துறவறம் சரியா? பிழையா?

தமிழர் மதம்


திருமந்திரம்

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை;
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவு அறியாரே256

அனைத்தயும்யும் துறந்த வழியை தேர்ந்தெடுத்தது முதல் அவர்களுக்கு இல்லை எந்த விதமான உறவு இல்லை. இறந்து விட்டவர்களுக்கு இல்லை எந்த விதமான உலக இன்பமும். அறம் செய்ய மறந்தவனுக்கு வழித் துணையாக வரமாட்டான் ஈசன். இந்த மூன்று வகைப் பட்டவர்களுமே அறம் செய்யும் முறையை அறியார்

 வள்ளுவரின் துறவு விளக்கம்

‘துறவு’ அல்லது ‘துறத்தல்’ என்பது பற்றிப் பல கருத்துகள், பல விளக்கங்கள், கூறப்படுகின்றன. குறளுக்கு உரை எழுதிய சமயவாதிகள் ஒரு வகையாகவும், பகுத்தறிவுவாதிகள் இன்னொரு வகையாகவும் விளக்கம் தருகிறார்கள். சமயவாதிகள், இல்வாழ்க்கையை விட்டு, விலகி, மனிதர்கள் நடமாட்டமே இல்லாத காடுகளுக்குச் சென்று, தனித்து இருந்து, தன்னை ஒறுத்துத் உடல் அசௌகரியங்களை வலிந்து தானே மேற்கொண்டு தவம் செய்வது என்பர்.

பதவியின் மீது பற்றுக் கொள்ளாத ஒருவர், அதைத்தானாக விட்டு விடுவதையும், துறவு, அல்லது துறத்தல் என்று குறிப்பிடுவர். தனக்கு இருக்கும் மிகுதியான பொருள்கள் மீதும், சௌகரியங்கள் (Comforts) மீதும் பற்று இல்லாதவர்கள், அவற்றை விட்டு விட்டு, தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, குறைந்த அளவுப் பொருட்களுடன் வாழ்பவர்களையும், வசதிகள் இருந்தும் அவற்றைத் துறந்து வாழ்கிறார் என்பர்.

 மனத்து அளவில் துறந்து, பற்று இல்லாமல் வாழ்வது, துறவு என வள்ளுவர் கூறுகிறார். சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. புறத்தோற்றத்தில் இருப்பதை விட, அகத்துள், மனத்துள் இருக்க வேண்டியதையே எல்லா இடங்களிலும் வலியுறுத்துகிறார். துறவு என்ற தலைப்பிலும் அதையே கூறுகிறார்.

பற்றும் துறவும்

பசி இரண்டு வகைப்படும். ஒன்று உடல் பசி. இன்னொன்று உள்ளப்பசி. அதைப்போல, பற்றும், உடல் பசியின் மீதும், உள்ளப் பசியின் மீதும் ஏற்படும். விலங்கினங்களுக்கு உடல் பசியின் மீதுதான் பற்று உண்டு. அந்தப் பற்று உணவுப் பொருள் மீதுள்ள பற்றாக அமைகிறது. ஆனால், மனிதனுக்கு உடல், உள்ளம் ஆகிய இரண்டு பசியின் மீதும் பற்று உண்டு.

வாழ்க்கைக்குப் பொருள் முக்கியம். ‘பொருள் இல்லார்க்கு இந்த உலகம் இல்லை’ என்றே இன்னொரு இடத்தில் வள்ளுவர் குறிப்பிடுவார். எனவே வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குப் பணம் தேவை. பணத்தை விரும்பிச் சேகரிக்க வேண்டும். ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது என்பதே வள்ளுவர் கருத்து.

குடும்பத்தை நடத்திச் செல்வதற்காகப் பொருளை ஈட்டவேண்டும். ஈட்டிய பொருள், பிறருக்கு உதவுவதற்கே. பொருளைப் பிறருக்கும் உதவுமாறு பயன்படுத்தாவிட்டால், ஒருவன் ஈட்டிய பொருளால் எந்த விதப் பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

பொதுவாகத் ‘துறத்தல்’ என்றால் ‘விட்டு விடுதல்’ என்று பொருள்படும். பிறர் மீது அல்லது இன்னொரு பொருள் மீது கொண்டிருக்கும் பற்றை விட்டுவிடுதல் அல்லது பற்றுக் கொள்ளாமல் இருப்பது என்பதாகும்.

துன்பத்தை விலக்குவது துறவு

ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்தின் நலனிற்காகவும், நாட்டின் நலனிற்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான், பொருள் ஈட்டிக் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது. எனவே, பொருள் ஈட்டுவது அவனது கடமை. பொருள் ஈட்டுவது தன் கடமையை நிறைவேற்றுவதற்குத்தான் என்று எண்ண வேண்டும்.

கடமைக்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்று எண்ணாமல், தனது சுகபோகங்களுக்கு என்று எண்ணுபவனே, பொருள் மீது பற்றுக் கொண்டு, அதை எவ்வழியினாலும் ஈட்டவேண்டும், மிகுதிப்படுத்த வேண்டும் என்று எண்ணுவான். அவ்வாறு எண்ணிப் பொருளைச் சேகரிப்பவனுக்கு அதனால் தீமை வரும் என்கிறார் வள்ளுவர். பணத்தின் மீது கொண்ட பற்றினால் ஒருவன் தீய வழியில், பணத்தை ஈட்ட முயலுவான்; குற்றவாளி ஆவான்; அதன் பயனாக வரும் பிற விளைவுகளை எதிர்கொள்வான்.

உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான உணவை நாடுவதும் இத்தகையதே. ஒரு குறிப்பிட்ட உணவின் மீதுள்ள பற்றினால், விருப்பத்தினால், அதை அதிக அளவிலே உண்டால், உடலுக்கு நோய்வரும். உடல் துன்பம் அடையும். இதனையே வள்ளுவரும், எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருள் மீது, எந்த அளவுக்குப் பற்று இல்லாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவற்றினால் வரும் துன்பங்கள் குறையும் அல்லது துன்பங்களே வராது என்று குறிப்பிடுகிறார். இது தான் வள்ளுவர் துறவுக்குக் கூறும் இலக்கணம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். (குறள் எண்: 341)

(யாதனின், யாதனின் = எவ் எவற்றிலிருந்து; நோதல் = துன்புறுதல்; அதனின், அதனின் = அவ் அவற்றிலிருந்து)

நீங்கிய பொருட்கள் ஒன்று ஒன்றாகச் சுட்டி, அவை ஒவ்வொன்றும் கொடுக்கக்கூடிய துன்பத்தினின்றும் விடுதல் பெற்றமையைக் குறிக்கத்தான் - ‘யாதனின், யாதனின்’, ‘அதனின் அதனின்’ என்று இரட்டித்துச் சொல்லப் பெற்றுள்ளது.

பதவியாக இருந்தாலும், பணமாக இருந்தாலும், சுகங்கள் (Comforts/ pleasure) ஆக இருந்தாலும், அவற்றின் மீது பற்றுக் கொள்ளாதீர். பதவியின் மீது பற்றுக் கொண்டால், அந்தப் பதவியே உங்களுக்குத் தீமையாக வரும்; பணத்தின் மீது பற்றுக்கொண்டு அதைத் தனக்கு எனப் பெருக்கிக் கொள்ள விழைந்தால் அப்பணமே உங்களுக்குப் பகையாக மாறும்; சுகங்களை விரும்பி நாடிச் சென்றால், அச்சுகங்களே உங்களுக்கு நோயாக வரும் என்று எச்சரிக்கிறார். எனவே தான் யாதனின் யாதனின் நீங்கியான் அதனின் அதனின் நோதல் இலன் என்றார். அது சரி. ‘நீங்குதல்’ என்பதன் பொருள் என்ன? பணம் வேண்டாம்; பதவி வேண்டாம்; இவ்வளவு சுகங்கள் வேண்டாம் - என்று எல்லாவற்றையும் மறுப்பதா? அவற்றை எல்லாம் மறுப்பது தான் அறநெறி என்றால் அவ் அறவழியால் இவ்வுலக வாழ்க்கைக்கு என்ன பயன்?

துறவும் உலகியல் இன்பமும்

ஒருவன இவ்வுலக வாழ்வில் அடையக்கூடிய நன்மைகளும் இன்பங்களும் பலவாகும்.

வேண்டின், உண்டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டு இயற்பால பல. (குறள் எண் 342)

(வேண்டின் = (துறவை) விரும்பினால்;

உண்டாகத்துறக்க = செல்வம், வாய்ப்பு, வசதிகள் அனைத்தும் இருக்கும்போதே அவற்றின் மீது பற்றின்றித் துய்க்க;

துறந்த பின் = அவ்வாறு பற்றுதல் கொள்ளாமல் அனுபவிக்கத் தெரிந்து கொண்ட பின்னர்; ஈண்டு = இவ்வுலக வாழ்க்கையில்;

இயற்பால = உங்கள் மனதை ஈர்க்கக்கூடிய, உங்களுக்கு மகிழ்வைத் தரக்கூடிய)

இதுவே வள்ளுவரின் துறவுக் கோட்பாடு ஆகும்.

புலன்களின் மேல் ஆளுமை செலுத்துங்கள்; புலன்களின் வலையில் சிக்க வேண்டாம். இவ்வுலக வாழ்க்கையை முழுமையாகத் துய்க்க விரும்பினால் துறவினை மேற்கொள்ளுங்கள்; துயரங்களுக்கு ஆட்படாமல் வாழ்க்கை இன்பத்தை அனுபவியுங்கள்.

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. (குறள் எண் : 343)

புலன்களை வெல்லுங்கள் (அடல் = வெல்லுதல்); வெல்லுதல் என்பதன் பொருள் கொல்லுதல் அன்று. புலன்களை அவற்றின் போக்கில் விடாமல், அவற்றின் தேவைகளை உங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். இன்ப நிகழ்வின் உந்துதலை நாடாதவருக்கு, துன்ப நிகழ்வுகள் உறுத்துதல் இல்லை.

ஆணவம் - துறவுக்குப் பகை ஆகும்

பற்றுகள் என்றால், பதவிப் பற்று, பணப்பற்று முதலியவைகள்தானா? இல்லை, இதற்கு மேலும் ஒரு பற்று இருக்கிறது. அது ஒருவன், தன்மீது கொண்டுள்ள பற்று. இந்தப் பற்றுத் தானே, பிற பற்றுகளையும் உருவாக்குகிறது. எனவே, ஒருவன் தன் மீது கொண்ட பற்றாகிய ‘யான்’ ‘எனது’ என்பதை அழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

யான், எனது என்ற இயல்பு உடையவர்களை ‘ஆணவம்’ உடையவன் என்பார்கள். இந்து சமயத்தில், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் மும்மலங்கள் என்று அழைக்கப்படுன்றன.

இவற்றை அழித்தால் தான், ஒருவன் இறைவனை அடைய முடியும். வள்ளுவர் ஆணவத்தைச் ‘செருக்கு’ என்று குறிப்பிடுகிறார்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள் எண் 346)

ஆணவம் ஒருவனை அழித்துவிடும்; அதனால், யான், எனது எனும் செருக்கை விட்டுவிடுங்கள். (துறந்துவிடுங்கள்). அவ்வாறு செய்வீர்கள் ஆனால் வானவர்களாகிய தேவர்களுக்கும் மேலோன வீடுபேறு உங்களுக்குக் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர்.

இல்லறத்துறவு

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில், அற வழிகளில் இல்வாழ்க்கையை நடத்திச் செல்கின்ற ஒருவன், வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன இருக்கிறது என்று கேட்கிறார். வீட்டை விட்டுக் காடு செல்லும் துறவறத்தால் கூடுதல் பயன் ஒன்றும் இல்லை என்பதே வள்ளுவர் கருத்து.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன். (குறள் எண்: 46)

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? வள்ளுவரின் சிந்தனைச் செல்வம் எத்தகைய கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பது தெரியும் அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் பலவேறு வகையான விளக்கங்களுக்கும் (Inerpretations), பலவகைப்பட்ட மக்களுக்கும் பொருந்தும். எனவே துறவறத்தில் சொல்லப்படும் கருத்துகள், இல்வாழ்வானுக்கும் பொருந்தும் மாண்பே அமைந்துள்ளது.

இஸ்லாம் 


ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (புஹாரி பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5073)

பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர். - (குர்ஆன் 57:27)

கிறிஸ்தவம் 


துறவறத்தை சரியாக வரையறுப்பது கடினம். சிலர் அதை சாதாரணமாக, சுயகட்டுப்பாடு அல்லது தன்னலம் துறத்தல் என்று பொருள்கொள்கின்றனர். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இத்தகைய ஒழுக்கங்களை உயர்வாக கருதினர் (கொலோசெயர் 3:5)

22 ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,+ விசுவாசம், 23 சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.+ இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை. 24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள். (கலாத்தியர் 5:22-24)

சடப்பொருளின் சிக்கலிலிருந்து மனிதனின் ஆத்துமாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை கடும் துறவறத்தை ஊக்குவித்தது; அது மாம்சம் சாப்பிடுவது, உடலுறவு கொள்ளுவது இன்னும் இதுபோன்றவற்றை தடைசெய்தது; விசேஷ சடங்குகளை மேற்கொண்ட உயர்ந்தோரான, ‘பரிபூரணவாதிகள்’ அல்லது பெர்ஃபெக்டி போன்றவர்களால் மட்டுமே இவை கடைப்பிடிக்க முடிந்தவை.” இப்படிப்பட்ட சிந்தனைக்கு பைபிள் ஆதாரம் இல்லை; எனவே ஆரம்பகால கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இது இருக்கவில்லை. - (நீதிமொழிகள் 5:15-19; 1; கொரிந்தியர் 7:4, 5; எபிரெயர் 13:4)

கிறிஸ்தவத்தில் துறவறம் பிறந்த கதை (The History of Consecrated Life)

ஆனால், 4-ஆம் நூற்றாண்டில் உரோமை அரசன் கான்ஸ்டான்டைன் கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அங்கீகரித்தப்பின் நிலைமை தலைகீழாக மாறியது. அதுவரை புரட்சியாளர்களின் மதமாக இருந்த கிறிஸ்தவம் ஆட்சியாளர்களின் மதமானது. போராளிகளாக இருந்த கிறிஸ்தவர்கள் பொதுமக்களாக மாறினார்கள். பணிவிடை புரிபவர்களாக இருந்த ஆயர்களும், குருக்களும், பணிவிடை பெறுபவர்களாக மாறினர். மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ஆயர்களும், குருக்களும் அரசனின் அரன்மனைகளில் மிகுந்த ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டனர். இதனால் மந்தையின் நலன் மறந்து, சொந்த நலன்களையும், சொந்தங்களின் நலன்களையும் மட்டுமே முன்னிறுத்த ஆரம்பித்தனர். பகட்டும், படோபமும், ஆடம்பரமுமே இவர்களது வாழ்க்கைத் தேவையாயிற்று. இன்னும் சிலரோ தான்தோன்றித்தனமான கருத்துக்களை சீர்திருத்தக் கருத்துக்கள் என சிறுபிள்ளைத் தனமாக அறிவித்துவிட்டு, தங்கள் தலைமையில் சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். கட்டளை செபங்களைக் கூட செபிக்காமல், இறைவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர். மொத்தத்தில் கடவுளை மறந்த மதமாக, மக்களை மறந்த மதமாக கிறிஸ்தவ மதம் மாற ஆரம்பித்தது.

இந்தச் சூழலில் தான் தங்களது ஆன்மாவை இழந்துவிடாமல், பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள விரும்பிய ஒரு சிலர் அடர்ந்த காடுகளில் செபம், தவம், ஒறுத்தல் ஆகியவற்றுடன் கூடிய புனித வாழ்வு மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதுவே துறவற வாழ்வுக்கு முதன் முதலில் போடப்பட்ட அடித்தளம். இத்தகையோருள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் தூய வனத்து அந்தோணியார்.

முதன் முதலில் திருத்தந்தையின் அங்கீகாரத்துடன் தூய பத்திநாதர் துறவறத்தாருக்கான கொள்கைகளை வகுக்க ஆரம்பித்தார். இவரைப் பின்பற்றி முதலில் உருவான தூய பத்திநாதர் சபையே கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் துறவற சபையாகும்.

காலப்போக்கில் தூய பத்திநாதரைப் பின்பற்றி பலரும் பல்வேறு துறவற சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். தூய பிரான்சிஸ் அசிசியாரால் தொடங்கப்பட்ட பிரான்சிஸ்கன் சபை, தூய தொன்போஸ்கோவால் தொடங்கப்பட்ட சலேசியன் சபை போன்ற துறவற சபைகளும் பல்வேறு கொள்கைகளை (ஏழைகளுக்குக் கல்வி, இயலாதோருக்கு மருத்துவம், கைவிடப்பட்டோருக்கு ஆறுதல்) முன்னிறுத்தித் தொடங்கப்பட்டன.

இந்து மதம் 


இந்துக்கள் திருமணத்தை பெரிய அளவில் இலட்சியப்படுத்தியுள்ளனர். ரிக்வேத இந்துக்களின் ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் ஒரு புனிதமான தொழிற்சங்கமாக கருதப்பட்டது, மேலும் இது முழு காலத்திலும் தொடர்ந்தது. சாஸ்திர இந்து சட்டத்தில், திருமணம் என்பது இன்றியமையாத சங்காரங்களில் ஒன்றாக (ஒவ்வொரு இந்துவிற்கும் புனிதம்) கருதப்படுகிறது . ஒவ்வொரு இந்துவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  (Modern Hindu law: codified and uncodified by: Diwan, Paras 1924-1997 Published: (1976))

4 கருத்துகள்:

  1. கொலோசெயர் 2:18
    துறவறம் மற்றும் தேவதைகளை வணங்குவதை வலியுறுத்தி, தரிசனங்களைப் பற்றி விரிவாகச் சென்று, தனது உணர்ச்சிகரமான மனத்தால் காரணமின்றி கொப்பளிக்க யாரும் உங்களைத் தகுதியற்றவர்களாக மாற்ற வேண்டாம்.

    https://www.openbible.info/labs/cross-references/search?q=Colossians+2%3A18

    பதிலளிநீக்கு
  2. பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
    துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14 ஞானக்குறள்

    பிறந்துள்ளோம். பேறு பெறவேண்டும். அதுதான் பிறப்பின் பயன். துறப்பதுதான் பிறப்பின் பயன். தூய நெறியில் வாழ்ந்த பின்னர் துறக்க வேண்டும். துறப்பது, எதனை? ஐம்புல ஆசையை.

    பதிலளிநீக்கு
  3. உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
    யுடம்பினா லுன்னிய தேயாம். 15

    துறவு உடம்பால் மட்டுந்தான். உணர்வால் துறக்க இயலாது. உடம்பிலுள்ள உணர்வால் எண்ணிப்பார்த்தே இதனைச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தேவாரம் 5ஆம் திருமுறை பாடல் எண் :1290

    துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
    பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
    மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
    குறவ னாருறை யுங்குட மூக்கிலே.

    துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்!
    பிறவி நீங்கப் பிதற்றுமின், பித்தராய்-!
    மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம்
    குறவனார் உறையும் குடமூக்கிலே.

    பொ-ரை: பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம்குறவேடம் கொண்ட பெருமானும், குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக.

    கு-ரை: துறவி நெஞ்சினர் - அகப்பற்று புறப்பற்றை அடியோடு ஒழித்துத் துறவு எய்திய மனத்தை உடையவர். பித்தராய்ப் பிதற்றுமின் - ஈடுபாடுடையவராய்ப் பலவாறு அவன் புகழைச் சொல்லுங்கள். மறவனாய் - வீரனாய். பார்த்தன் - அருச்சுணன். கணை - அம்பு. தொட்ட - விடுத்த. குறவன் - கிராத வேடந்தாங்கி நின்றவன். குரவன் என்பது எதுகை நோக்கித் திரிந்ததெனலுமாம். அப்பொழுது மறவன் என்பதை வேடன் எனக் கொள்க.

    https://www.tamilvu.org/slet/l4150/l4150uri.jsp?song_no=1290&book_id=113&head_id=63&sub_id=2039

    பதிலளிநீக்கு