அண்டைவீட்டார் *

கிறிஸ்தவம் & யூத மதம் 

தன் அண்டை வீட்டாரை இழிவுபடுத்தும் எவருக்கும் புத்தி இல்லை, ஆனால் அறிவுள்ள மனிதன் அமைதியாக இருப்பான் - (நீதிமொழிகள் 11:12)

ஏழை தன் அண்டை வீட்டாரால் கூட விரும்பப்படுவதில்லை, ஆனால் பணக்காரனுக்கு பல நண்பர்கள் உள்ளனர். தன் அண்டை வீட்டாரை இகழ்பவன் பாவி, ஆனால் ஏழைகளுக்கு தாராளமாக இருப்பவன் பாக்கியவான். (நீதிமொழிகள் 14:20-21)

அவர் அவரிடம், “சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதை எப்படி படிக்கிறீர்கள்?” அதற்கு அவர், “உன் கடவுளாகிய ஆண்டவரிடம் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, உன் அண்டை வீட்டாரை உன்னைப் போலவே அன்புகூருவாயாக” என்றார். (லூக்கா 10:26-27 )

அன்பு அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்யாது; எனவே அன்பு என்பது சட்டத்தை நிறைவேற்றுவதாகும். (ரோமர்கள் 13:10)

இஸ்லாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும். - (அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-6018)

தமிழர் சமயம் 




பலியிடுதல் *

கிறிஸ்தவம் 

23,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். - (மத்தேயு 5)

19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. (மத்தேயு 23:19)

இதில் இயேசு விலங்குகளை பலியிடும் வழிபாட்டு முறையானது மக்களிடம் நன்முறையில் நடந்து கொண்டால்தான் பிரயோஜனம் எனும் கருத்தில் கூறுகிறார்.

வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள். (மத்தேயு 12:7
 
நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார். (மத்தேயு 9:13)

விலங்குகளை பலியிடும் முறை ஏறக்குறைய கிறிஸ்தவத்தில் இல்லாமல் போனதற்கு இந்த இரண்டு வசனங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் அது நேரடியாக பலியிடுவதை தடுக்கவேண்டும் என்று கூறவில்லை. அதற்கான குறியீடும் அந்த வசனத்தில் உளள்து. மேலும் அவர் மோசஸின் சட்டத்தை முழுமைப்படுத்தவே வந்தார். 

அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? - (1கொரிந்தியர் 10:20-22)

யூதம் 

எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது. “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். (யாத்திராகமம் 20:23-24

குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்! - (உபாகமம் 17:1) 

சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளை விட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார். - (நீதிமொழிகள் 21:3

இஸ்லாம்  

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!”. (அத்தியாயம் 108 ஸுரத்துல் கவ்ஸர் – 2வது வசனம்)

குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ் 37
 
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். (குர்ஆன் 2:67
 
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். (குர்ஆன் 2:71)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (திருக்குர் ஆன் 2:173

இயலும்போதே நன்மை செய்துவிடவேண்டும்

கிறிஸ்தவம் 


"நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" (நீதி.3:27)

தமிழர் சமயம் 


உடம்பும் கிளையும் பொருளும் பிறவும் 
தொடர்ந்துபின் செல்லாமை கண்டும் - அடங்கித் 
தவத்தொடு தானம் புரியாது வாழ்வார் 
அவத்தம் கழிகின்ற நாள். - (அறநெறிச்சாரம் பாடல் - 128)  

விளக்கவுரை உடலும், சுற்றமும், செல்வமும், வீடு முதலியனவும், தம்மை உடையவன் இறந்த பின்பு அவன் பின் போகாதிருத்தலைப் பார்த்தும், மனம் சொல் உடம்புகளால் அடங்கி, தவத்தையும் தானத்தையும் செய்யாமல் வாழ்பவர்களுக்குக் கழியும் நாட்கள் வீண் ஆகும்

இஸ்லாம் 

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுவார்களாம்: “என் வாழ்வில் என்னை விட்டும் தப்பிப்போன எந்த ஒரு விஷயத்திற்காகவும் துளி அளவு கூட நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால், ஒவ்வொரு நாள் சூரியன் மறைகிற போதும் ஒரேயொரு விஷயத்தைக் குறித்து மாத்திரம் நான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். ”நேற்றை விட அதிகப்படியான எந்தவொரு நற்செயலும் செய்யாமல் என் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து விட்டதே!”... என்று.



சுயபுணர்ச்சி

கிறிஸ்தவம்

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. - (1 கொரிந்தியர் 6:9-11)

தமிழர் சமயம் 

சாதாரண சந்நியாச வேட ஞானிகள் அஞ்சி தப்பி ஓட முயலும் இந்த பொல்லாத காமத்தை நல்வழிப் படுத்தும் இறைவனது வீரட்டானத்தை ஆழமான உளவியல் நுட்பத்தோடு திருமூலர் விளக்குகின்றார்.

இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி யிலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே - (திருமந்திரம் 346)

பொருள்: இங்கு இலிங்க வழியது என்பது ஆணுறுப்பின் காமவேட்கைக்கு அடிமையாகி அன்பின் வழி உள்ளத்துப் புணர்ச்சி முன்னே வரும் உண்மையான காதலின் மங்கையரைப் புணர்ந்து பரியங்க யோகம் செய்து சுக்கில நீக்கம் மகிழ்வது போக்கி பிழையான பல்வேறு வழிகளில் சுக்கில நீக்கம் மகிழ்வதாகும். தொல்காப்பியத்தில் பகரப்படும் ஒருதலைக் காமத்து கைக்கிளை ஒவ்வாக் காமத்து பெருந்திணை போன்ற தகாத காமவேட்கைகள் இங்கு அடங்கும், எந்தக் காமத்தூய்ப்பு ஓர் ஆண் பெண்ணிடையே முறையான அன்பின் வழி பிறவாது போகின்றதோ அது பிழையான காம வழி ஆகும். இது ஆண்கள் மேல் ஏற்றிக் கூறப்பட்டாலும் பெண்களுக்கும் உரியதே. இத்தகையக் காமங்கள் பல்வேறு உடற்பிணிகட்கும் உளப்பிணிகட்கும் காரணமாக அமைந்து அகால மரணத்திற்கே இட்டுச்செலும் பண்பினதும் ஆகும். 

இஸ்லாம் 

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். (திருக்குர்ஆன் 23:5,6,7)

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள். “இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன மர்ம உருப்போ அதனை உண்மைப் படுத்துகின்றது - (நூல் : அஹ்மத் 10490)

 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள். - (புஹாரி 5066)

மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது

“(மறுமை நாளில்) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.” (குர்ஆன் 24:24)

“இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.” (குர்ஆன் 36:65)

“முடிவில் அவர்கள் அங்கே வந்ததும், அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.” (குர்ஆன் 41:20) 

கடவுளின் அன்பு

கிறிஸ்தவம் & யூதம் 

 ஆனால், ஆண்டவரே, நீரோ இரக்கமும் கருணையும் உள்ள கடவுள், நீடிய கோபம், அன்பும் உண்மையும் நிறைந்த கடவுள். - சங்கீதம் 86:15

உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவரே உண்மையுள்ள கடவுள், தம்மை நேசித்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களில் ஆயிரம் தலைமுறைகளுக்கு அவருடைய அன்பு உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறார். -  உபாகமம் 7:9 

இஸ்லாம் 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் - குர்ஆன் 1:1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும். - ஸஹீஹ் முஸ்லிம் : 5313

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.) அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று சொன்னார்கள்.- ஸஹீஹ் முஸ்லிம் : 5315.  

தமிழர் சமயம் 


அன்பும் சிவமும்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - (திருமந்திரம் 18. அன்புடைமை 270.)

பதவுரை: அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்: அன்பு வேறு சிவம் வேறு அல்ல.அப்படி வேறு படுத்தி பார்ப்பது அறிவீனர் செயல்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்: அன்பே சிவம் ஆவது எல்லோருக்கும் தெரியாது
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்: அப்படி அன்பே சிவம் ஆனதை அறிந்தவர்கள்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே: அன்பும் சிவமும் இரண்டற கலந்த நிலையை அடைவார்கள் 
 
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272