தீமையின் மூலம் நன்மை விளையாது

தமிழர் சமயம்


கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும் (அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:658)

பொழிப்பு (மு வரதராசன்): ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும். 
 

இஸ்லாம்


..."வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள. (குர்ஆன்  6:151)

நிச்சயமாக அல்லாஹ் ரோஷமடைகிறான். அவனின் ரோஷமாகிறது அவன் எதனை தடுத்துள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ஏற்படுகிறது.- (புகாரி, முஸ்லிம்
 

கிறிஸ்தவம் 

அரசன் இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை பின்பற்றாமல்  போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான். (2 இரா. 22:13)


இரப்பவர் யாராயினும் இடுக

தமிழர் சமயம்


ஆர்க்கும் இடுமின்; அவர்இவர் என்னன்மின்;
பார்த்து இருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்;
வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்;
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினரே (திருமந்திரம் 250)

பொருள்:  ‘இவருக்கு இடு, அவருக்கு இடாதே,’ ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்றெல்லாம் பழைய மரபுகள் பலவாறு சொல்லும்; அவற்றையெல்லாம் போற்ற வேண்டாம். இரப்பாரை அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள். காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடிவைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் 
உதவுங்கள்.

ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து. (நாலடியார் 98)

பொருள்:  வளம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரையையுடைய வேந்தே! ஏந்திய கையை மறுக்காது, எதையாவது, இன்னார் இன்னார் என ஒரு வரையறை செய்யாது, திருப்பித்தர முடியாத வறியருக்கு ஒன்று ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். மீண்டும் திருப்பிக் கொடுப்பவர்க்கு ஒன்றை ஈதல் யாவரும் அறிந்த 'கடன்' என்னும் பெயருடையது. 
 

இஸ்லாம்


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒரு பிச்சைக்காரன் குதிரையில் வந்தாலும் அவருக்குக் கொடுங்கள்" என்று ஜயத் இப்னு அஸ்லமிடமிருந்து மாலிக் என்னிடம் கூறினார். (நூல்: முவத்தா மாலிக், சதக்கா, புத்தகம் 58, ஹதீஸ் 1846)  
 

கிறிஸ்தவம்


இயேசு, “உன்னிடம் கேட்கும் அனைவருக்கும் கொடு. உங்கள் பொருட்களை எடுத்துச் செல்பவரிடமிருந்து அவற்றைத் திரும்பக் கேட்காதீர்கள்” (லூக்கா 6:30)

இரக்கம்

தமிழர் சமயம்  

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும் (அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:575)

பொழிப்பு: ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் (இரக்கம்) என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

குறிப்பு: கண்ணோட்டம் என்பது ஒரு வகைப் பண்பு. இது கண் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. இதனை இரக்கக்-குணம் என்றும் தாட்சண்யம் என்றும் கூறுவர்.  

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் (உலக நீதி 67) 

பொருள்: இரக்கமில்லாது பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாதே

கிறிஸ்தவம்  

எனவே சுதந்திர சட்டத்தின் கீழ் நியாயந்தீர்க்கப்பட வேண்டியவர்களாக பேசுங்கள் மற்றும் செயல்படுங்கள். ஏனெனில் இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமில்லாத தீர்ப்பு. தீர்ப்பின் மீது கருணை வெற்றி பெறுகிறது. (ஜேம்ஸ் 2:12-13)

இஸ்லாம் 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: எவர் படைப்பினங்களின்‬‪ கருணை காட்டவில்லையோ‬ அவன் மீது படைத்தவன் கருணை காட்ட மாட்டான். - (ஸஹீஹ் புஹாரி 6013)

ஒப்பாரி


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும். (10 நல்வழி)

பொருளுரைபெரிய பூமியிலுள்ள மனிதர்களே; வருடம் முழுவதும் அழுதுபுரண்டாலும் இறந்தவர் திரும்பி வருவரோ, வரமாட்டார்; ஆதலினால், அழ வேண்டுவதில்லை; நமக்கும் அம்மரணமே வழியாகும்; 

அழுவது பயன் தருமா?  உலகத்து இயற்கை என்னவென்று அறியாமல் அழுவது பயன் தருமா? உலக இயற்கை சொல்கிறது குண்டலகேசிப் பாடல் ஒன்று:

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?

பொருள்: பச்சிளம் குழந்தையராக இருந்தோம். அந்தக் குழந்தைமை செத்துவிட்டது. குழந்தைமையைக் கொன்றுதான் பிள்ளையரானோம். அந்தப் பிள்ளைமை செத்துவிட்டது. பிள்ளைமையைக் கொன்றுதான் காளையரானோம். காளைத் தன்மை செத்துவிட்டது; காமவேகம் ஊட்டுகிற இளமையும் செத்துவிட்டது. இளமையைக் கொன்று மூத்தோம்; காமத்தைக் கொன்று கனிந்தோம். இதுதான் இயல்பு. பழையது சாகும். பழையதன் சாவில் புதியது பிறக்கும். புதியதும் சாகும்-குருத்தையும் குலையையும் ஈன்று வாழை தான் சாவதைப் போல. குருத்திலிருந்து வாழை, மீண்டும் வாழையிலிருந்து குருத்து என்று இது ஒரு சுழற்சி. சாவதற்காக அழுவதென்றால் அழுவது மட்டுமே வாழ்வாக இருக்கும்-ஏனென்றால், ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோம்.

உறக்கமும் சாவும் ஒன்று - வாசிக்க  

இஸ்லாம் 

"இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் ‎அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பரம்பரையை குறைகூறுதல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல்‎" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.‎ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎ - (நூல்: முஸ்லிம் 100‎)

(மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா (ரலி) ஜஅஃபர் (ரலி) இப்னு ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, ‘அவர்கள் (என்னுடைய சொல்லிற்குக்) கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘(நீ சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்து’ எனக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று மூன்றாம் முறையாக வந்து ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிகைத்துவிட்டனர்” என்றார். ”அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, ‘அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன். (புஹாரி: 1299 ஆயிஷா (ரலி))

ஒப்பாரி வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்ததை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறு யாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு ஸுலைம் (ரலி) உம்முல் அலா (ரலி), முஆத் (ரலி) அவர்களின் மனைவியான அபூ சப்ராவின் மகள் இன்னும் இரண்டு பெண்கள் அல்லது அபூ ஸப்ராவின் மகள் முஆத் (ரலி) உடைய மனைவி. இன்னும் ஒரு பெண், (புஹாரி: 1306 உம்மு அதிய்யா (ரலி))

நாங்கள் (மகளிர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்கமாட்டார்கள்” எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரி வைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தம் கையை பின்வாங்கினார். மேலும், அவர் ‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரி வைத்து) விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள். (புஹாரி: 4892 உம்மு அதிய்யா (ரலி))

 (துன்பத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி)  (நூல் : புகாரி 1294)

 உமர் (ரலி) அவர்கள்  ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் கம்பினால் அடிப்பார்கள்; கல்லெறிவார்கள்.  இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  (நூல் : புகாரி 1304) 

உமர் பின் அல்கத்தாப் (ரலி) (கத்தியால்) குத்தப்பட்டபோது, அவர்களுக்காக (அவர்களுடைய மகள்) ஹஃப்ஸா (ரலி) சப்தமிட்டு அழுதார்கள். அப்போது உமர் (ரலி), “ஹஃப்ஸா! ‘சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். (அவ்வாறே உமர்மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) சப்தமிட்டு அழுதபோதும் “ஸுஹைப்! ‘சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி). (நூல் முஸ்லீம், அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1542)

கிறிஸ்தவம் & யூதமதம் 

இறந்தவருக்காக அழாதே, அவனுக்காக துக்கப்படாதே, போனவனுக்காக எப்பொழுதும் அழாதே; ஏனென்றால் அவர் ஒருபோதும் திரும்பி வரமாட்டார், அல்லது தனது சொந்த நிலத்தைப் பார்க்க மாட்டார். (எரேமியா 22:10)


முகமது நபி ﷺ இஸ்மாயீலின் சந்ததிதான்!


வாழ்த்துக்கள் சகோ,

உங்களது ஆய்வில் உள்ள சில பிழைகளை சுட்டிக்காட்ட இந்த பதிவு, ஒருவேளை உங்களுக்கு உபயோகப்படலாம்.

முதலில், "இஸ்மவேல் என்று கிறிஸ்தவத்திலும் இஸ்மாயீல் என்று இஸ்லாத்திலும் அழைக்கப்படுகிறவர்" என்று நீங்கள் கூறுவது பிழை. பைபிளும் இஸ்மாயீல் (Ismayel) என்றுதான் அழைக்கிறது, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பின் நிலை இவ்வாறு உள்ளது.

இரண்டாவது, "நம்பிக்கை அடிப்படையிலே முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்" என்று கூறுவதன் மூலம் எந்த நம்பிக்கையும் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கூற வருவதாக நான் புரிந்து கொள்கிறேன். 
 
உங்களிடம் உள்ளது கர்த்தரிடம் வந்த, இயேசு அவர்கள் மூலம் வெளிப்பட்ட, உண்மை பைபிள் என்பதற்கான ஆதாரம் என்ன? இல்லை என்பதற்கான ஆதாரம் கிறிஸ்தவ இணைய தலங்களிலேயே விரவிக் கிடக்கிறது. சில ஆதாரங்கள் கீழே ஒன்றன் பின் ஒன்றாக விளக்கப் பட்டுள்ளது.

மூன்றாவது, "புஹாரி நூலானது முகமது நபிக்கு 200 வருடத்துக்கு பிறகு தொகுக்கப் பட்டுள்ளது" என்பதை குறிப்பிடுவதன் மூலம் அதன் மீதான உண்மைத் தன்மையை கேள்வி எழுப்புகின்றீர்கள். ஆனால் பைபிளை பற்றிய பின்வரும் செய்தியை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

"27 புத்தகங்களின் ஆரம்பகால முழுமையான பட்டியல் , 4 ஆம் நூற்றாண்டு அலெக்ஸாண்டிரியாவின் பிஷப் அதானசியஸ் 367 AD இல் எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படுகிறது. 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடு, வட ஆபிரிக்காவில் உள்ள ஹிப்போ (393 AD) மற்றும் கார்தேஜ் (397 AD) சபைகளின் போது முதன்முதலில் முறையாக நியமனம் செய்யப்பட்டது" - New Testament wikipedia
 
சில நூல்களில் கிறிஸ்துவுக்கு பிறகு 45 முதல் 95 வருடங்களுக்கு பிறகு தொகுக்கப்பட்டது என்கிறது.

நான்காவது, "ஹதீஸ் நூலகளைப் பற்றி முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது" என்று கூறுவதன் மூலம் அனைத்து ஹதீஸ் நூல்களையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்தை விதைக்க விரும்புகிறீர்கள் என்று கருதுகிறேன்.

புஹாரி நூலானது குர்ஆனுக்கு அடுத்த நம்பகமான நூல். 1200 வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் விளக்கவுரை எழுதி உள்ளனர். அதில் எவரும் இதன் நம்பகத் தன்மையை கேள்வி எழுப்பவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ் நூல்கள் உண்டு, அவை அனைத்தும் ஒரே தரமுடையதல்ல. எதிரிகள் அவர்கள் விருப்பட்டதை எழுதி ஹதீஸ் நூல் என்று சொன்னால் அதை எவ்வாறு தரம் பிரிப்பது என்று அறிவியல் ரீதியான ஒரு முறையினை கையாண்டு எழுதப்பட்ட நூல் புஹாரி. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் இமாம் புஹாரியால் சேகரிக்கப்பட்டு வெறும் 7000 மட்டுமே நூலில் பதியப்பட்டுள்ளது. மற்றவைகள் ஏன் பதியப்படவில்லை?, இவைகள் ஏன் பதியப்பட்டுள்ளது? என்பதற்கு தனி தொகுப்புடைய நூல்கள் உள்ளது. நீங்கள் கூறும் நூலின் பெயர் ஸஹீஹ் புஹாரி. ஸஹீஹ் என்றால் உண்மையான என்று பொருள்.

உதாரணமாக, பைபிளில் ஜான் எழுதிய சுவிசேஷத்தை எடுத்து கொள்வோம். கிறிஸ்துவுக்கு பிறகு சில நூறு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட பைபிளில், ஜான் எழுதிய சுவிசேஷம், இயேசு அவர்களின் சீடரான ஜான் தான் எழுதினார் என்பதற்கும், ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அவர் எழுதிய சுவிசேஷம் மட்டும் தான் அதில் உள்ளது என்பதற்கும், அதில் பின் வந்தவர்கள் இடைச்சொருகல்கள் செய்யவில்லை என்பதற்கும், என்ன ஆதாரம் உங்களிடம் உண்டு? வெறும் நம்பிக்கை மட்டுமே உங்களிடம் உண்டு, ஆதாரம் இல்லை.!

ஐந்தாவது, பைபிளின் வசனத்தை அடிப்படையாக கொண்டு, குர்ஆனின் செய்தியை மறுக்க முடியாது. பைபிள் பரிசுத்தம் இல்லாதது என்கிறது குர்ஆன். இது வெற்று நம்பிக்கையல்ல, ஆதாரம் இதோ.

விருத்தசேதனம் ன்பது ஆப்ரஹாமின் சந்ததிகள் கர்த்தருடன் செய்துகொண்ட கால எல்லையற்ற உடன்படிக்கை ஆகும்.

இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். - (ஆதியாகமம் 17:10)

ஆனால் இப்படி ஒரு கேள்வி பைபிளில் உள்ளது! 

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? - (ரோமர் 3:1)

கட்டளையிட்டவர் உலகம் அனைத்தையும் படைத்த இறைவன் என்பதைவிட வேறு சிறப்பு வேண்டுமா?

ஆனால், இயேசுவுக்கு பின் வந்தவ பால் என்ன சொல்கிறார்?  

ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். - (1 கொரி 7:19)

விருத்தசேதனம் செய்வதே கர்த்தரின் கட்டளைக்கு கட்டுப்படுவதாகும் அல்லவா?

கர்த்தருடன் இப்ராஹிமின் சந்ததி செய்து கொண்ட உடன்படிக்கையை, கர்த்தரோ அல்லது அவரது தீர்க்கதரிசியான இயேசுவோ தானே முறிக்க முடியும்? இயேசுவின் காலத்துக்கு பிறகு பால் என்று யாரோ ஒரு மனிதர் தன்னைத்தானே இயேசுவின் சீடராக அறிவித்து, கர்த்தருடனான விருத்தசேதன உடன்படிக்கையை முறித்து விடுகிறார். அவரைப்பற்றி முன்னறிவிப்போ அல்லது விருத்த சேதனத்திற்க்கான கால எல்லையோ பைபிளில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. 

பைபிள் கறைபடிந்தது என்பதற்கு இதைவிட சான்று என்ன தேவை?  

ஆறாவது, "சாராள் மகனுக்கு எகிப்துலிருந்து ஒரு பெண்ணை தன் மகனுக்கு கண்டுபிடித்தாள்" என்ற பைபிளின் செய்தியானது, "ஆப்ரகாமினால் வனாந்திரத்தில் விடப்பட்ட சாராள், விடப்பட்ட இடத்தின் வழியே வந்த ஏமன் நாட்டு கூட்டத்தாரின் பெண்ணை பிற்காலத்தில் இஸ்மாயில் திருமணம் செய்தார்" என்கிற புகாரியின் செய்தியோடு முரண்படுகிறது என்கிறீர்கள். இதன் மூலம் முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி அல்ல என்று நிறுவ முயல்கிறீர்கள்.

ஆனால், 1) கர்த்தருக்கும் இப்ராஹிமின் சந்ததிக்கும் இடையிலேயான "விருத்தசேதன ஒப்பந்தம்" முகமது நபியின் காலத்துக்கு முன்னமே அங்கே பின்பற்றி வந்ததற்கான வரலாற்று சான்றுகள் பல உண்டு. இஸ்மாயில் அங்கே வாழ்ந்திராமல் அது சாத்தியமில்லை.

மேலும் நீங்கள் சொல்லும் முரண்பாட்டில், தவறான தகவலாக பைபிளில் உள்ளத்தைத்தான் கருத முடியும். ஏன்?

2) ஆதியாகமம் 21:21 இல் இஸ்மாயீல் மற்றும் இஸ்மாயீல்களுடன் பரான் தொடர்பு இருப்பதை புவியியலாளர் யாகுத் அல்-ஹமாவி உறுதிப்படுத்துகிறார், அவர் " பரான், ஒரு ஹீப்ரு வார்த்தை, தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள மெக்காவின் பெயர்களில் ஒன்றாகும்." என்று கூறுகிறார் - Desert of Paran wiki

எனவே அரேபியாவிலிருந்து சாராள் எகிப்துக்கு சென்று பெண்ணை கண்டுபிடித்தால் என்பதைவிட, பிற்காலத்தில் தன் இடம் நோக்கி வந்த மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் தேர்ந்தெடுத்தாள் என்பதுதான் பொருத்தமானதாகும்.

மேலதிகமாக, 3) இஸ்மாயில் அவர்களுக்காக உருவான நீரூற்று என்பது என்றென்றும் வெளிப்படும் கெட்டுப்போகாத, எண்ணிலடங்கா நன்மைகள் நிறைந்த ஜம்ஜம் நீராக அல்லாமல் வேறெந்த இடத்தில் உள்ள நீராக இருக்க முடியும்? கர்த்தரின் அற்புதம் அல்லவா அது?

ஏழாவது, முகமது நபியின் வம்சம் பற்றியுள்ள முரண்பாடுகளை அர்-ரஹீக்குல் மக்துமில் குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மைதான்.  

ஆனால் அதைக் கொண்டு புகாரியின் செய்தியை பொய் என்று நிறுவமுடியாது. ஏன்?

ஏனென்றால் அந்த முரண்பாடுகள் தரவுகளின் குறைபாட்டால் ஏற்பட்டது. வேறு தரவுகள் இருந்தாலும் இல்லையென்றாலும் புகாரியின் செய்தி உண்மையானதே. 

உதாரணமாக ஆதம் ஏவாளின் செய்திகளை பைபிள் சொன்னதால் நம்பும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வேறு இடங்களில் தேடி அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஆதாரத்தின் அடிப்படையில் பைபிளில் சொன்ன செய்திகளை நீங்கள் ஏற்பதில்லை. 

முகமது நபி அவர்களின் வம்ச செய்தியை பின்னாளில் பொய் என்று கூறி எடுத்துவிட்டார்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு நபிமொழி-யின் தரம் தான்தோன்றித்தனமாக நிணயிக்கப் படுவதில்லை என்கிற செய்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

அதற்கென்று விதிகள் உள்ளன.அந்த விதிகளின் நோக்கம், அந்த செய்தி உண்மையிலேயே முகமது நபியால் சொல்லப்பட்டாதா அல்லது இடையிலே எதிரிகளால் சொருகப் பட்டதா என்று பிரித்தறியும் விதத்தில் அமைந்து உள்ளது. 

எட்டாவது, குர்ஆனின் 3:84, 6:156,157, 28:46 போன்றவைகளை குறிப்பிட்டு, "இஸ்மாயிலுக்கும், இஸ்மாயயிலின் சந்ததிக்கும் வேதம் கொடுக்கப்பட்டுள்து" என்று சில வசனத்திலும்,"வேதம் கொடுக்கப்படாத சமுதாயம் அரபு சமுதாயம்" என்று சில வசனத்திலும் குறிப்பிட்டுள்ளதை முரண்படுவதாக கருத தேவையில்லை. 

 காரணம் 1) நபி, ரசூல் என்று இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் உண்டு. அதன் வேறுபாடுகள் உங்களுக்கு தெரிந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. தமிழிலே தேவாரம் திருவாசகம் போன்றவைகள் பெரியதாகவும் இருப்பதற்கும், ஆத்திச்சூடி சிறியதாக இருப்பதற்கும் காரணம் உண்டு. மோசஸின் நான்கு புத்தகங்கள் பெரியதாகவும் ரூத்தின் செய்தி சிறியதாக இருப்பதற்கும் இருக்கும் காரணமுண்டு.

காரணம் 2) இஸ்மாயீலின் காலத்துக்கும் முகமது நபியின் காலத்துக்கும் இடையில் சில ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி உள்ளது. எனவே இத்தனை ஆண்டுகள் வேதம் கொடுக்கபடாத மக்களை வேதம் கொடுக்கப்படாதவர் என்றுதானே குறிப்பிட முடியும். சில நூறு ஆண்டுகள் இடைவெளியே மக்களின் குணத்திலும் செயலிலும் கலாச்சார பண்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது என்கிற பொழுது "சில ஆயிரம் ஆண்டுகள்" என்பது மிக மிகப் பெரிய இடைவெளி. 

எனவே முகமது நபி இஸ்மாயிலின் சந்ததி என்பதற்கு இவைகள் போதுமான ஆதாரங்கள்.

இறுதியாக, முகமது நபி அவர்கள் ஆதாமின், நோவாவின் சந்ததி தான் என்று நிறுவத் தேவையில்லை என்று கருதுகிறேன். 

மேலும் வாசிக்க

கடன் துன்பமாகும்

கிறிஸ்தவம் 


கொடுப்பவருக்கு உபதேசம்: 
 
ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள். (மத்தேயு 5:42)

“எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். (லூக்கா 6:35) 

அந்நல்லவன் பிறரை தன் நன்மைக்காகப் பயன்படுத்தவில்லை. எவராவது அவனிடமிருந்து பணம் கடன் வாங்கினால் திருப்பித் தரும்போது அடமானத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறான். அந்நல்லவன் பசித்தவர்களுக்கு உணவைத் தருகிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். (எசேக்கியேல் 18:7)

ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறான்(நீதிமொழிகள் 22:7) 

என் மகனே! அடுத்தவனது கடனுக்கு நீ பொறுப்பாளி ஆகாதே. அடுத்தவன் தன் கடனைச் செலுத்த முடியாதபோது நீ அக்கடனைச் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாயா? அடுத்தவன் வாங்கும் கடனுக்கு உன்னைப் பொறுப்பாளியாக ஆக்கிக்கொண்டாயா? 2 அப்படியானால் நீ அகப்பட்டுக்கொண்டாய். உன் சொந்த வார்த்தைகளாலேயே நீ அகப்பட்டுக்கொண்டாய். 3 நீ அடுத்தவனது அதிகாரத்தின் கீழ் இருக்கிறாய். எனவே அவனிடம் போய் உன்னை விடுவித்துக்கொள். உன்னை அக்கடனிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக்கொள். 4 அதுவரை தூங்காதே, ஓய்வுக்கொள்ள எண்ணாதே. 5 வேட்டைக்காரனிடமிருந்து மான் தப்பி ஓடுவதுபோன்று, நீ அந்த வலையிலிருந்து தப்பி ஓடு. வலையிலிருந்து பறவை தப்புவதுபோன்று தப்பிவிடு. (நீதிமொழிகள் 6:1-5) 

கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு : “ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்." (உபாகமம் 15:1)

“நாங்கள் ஓய்வுநாளில் வேலைச் செய்யமாட்டோம். எங்களைச் சுற்றியிருப்பவர்கள் அந்நாளில் தானியங்களையோ மற்ற பொருட்களையோ கொண்டுவந்து விற்றால் நாங்கள் அவற்றை அச்சிறப்பான நாளிலும் மற்ற ஓய்வுநாட்களிலும் வாங்கமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், நாங்கள் எங்கள் பூமியில் நாத்து நடுதல் அல்லது வேறு வேலைகளைச் செய்யமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், மற்றவர்கள் எங்களுக்குத் தர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்வோம்(நெகேமியா 10:31)

கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராக கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார். (உபாகமம் 15:9)

கடன் வாங்குவோருக்கு உபதேசம் 

எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள்(ரோமர் 13:8)

இஸ்லாம் 


ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ (நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (குர்ஆன் : 2 : 282 
 
அதாவது கடன் பெறுபவர் தான் பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பார் என்பதற்கு ஒருவர் பொறுப்பேற்று கொள்ள வேண்டும்! ஒரு வேளை கடன் வாங்கியவர் கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால், தானே கடனை திருப்பி கொடுப்பதாக உறுதியளிக்க வேண்டும்! (நூல் : புகாரி : 2291) 
 
ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (நூல் : புகாரி 2295)

உங்களிடம் ஒருவர் கடன் பெற்று அதை திருப்பி அடைக்க கஷ்டம் பட்டால் நீங்கள் விருப்பம் பட்டால் கடனை பாதியாக தள்ளுப்படி செய்து கொண்டு மீதி பாதியை மட்டும் பெற்று கொள்ளலாம்! (நூல் : புகாரி : 471)

கடன் கொடுத்தவர் கடுமையாக பேசவும் அனுமதி உண்டு 

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு' என்று கூறினார்கள்' (நூல் : புகாரி : 2401) 

 கடன் வாங்கியவர்க்கு அவகாசம் அளித்தல்

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். (அல்குர்ஆன் : 2:280)

தமிழர் சமயம் 

கடன் என்கிற தமிழ் சொல்லின் மூலமே (கடமை) கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள முக்கியத்துவம் புரிகிறது.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. [பொருட்பால், குடியியல், இரவு குறள் 1053]

பொருள் ஒரு பொருளோ அல்லது உதவியோ அல்லது கடனோ நாடும் பொழுது யாரிடம் நாடவேண்டும் என்பதை கவனமாக கணக்கில் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கேட்டுவிட கூடாது.

தற்புகழ்தல் புறங்கூறன் மிகஇருணம்
வாங்குதல்பொய்ச் சான்று ரைத்தல்
பற்பலவாக் கட்சாடை சிரகரகம்
பிதஞ்செய்து பசுமை பொய்போற்
பிற்பயன்றோன் றிடச்செய்தன் மெய்யுரைக்க
வஞ்சிவாய் பேசி டாமல்
சற்பனையா யிருத்தல்பொய்க் கதைகூறல்
கேட்டலெலாஞ் சலங்க ளாமோ. (நீதிநூல் 206)

பொருள்: தன்னையே புகழ்ந்து கொள்ளல், புறஞ் சொல்லுதல், அளவுக்கு மிஞ்சிக் கடன் வாங்குதல், பொய்ச்சான்று கூறல், கண் தலை கை முதலியவற்றால் (ஒப்புக்கொள்ளும் அடையாளமாகிய) சாடை செய்து உண்மையைப் பொய்போல் பயனிலதாக்கல், மெய்சொல்ல அஞ்சி ஊமைபோல் வஞ்சித்திருத்தல், பொய்க்கதை சொல்லல், கேட்டல் இவைகளெல்லாம் பெரும்பழி தரும் பொய்க்குற்றங்களாம்.

பதவுரை: இருணம்-கடன். சற்பனை-வஞ்சனை. சலம்-பொய். 

உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
கடன் உடையார் காணப் புகல். (இன்னா நாற்பது 11)

பதவுரை : யாத்த - பிணித்த; தொடர் - சேர்க்கை

பொருள்: உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம். 

தெய்வத்துக்கு கடன் 


ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார். (நீதிமொழிகள் 19:17)
அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவர் யார்? (கடன் கொடுக்கும்) அவருக்கு அல்லாஹ் அதனை (திருப்பிக் கொடுக்கும் போது) பன்மடங்குகளாகப் பெருக் கிக் கொடுப்பான். அல்லாஹ் குறைத்தும் வழங்குகிறான் தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (குர்ஆன் 2:245).

முகஸ்துதிக்கு மயங்காதே

அங்கீகாரம் என்கிற பெயரில் ஒவ்வொரு துறையிலும் இவ்வாறு தன்னை புகழும் இடத்தையும் மேடையையும் தேடி ஓடிக்கொண்டு இருக்கும் இக்காலத்தில் நாம் அறிய வேண்டிய மிக மிக மிக அவசியமான செய்திகள்.

தமிழர் சமயம்


முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம்

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா ததனை அகற்றலே வேண்டும்
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம். - (முன்றுறையரையனார், பழமொழி நானூறு 232)

பதம் பிரித்து:
தமரேயும், தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்,
அமராததனை அகற்றலே வேண்டும்;
அமை ஆரும் வெற்ப! அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பொருள் விளக்கம்: தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். மூங்கில் செறிந்திருக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவரே, ஒருவரும் அணிய விரும்புவதில்லை, அவை தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை.

பிரபலமடைவதை விரும்பாதே

கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்,
இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று
ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள. (புறத்திரட்டு. 1222)

பொருள்: மறைந்து வாழ்பவர்களைப் போல் பகலில் தோன்றலும், இரப்பவர்கள் போல் தேய்ந்து காணப்படுதலும், இரப்பவர்களுக்கு கொடுப்பவர்கள் போல் முகம் ஒளிருதலும், ஆகிய இம்மூன்றும் சந்திரனுக்கு உள்ள இயல்புகளாகும் 
 

இஸ்லாம்  

ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ”அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (புஹாரி : 6499 ஜூன்துப் ரலி). 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார். (நூல்: அஹ்மத் 16517)

“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி) (நூல்: அஹ்மத் 23630, 22528)

மேலும், ஒருவன் எத்தகைய உயரிய நற்காரியம் புரிந்திருந்தாலும் அதை முகஸ்துதிக்காக அவன் செய்திருந்தால் நரகில் முகம் குப்புற அவன் தள்ளப்படுவான். 

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான்.

அதற்கு அவர் “நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்” என்று கூறுவார். “நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும்” என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது’’ என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் “இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான்.

அதற்கு அவர் “நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன்’’ என்று பதில் சொல்வார். ‘‘நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது” என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், “நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான்.

அதற்கு அவர், ‘‘நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை’’ என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், “நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம்-3865 (3537))

கிறிஸ்தவம் 

தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பார்க்கிலும், கடிந்து கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான் -  (நீதிமொழி 28:23
 
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் - (நீதிமொழிகள் 29:5)

பிறரின் பொருளை அபகரித்தல்

தமிழர் சமயம்

 
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். (வெஃகாமை - 171)

பொருள்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் (குறள் - 178)

பொருள்: ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும் 
 

கிறிஸ்தவம் 


மற்றொருவனிடமிருந்து நான் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை. நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது. நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன். ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை. நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால் அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான் (யோபு 31:38-40)

“லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது, “ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும். (உபாகமம் 27:25)

ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார். (சங்கீதம் 12:5)

பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. (நீதிமொழிகள் 23:10

இஸ்லாம் 

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள். (புஹாரி :2453 அபூஸலாமா (ரலி))

 நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (குர்ஆன் 4:10)

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (குர்ஆன் 89:17-20)

யூகம்

தமிழர் சமயம் 

காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் (உலக நீதி 68)

பொருள்: கண்ணால் காணாதவற்றைப் பற்றிக் கட்டுக்கதைகள் சொல்லாதே 

 

இஸ்லாம்

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். -  (குர்ஆன் 10:36)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (அல்குர்ஆன் 49:12
 

கிறிஸ்தவம் & யூத மதம் 

அவர்கள் கடவுளை அறிந்திருந்தாலும், அவர்கள் அவரைக் கடவுளாக மதிக்கவில்லை அல்லது நன்றி செலுத்தவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் யூகங்களில் பயனற்றவர்களாகி, அவர்களின் முட்டாள்தனமான இதயம் இருண்டுவிட்டது. (ரோமர் 1:21)

மனிதர்கள் அமீபாவிலிருந்து அல்ல, ஆதமிலிருந்து வந்தவர்கள்.

இஸ்லாம் 


மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1) 
 

கிறிஸ்தவம் 


"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்." - (அப்போஸ்தலர் 17:26)

தமிழர் சமயம் 


திருமந்திரம் - மனித இன மூலம்

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. (இரண்டாம் தந்திரம் - 9. பாடல் 6)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பதவுரை: ஆதி - தொடக்க; பகவன் - ‘பகு’ என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும். பகுத்தவன் பகவன் எனப்பட்டான். எனவே தன்னுடம்பை பகுத்து/பிரித்து தன் துணைக்கு தந்த முதல் மனிதன் ஆதி பகவன் எனப்பட்டான். அவரிடமிருந்தே உலகில் உள்ள மக்கள் அனைவரும் தோன்றினார். 

மணக்குடவர் உரை: உலக மொழிகளில் உள்ள எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. 
 

இந்து மதம்  


அவர் மகிழ்ச்சியாக இல்லை. எனவே மக்கள் (இன்னும்) தனியாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இல்லை. அவர் ஒரு துணையை விரும்பினார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கட்டித்தழுவுவது போல் அவர் பெரியவரானார். இந்த உடலையே இரண்டாகப் பிரித்தார். அதிலிருந்து கணவனும் மனைவியும் வந்தனர். எனவே, யாஜ்ஞவல்கியர் கூறினார், இது (உடல்) ஒரு பாதி, பிளவுபட்ட பட்டாணியின் இரண்டில் ஒன்று போன்றது. எனவே இந்த இடம் மனைவியால் நிரப்பப்படுகிறது. அவன் அவளுடன் ஐக்கியமானான். அதிலிருந்து மனிதர்கள் பிறந்தார்கள். (பிருஹதாரண்யக உபநிஷத் 1.4:3)