நன்றியுடைமை

தமிழர் சமயம் 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. குறள் 101

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. குறள் 102

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. குறள் 103


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். குறள் 104

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. குறள் 105

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. குறள் 106

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. குறள் 107

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் மாண்டு எழக்கூடியய பிறவியிலும்  மறவாமல் போற்றுவர் பெரியோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. குறள் 108

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
குறள் 109

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
குறள் 110

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

நாலடியாரில் செய்ந்நன்றியறிதல் எனும் அதிகாரம் அமைக்கப்பெறவில்லை. ஆனால் இவ்வறத்தை மெய்ம்மை, புல்லறிவாண்மை, கீழ்மை, கயமை போன்ற அதிகாரங்கள் எடுத்துரைக்கின்றன. தம்மால் தரமுடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று சொல்வது 

செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து (கு.111) 

என ஒரு பாடல் விளக்குகின்றது.

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும்.  (நாலடியார் 357 - பொருட்பால் - பொதுவியல் - கயமை)

பொருள்: ஒரே ஒரு உதவி மட்டும் செய்தார் ஆயினும் அதனைச் சான்றோர் மனத்தில் பொதித்து வைத்துக் கொண்டு  உதவி செய்தவர் நூற்றுக்கணக்கான பிழை தனக்குச் செய்தாலும் அனைத்தையும் பொறுத்துக்கொள்வர். எழுநூறு உதவி செய்திருந்தாலும் ஒரே ஒரு தீது செய்வாராயின், கயவர் தமக்குச் செய்த எழுநூறு உதவிக்களையும் தீயவை என ஆக்கிக்கொள்வர். 

நாலடியார் கீழ்மை எனும் அதிகாரத்தில் சான்றோர் நன்றியறிவார், கீழோர் நன்றி உணர்வில்லாதவர்கள் என்பதைக் கூறுகின்றது.

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து
என்றும் செயினும்  இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு  (நாலடியார் 344)

பொருள்: ஒளி திகழும் அருவி பாயும் நாட்டின் அரசனே! தினை அளவு சிறிய உதவி செய்தாலும் அந்த உதவியைச் சான்றோர் பனை அளவு பெரிதாக எண்ணித் திருப்பி உதவுவர். நன்றி உணர்வு இல்லாதவர் பனை அளவு மிகப் பெரிய உதவி செய்தாலும் அதனை எண்ணியும் பார்க்க மாட்டார்.

பழமொழி நானூறும் கீழ்மக்கள் இயல்பு, நன்றியில் செல்வம், இல்வாழ்க்கை, எனும் தலைப்புகளில் செய்ந்நன்றியறிதல் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இல்வாழ்க்கை எனும் தலைப்பில் செய்ந்நன்றியறிதல் குறித்துத் தம் சுற்றத்தான் என்று நினைத்து நமக்கு நாழி அரிசி கொடுத்தவன் கோபப்பட்டாலும் அதற்காக அவனை இகழாமல் அவன் செய்த உதவியை நினைத்து நன்றியுடன் இருக்க வேண்டும் (345) என்று கூறுகிறது.

மற்றொரு பாடல்களில் உதவி செய்தவர்கள் என்பதை மறந்து அவனைப் போற்றாமல், அவனைப் போற்றாமல், அவன் மீது கோபப்படக்கூடாது என்றும் 346 செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக் கோடின்றி அழிவது விதி 347 என்றும் கூறுகிறது. நன்றியணர்வு இன்றி உதவி செய்தவரை அவருடைய பகைவருடன் சேர்ந்து கொண்டு புறங்கூறுதல் கூடாது. கீழ்மக்கள் இயல்பு எனும் தலைப்பில் கொடியவர்க்கு நன்மை செய்தாலும் அவர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற கருத்தை கூறுகிறது.

நன்றியில் செல்வம் எனும் தலைப்பில் உறவினர்களாலும்,நண்பர்களாலும் நேருமானால் அவர்களுக்கு உதவி செய்து வாழ்வோர் இல்லை உதவி செய்ததை நன்றியுடன் போற்றாதவர்க்கு உதவிகள் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை,நன்றி கொன்றவர்க்கு உதவுவதால் நன்மை இல்லை என்பதை,

தமராலும், தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி
நிகராகச் சென்றாரும் அல்லர் - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப செய்தது உதவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு (227)

நான்மணிக்கடிகையில் செய்நன்றியறிதல் பற்றி செய்திகள் இடம்பெறுகின்றன. 

பிறர் செய்த நன்றியை நன்றாக கொளல் (11:1) என்றும் 

 பிறர் செய்த நன்மையை மறந்த காலத்து செய்ந்நன்றி கெடும் என்பதை 

நன்றி சாம் நன்றறிய தார் முன்னர் (47:1) என்றும்,

 நன்மை செய்தாரைவிடப் பிறர் செய்த நன்றியை மறவாதவர் மிக மேலானவர் (70:3-4) என்று குறிப்பிடுகிறது.

நன்றிப் பயன் தூக்கா நாணிலி எச்சம் இழந்து வாழ்வார் (திரி.62) 

என்று திரிகடுகம் செய்ந்நன்றியறிதலைக் குறிப்பிட்டமைகின்றது (1:1), 

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனியினிது (30) 

 என்று இனியவை நாற்பது ஒரிடத்தில் மட்டும் செய்ந்நன்றியறிதலை வலியுறுத்துகிறது.

சிறுபஞ்சமூலத்தில் அமையும் நல்ல வெளிப்படுத்தி இயல்புடைவன் இனத்தைக் காப்பவனாகவும், பழிவந்த விடத்து உயிர்விடுபவனாகவும் காணப்படுகின்றனர். மேலும் அவர்கள் தீயதை மறக்க வேண்டும் என்ற கருத்தை சிறுபஞ்சமூலம் நவில்கிறது.

முதுமொழிக்காஞ்சி உள்ளொன்று வைத்து புறமொன்று பொய்யாக நடித்து செய்யப்படும் உதவி கீழ்மையிலும் கீழ்மையானது என்பதை,

பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது  (முது.4:6)

என்ற பாடலடியில் அறியலாம். இன்னா நாற்பது, ஏலாதி போன்ற நூல்கள் செய்ந்நன்றியறிதல் எனும் நெறியைக் கூறவில்லை. மேற்கூறப்பட்ட கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் பிற்காலத்தில் தோன்றிய நீதி இலக்கியங்களும் இக்கருத்தைக் குறிப்பிடுகின்றன. இந்நெறியை ஒளவையார்,

நன்றி மறவேல் (ஆத்தி.21)

என்றும் மேலும் கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை,

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்  (மூது.1)

என்ற பாடலில் வேர் மூலம் உண்ட நீரிலை உச்சியிலே இளநீர்க் காய்களாகத் தந்து நன்றியை வெளிப்படுத்துகிறது தென்னை. அது போல நல்லவர்களும் தாங்கள் பெற்ற உதவியைத் தக்க சமயத்தில் திருப்பிச் செய்வார்கள் என்று குறிப்பிடுகிறார். செய்த நன்றி மறக்க வேண்டாம் என்று உலகநீதியும் இயம்புகிறது இதனை,

செய்த நன்றி ஒரு நாளும் மறக்க வேண்டாம்  (உலக.8:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

இஸ்லாம்

“ (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் – எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை (குர்ஆன் 31:32)

” (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்(குர்ஆன் 7:10)

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 4:147)

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (குர்ஆன் 14:07)

எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ) (403)

‘மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.' (லுக்மான் : 14)

நூஹ் நபி அவர்கள் பல நூறு ஆண்டுகள் பல்வேறு சோதனைகளை அனுபவித்தும், அவர் நன்றி மறக்கவில்லை என்பதை ‘அவர் நன்றி மிக்க அடியாராக இருந்தார்’ (அல் இஸ்ர :03) 

கிறிஸ்தவம் 

“கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது” -  சங்கீதம் 106:1

“ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக” -  1 நாளாகமம் 16:34 

2 கருத்துகள்:

  1. எனவே, என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்பகரா : 152)

    https://www.islamkalvi.com/?p=123048

    பதிலளிநீக்கு
  2. மூதுரை பாடல் 15 :

    வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
    ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்–பாங்குஅழியாப்
    புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
    கல்லின் மேல் இட்ட கலம்.

    பொருள்:

    புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும்
    வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப்
    போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும்
    உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்.

    பதிலளிநீக்கு