தேவையற்ற அல்லது தேவைக்கு அதிகமாக உண்டாகும் ஆசை தீயகுணம் ஆகும், மட்டுமில்லாமல் அச்செல்வம் தீய வழிகளுக்கான வாசலை திறந்துவிடும்.
இவ்வகையான ஆசையை பேராசை, அவா, காமம், மோகம் என்று தமிழர் சமயத்திலும் நஃப்ஸ் என்று இஸ்லாமிய சொல்வழக்கிலும் கூறுவதுண்டு.
ஆசையின் தன்மை என்ன? அதன் விளைவு என்ன? இவ்வாறு ஆசைப்பட சொல்லும் நூல்களும் ஆசிரியர்களும் எப்படிப் பட்டவர்கள் என்று மறை நூல்கள் சொல்கிறது? என்று காண்போம்.
தமிழர் சமயம்
சை அறுமின்கள்; ஆசை அறுமின்கள்!
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்!
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்!
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே! (திருமந்திரம், 2615)
அழுக்கை அறுங்கள்; அழுக்கை அறுங்கள். பதவிக்காக அல்ல, ஈசனோடு சும்மா ஒட்டிக்கொள்வதற்காகத்தான் என்றாலும்கூட ஆசையை விட்டுவிடுங்கள். ஆசைப்பட்டீர்கள் என்றால், ஆசைப்பட்டதை அடையவும் அடைந்த இடத்தைப் பாதுகாத்துத் தக்கவைத்துக்கொள்ளவும் படாத பாடுபட வேண்டியிருக்கும். அது மாபெரும் துன்பம். ஆசையை விட்டீர்கள் என்றால், ஏதோ ஒன்றை அடைய வேண்டுமே என்கிற துடிப்பும் அடைந்ததைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே என்கிற பொறுப்பும் இல்லாமல் விட்டு விடுதலையாகிவிட்ட பெரும் பேரின்பம்.
அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்வது உங்களை நீங்களே காணாமல் தொலைத்துவிடுகிற உலகியல் என்றால், ஆசையிலிருந்து நீங்கி, ஈசனுக்கும்கூட ஆசைப்படாமல் ஒதுங்கி, தானாய், தனியாய் நிற்பது உங்களை நீங்களே கண்டுபிடித்துக்கொள்கிற உயிரியல்.
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை
மெய்பெற இன்னவை நான்கு - 14.
பொருள்: (இறைவனது மெய்ந்நெறியில்) ஐயமின்மை, (உடலாதி பொருள்களில்) ஆசையின்மை,(துறவோரிடம்)அருவெறுப்பு இன்மை, ( பிற சமயநெறிகளை நம்பும்) மயக்கமின்மை, இவை நான்கு உறுப்புகளாகும்.
அவா இன்மை
தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்
வடுமாற்(று) அவாஇன்மை நற்கு- 18.
பொருள்: நிலையற்ற புலன் இன்பங்களில் பற்று வைக்காமை தான் பிறவியை ஒழிக்கும் நல்ல அவாமின்மை உறுப்பாகும்
பொருள் வரைதல்
பொருள் வரைந்து ஆசைசுருக்கி ஏவாமை
இருள்தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம். - 77
பொருள்: தேவைப்பட்ட பொருளையே வைத்திருத்தலும் , பொருளாசையை அடக்குதலும், பிறர்வழி பொருளைப் பெருக்காமையும் ஐந்தாவது அணுவிரதமாம்.
தீயன கேட்டல்
மோகத்தை ஈன்று தவமழிக்கும் சொற்கேட்டல்
பாவச் சுருதி எனல் - 95.
பொருள்: ஆசையை வளர்த்துத் தவத்தை இழக்கச்செய்யும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும் ‘பாவச் சுருதி’ எனப்படும்.
அறவுரையின் இன்றியமையாமை
மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். - பாடல் 2
விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.
அவா உடையார் ஆசிரியர் ஆகார்
மாடமும் மண் ஈடும் கண்டுஅடக்கம் இல்லாரைக்
கூடி வழிபடும் கோளமை - ஆடுஅரங்கின்
நோவக மாய் நின்றான்ஓர் கூத்தனை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்றது உடைத்து. - பாடல் 53
விளக்கவுரை சிறிய வீட்டையும் பெரிய மாளிகைகளையும் பார்த்து அடங்காத ஆசை உடையவரைத் தலைப்பட்டு ஆசிரியர் எனக் கருதி வழிபடும் தன்மை, அமைக்கப்பட்ட நடன சாலையில் வருத்தம் உடையவனாய் நிற்பவனான கூத்தன் நடிக்க, அவன் கொண்ட அரச கோலத்தைக் கண்டு மயங்கி, அவனை ஊரார் தம்மை ஆள்க என்று சொல்லிப் பணி செய்து நிற்பதைப் போன்றதாகும்.
அவ்விநயம் ஆறு
அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றா தவர். - பாடல் 60
விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்
நற்காட்சிக்கு உரிய எட்டு உறுப்புகள்
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்குஇன்மை
செய்பழி நீக்கல் நிறுத்துதல் - மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கம் செய்தலோடு
என்றுஇவை எட்டாம் உறுப்பு. - பாடல் 68
விளக்கவுரை சந்தேகமும் ஆசையும் வெறுப்பும் மயக்கமும் என்ற இவை இல்லாமையும், பழியினின்று மனத்தை மீட்டலும், மன மொழி மெய்களை நல்ல நெறியில் நிறுத்துதலும், உயிர்களிடம் எப்போதும் மாறாத அன்புடைமையும், சிறந்த அறத்தைப் பலர்க்கும் செய்வதும் ஆகிய இவ்வெட்டும் நற்காட்சிக்கு உரிய அங்கங்களாகும்.
காம எண்ணத்தின் கொடுமை
சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னைநீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்கஒட்டாய் - ஓவாதே
கட்டுஅழித்துக் காமக் கடற்குஎன்னை ஈர்ப்பாயே
விட்டுஎழுங்கால் என் ஆவாய் சொல். - பாடல் 90
விளக்கவுரை மனமே! நீ கெடுவாயாக! கலக்கம் அடைந்த என்னை நல்ல நெறியில் ஒன்றிலும் நிற்கும்படி விடாமல் ஒழிவின்றி உறுதியைக் கெடுத்து, ஆசை என்னும் கடலுக்கு என்னை இழுக்கின்றாய். பொருளின் மீதுள்ள பற்றை விட்டு நான் எழும்போது நீதான் எந்த நிலையை அடைவாய் கூறுவாயாக!
உன்னை அடக்கினால் ஊரை அடக்கலாம்
ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்றுஉரைப்பை யாகில் - கறுத்துஎறிந்த
கல்கறித்துக் கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
பல்கழல் நாய் அன்னது உடைத்து. - பாடல் 137
விளக்கவுரை என்னை ஊர்ந்து செலுத்தும் அவாவை அடக்கேன்; எனக்கு இடையூறு செய்யும் பிறரை அடக்குவேன் என எண்ணினால் நெஞ்சே! அது, கல்லால் தன்னை எறிந்தவரைச் சினந்து கடியாமல், அவர்களால் சினந்து எறியப்பட்ட கல்லைக் கடித்துப் பல்லை இழந்த நாயினது செயலை ஒக்கும்.
உள்ளத்துத் துறவுடையார் மயங்கார்
அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர்நிலாது ஆகும் அலைவுஇல்
புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே
மலம்கடிவு ஆளா தவர்க்கு. - பாடல் 147
விளக்கவுரை அலைகளையுடைய நீருள் நின்றாலும் தாமரைக்கொடியில் உள்ள இலையில் நீரானது ஒட்டி நில்லாது. (அதைப் போன்று) சஞ்சலத்தைத் தரும் ஐம்பொறிகளுடன் கூடியிருந்தாலும் துறவிகளை அழிவைத் தரும் ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளா. அவர்களும் மறதியால் அவற்றின் பிடியில் சிக்குதல் இல்லை.
பற்றற்றால் வீடுபேறு கிட்டும்
அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும் - தெருளா
விழைவு இன்பத் தால்வளரும் காமம்அக் காம
விழைவுஇன்மை யால்வளரும் வீடு. - பாடல் 195
விளக்கவுரை துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்வதால் அறமானது வளரும். முயற்சியால் பெருவாழ்வு உண்டாகும். எக்காலத்தும் செல்வத்தால் செல்வமானது பெருகும். மயக்கம் தரும் சிற்றின்பத்தினால் ஆசை பெருகும். ஆசையை விடுவதால் வீடுபேறு கிட்டும்
இஸ்லாம்
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய
ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. (
குர்ஆன் 3:14)
“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (குர்ஆன் 57:20)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது. (அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம்-5292)
நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, “(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; “(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (அறி : அபூதர் (ரலி), நூல் : புகாரி-2388)
அதற்கு அன்சாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். (மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல் : முஸ்லிம்-5668)
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள் ‘என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள். ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை தீயதை உருவாக்குமா?’ எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். உடனே அந்த நபரிடம், ‘என்ன ஆனது உம்முடைய நிலைமை? நீர், நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமாலிருக்கிறார்களே!’ எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, ‘நன்மையானது தீயதை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகிற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன… பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும், சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போன்றே உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ… அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்” எனக் கூறினார்கள். (புஹாரி :1465 அபூஸயீத் அல்குத்ரி ரலி)
முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1) இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2) நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 6420 அபூஹுரைரா ரலி)
கிறிஸ்தவம்
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். - (1 தீமோத்தேயு 6:10)
‘பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக்கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக்கூடாது’” என்றான். - (உபாகமம் 5:21)
அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான். (நீதிமொழிகள் 5:23)
சோம்பேறி மேலும் மேலும் ஆசைப்படுவதால் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவன் அதற்கென உழைக்க மறுப்பதால் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். ஆனால் நல்லவனிடம் ஏராளமாக இருப்பதால் அவனால் கொடுக்க முடியும். - (நீதிமொழிகள் 21:25-26)
ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள். - (நீதிமொழிகள் 27:20)