வட்டி

தமிழர் சமயம்


திருமூலர் திருமந்திரம்

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. (திருமந்திரம் - முதல் தந்திரம் - 20 அறஞ்செயான் திறம்-1.)

(பொழிப்புரை)  மரத்தின் உயரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிவதற்கு ஒப்பானது, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மூலம் சம்பாதித்தவை, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டு ஒழிவதே ஆகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.

(குறிப்புரை)  பட்டி - பட்டிமை(களவு); அஃதாவது வேண்டியவாறே ஒழுகுந்தன்மை. பொருள் முட்டுவந்துழி அது நீங்குதற்பொருட்டுத் கடன் கொள்பவர்பால் அம் முட்டுப்பாடே காரணமாக அவர் பொருளை `வட்டி` என்னும் பெயரால் தாம் வேண்டும் அளவு பறிப்பார், தம் பொருளைப் பிறர்க்கு ஈயாதவரினும் கொடியராதல்பற்றி அவரை, `பட்டிப் பதகர்` என்றார்.
பதகன், பெயர்ச்சொல்.: கொடும்பாவி, கீழ்மகன்

திரிகடுகம் 

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,
நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும்
இம் மூவர் ஆசைக் கடலுள் ஆழ்வார். - (நல்லாதனார் திரிகடுகம் 81)

(பொருள் : வாசி - வட்டி, துறை - நீர்த் துறை)

பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், வட்டிக்கு கொடுத்துப் மிகுதியான பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.

தமிழ் பழமொழி : வட்டி ஆசை முதலுக்கு கேடு.

இஸ்லாம்


ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.- (அல்குர்ஆன் 3:130)

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நீண்ட காலம் தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:276)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் 30:39)

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அல்குர்ஆன் 4:161)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! “அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.”
(அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி) புஹாரி 2085)

வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.)

கிறிஸ்தவம் 


உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். - (யாத்திராகமம் 22:25)
 
வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி,  - (எசேக்கியேல் 18:8)

 வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை,  - (எசேக்கியேல் 18:13)

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை  - (ங்கீதம் 15:5)
 



யூதர்களின் வட்டி திட்டம்




பெரும் பாவங்கள்

தமிழர் சமயம் 


கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே 

பொழிப்புரை

1) பிற உயிரைக் கொல்லுதல்,
2) பிறர் பொருளைக் களவு செய்தல்,
3) கள்ளுண்டல்,
4) நெறிநீங்கிய காமத்து அழுந்தல்,
5) பொய் கூறல்`

என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம். 



இஸ்லாம் 


1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. உறவினர்களை வெறுத்தல்
10. விபச்சாரம்
11. ஆண் புணர்ச்சி
12. வட்டி
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
16. தலைவன் அநீதி செய்தல்
17. பெருமை
18. பொய்ச்சாட்சி கூறல்
19. மது அருந்துதல்
20. சூது
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
22. மோசடி செய்தல்
23. களவு
24. வழிப்பறி
25. பொய்ச் சத்தியம்
26. அநீதி இழைத்தல்
27. கப்பம் பெறல்
28. தகாத உணவு
29. தற்கொலை
30. பொய்
31. கெட்ட நீதிபதி
32. அதிகாரியின் இலஞ்சம்
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
34. கூட்டிக் கொடுத்தல்
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
37. முகஸ்துதி
38. கற்ற கல்வியை மறைத்தல்
39. சதி செய்தல்
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
41. விதியைப் பொய்ப்படுத்தல்
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்
43. கோளுரைத்தல்
44. திட்டுதல் (சபித்தல்)
45. வாக்கு மாறுதல்
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
47. கணவனுக்கு மாறு செய்தல்
48. உருவப் படம் வரைதல்
49. ஒப்பாரி வைத்து அழுதல்
50. கொடுமை செய்தல
51. வரம்பு மீறுதல்
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
54. துறவிகளைத் துன்புறுத்தல்
55. மமதையும், தற்பெருமையும்
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
57. அடிமை ஒளிந்தோடல்
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
60. மேலதிக நீரைத்தடுத்தல்
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆவைத் தவற விடல்
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்

எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும். - (குர்ஆன் 32:20)

விதி

தமிழர் மதம் 

ஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும்
வேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;-
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டாவிடுதல் அரிது.. - (நாலடியார் 109)

 (பொ-ள்.) ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.

(வி-ம்.) மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில் யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் (விதியினால்) அவர்கள்பால் வந்து அடையகூடியது நன்மையோ தீமையோ அடையாமல் விடுதல் இல்லை.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். - 380

பரிமேலழகர் உரை: மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?  

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - 377

பரிமேலழகர் உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம்

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57 : 22)

ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆம் (தெரியும்)'' என்று சொன்னார்கள். அவர் "அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள்? நற்செயல் புரிய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஒவ்வொருவரும் "எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது "எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரி 6596) 

”அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’ (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318) 

விதியை மதியால் வெல்ல முடியுமா?  முடியும்..!

பதவுரை: மதி - அறிவு, வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய செய்கடன். (சங். அக.)

நாயகம் (ﷺ) நவின்றார்கள்; “விதியை, ‘துஆ’வைத் தவிர வேறு எதுவும் மாற்றாது. ஆயுளை, நன்மையை தவிர வேறு எதுவும் அதிகரிக்கச் செய்யாது. ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்.” (ஆதாரம் இப்னு மாஜா: 4914)

கிறிஸ்தவம்

குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.

என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. (சங்கீதம் 139 :16)

எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை! பறவை வானில் பறப்பது உட்பட⁉

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. (மத்தேயு 10 :29)

முடிவுரை

ஊழ் எனப்படும் விதி உண்டென்றும் அனைத்தும் அவற்றின் அடிப்படையிலேயே நிகழுகிறது.

எத்தனை இறைவன்?

எத்தனை இறைவன் இருப்பதாக உலகில் உள்ள புனிதர்கள் கூறி உள்ளனர்? 

அகத்தியர்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு - (ஞானம் 1:1)

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (ஞானம் - 1:4)

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள்.

அவ்வையார்

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - (ஞானக்குறள் 124)

கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம். (125)

கருத்து: ஆராய்ந்து பார்க்குங்கால், பரந்த இந்த உலகுக்கு ஒரே சூரியன் இருப்பதைப் போல இப்புவியி வாழும் அனைத்து உயிரினத்திலும் சிவன் ஒருவனே ஆன்மாவாகக் கலந்து இருக்கிறான்.

ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம். (196)

கருத்து: மூல வித்தாகி, அதிலிருந்து உதிக்கும் எல்லா உயிர்களின் உடலுக்குள் பரவி, ஒரே சீவனாகி நிற்கும் சிவம்.

மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம். (198)

கருத்து: பூமியில் பிறந்திருக்கும் உயிர்களுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகி விண்ணகத்தில் அதாவது இந்த உலகெங்கும் வியாபித்து இருந்து அவற்றைக் காக்கிறான்.

திருமூலர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - (திருமந்திரம்)

பதவுரை:  

ஒன்றே குலமும்: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். 

ஒருவனே தேவனும்: கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது 

நன்றே நினைமின்: நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். 

நமன் இல்லை: அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. 

நாணாமே: வெட்கப் படாமல் 

சென்றே புகும்கதி இல்லை: நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை 

நும் சித்தத்து: உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே: எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - திருமந்திரம் 5

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. - திருமந்திரம் 109

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - திருமந்திரம் 110

கருத்து: சிவனை விட்டால் வேறு தெய்வம் இல்லை அவன் தனியானவன் அவனுடனோ அவனல்லமலோ வேறு தெய்வம் இல்லை. இதன் மறை பொருள் இன்று சிவன் என்ற அறியப்படுகிற உருவத்திற்கும் கதைக்கும் இங்கே சொல்லப்படும் கருத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லை. எனவே சிவன் என்று சொல்லப்படும் இறைவனை நாம் தவறாக உருவகபடுத்தி புரிந்து வைத்து உள்ளோம்.

சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

கருத்து: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவம் உள்ள தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது(தவம் என்பது சிவத்துக்காக செய்யப் பட வேண்டும்); அவ்வாறு செய்ய தலைப்படுபவர்களுக்கு அவம் (கேடு) அல்லாமல் வேறு இல்லை. ஆறு சமயங்களை பின்பற்றுவதும் தவமல்ல(பல சமயங்களை பின்பற்ற கூடாது), எனவே நந்தி தேவர் கூறும் வேதத்தை பின்பற்றி சிவனை வணங்கி வீடு பெருவீராக.

சிவவாக்கியர்

எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே. - (பாடல் 224)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே! - (சிவவாக்கியம் 225)

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே (சிவவாக்கியம் 133)

கருத்து: உங்களின் இறைவன் இவன், எண்களின் இறைவன் இவன் என்று வேறு வேறு கிடையாது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. அறியும் சிவனும் ஒருவன்தான் 

கடுவெளிச் சித்தர்

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (பாடல் 27)

காகபுசுண்டர்

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே - (பாடல் 1)

கருத்து: தானாய் உருவாகி அனைத்தையும் படைத்த இறைவனை பணிவோம். 

இடைக்காட்டுச் சித்தர்

ஆதியந்தம் இல்லாத அனாதியைத்
தீது அறும்ப வந்த தீப்படு பஞ்சுபோல்
மோதுறும்படி முப்பொறி ஒத்துற
ஆதலாகக் கருத்திற் கருதுவாம். - பாடல் 1

கருத்துதொடக்கம் முடிவு இல்லாமல் இணை துணை இல்லாமல் அனாதையாக இருப்பவனை (இறைவனை) பற்றியே நினைக்க வேண்டும். 

முகமது நபி

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ( 21:108)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. இறைவன் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை;  பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - (அல்குர்ஆன் 112:4)

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22)

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91)  

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

   

இயேசு

இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கர்த்தர் ஒருவரே - (மாற்கு 12:29)

 அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25] 

மோசஸ்

இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! - (உபாகமம் 6:4)

எசேக்கியா

கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் அரசன். நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். - (2 இராஜாக்கள் 19)

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (நெகேமியா 9:6) 
 
முடிவுரை

சிவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்று தமிழர் அறமும், 
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று இஸ்லாமும், 
கர்த்தரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கிறிஸ்தவமும் 
கூறுவதை எப்படி புரிந்து கொள்வது? 
    • வெவ்வேறு கடவுள்கள் தங்களுக்குள் முரண்பட்டு தங்களை பின்பற்றுபவர்களை அதிகரிக்க போட்டி போடுகின்றன என்று புரிந்து கொள்வதா? அல்லது ஒரே இறைவன் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயருடன் அறியப்படுகிறான் என்று புரிந்து கொள்வதா? 
    • வெவ்வேறு மதத்தில் கூறப்பட்ட கடவுளின் வரையறையை ஆய்ந்து அவன் ஒருவனைத்தான் குறிக்கிறது என்று முடிவு செய்வதா? அல்லது பெயரை கொண்டு அவர்கள் வெவ்வேறுதான் என்று முடிவு செய்வதா? 
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்லும் பொழுது மதவாதமாக பார்க்கும் சகோதரர்கள், அவரவர் குருமார்களால், சித்தர்களால், மெசாயாக்களால், ரிஷிகளால் படத்த இறைவனை மட்டுமே வணங்குமாரு போதிக்க பட்டுள்ளனர். அதை அவர்கள வாசித்தால் அவர்களுக்கு அது நலம் பயக்கும்.

உலகின் இறுதி தூதர் (நபி, ரசூல், மெசாயா, சித்தர், நாதன், குரு, ரிஷி) மூலம் மற்றும் இறுதிவேதம் இதை பற்றி தெளிவாக கூறுகிறது. 

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளித்து அழிக்கும் ஏக இறைவனைத் தவிர, வணங்கப்படும் மற்ற) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (திருக்குர்ஆன் 16:36)

இறைவன் ஒருவனே என்பதை ஏற்றால் பாவம் மன்னிக்கப்படுமா?

தமிழர் சமயம் 

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - (ஞானக்குறள் 124) 
 
கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவர் முன்பு செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் கூலியை விதிப்பான், மேலும் அவர் முன்பு செய்த ஒவ்வொரு பாவமும்  அழிக்கப்படும். அதன் பிறகு கணக்கு உண்டு; ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை வெகுமதி அளிக்கப்படும். வல்லமையும் மேன்மையுமான அல்லாஹ் மன்னிக்காத வரையில் ஒவ்வொரு கெட்ட செயலும் அப்படியே பதிவு செய்யப்படும். (சுனன் அல்-நசயீ)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல செயல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (குர்ஆன் 47:2)

 இஸ்லாத்தை ஏற்கும் முறைமை என்ன?

"அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" (புகாரி 3861)

கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். 

கிறிஸ்தவம்

 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான். (அப்போஸ்தலர் 10:43)

இயேசுவின் முக்கிய போதனை என்ன? 

வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை (மாற்கு 12:28-29)

ஒரே இறைவனை தவிர மற்றவைகளை வணங்கலாமா?

தமிழர் சமயம் 

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4)

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள். 
 
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல 
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (கடுவெளிச் சித்தர் 27) 

இஸ்லாம் 

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (குர்ஆன் 2:21)

(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ( 21:108)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

கிறிஸ்தவம் / யூதம் 

வேறெந்த கடவுளையும் வணங்க கூடாது என்று பத்து கட்டளைகளில் யெகோவா சொல்லியிருந்தார். எந்தவொரு சிலையையும் வணங்க கூடாது என்றும் சொல்லியிருந்தார். (உபா. 5:6-10) 

 முடிவுரை

கடவுள் ஒன்று என்று நம்மில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் வணங்குதல் என்று வரும் பொழுது அதில் சிலைகளையும், நல்ல மனிதர்களையும், தாய் தந்தையினரையும் மற்ற சில உயிரினங்களையும், இயற்கையும் சேர்த்து கொள்கின்றனர். ஆனால் நான்மறைகள் அதை வன்மையாக கண்டிக்கிறது.

அதிகம் நம் அனைவரும் சந்திக்கும் கேள்வி!

ஒருவர் மிக நல்லவாராகவும் அதிகம் தான தர்மங்கள் செய்பவராகவும், உதவி செய்பவராகவும், பொறுமையானவராகவும், கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுபவராகவும் இருந்தாலும் முஸ்லீம் இல்லை என்றால் நரகமா? இது என்ன மத வெறியாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கிறது.!! ஒருவரின் கைகால்கள் மிக ஆரோக்கியமாக பலமாகவும் இருக்கிறது. மூளை , இதயம், நுரைஈரல் மற்றும் சிறுநீரகம் என அனைத்தும் மிக சரியாக இயங்கும் நிலையில் உள்ளது ஆனால் உயிர் இல்லை என்றால்? உயிர் இருந்தால் அவன் மனிதன், இல்லை என்றால் அவன் பிணம். இஸ்லாம் உயிர் போன்றது. இஸ்லாம் இருந்தால் அவன் முஸ்லீம்(இறைவனுக்கு கட்டுப்பட்டவன்) இல்லை என்றால் காபிர்(இறை மறுப்பாளன்). முஸ்லீம் என்கிற பதம் அரபியாக இருப்பதால் பலருக்கு பிரச்சனையாக உள்ளது. உலகம் ஓன்று, குலம் ஒன்று, தேவன் ஒன்று, எனவே உலக மக்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி படைத்த ஓர் இறைவனின் நெறி பல ஆதாரங்களுடன் வருமேயானால் பலகோணங்களில் ஆய்ந்து அறிந்து உண்மையாக இருக்குமேயானால் அதனை பின்பற்றுவது நம் கடமையாகிறது. அந்த அடிப்படையில் "இஸ்லாம்" ஒவ்வொரு உயிர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய இறைவனின் வாழ்க்கை நெறி.