின் - நல்வழியில்
மேதினியில் - பூமியில், உலகில்
இட்டார் - இடுபவர்கள் (வறியவர்களுக்கு உதவி இடுபவர்கள்)
பெரியோர் - உயர்ந்தவர்கள், உயர் சாதியினர்
இடாதார் - இடாதவர்கள் (வறியவர்களுக்கு கொடுக்காதவர்கள்)
இழி குலத்தோர் - இழிந்த குலத்தவர்கள் (சாதியினர்)
பட்டாங்கில் - அற நூல்களில் (பட்டாங்கு - அற நூல்கள்)
உள்ளபடி - இருப்பதின் படி
பொருளுரை: அற நூல்களில் உள்ளதன்படியும் நீதி தவறாத நெறிமுறையின்படியும் சொல்வதென்றால், இந்த உலகில் இரண்டு சாதியைத் தவிர வேறு இல்லை; அவை, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த சாதியினர், பிறருக்குக் கொடுக்காத தாழ்ந்த சாதியினர்.
கருத்து: உலகில் இரண்டு சாதிகள் மட்டுமே உண்டு வேறு சாதிகள் இல்லை - அவர்கள் ஒருவர் கொடுப்பவர்கள் (உயர்குலத்தினர்); மற்றொருவர் கொடுக்காதவர்கள் (இழிகுலத்தினர்).
சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேரரே. (தேவாரம் 5.60.3)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமனில்லை நாணாமேசென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்துநின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே (திருமந்திரம் 2104)
பதவுரை: ஒன்றே குலமும்: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது - எல்லோரும் ஒரே குலம்.
ஒருவனே தேவனும்: அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். கடவுள் இரண்டோ, மூன்றோ, முப்பாத்தது முக்கோடியோ கிடையாது
நன்றே நினைமின்: நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.
நமன் இல்லை: அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..
நாணாமே: வெட்கப் படாமல்
சென்றே புகும்கதி இல்லை: நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை
நும் சித்தத்து: உங்களுடைய சித்தத்தில்
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே: எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்
பொழிப்புரை: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.
நாலடியார் பாடல்கள்
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினைஎன்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195)
பொருள்: நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும்.
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறுஇலை தரணியோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல்
எந்நாளாயினும் இரப்பவர்க் கிட்டுப்
புலையுங் கொலையுங் களவுந்தவிர்ந்து
நிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து
ஆணும்பெண்ணும் அல்லதை யுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப் படாது
சிறப்புஞ்சீலமும் அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே. (கபிலர் அகவல் 124 - 133)
வள்ளுவன் வாக்கு
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். (குறள். 972)
பொருள்: எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை
குறிப்பு - இக்குறளை மேற்கோள் காட்டி வருணாசிரமத்தை உண்டென்று வாதிடுவோர் உண்டு.. ஆனால் வருணம்/சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இங்கே 'தொழில்' என்பது ஒருவர் செய்யும் செயல்/வேலை அறம் சார்ந்ததா இல்லையா என்பதை பொறுத்து வேற்றுமை படும் என்கிறது.
அதே போல,
பாணன் பறையன் துடியன் கடம்பனென்றுஇந்நான் கல்லது குடியுமில்லை – (புறநானூறு 335)
ஒரு சிலர் இதனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால் இது மக்களை இன்னாரென்று குறிப்பிட்டு காட்டவே பயன்படுத்தப்பட்ட ஒரு குறியீடு. இன்று சாதி என்று சொல்லப்படும் அந்த கட்டமைப்புக்கும் ஏற்றதாழ்வுக்கும் இதற்கும் அணு அளவு கூட தொடர்பில்லை.
எனவே சாதியை தூக்கி பிடிப்பது தவறு மட்டுமல்ல அது தமிழர் பண்பாட்டிற்கு மட்டுமல்ல மனித குல பண்பாட்டிற்கே செய்யும் துரோகம்.. ஏனென்றால் அறிவுள்ள பண்பட்ட சமூகம் மொழி கொண்டோ சாதி கொண்டோ நிறம் கொண்டோ பிரிவினைகளை ஏற்காது.. பிரிவுகள் கொள்கையில் ஏற்படுமே தவிர வேறெதிலும் இல்லை.. பண்பட்ட சமூகம் அதிலும் இணக்கம் ஏற்பட வழியை கண்டே தீரும்..
கீதை
“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச” (கீதை 18:41-44)
கருத்து: வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக குணமும் செயலும் ஒருவரது வர்ணத்தை (தரத்தை) முடிவு செய்கிறது.
வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.
எனவே, வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது.
சோவின் எங்கே பிராமணன்?
ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. போன்றவை இவர் பேசிய எங்கே பிராமணன் தொடரின் சுருக்கம். இந்த தொடரின் ஆதார செய்திகள் பெரும்பாலும் கீதை, இதிகாசம் மற்றும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. (எங்கே பிராமணனை வாசிக்க, to download)
ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்பது, எது தர்மம் என்பதை வேதாந்த ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.
சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.
குறிப்பு: எனவே இது பிறப்பால் ஏற்படுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் குணத்தாலும் செயலாலும் ஏற்படுகிறது. இதற்கு மாறாக கீதையை திரித்தவர்கள் நயவஞ்சகர்கள். கீதையின் பொருளை திரித்தும் அதை மகாபாரதம் போன்ற கதையில் திணித்தும் அதுதான் இந்த இந்திய பாரதம் என்கிற அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யப்பட்ட இந்த கருத்தானது இடிந்து விழும் பொய்யிலே கட்டிய கோட்டை ஆகும். இப் போலி கோட்டையை நம்புவதை விட சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தும் சமயத்தை தழுவுவதுதான் அறிவுடைமை. சாதி கூடாது என்று அனைத்து மொழியிலும் இறைவன் சொல்லியிருக்க, அதை பின்பற்றுவோரை விரும்புவானா? அல்லது புறந்தள்ளியவரை விரும்புவானா? அது இருக்கட்டும், அவர்களில் மெத்த படித்தவராக அறியப்பட்ட திரு.சோ ராமசாமி சாதியை நடைமுறைப் படுத்துகிறவர்களைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?
சோவும் சாதிப்பற்றுள்ளவர், "சாதி வெறியை மட்டும் அடிப்படயாக கொண்ட, தெய்வ நம்பிக்கை அற்ற" சாவர்க்கரால் வளர்த்தெடுக்கப்பட்ட RSS-ஐ ஆதரித்தார் என்றறிந்த பின் அவரை "கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" குறளுடன் உரசிப் பார்த்தால், திரு சோ.ராமசாமி நூல்களை கசடற கற்கவுமில்லை கற்றவைகளின்படி கூட நிற்கவுமில்லை என்று உலகுக்கு முடிவுரைக்கிறது.
இஸ்லாம்
முகமது நபி அவர்கள் தனது இறுதிப் பேருரையில்: மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர! (நூல்: அஹ்மத் 22391)
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)
‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (குர்ஆன் 30:22)
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)
இஸ்லாத்திலும் பிரிவுகள் இருக்கிறதே என்று கூறுவோர் உண்டு, அவர்கள் கொள்கையின் அடிப்படியில் பிரிந்து நிற்கிறார்கள், அவர்கள் மத்தியில் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. கம்யூனசித்தில் உள்ள வகைகளை சாதி என்று குறிப்பிட முடியுமா? முடியாது அல்லவா? ஏனென்றால் அவர்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்து நிற்கிறார்கள் மேலும் தீண்டாமையும் அந்த வகையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வும் கிடையாது. அது போலத்தான் இஸ்லாத்திலும் சன்னி, ஷியா, காதியானி போன்ற முக்கிய பிரிவுகளும் அதன் உட்பிரிவுகளும் உண்டு ஆனால் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. பிரிவு அல்லது வகை என்பது குணங்களை அடிப்படையாக கொண்டது, சாதி என்பது பிறப்பை அடிப்படையாக கொண்டது.
பேதுரு மக்களை நோக்கி. "....எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது....." (அப்போஸ்தலர் 10:28)
“மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவருக்கு வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். (அப்போஸ்தலர் 10:34, 35)