தர்மம்



தமிழர் நெறி 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். - குறள் 19

விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் - நல்வழி வெண்பா : 18

விளக்கம்: அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே. - திருமந்திரம் முதல் தந்திரம் பாடல் எண் : 4

விளக்கம் : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?

இஸ்லாம் 

தொழுகையை (தவம்) நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் (தானம்) கொடுங்கள்;  (2.43)

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். [திருக்குர்ஆன் 41:39 ]

 (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (முஸ்லிம் 5047)

குறிப்பு : ரம்ஜான் பண்டிகை என்று அழைக்கப்படும் ஈகை பெருநாள் மற்றும் பக்ரீத் என்று அழைக்கப்படும் தியாக திருநாள் என இரண்டு மட்டுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட கொண்டாட்டங்கள். இப்பண்டிகைகள் கொண்டாட்டங்களாக சொல்வது தொழுகை மற்றும் தர்மம் மட்டுமே.

கிறிஸ்தவம் 


நன்மை செய்வதையும், உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதையும் புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் இத்தகைய தியாகங்கள் கடவுளுக்குப் பிரியமானவை. – எபிரெயர் 13:16

யாருக்காவது பொருள் இருந்தால், ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ தேவைப்படுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை என்றால், அந்த நபரிடம் கடவுளின் அன்பு எப்படி இருக்கும்? – 1 யோவான் 3:17

இலவசமாகக் கொடுப்பவர்கள் இன்னும் அதிகமாகப் பெறுகிறார்கள்; மற்றவர்கள் தாங்கள் செலுத்த வேண்டியதைத் தடுத்து நிறுத்தி, இன்னும் ஏழையாகி விடுகிறார்கள். – (நீதிமொழிகள் 11:24)

தூய்மையான உள்ளம்


தமிழர் மறை 


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற - குறள் 034

சி இலக்குவனார் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும். உள்ளத்தில் குற்றம் உடையவனாய்ச் சொல்லுகின்ற நற்சொல்லும் செய்கின்ற நற்செயலும் ஆரவாரத்தின் பாற்பட்டன.

உன்னை அடக்கினால் ஊரை அடக்கலாம்
 
ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்றுஉரைப்பை யாகில் - கறுத்துஎறிந்த
கல்கறித்துக் கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
பல்கழல் நாய் அன்னது உடைத்து. - (அறநெறிச்சாரம் பாடல் - 137)

விளக்கவுரை என்னை ஊர்ந்து செலுத்தும் அவாவை அடக்கேன்; எனக்கு இடையூறு செய்யும் பிறரை அடக்குவேன் என எண்ணினால் நெஞ்சே! அது, கல்லால் தன்னை எறிந்தவரைச் சினந்து கடியாமல், அவர்களால் சினந்து எறியப்பட்ட கல்லைக் கடித்துப் பல்லை இழந்த நாயினது செயலை ஒக்கும்.

சான்றோரைத் துணையாய்க் கொள்ளல்

உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்டுத்திக்
கள்ளப் புலன்ஐந்தும் காப்புஅமைத்து - வெள்ளப்
பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத் தாரைத்
துறவித் துணைபெற்றக் கால்.- (அறநெறிச்சாரம் பாடல் - 138)

விளக்கவுரை சிறந்த குணம் உடையவரை ஒருவர் தமக்குத் துணையாகப் பெறுவாராயின், அவர் தம் மனம் என்னும் சிறந்த குதிரை மீது ஏறி அதைத் தம் வசப்படுத்தி, தம்மை வஞ்சிக்கும் ஐம்புலன்களையும் புறத்தே செல்லாது தடுத்து, 'வெள்ளம்' என்னும் பேரெண்ணின் அளவையுடைய கடந்து வீடு பேற்றினைப் பெறுவர்.

உள்ளத்தை அடக்கி ஆளல்

பரிந்துஎனக்குஓர் நன்மை பயப்பாய்போல் நெஞ்சே!
அரிந்துஎன்னை ஆற்றவும் தின்னல் - புரிந்துநீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ.- (அறநெறிச்சாரம் பாடல் - 139)

விளக்கவுரை உள்ளமே! எனக்கு ஒரு நன்மையைச் செய்வதைப் போன்று காட்டி, என்னை மிகவும் அரிந்து தின்னாதே! நீ விரும்பி அடைய நினைப்பவற்றை நான் விரும்பிச் செய்வேன் அல்லேன். பற்று விடுதலை நான் மேற்கொண்டேன்; பேதையே, அப்பாற்போ!

மனம் அடங்கினால் பல நன்மை உண்டாகும்

தன்னைத்தன் நெஞ்சம் கா¢யாகத் தான்அடங்கின்
பின்னைத்தான் எய்தா நலன்இல்லை - தன்னைக்
குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.- அறநெறிச்சாரம் பாடல் - 140

விளக்கவுரை ஒருவன் தன் செயல்களுக்குத் தனது மனத்தையே சான்றாக வைத்துத் தான் அடங்கப் பெற்றான் என்றால், பின்பு, அவன் அடைய முடியாத இன்பம் ஒன்றும் இல்லை தன்னைப் பிறந்த குடியுடன் கெடுக்கின்ற தீய மனத்தினுக்குத் தொண்டு செய்து நடத்தல், பார்வை விலங்காக நிறுத்தப்பட்ட பெண் யானையை விரும்பிக் குழியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல், எப்போதும் வருந்துதற்குக் குறியதாகும்.

உள்ளத்தே உயர்வே உயர்வு

உள்ளூர் இருந்தும்தம் உள்ளம்அறப் பெற்றாரேல்
கள்அவிழ் சோலையாம் காட்டுஉளர் காட்டுள்ளும்
உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூர் உளார்.- அறநெறிச்சாரம் பாடல் - 141

 விளக்கவுரை இல்வாழ்வை மேற்கொண்டு ஊரினுள் வாழ்ந்தாலும் தம் மனம் அடங்கப் பெறுவாரானால் அவர், தேன் சொரியும் மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டில் வாழும் துறவியே ஆவார். துறவற வாழ்வை மேற்கொண்டு, காட்டில் வாழ்கின்றவராயினும் மனம் அடங்கப் பெறார் என்றால், அவர், நாட்டில் உள்ள மனை வாழ்க்கையை அடைந்து தீய செயலைப் பொருந்தி வாழ்கின்ற கயவர் ஆவார்.

மனத்தை அடக்குவார் அடையும் பெரும் பயன்

நின்னை அறப்பெறு கிற்கிலேன் நல்நெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
அறப்பெறு கிற்பனேல் பெற்றேன்மற்று ஈண்டே
துறக்கம் திறப்பதுஓர் தாழ்.- அறநெறிச்சாரம் பாடல் - 142

விளக்கவுரை என் நல்ல நெஞ்சமே! உன்னை என் வயமாக்கிக்கொள்ள இயலாதவனாய் உள்ளேன்; இனி யான், யாரை என் வயமாக்கிக் கொள்வேன்? உன்னை என் வயமாக்கிக் கொள்வேன் ஆயின், சொர்க்க உலகினைத் திறப்பதான நிகரற்ற திறவு கோலை, நான் பெற்றவன் ஆவேன்.


இஸ்லாம் 


அல்லாஹ்விடம் தூய உள்ளத் துடன் வருவதைத் தவிர செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது. - அல்குர்ஆன்  26:88

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி 001

'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (அறிவித்தார். நூல். முஸ்லிம் 5011)

உள்ளத்தில் இருக்கக்கூடிய ஒரு சதை துண்டு அது சீராகிவிட்டால் எல்லாம் சீராகிவிடும். அது கெட்டு விட்டால் எல்லாம் கெட்டு விடும் என்று கூறி அந்த சதை துண்டு தான் கல்பு என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி : 50)

ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். எவன் அதைப்  புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (குர்ஆன் 91: 7-10)

ஒரு சஹாபி வருகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன? பாவத்தை எப்படி நான் புரிந்து கொள்வது? இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு நீண்ட பட்டியலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வாழ்நாள் எல்லாம் அவர் எங்கு சென்றாலும் இந்த ஒரு அளவுகோலை தனது கண்ணுக்கு முன்னால் வைத்துக்கொண்டு தனது மனதில் பதிய வைத்துக்கொண்டால் போதும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அவர்கள் மனப்பாடம் செய்யவில்லை என்றாலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அவருக்கு ஒரு அளவை கொடுத்தார்கள். உன்னுடைய உள்ளத்தில் எது உனக்கு உறுத்தலை ஏற்படுகின்றதோ, உள்ளத்தை குறை கூறுகின்றதோ, இதை நீ செய்கிறாயே செய்யலாமா? உன்னுடைய உள்ளத்தை எது உறுத்துகிறதோ குத்துகிறதோ அது பாவம் விட்டுவிடு என்று சொன்னார்கள் - அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம், எண்: 4632

அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒருபயனுமளிக்காது. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). (அல்குர்ஆன்26 : 88,89)

துஆ  

“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)

அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5)

“இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)

“மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)


கிறிஸ்தவம் 


மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும். 1 தீமோத்தேயு 1:5

எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது. - எபிரெயர் 12:14   

பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார். - நீதிமொழிகள் 17:3

ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும். நீதிமொழிகள் 27:19 

தர்மம் எதற்காக செய்யவேண்டும்?


மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா
லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க
வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். - நாலடியார் 37

கருத்துரை: நீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள்.

விசேடவுரை: (நீங்கள்) தோன்றா எழுவாய், பண்ணப்படும்- பயனிலை, அறங்களை- செயப்படுபொருள்.

பதவுரை
    மக்களால்= மனிதர்களால்,
    ஆய= உண்டாய,
    பெரும்= பெரிய,
    பயனும்= விளைவும்,
    ஆயுங்கால்= ஆராயுமிடத்து,
    எத்துணையும்= எவ்வளவும்,
    ஆற்ற= மிக,
    பல ஆனால்= பலவாயிருந்தால்,
    தொக்க= பொருந்திய,
    உடம்பிற்கே= உடலுக்கே,
    ஒப்புரவு= தருமத்தை,
    செய்து= பண்ணி,
    ஒழுகாது= நடவாமால்,
    உம்பர்= சுவர்க்கத்தில்,
    கிடந்து= இருந்து,
    உண்ண=அநுபவிக்க,
    பண்ண= தருமங்கள் செய்ய,
    படும்= தகும்.


சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம். நாலடியார் 3328

பதவுரை 
சிறுகாலை = இளமை
வல்சி = உணவரிசி
தோள்-கோப்பு = கட்டுச்சோறு

கருத்துரை 
இளமையாக இருக்கும்போதே பிற்காலத்துக்கு (மறுமைக்கு) உதவும் நல்லறப் பொருளைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வெளியூர் செல்வோர் இறுக்கி இறுக்கிக் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வது போலச் சேர்த்து வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். இருக்கும் செல்வத்தை இறுக்கி இறுக்கிப் பிடித்துக்கொண்டு, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பவர் அறிவிர்ராத பேதை ஆவார். அவர் வைத்துக்கொண்டிருக்கும் பொன் பழுக்காத புளிப்புத் தன்மையுள்ள விளாங்காய் போன்றது. விளாங்காய் தின்றால் தொண்டை விக்கும். அப்போது தண்ணீர் பருகினாலும் தண்ணீரும் விக்கும்.

இஸ்லாம் 

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274)

கிறிஸ்தவம்

இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.  - (மத்தேயு 19:21)

பொறுமை

தமிழர் சமயம் 

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (குறள்: பொறையுடைமை - 151)

 தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும் (௱௫௰௧) —மு. வரதராசன்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (௱௫௰௨ - 152)

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது. (௱௫௰௨) —மு. வரதராசன்

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (௱௫௰௩ - 153)

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். (௱௫௰௩) —மு. வரதராசன்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். (௱௫௰௪ - 154)

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். (௱௫௰௪) —மு. வரதராசன்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (௱௫௰௫ - 155)

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். (௱௫௰௫) —மு. வரதராசன்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (௱௫௰௬ - 156)
 
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு. (௱௫௰௬) —மு. வரதராசன்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (௱௫௰௭ - 157)
 
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. (௱௫௰௭) —மு. வரதராசன்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (௱௫௰௮ - 158)
 
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும். (௱௫௰௮) —மு. வரதராசன்

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (௱௫௰௯ - 159)

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். (௱௫௰௯) —மு. வரதராசன்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (௱௬௰ - 160)

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். (௱௬௰) —மு. வரதராசன்

திருமந்திரம்

24. பொறையுடைமை (பொறை யுடைமையாவது, பொறுத்தலை உடைமை, உடம்பிலுள்ள அமுதம் வற்றி அழியாமல் பொறுத்தல் பொறை நிலை என்க)

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. - திருமந்திரம் 539 

பொருள்: மெய்ந்நெறி பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளோடு கூட வேண்டுமென்ற எண்ணமாகிய பல்லி ஒன்றுள்ளது. அது மூக்கையும் நாக்கையும் முற்றுகை யிட்டு அவற்றைச் செயலும்படி அப்பொழுது மாறி நின்று இருளில் செலுத்துகின்ற மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பெருகச் செய்வது மிக்க பொறுமையாகு

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. - 540

பொருள்: பால் போன்ற வெண்ணிற ஒளியில் விளங்கும் சிவனது திருவடியை வணங்கி உய்தி பெறுவதற்காக அவனது கொலு மண்டபத்தைச் சூழ்ந்துள்ள அழிவில்லாத தேவர்களிடம், பொறுமையுடைய இந்த ஞானி திருமாலுக்கும் ஆதிப் பிரமனுக்கும் தலைவன்; உலகத்துக்கும் மிகச் சிறப்புடையவன் என்று சிவபெருமான் அருளிச் செய்தான். (உலாப்பிலி - அழிவில்லாத சிவன். இப்பாடல் சிறு மாறுதல்களுடன் 108 ஆம் பாடலாக வந்துள்ளது.)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. - 541 

பொருள்: மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர் சீவர்களுக்கு மன்னராவர். அத்தகைய ஞானியைக் கருவி கரணங்களாகிய சேனை சூழ்ந்து அவர் ஏவல் வழி நிற்ப அவரது உடம்பை மாற்றிப் படைக்கும் தேவ தேவனை அவர் ஏனை வழி நீத்து ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே.   - 542

பொருள்: ஆன்மாக்களின் பக்குவத்துக்குத் தக்கவாறு அவரது உடலிலும் உள்ளத்திலும் பலவாறாக இன்ப துன்பங்களை நுகர்வித்துச் சிவபெருமான் பக்குவம் செய்வான். மூலாதாரத்தினின்று ஆதார நிராதாரக் கலைகளிலும் ஆடுகின்ற அக்கூத்தப் பெருமானுக்கு அக் கூத்தின் பயனாக அளவில்லாத ஒருமைப்பாடு உண்டாகும். (கொல்லை - மூலாதாரமே.)

நாலடியார்

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று. நாலடியார் 71

மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும். - 72

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்.

காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின். 73

மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையையுடைய வேந்தனே! நமக்கு நன்மை தருவதை ஆராய்ந்து சொல்லும் அறிஞரை உறுதுணையாகப் பெற்றால், அவர்கள் நம் மீது அன்பு கொண்டு கூறும் கடுமையான சொல்லானது, அயலார் மகிழ்ந்து கூறும் இனிமையான சொல்லினும் தீதாகுமா? ஆகாது. (ஏதிலார் என்பதற்குப் 'பகைவர்' எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் பகையுணர்வுடன், அதை மறைக்க முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுபவா¢ன் இன்சொல்லைப் போல், அன்புடையார் கடுஞ்சொல் தீதாகுமோ? எனவும் பொருள் கொள்ளலாம்.)

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது. 74

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை. (நன்மை தீமைகளை அறிந்து தீமைக்கு அஞ்சி உலகம் மகிழ வாழும் அடக்கமுடையவர் துன்புறுதல் இல்லை.)

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின
தூற்றாதே தூர விடல். 75

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக. (நண்பா¢டையே மன வேறுபாடு தோன்றினால் விலகிவிட வேண்டுமேதவிர, பழி தூற்றித் திரியக்கூடாது. குறிப்பு : விட்டு நீங்குதல் என்பது இறுதி நிலை ஆதலால், இப்பாடல், அடுத்த இரு பாடல்களுக்குப் பின் அமைதல் நன்று).

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது. 76

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை! (பிறர் செய்யும் தீமையும் நாம் பொறுக்கும் தன்மையால் அவர் மனமாற்றத்துக்குக் காரணமாதல் கூடும். ஆதலால் 'விட்டு விலகாதே' என்றார்).

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர். 77

ஓல்' என ஒலிக்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! பொ¢யோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களைச் செய்பவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள். (பழகியவர் பிழையைப் பொறுத்தலே உயர்ந்த நட்பாம்).

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார். 78

உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவா¢டம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவா¢டம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர். (பசித் துன்பத்தைப் பொறுத்து, உழைத்து வாழ வேண்டுமே தவிர, பிறர் உதவிகேட்டு வாழ்தல் சிறப்பன்று என்பது பொருள்).

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை. 79

இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும். (ஒரு செயலைச் செய்யும்போது அதில் இன்பம் உண்டாவதோடு தாழ்வும் பழியும் உண்டானால், அச்செயலை விட்டு விட வேண்டும்).

தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல். 80

தான் கெட்டாலும் தக்கார்க்குக் கேடு செய்ய எண்ணாதிருப்பாயாக! தனது உடலில் உள்ள சதை முழுதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாதவா¢டத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களைச் சொல்லாதிருப்பாயாக!


இஸ்லாம்


குர்ஆன் கூறும் பொன்னான போதனைகளில் பொறுமையும் ஒன்றாகும். பொறுமையைப் போதிப்பது எளிதானது. ஆனால், நடைமுறையில் அதை கடைப்பிடித்துக் காட்டுவதே கடினமானதாகும். நபியவர்கள் பொறுமையின் பொக்கிஷமாக வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பொறுமையின் பெருமை குறித்தும் அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சற்று நோக்குவோம்.

பொறுமையின் பெருமை:

அல்குர்ஆனில் பல வசனங்கள் நபி(ச) அவர்களை விளித்து பொறுமையைப் போதிக்கின்றது.

‘(நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! உமது பொறுமை அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் சூழ்ச்சி செய்வதன் காரணமாக நீர் (மன) நெருக்கடிக் குள்ளாக வேண்டாம்.’ (16:127)

‘(நமது) தூதர்களில் உறுதிமிக்கோர் பொறுமையாக இருந்தது போல் (நபியே!) நீரும் பொறுமையாக இருப்பீராக! அவர்களுக்காக நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் நாளில் (பூமியில்) பகலின் ஒரு கணப்பொழுதேயன்றி தாம் தங்கியிருக்கவில்லை என்பது போன்று (உணர்வார்கள். இது) எடுத்துரைக்க வேண்டியதாகும். பாவிகளான இக்கூட்டத்தாரைத் தவிர வேறெவரும் அழிக்கப்படுவார்களா?’ (46:35)

இவ்வாறே முஃமின்களை விளித்தும் பொறுமை போதிக்கப்படுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள். (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைப்பிடியுங்கள். இன்னும் உறுதியாக இருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’ (3:200)

பொறுமையுடையோரை அல்லாஹ் போற்றுகின்றான்.

கிழக்கு, மேற்குத் திசைப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாகாது. மாறாக அல்லாஹ்வையும் இறுதி நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் நம்புவோரும், தாம் விரும்புகின்ற செல்வத்தை (அல்லாஹ்வுக்காக) நெருங்கிய உறவினர், அநாதைகள், வறியோர், வழிப்போக்கர், யாசிப்போர் (ஆகியோருக்கும்) அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வழங்கி, தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தைக் கொடுப்போரும், வாக்குறுதி அளித்தால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், வறுமை, துன்பம், போர் என்பவற்றின் போது சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்களாவர். அவர்கள்தாம் உண்மை உரைத்தவர்கள்ளூ பயபக்தியாளர்கள்.’ (2:177)

பொறுமையுடையோரை அல்லாஹ் நேசிப்பதாகக் கூறுகின்றான்.

‘மேலும் எத்தனையோ நபிமார்களுடன் இணைந்து அவர்களைப் பின்பற்றிய பலரும் போர் புரிந்துள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் மனம் தளரவோ, பலவீனப்படவோ, அசத்தியத்திற்கு அடிபணியவோ இல்லை. மேலும், பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.’ (3:146)

பொறுமையாளர்களுக்கு உதவுவதாக அறிவிக்கின்றான்.

‘மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழந்து, பலமிழந்துவிடுவீர்கள். பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.’ (8:46)

பொறுப்பவர்களுக்கே நல்லது என்று போற்றுகின்றான்.

‘நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத் தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமை யுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும்.’ (16:126)

பொறுமையுடையோரை அளவற்ற நற்கூலி வழங்குவதாக வாக்களிக்கின்றான்.

‘உங்களிடம் உள்ளவை முடிந்து விடக் கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையான வையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.’ (16:96)

‘நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இரட்சகனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையுண்டு. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர் களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும் என (நபியே!) நீர் கூறுவீராக!’ (39:10)

பொறுப்பவர்களுக்கே சுவனத்தை அருளுவதாக கூறுகின்றான்.

‘மேலும், அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால், சுவர்க்கத்தையும், பட்டாடையையும் அவர்களுக்குக் கூலியாக வழங்குவான்.’ (76:12)

பொறுமை பல வகை:

01. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடித்தல்: அல்லாஹ்வின் ஏவல்களைச் செயற்படுத்தும் போது பல கஷ;டங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றைச் சகித்துக் கொள்வது முதல் வகை.

02. தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வதில் பொறுமை. அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் நாம் ஒதுங்கி வாழ்வதும் பொறுமையே! ஷத்தானிய சக்திகளும் மனோ இச்சையும் தவறின்பால் அழைக்கும். அந்தத் தவறைச் செய்வதில் தற்காலிக இன்பம் கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருந்தால்தான் தவறை விட்டும் ஒதுங்கி வாழ முடியும்.

03. தனக்கு ஏற்படும் சோதனைகள், இழப்புக்கள் என்பவற்றைப் பொறுத்துக் கொள்ளல்: தனது தேர்வு இல்லாமலேயே ஏற்படும் இழப்புக்களை மனிதன் இலகுவில் சகித்துக் கொள்கின்றான். எல்லாம் விதிப்படி நடந்தது என்று நம்பிவிட்டும் போகின்றான். இவற்றை விரும்பியோ விரும்பாமலோ அவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

சோதனைகள், இழப்புக்களில் இன்னுமொரு வகை உள்ளது. அதுதான் அடுத்த மனிதர்களால் எமக்கு ஏற்படுத்தப்படும் இழப்புக்கள், கஷ;டங்கள். இவற்றை மனம் இலகுவாக மன்னிப்பதில்லை. இதற்குப் பழி தீர்க்க வேண்டும் என மனம் வெறி கொள்ளும். இவற்றையும் மன்னிப்பதுதான் உயர்ந்த உள்ளத்திற்கான அடையாளமாகும். நபி(ச) அவர்கள் இப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். நபி(ச) அவர்கள் இதில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். தீங்கு செய்தவர்களை மன்னித்தது மட்டுமன்றி அவர்களுக்கு நல்லுபகாரமும் செய்தார்கள்.

‘நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகிவிடுவார்.’

‘பொறுமையாக இருப்போரைத் தவிர வேறு எவருக்கும் இ(ப் பண்பான)து கொடுக்கப்படமாட்டாது. மேலும், மகத்தான பாக்கியமுடையோரைத் தவிர வேறு எவருக்கும் இது கொடுக்கப்பட மாட்டாது.’(41:34-35)

இந்த மூன்று வகைப் பொறுமையும் தலைமைத்துவப் பண்பிற்கு அவசிய மானதாகும்.

‘அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, எமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தபோது எமது கட்டளைப் பிரகாரம் நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து நாம் உருவாக்கினோம். (32:24)

பொறுமையும் உறுதியும் இணையும் போது தலைமைத்துவத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த உயரிய பண்பை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று வினா இப்போது எழலாம்.

* உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது! உங்களுக்கு எவராவது ஒரு தீங்கை செய்துவிட்டால் அது அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று உறுதியாக நம்பினால் செய்தவன் இவன் என்றாலும் செய்வித்தவன் அல்லாஹ் என்று எண்ணும் போது பழிவாங்கும் வெறி அடங்கி மனம் கொஞ்சம் பக்குவம் பெறும்.

* நான் செய்த ஏதோ ஒரு தவறுக்காக அல்லாஹ் இவனை என்மீது ஏவி விட்டிருக்கலாம். எனவே, நான் என்ன தவறு செய்தேன் எனச் சிந்தித்து தவறைத் திருத்த முனைய வேண்டும். இப்படி சிந்திக்கும் போது அவன் தவறு செய்ததற்கு ஒரு வகையில் நானும் காரணம் என மனம் கோபத்தைத் தணிக்கும்.

‘உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், அது உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டதினாலேயாகும். மேலும், அவன் அதிகமானவற்றை மன்னித்து விடுகின்றான்.’(42:30)

இச்சந்தர்ப்பத்தில் தவ்பா செய்ய வேண்டும். அலி(வ) அவர்கள் இது பற்றிக் கூறும் போது,

‘ஒரு அடியான் அல்லாஹ்வின் மீதே நல்லெண்ணம் வைக்கட்டும். தான் செய்த தவறுகளுக்காக அச்சப்படட்டும்’ என்பார்கள். மற்றும் சிலர்,

‘எந்த பலாய் முஸிபத்து இறங்குவ தென்றாலும் பாவம்தான் காரணமாக இருக்கும். தவ்பாவின் மூலமாகவே அது நீக்கப்டும்’ என்று கூறுவர்.

* தனக்குப் பிறரால் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்வதில் கிடைக்கும் நன்மைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது உள்ளம் அமைதிபெறும்.

‘தீமையின் கூலி அது போன்ற தீமையேயாகும். எனினும் எவர் மன்னித்து, (உறவை) சீர் செய்து கொள்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ் விடமே இருக்கின்றது. நிச்சயமாக அவன் அநியாயக் காரர்களை நேசிக்கமாட்டான்.’ (42:40)

ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதில் மூன்று வகையினர் உள்ளனர்.

1. தனக்கு அநீதி இழைத்தவனுக்கு அதே அளவு பதிலடி கொடுப்பவர்.

2. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக தவறு செய்தவனுக்கு பதிலடி கொடுப்பவர். (இவர் அநியாயக்காரர்)

3. மன்னித்து பொறுமை காப்பவர்:

இவருக்கு அல்லாஹ் நற்கூலிகளை வழங்குகின்றான். அநியாயக்காரரை அல்லாஹ் நேசிப்பதில்லை. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அதேயளவு பதிலடி கொடுப்பவரை அல்லாஹ் விரும்புவதாகவும் சொல்லவில்லை. தண்டிப்பதாகவும் கூறவில்லை.

எனவே, அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து மன்னித்துவிட்டுப் போகலாம் என உள்ளத்தை ஆறுதல் படுத்தினால் கொந்தளித்து வரும் கோபத்தைத் தணித்துவிடும். கொதிக்கும் உள்ளம் அடங்கிவிடும்.

* உங்களுக்குத் தீங்கு செய்தவரைப் பழி தீர்ப்பதை விட மன்னித்துவிடுவது உங்கள் உள்ளத்தில் கோபம், ஏமாற்றும் எண்ணம், பழிதீர்க்கும் வஞ்சகம் போன்ற கெட்ட எண்ணங்களை அகற்றிவிடும். உள்ளம் உடனே அமைதி பெற்றுவிடும். பழிதீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பழிதீர்க்கும் வரை அது அமைதி பெறாது. அதற்காக நேரத்தை, சக்தியை, பணத்தையெல்லாம் செலவு செய்து சிரமப்பட வேண்டியும் இருக்கும். மன்னித்துவிட்டால் மனம் அமைதி பெற்று விடும். இது ஒரு வகையில் இலாபமாகும்.

* தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிப்பது உள்ளத்திற்கு ஒரு இழிவாகும். மன்னிப்பது உள்ளத்திற்கு ஒரு கண்ணியமாகும். இதையே நபி(ச) அவர்கள், ‘மன்னிப்ப தால் அல்லாஹ் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகரிப்பதில்லை.’ (முஸ்லிம்) என்றும் கூறினார்கள். தண்டிப்பது வெளிப்படையில் கௌரவ மாகத் தெரிந்தாலும் அந்தரங்கத்தில் அது இழிவாகும். மன்னிப்பது வெளிப்படையில் இழிவாகத் தெரிந்தாலும் அந்த்ரங்கத்தில் அது கண்ணியமாகும்.

* தன்னைத் தாக்கியவனைத் தான் மன்னித்து தாராளமாக நடந்து கொண்டால் தான் செய்த தவறுகளையும் அல்லாஹ் மன்னித்து தன்னுடன் தாராளமாக நடந்து கொள்வான் என்று எண்ணினால் மனம் அடங்கிப் போகும்.

* தனக்கு தீங்கிழைத்தவனுக்கு பதிலடி கொடுக்க திட்டம் தீட்டி அதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பழி தீர்க்கும் போது அது வெற்றி பெறாவிட்டால் அனைத்துமே நஷ;டமாகிப் போகும். அத்துடன் மனம் ஆறுதல் அடையவே மாட்டாது. அதே வேளை, பழி தீர்க்கும் பணியில் நமக்கே மீண்டும் அதில் பாதிப்பு ஏற்பட்டால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிடும். இதைவிட மன்னித்துவிட்டால் மனம் நிம்மதி பெறுவதுடன் அல்லாஹ்விடத்தில் கூலியைப் பெறுவது இலாபமானதாகும்.

* நபி(ச) அவர்கள் தனக்காக யாரையும் பழிதீர்த்ததில்லை. நபி(ச)அவர்களே எமக்கு அழகிய முன்மாதிரியாவார்கள். அவர்கள் உயர்ந்த குணநலன்மிக்கவர்கள். அப்படியென்றால் பழிக்குப் பழி வாங்குவது உயர்ந்த பண்போ அழகிய முன்மாதிரியோ அல்ல. இதை சிந்தித்துப் பார்த்தால் பழிதீர்த்தல் என்பது சிறந்த வழி அல்ல என்பதைப் புரியலாம்.

அல்லாஹ்வின் ஏவலைச் செய்யும் விடயத்தில் அல்லது தடையை விட்டும் ஒதுங்கும் விடயத்தில் அல்லது நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் விடயத்தில் எமக்கு எதிராகச் செயற்பட்டவரிடத்தில் பழிவாங்கும் விதத்தில் நடக்காமல் மன்னிப்பது கட்டாயமாகும். ஏனெனில், அல்லாஹ் முஃமின்களின் உயிரையும் உடைமைகளையும் விலை கொடுத்து வாங்கிவிட்டான்.

‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர் களிடமிருந்து அவர்களது உயிர்களையும், அவர்களது செல்வங்களையும் அவர்களுக்கு சுவர்க்கம் உண்டென விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்ளூ அவர்கள் (எதிரி களைக்) கொல்வார்கள்ளூ (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். (இது) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) தன்மீது கடமையாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும். அல்லாஹ்வை விட, தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் வேறு யார்? எனவே, நீங்கள் செய்த உங்களது இவ்வியாபாரம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.’ (9:111)

எனவே, இதற்கான கூலியை அல்லாஹ்விடமே எதிர்பார்க்க வேண்டும்.

நாம் ஏதாவது தவறு செய்து அதனால் பாதிப்பைச் சந்தித்திருந்தால் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது கோபப்படுவதை விட்டு விட்டு எம்மையே நாம் நொந்து கொள்ள வேண்டியதுதான். நம்மை நாம் திருத்தியாக வேண்டும்.

உலக விவகாரங்களில் எதையேனும் அடைந்து கொள்ளும் விடயத்தில் நாம் பிறரால் சிரமங்களைச் சந்தித்தால் சிரமங்கள், இழப்புக்கள் இன்றி இந்த உலகில் எதையும் பெற முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.

பொறுமையாளிகளுடன் அல்லாஹ் இருப்பதாகவும் பொறுமையாளிகளை அல்லாஹ் நேசிப்பதாகவும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நாம் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். அல்லாஹ்வின் உதவி கிடைத்தால் பல்வேறு பட்ட தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். இந்த வகையில் நாம் எதிர் நடவடிக்கை எடுப்பதை விட மன்னிப்பது பெரிதும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தால் பழி தீர்க்கும் வெறிநிலையை ஒழிக்கலாம்.

* பொறுமை ஈமானின் பாதி என்று கூறப்படுகின்றது. ஈமானின் பாதியை இழக்க மனம் இடம் தரக் கூடாது.

* நாம் பொறுத்துக் கொண்டால் எமக்கு அல்லாஹ் உதவி செய்வான். நாம் பழி தீர்க்கச் சென்றால் அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைக்காது. பொறுப்பவன் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றான். பழி தீர்ப்பவன் தன்னையே நம்பி களத்தில் இறங்குகின்றான். அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைப்பதே அனைத்துவித வெற்றிக்கும் வழியாகும். இதை உணர்ந்தால் பழிதீர்ப்பதை விட மன்னிப்பதே மகத்தான வெற்றி என்பதை அறியலாம்.

* சில வேளை பழிதீர்ப்பதில் நாம் வெற்றி பெற்றால் கூட பின்னர் மனம் நோகலாம். ஏன் இப்படிச் செய்தோம் என்று எம்மை நாமே நொந்து கொள்ள நேரிடலாம். அல்லது எம்மை மக்கள் சபிக்கலாம். அப்போது மனம் நொந்தாலும் தீர்வு பெற மாற்று வழி இருக்காது.

* சில வேளை நாம் பழி தீர்த்த பின்னர் மீண்டும் அவன் எம்மைப் பழி தீர்க்க முனையலாம். முன்னரை விட தீவிரமாக நமக்கு எதிராகச் செயற்பட முனையலாம். பின்னர் நம்மை நாம் தற்காத்துக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அல்லது இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இதை விட மன்னித்து விடுவது இலகுவான தல்லவா?

* பழிதீர்க்க நினைப்பவன் பழிதீர்க்கும் போது கோபம், ஆத்திரம் காரணமாக வரம்பு மீறிவிடலாம். அதனால் அவன் அநியாயக்காரன் எனும் பட்டியலில் அடங்கிவிடுவான். அல்லாஹ்வின் நேசத்தை இழந்து கோபத்தைப் பெற்றுத் தரும் செயல் இதுவாகும். இதனாலும் பழிவாங்கும் எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்.

* பிறரால் ஏற்படும் தீங்குகளை மன்னிப்பதால் எமது பாவங்கள் மன்னிக்கப்படும்É அந்தஸ்து உயர்த்தப் படும். ஆனால், பழிவாங்கினால் பாவம் மன்னிக்கப்படுவதையும், அந்தஸ்து உயர்த்தப்படுவதையும் நாம் இழந்துவிடுவோம். எனவே, மன்னிப்பதே மேலானதாகும்.

எனவே, மன்னிப்பதால் ஏற்படும் இது போன்ற நன்மைகளை மனதிற் கொண்டு மன்னிக்கும் மனதைப் பெறலாம். பழிவாங்கும் உணர்வையும் கோபத்தையும் அடக்கலாம். இந்த வகையில் மூன்று வகைப் பொறுமையிலும் உறுதியாக இருப்பதுதான் ஏற்கனவே நாம் கூறிய பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வசனங்கள் கூறிய பயன்களைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஆகவே, பொறுமை மூலம் உயர்வு பெற முயல்வோமாக!..

கிறிஸ்தவம்

‘உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்’ (லூக்கா 21:19)

"நீங்கள் குறைவே இல்லாதவர்களாய் முதிர்ச்சியும் முழுமையும் அடையும்படி பொறுமை நிறைவாய்ச் செயல்படட்டும்!" (யாக் 1:4).

ஜெப வேளையில் ஆண்டவரிடம் யோபு கதறியழுதாலும், பதில் வருவதற்குப் பொறுமையோடு காத்திருந்தான் (யாக் 5: 10,11). 

தானியேலும், தன் ஜெபத்தின் பலனைக் காண அநேக நாள் காத்திருக்க வேண்டியிருந்தது (தானி 10:12).

"கடவுளின் அன்மைப் பெறவும், கிறிஸ்துவின் பொறுமையை அடையவும் ஆண்டவர் உங்கள் உள்ளங்களுக்கு வழிகாட்டுவாராக" (2 தெச 3:5).

நமக்கு ஏற்படுகிற துன்பங்களுக்காகவும் நாம் மகிழ்கிறோம். துன்பங்களுக்காக நாம் ஏன் மகிழ்கிறோம்?ஏனென்றால் இத்துன்பங்கள் தான் நம்மைப் பொறுமை உடையவர்களாக ஆக்குகிறது. - (ரோமர் 5:3)

ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், சுயநிர்ணயம், இவைகளுக்கு விரோதமான சட்டங்கள் இல்லை." (கலாத்தியர் 5: 22-23)

"உங்களை நேசிக்கிற பரிசுத்த ஜனமாக தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியால், இரக்கமுள்ள இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், மென்மையான தன்மையையும், பொறுமையையும் வைத்து உங்களைத் துலக்க வேண்டும், ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளைத் தாங்கிக் கொள்ளுங்கள், உங்களைத் துன்புறுத்துபவரை மன்னியுங்கள். எனவே நீங்கள் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். (கொலோசெயர் 3: 12-13)

"சகோதரர்களே, மன்னிப்புக் கேட்கிறவர்களை எச்சரிக்கவும், பயந்தவர்களை ஊக்குவிக்கவும், பலவீனருக்கு உதவுங்கள், அனைவருக்கும் பொறுமையாய் இருங்கள்." (1 தெசலோனிக்கேயர் 5:14)

"கர்த்தருடைய சந்நிதியில் நீ இரு, அவனுக்காகப் பொறுமையாயிரு, நீ துன்மார்க்கமாய் நடந்து, துன்மார்க்கமாய் நடக்கிற உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடு" என்று கோபமடைந்து, உன் கோபத்தை நீக்கிவிடாதே. துன்மார்க்கன் அழிந்துபோவான், கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (சங்கீதம் 37: 7-9)

பின்பற்ற உங்களுக்கு ஒரு சிறந்த தலைவன் வேண்டுமா?


  • உயர் குலத்தில் பிறந்து, குலத்தால் சிறப்பில்லை என்றும் நற்குணம் கொண்டவரே சிறந்தவர் என்றும் கூறும் தைரியம் கொண்ட தலைவர் வேண்டுமா?
  • தாய் மொழியை தாய்நாட்டிலே குறிப்பிட்டு சொல்லி, மொழியால் சிறப்பில்லை என்றும் இறைவனுக்கு பயந்தவனே சிறந்தவன் என்று கூறும் தைரியம் கொண்ட தலைவர் வேண்டுமா?
  • பிறப்பால் செல்வந்தராக இருந்தும் கொள்கைக்காக வறுமையை தேர்ந்தெடுத்து, தனக்கென ஏதும் வைத்து கொள்ளாமல் மக்களுக்கே பகிர்ந்தளித்த வறுமைக்கு அஞ்சாத தலைவர் வேண்டுமா?
  • ஒரு கண்டதிர்க்கே தலைவராய் இருந்தும், அதிகார முறைகேடு செய்யாமல் வாழ்நாள் முழுதும் தன் உழைப்பிலே உண்ட தலைவர், உண்ண தட்டு இல்லாமல் விரிப்பிலே வைத்து உண்ட தலைவர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் உண்ண உணவின்றி பொறுமை காத்த தலைவர், இரண்டு உடுப்புக்கு மேல் வைத்திராத தலைவர், இரண்டு ஆல் படுக்கும் அளவுடன், மேற்கூரை இல்லா உயரம் குறைந்த அளவே வீடு கொண்டு இருந்த தலைவர் வேண்டுமா?
  • கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை மற்றும் ஒரே பாய் வைத்து உறங்கிய தாலைவர், பாய் ஒன்றையே பகலில் படுக்கவும் இரவில் கதவாய் மறைக்கவும் செய்த தலைவர்,
  • எந்த நிலையிலும் பொய் பேசாத, தீ சொல் சொல்லாத, பொறுமை நீங்காத, தீங்கு செய்தவரை மண்ணித்த, அநீதி இழைக்காத, நேர்மை தவறாத, உலக மக்கள் அனைவரையும் சமம் என்று சொல்லுவதோடு மட்டுமன்றி நடைமுறை படுத்திய தலைவன் வேண்டுமா?
  • சொன்னதை அப்படியே நிறைவேற்றும் தோழர்கள் பெரும்பான்மை இருந்தும் வரம்பு மீறாமல் மாற்றார் மற்றும் சிருபான்மையினோர் வாழ்வுரிமையை காத்த தலைவர் வேண்டுமா?
  • இறைவனுக்கு அஞ்சி அவனையே அன்புசெய்து அவனுக்கு முற்றிலுமாக கட்டுப்பட்ட தலைவர் வேண்டுமா?
இத்தனை தகுதி கொண்ட இன்னொரு தலைவன் உலகில் இல்லை என்று சொல்வது நாம் மட்டுமல்ல உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களும் கற்று அறிந்த அறிஞர்களும் ஆவர்.

இவைகளில் எந்த தகுதியுமே இல்லாத சுயலாபத்திற்கு உங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களை உங்கள் role-model ஆக ஏற்றுகொள்ளாதீர்கள்.
 
வாசியுங்கள் முகமது நபி அவர்களின் வரலாற்றை