தமிழர் வேதம்



வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். -  (தொல்காப்பியம் மரபியல் 640)

என்-னின் நிறுத்த முறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (96)

1. வினை என்பன இருவினை. `இன்' நீக்கத்துக்கண் வந்தது. `விளங்கிய அறிவு 'என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவின் என நின்ற 'இன்' சாரியை இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவன் எனப்படும். முன்னோனை முனைவன் என்பது ஓர் சொல் விழுக்காடாம். (தொல்.பொருள்.649.பேரா)

முனைவனால் செய்யப்படுவதோர் நூல் இல்லை என்பார் அவன் வழித்தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பால் பொருள்கேட்டு முதனூல் செய்தார் எனவும் அம்முனைவன் முன்னர் ஆகமத்துப்பிறந்தோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவர் எனவும் அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலும் சார்பு நூலும் எனப் பலவுஞ் செய்தார் எனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்தநூல் அன்மையின் அவை தேறப்படா.... அவை தமிழ்நூல் அன்மையின் ஈண்டு ஆராய்ச்சி இல என்பது.

மற்று மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெரிதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராதலின் தாமே தலைவராயினார். நூல்செய்யின் முதனூலாவதெனின் அற்றன்று தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலகாரலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையினீங்கி விளங்கிய அறிவினான் ' முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம்.(தொல்.பொருள்.649.பேரா.)

641 வழியெனப் படுவ ததன்வழித் தாகும்.

என்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு.
அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (97)

642. வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்

643 தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே.

என்-னின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு.

இது வழிநூலா னாயபயன். (99)

1. இனிப் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இதுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொல்.பொருள்.652.பேரா.)

 நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - திருமந்திரம் 135.

(ப. இ.) ஆலமர் செல்வனாம் நந்தியெங் கடவுளின் திருவடியினைத் தலைமேற் கொண்டு, கொண்டவாறே இறுப்பு மெய்யாம் புத்தியின்கண் நிலைபெறச் செய்து செந்தமிழ்ப் போற்றித்தொடர் புகன்று வழிபட்டு வளரும் மதியினைப் புனைந்த திருச்சடையினை உடைய சிவபெருமானை நாடொறும் உள்ளத்தின்கண்ணே நாடி உயிர்க்கு உறுதி பயக்கும் செந்தமிழ்ச்சிவாகமம் மொழியலுற்றேன் என்பதாம். ஆகமம் - இறைவன் நூல். ஆவி நிறைவாம் முறைநூல் எனவும் படும். ஆ - ஆவி. கமம் - நிறைவு. புந்தி - அறிவு. சிந்தை செய்து - இடையறாது நாடி ஆகமம் - தமிழாகமம். ஆகமம்: ஆவியின் அறிவை நிறைவிக்கும் நூல்.

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு2
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - திருமந்திரம் 138. 

(ப. இ.) திருமூல நாயனார் தம் மெய்கண்ட மாணவருள் ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து அருளுகின்றனர். மாலாங்கரே! சிவவுலகை நீங்கி ஓங்கிய தென்தமிழ் நாட்டகத்துக்கு அருள் என்னைக் கொண்டுவந்த காரணம் கூறுகின்றேன் கேள். சிவபெருமான் திருமலைக்கண் அழகிய நீலவண்ணத் திருமேனியும், நேரிய பொன்மணி அணிகளும் பூண்ட அம்மையுடன் திருவைந்தெழுத்தே திருவுருவாகக் கொண்டு ஒலிமுடிவாம் நாதாந்தத்துச் செய்தருளும் திருக்கூத்தின் அடிப்படை யுண்மைக் காரணங்களை மொழிந்தருளினன். அத்தகைய அருளொழுக்கு நிறைந்த தமிழ்முறையினை வேதமெனவும் சிவாகமம் எனவும் கூறுப. அதைச் செப்புதற் பொருட்டே யான் வந்தேன். நீலாங்கம் - கரிய அழகிய. மூலாங்கம் - அடிப்படை யுண்மைக் காரணங்கள். சீலம் - ஒழுக்கம்.

(அ. சி.) நீலாங்க . . . . . வேதம் - தமிழ் நான்மறை. (அறம் - பொருள் - இன்பம் - வீடு.)

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே. - திருமந்திரம் 145. 

(ப. இ.) சிவபெருமான் திருவருளால் திருவடியுணர்வு கைவரப்பெற்ற மெய்கண்ட மேலோர் உள்ளத்தில் அமையும் நூல்களில் தலைமையாக இறைவன் எழுப்ப முறையாக எழுந்து ஓதப்பெறும் ஒண்தமிழ் மறைமுறையாகிய முன்னை வேதாகமங்களை யொப்பச் சொல்லையும் பொருளையும் அடியேற்கு உள்நின்று அத்தன் அருளால் உணர்த்தியருளினன்.

(அ. சி.) உடல் - சொல் - உற்பத்தி - பொருள்.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149. 

(ப. இ.) அருளோனாகிய சதாசிவக் கடவுள் அருளிச் செய்த என்றும் மாறா மெய்ம்மை மறை முப்பொருள் தேற்றும் தமிழ்மறை. ஒருபுடையாக முத்தமிழினை முறையே உயிர் உள்ளம் உடல் என உலகியலிற் கொள்ளலாம். முத்தமிழ்: இயல் இசை கூத்து. அவற்றையே வீட்டியலிற் கொள்ளுங்கால் இறை உயிர் தளை எனக் கொள்ளுதல் சாலும். இத்துணை நாளும் அளவாயுண்ணும் அமைவுடையவனாக விருந்தேன். முத்தமிழ் வேதத்துக்கு உறைவிடமாக உள்ளத்தினையே அமைத்தேன். அம் மறையினைப் புறக்கணிக்காது திருவருளுடன் கூடியுணர்ந்தோம். மிதாசனி - மித + அசனி: அளவாயுண்போன். இதாசனி - உள்ளத்தை உறைவிடமாக நல்கியோன்.

(அ. சி.) சதா . . . வேதம் - படைப்புக் காலத்தில் சதாசிவனுடைய தத்துவமாகிய சாதாக்கிய தத்துவத்தினின்றும் வெளிப்பட்ட தமிழ் வேதம்.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
   
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
   
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

அரு மறை – அரிய வாழ்வியல் செய்திகளைக் கூறும் நீதி நூல்களைச் (வேத)
சோரும் – கடைபிடிக்காது தவறும்
அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்
செய்யும் – செய்து கொள்வர்
பெரு மிறை – பெரிய துன்பத்தை
தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில் - (நாலடியார், பொருட்பால், 14. கல்வி 140)

(பொ-ள்.) அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் - அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது,
கலகல கூம் துணையல்லால் - கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், 
கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)

நூற்பா விளக்கம்: உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி ஆகும். (மறை என்பது உலக நிகழ்வை விடுத்து தனித்து நிற்பதல்ல என்பது இதன் மூலம் தெளிவு)

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி 40

(பதவுரை) தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்தியநான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும்-(திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. 

3 கருத்துகள்:

  1. அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,


    நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
    பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
    இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
    கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


    என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

    வனப்பியல் தானே வகுக்கும் காலை
    சின்மென் மொழியால் பனுவலோடு
    அம்மை தானே அடிநிமிர் பின்றே (தொல்.பொருள்.547)

    என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

    அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
    அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
    திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும் (பன்.பாட்.348)

    என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.இவ்வற இலக்கியங்கள் பல நெறிகளை நவில்கின்றன.

    https://newindian.activeboard.com/t64962779/topic-64962779/?page=1&w_r=1661399104

    பதிலளிநீக்கு
  2. கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
    சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
    எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
    கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
    கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
    என்பன குடபால் இருபுறச் சையத்து
    உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
    முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
    அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
    பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
    பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் (272)

    நூற்பா விளக்கம்
    இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.
    திரிசொல் வழங்கும் நிலம்
    கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம்
    சிங்களம்
    கொல்லம்
    கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும்
    ஈழம்
    பல்லவம்
    கன்னடம்
    வடுகு
    கலிங்கம்
    தெலிங்கம்
    கொங்கணம்
    துளுவம்
    குடகம்
    குன்றம் என்பன
    குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்கள்
    செந்தமிழ் நிலம்
    சேரர் சோழர் பாண்டியர் என முடியுடை மூவரும் (3)
    இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் (10)
    உடனிருப்பு இருவரும் (2) படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்
    ஆக மொத்தம் 15 நாடுகள்
    https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு