அறமும் ஆன்மீகமும் முதுமையிலா? இளமையிலா?

தமிழர் சமயம்  

அறநெறிச்சாரம்  

இளமைப் பருவத்தில் அறம் செய்க 

இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக,
வன்சொல் களைகட்டு, வாய்மை எருஅட்டி,
அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய். (அறநெறிச்சாரம் பாடல் - 16) 

விளக்கவுரை: இனிமையான சொல்லே விளை நிலமாகவும் ஈகையே விதையாகவும் கடுஞ்சொல்லான களையைப் பிடுங்கி, உண்மையான எருவினை இட்டு, அன்பு என்னும் நீரைப் பாய்ச்சி அறம் என்ற கதிரை ஈனுவதாகிய ஒப்பில்லாத பசுமையான பயிரை, இளம் பருவத்திலேயே மனமே, செய்வாயாக. 

இளமையில் அறம் செய்தலின் இன்றியமையாமை

காலைச் செய் வோம்என்று அறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்

கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு. (பாடல் - 17)

விளக்கவுரை: தருமத்தை இளமையிலேயே செய்வோம் என எண்ணி உறுதியாகக்கொண்டு மிக செய்பவரே சிறந்தவர் ஆவர். இரவில் படுத்தவள் காலைப் போதில் விழித்து எழுவது அருமை. (அங்ஙனமிருக்கவும்) தருமத்தை இளமையிலேயே செய்யாதிருத்தல் என்ன காரணமோ! 

இளமையில் அறம் செய்யாமையால் ஏற்படும் இழிவு

சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வுஅரிது - என்று ஒருவன்
நன்மை புரியும் நாள்உலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம். (பாடல் - 18)

விளக்கவுரை : ஆயுளில் கழிந்த நாட்கள் எல்லாவற்றையும் சிறு விரல்களால் எண்ணிக் கணக்கிட்டு விடலாம். இனி இருக்கும் நாட்களை எத்தகையவர்க்கும் இத்தனை என்று அளவிட்டு அறிய இயலாது என எண்ணி, ஒருவன் நல்வினையை விரைவாகச் செய்யாது ஆயுள் நாள் வீணே கழியும்படி விட்டிருப்பதால் ஏற்படும் துன்பம் பின்னர் மிகும். 

நாலடியார்

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல் (நாலடியார் - 2. இளமை நிலையாமை 16)

விளக்கவுரைவெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவாரிடத்து இல்லை!

நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு, என்று எண்ணி,
தலையாயார் தம் கருமம் செய்வார்; தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)

விளக்கவுரைவாழ்வில் எதுவும் நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் செய்யவேண்டிய அறச்செயலை செய்வர். இடையறாமல் குறியும் சோதிடமும் பார்த்துப் பிதற்றிக்கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை. 

திருமந்திரம் 

 

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை

ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்

பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை

ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. - (1ம் தந்திரம் - 04. இளமை நிலையாமை: 3)


பொழிப்புரை: சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே நந்தியின் போதனையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. - (பாடல் எண் : 5)

பொழிப்புரை: ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற இறைவனின் திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. - (பாடல் எண் : 9)

பொழிப்புரை : பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. - (பாடல் எண் : 10)

பொழிப்புரை: வரையறுக்கப்பட்ட இளமை கழிவதன் முன் உள்ளநாட்களில் பொருள்சேர் புகழால் திருமுறைவழி இடையறாது ஏத்துங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட நாள்களில் அருள் துணையால் மாசறுத்துத் தூயராய் இறை நினைவுடன் வாழுதல் வேண்டும். இங்ஙனம் ஒழுகாமல் மனம்போல் ஒழுகி வழுக்குற்று இழுக்கடைவாரும் பலர். இதனைப் பொருந்திய நாள்களில் இருந்து கண்டேன் என்க. கண்டேன்: நன்றாற்றுதலாகிய நல்லறஞ் செய்யாது இளமை சிலர்க்குப் பயன் இன்றிக் கழியக் கண்டேன். 
 

வளையாபதி : இளமை நிலையாமை 2 - கலிவிருத்தம் 

 

கலிவிருத்தம் (கருவிளம் காய் கூவிளம் கூவிளங்காய்)


இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றவல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்(கு) என்றுமென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். (வளையாபதி 41)

பொருளுரை: இன்பம் நுகர்தற்குரிய இளமைப்பருவமும் நிலைத்திராமல் நீரில் குமிழி போல அழிந்து போகும். நுகரும் இன்பங்களும் நிலைத்து நிற்கும் இயல்புடையன அல்ல. அதே போல, அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும் நிற்பன அல்ல. அவ்வின்பம் நிலையாததோடு வாழ்க்கையில் நாள்தோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன. ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நமக்கு இருக்கிறதென்று கர்வம் கொள்ளாமல், விளைகின்ற நன்செயை உழுகின்ற வேளாண்மக்கள் வரும் எதிர் ஆண்டிற்கு அவ்விளைச்சலில் இருந்து விதைநெல் சேமித்துக் கொள்வது போல, நீங்களும் நாள்தோறும் இனிச் சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக அறமாகிய வித்தினை நாட்களை வீணாக்காமல் செய்துகொள்ளக் கடவீர் எனப்படுகிறது.

 விளக்கம்: நீங்கள் இளமை முதலியன அழிந்துவிடும் என்பதை உணர்ந்து, இளமை முதலியவற்றால் மகிழ்ந்து சும்மா இருந்து விடாமல் இப்பொழுதே அறம் முதலியன செய்து இறைவன் திருவடியைச் சேர்ந்து சுவர்க்கம் அடைவதற்கு ஆக்கம் செய்து கொள்ளுங்கள்.

புறநானூறு 

இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்

செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,

தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,

தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,

மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு             5

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,

நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,

கரையவர் மருளத், திரையகம் பிதிர,

நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,

குளித்துமணற் கொண்ட கல்லா இளமை         10

அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-

தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,

இருமிடை மிடைந்த சிலசொல்

பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே? - (புறநானூறு 243. யாண்டு உண்டுகொல்)


பொருள்: திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

விளக்கம்:  அப்போது இருக்கமான மணலில் பாவை செய்து அதற்குப் பூக்களைக் கோத்துவிட்டு விளையாடிய மகளிர் குளத்தில் நீராடும்போது அவர்களோடு கை கோத்துக்கொண்டும், தழுவிக்கொண்டும், ஒருவர்மீது ஒருவர் தொங்கிக்கொண்டும், ஒளிவு மறைவு இல்லாமல், கள்ளம்-கபடம் இல்லாமல் விளையாடியதும், மகளிரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக அத் துறையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மருதமரத்தில் நீரோரமாகச் சாய்ந்திருந்த கிளையில் ஏறி, கரையில் உள்ளவர் மருளும்படியும், நீரலை பெரிதாகிக் கரையில் பிதிரும்படியும், விரிவான, ஆழமான குட்டையில் ‘துடும்’ என்னும் ஓசை உண்டாகும்படி நீரில் பாய்ந்து, மூழ்கி, ஆழத்திலிருந்த மண்ணை எடுத்துக்கொண்டு மேலே வந்து, கள்ளம்-கபடம் இல்லாத (கல்லா) இளமையானது இப்போது எங்கே போய்விட்டது? அந்தோ! அந்த இளமை இரங்கத் தக்கது. இப்போது தலையில் வளையல்-பூண் கட்டிய தடியை ஊன்றிக்கொண்டு தலையும் உடலும் நடுங்க, தொடர்ந்து பேசமுடியாமல் இடையிடையே சிற்சில சொற்களைப் கொண்டு, பெருமூதாளராக (தொடுதொடு கிழவராக) இருக்கும் என்னிடம் அன்று இருந்த அந்த இளமை எங்கே இருக்கிறது? இன்று என் இளமை செத்துவிட்டது. ஒருநாள், நானும் …!   

பழமொழி நானூறு - தருமம் செய்யுங்கள்

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'. - 6

பொருள்: தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கி வைத்தல், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.

இஸ்லாம் 


உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(வ), அம்ர் இப்னு மைமூன்(வ) நூல்: நஸாஈ 11832, ஹாகிம் 7846)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: “நீர் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிய வாய்ப்புக்களாய்க் கருதுவீராக!
1. நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையயும்,
2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும்,
3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும்,
4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும்,
5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும்
நீர் அரிய வாய்ப்புக்களாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக!” (ஹாகிம்: 7846, நஸாயீ: 11832)

 இளைமை பருவத்தை வணக்கத்தை அல்லாஹ்வுக்காக கழித்த மனிதர்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்.உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ - (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-660)

கிறிஸ்தவம் 


ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான் - நீதிமொழிகள் 22:6

 இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்

இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். (பிரசங்கி 11:9)

நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை. பிரசங்கி 12:1

“யூதா, நீ பாதுகாப்பை உணர்ந்தாய். ஆனால் நான் உன்னை எச்சரித்தேன்! ஆனால் நீ கேட்க மறுத்தாய். நீ இவ்வாறு உனது இளமைகாலம் முதல் வாழ்ந்திருக்கிறாய். உனது இளமை காலத்திலிருந்து நீ எனக்கு கீழ்ப்படியவில்லை. யூதா, நான் தரும் தண்டனை ஒரு புயலைப்போன்று வரும். அது உங்கள் மேய்ப்பர்களை அடித்துச்செல்லும். சில அந்நியநாடுகள் உதவும் என்று நினைத்தாய். ஆனால் அந்நாடுகளும் தோற்கடிக்கப்படும். பிறகு நீ உண்மையிலேயே ஏமாறுவாய். நீ செய்த தீயவற்றுக்காக அவமானம் அடைவாய். - எரேமியா 22:21&22

என் இளமையின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினைவில் கொள்ளாதே; கர்த்தாவே, உமது கருணையின்படி உமது நன்மைக்காக என்னை நினைவில் வையுங்கள். சங்கீதம் 25: 7 

புறங்கூறாமை

தமிழர் சமயம் 


முன்நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கல்நின்று உருகக் கலந்துரைத்துப் - பின்நின்று
இழித்துஉரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்துஇமையார் நின்ற நிலை. (அறநெறிச்சாரம் பாடல் - 84)

விளக்கவுரை வானவர் விழித்தகண் மூடாமல் நிற்கும் நிலைக்குக் காரணம், ஒருவனுக்கு முன் இருந்து கல்லும் உருகுமாறு முகம் மலர்ந்து வாயாலும் இன்சொல் கூறிப் புகழ்ந்து, அவன் இல்லாத இடத்தில் அவனையே இகழ்ந்து பேசுகின்ற கயவர்களை, கண்களை மூடினால் நம்மையும் அவர்கள் இகழ்வார்களே என்று அச்சம் கொண்டதால் ஆகும்.

பொய்ம்மேல் கிடவாத நாவும் புறன்உரையைத்
தன்மேல் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
பிணிப்பண்பு அழியாமை பெற்ற பொழுதே
தணிக்கும் மருந்து தலை. (அறநெறிச்சாரம் பாடல் - 85)

விளக்கவுரை புறங்கூறுதலைத் தன்னிடம் உண்டாகாமல் காத்துக்கொள்பவன், பொய்ம்மை பேசுவதில் செயல்படாத நாவையும், மெய் பேசுவதில் பொருந்தியிருக்கும் பண்புடைமை நீங்காமையையும் பெற்ற அப்போதே பிறவி நோயைப் போக்கும் சிறந்த மருந்தைப் பெற்றவன் ஆவான்.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. (குறள்: புறங்கூறாமை 181)

விளக்கம்: அறத்தைப்பற்றி வாயாலும் சொல்லாதவனாய் ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும்,' அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன் ' என்பது இனிதாகும்.

அறனழீ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)

விளக்கம்: அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். (183)

விளக்கம்: பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல். (184)

விளக்கம்: நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக ; நேரில் இல்லாதபோது, பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால காணப் படும். (185)

விளக்கம்: அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதால் அந்த இழிசெயலால் தெளிவாக அறியலாகும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன் தெரிந்து கூறப் படும். (186)

விளக்கம்: பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுக் குள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)

விளக்கம்: 'மகிழ்ச்சியாகப் பேசி நட்பு கொள்ளுதல் நன்மை' என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்.

துள்ளியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. (188)

விளக்கம்: நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. (189)

விளக்கம்: ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (190)

விளக்கம்: அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?

 

இஸ்லாம்

(பிறரைக்) குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். - (திருக்குர்ஆன் 104.1 ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்))

'சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாத ஒருவனையும், கோள் சொல்லி (புறங்கூறி) திரிந்தவனையும் கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - (புகாரி : 1361, நஸஈ : 2042)

நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். - திருக்குர்ஆன் 49:12 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் , ” அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் ” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ , நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர் ” என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 5048)


கிறிஸ்தவம் 

1. இரகசியமாய்ப் பேசுதல் (Whispering) – ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் தவறான முறையில் இரகசியமாகப் பேசுதல் (ரோமர் 1:30; 2 கொரி. 12:20).

ஒருவரைப் பற்றி ஒருவர் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டனர். அவர்கள் தேவனை வெறுத்தனர். அவர்கள் முரடர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தம்மைப்பற்றி வீண் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். தீய காரியங்களைச் செய்யப் புதுப்புது வழிகளைக் கண்டு பிடித்தனர். தம் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தனர். (ரோமர் 1:30)

2. அவதூறு சொல்லுதல் (Backbiting) – இதைப் புறங்கூறுதல் என்கிறோம் (ரோமர் 1:30; 2 கொரி. 12:20).

 நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். - (2 கொரி. 12:20)

3. கேடான சந்தேகங்கள் (Evil surmising) – இதை தமிழ் வேதம் ‘பொல்லாத சம்சயங்கள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஒருவரைப் பற்றி ஆதாரமே யில்லாமல் சந்தேகங்களை எழுப்பி தவறாகப் பேசுதல் (1 தீமோ. 6:4).

தவறான போதகன் தற்பெருமையை உடையவன். அவனுக்கு எதுவும் புரியாது. வாக்குவாதங்களின் மேல் ஒரு நோய் கொண்ட உற்சாகத்தை உடையவனாக இருக்கிறான். அது பொறாமையையும், சண்டையையும், அவதூறுகளையும், பொல்லாத ஐயங்களையும் உண்டாக்குகின்றன. - (1 தீமோ. 6:4).

4. கோள் சொல்லுதல் (Tale-bearing) – லேவி. 19:16.

மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்! - (லேவி. 19:16.)

5. அலப்புவாயன் (Babbling) – ஒன்றுக்கும் உதவாத வீண்பேச்சு பேசுகிறவன்  (பிரசங்கி 10:20).

அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப்பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும். -  (பிரசங்கி 10:20).

6. அலப்பல் (Tattling) – நேரத்தை வீணாக்கி அடுத்தவர்களைப் பற்றிப் பேசித்திரிதல் (1 தீமோ. 5:13).

இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள். - (1 தீமோ. 5:13).

7. மற்றவர்களுக்கு விரோதமாகப் பேசுதல் (Evil speaking) – சங். 41:5; 109:20.

என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள். (சங். 41:5)

8. அவதூறு சொல்லுதல் (Defaming) – மற்றவர்களைப் பற்றி இல்லாததைச் சொல்லி அவர்களுடைய பெயரைக் கெடுத்தல் (யெரே. 20:10; 1 கொரி. 4:13).

மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர். - 1 கொரி. 4:13

9. பொய்சாட்சி சொல்லுதல்  (Bearing False witness) – பார்க்காத ஒன்றைப் பார்த்ததுபோல் ஒருவருக்கெதிராக சாட்சியமளித்தல் (யாத்தி. 20:16; உபா. 5:20; லூக்கா 3:14).

பிற ஜனங்களைக் குறித்துப் பொய் சாட்சி பேசவேண்டாம். - யாத்தி. 20:16

10. மற்றவர்களைத் தவறாக எடைபோட்டு பழித்துப் பேசுதல் (Judging uncharitably) – யாக். 4:11-12.

சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். (யாக். 4:11-12.)

11. மற்றவர்களைப் பற்றி தவறான செய்தி கொடுத்தல் (Raising false reports) – யாத்தி. 23:1.

பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள். – (யாத்தி. 23:1)

12. ஒருவர் செய்த தவறைத் திரும்பத் திரும்பச் சொல்லி இன்பம் காணுதல் (Repeating matters) – நீதி. 17:9.

ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே பேச்சில் தொடர்ந்து கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும். - நீதி. 17:9.

கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்

கிறிஸ்தவம்

வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும். - (யாத்திராகமம் 21:23-25)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். - (மத்தேயு 5:38-48)

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் (அல் குர் ஆன் 5:45)  

விசுவாசங்கொண்டோரே! கொலையுண்டவர்கள் விஷயத்தில் (பகரமாக) பழி வாங்குவது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. (அதில் கூடுதல் குறைவின்றி) சுதந்திரமானவனுக்குப் பகரமாக சுதந்திரமானவனும், அடிமைக்குப் பகரமாக அடிமையும், பெண்ணுக்குப் பகரமாகப் பெண்ணும் பழி வாங்கப்படுதல் வேண்டும்); அக்(கொலையுண்ட)வனுடைய சகோதர (பாத்தியஸ்த)ரால் (கொலை செய்த) அவனுக்கு ஏதேனும் மன்னிக்கப்பட்டு விட்டால், அப்போது (கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள்) அறியப்பட்ட (வழக்கமான) முறையைப் பின்பற்றுதல் வேண்டும், (கொலை செய்தவரைச் சார்ந்தோர் நஷ்ட ஈட்டை) அவன்பால் பெருந்தன்மையுடன் நிறைவேற்றிவிடவும் வேண்டும், இது உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள சலுகையும், கிருபையுமாகும், ஆகவே, இதன் பின்னர் யாராவது வரம்பு மீறினால், அப்போது அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு. -  (திருக்குர்ஆன் 2:178) 

 யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ("ஆம், அவன்தான்" என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது. (2413. அனஸ்(ரலி) அறிவித்தார்.)

என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள். அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல்விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது. - (2703. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.)

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து)விலகிக்கொள்வீர்கள். (அல்குரான். 2: 178,179) 

இறைவனை நோக்கி முதலில் நாம் செல்லவேண்டும்.

தமிழர் சமயம் 


வருந்தி அழைத்தால் வருவான் 
 
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்கள்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே (திருமந்திரம் 30
 
விளக்கம் வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் பொதுவாக பெய்கிறது. அதுபோல இறைவனின் அருள் வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் இறையருள் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள். ஆனால் எவ்வாறு கன்று தன் பசியை பசுவை நோக்கிக் கதறித் தெரிவிக்கின்றதோ அதுபோலவே எனக்கு வழிகாட்டும் குருவான நந்தி தேவரை நான் அழைப்பது அந்த இறைவனைப் பற்றிய ஞானம் பெறக் கருதியே. 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (குறள் - 10)

மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார். பிரவிப் பெருங்கடலை நீந்தும் முயற்சி முதலில் நம்முடையதாக இருக்க வேண்டும், அதன் விளைவு இறைவனை அடைவதாம். 

இஸ்லாம் 

 ''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி). நூல் : (புகாரி 7405)

கிறிஸ்தவம் 

 கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” - (யாக்கோபு 4:8)

நன்றியுடைமை

தமிழர் சமயம் 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. குறள் 101

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. குறள் 102

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. குறள் 103


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். குறள் 104

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. குறள் 105

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. குறள் 106

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. குறள் 107

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் மாண்டு எழக்கூடியய பிறவியிலும்  மறவாமல் போற்றுவர் பெரியோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. குறள் 108

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
குறள் 109

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
குறள் 110

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

நாலடியாரில் செய்ந்நன்றியறிதல் எனும் அதிகாரம் அமைக்கப்பெறவில்லை. ஆனால் இவ்வறத்தை மெய்ம்மை, புல்லறிவாண்மை, கீழ்மை, கயமை போன்ற அதிகாரங்கள் எடுத்துரைக்கின்றன. தம்மால் தரமுடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று சொல்வது 

செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து (கு.111) 

என ஒரு பாடல் விளக்குகின்றது.

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறும் தீதாய் விடும்.  (நாலடியார் 357 - பொருட்பால் - பொதுவியல் - கயமை)

பொருள்: ஒரே ஒரு உதவி மட்டும் செய்தார் ஆயினும் அதனைச் சான்றோர் மனத்தில் பொதித்து வைத்துக் கொண்டு  உதவி செய்தவர் நூற்றுக்கணக்கான பிழை தனக்குச் செய்தாலும் அனைத்தையும் பொறுத்துக்கொள்வர். எழுநூறு உதவி செய்திருந்தாலும் ஒரே ஒரு தீது செய்வாராயின், கயவர் தமக்குச் செய்த எழுநூறு உதவிக்களையும் தீயவை என ஆக்கிக்கொள்வர். 

நாலடியார் கீழ்மை எனும் அதிகாரத்தில் சான்றோர் நன்றியறிவார், கீழோர் நன்றி உணர்வில்லாதவர்கள் என்பதைக் கூறுகின்றது.

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து
என்றும் செயினும்  இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு  (நாலடியார் 344)

பொருள்: ஒளி திகழும் அருவி பாயும் நாட்டின் அரசனே! தினை அளவு சிறிய உதவி செய்தாலும் அந்த உதவியைச் சான்றோர் பனை அளவு பெரிதாக எண்ணித் திருப்பி உதவுவர். நன்றி உணர்வு இல்லாதவர் பனை அளவு மிகப் பெரிய உதவி செய்தாலும் அதனை எண்ணியும் பார்க்க மாட்டார்.

பழமொழி நானூறும் கீழ்மக்கள் இயல்பு, நன்றியில் செல்வம், இல்வாழ்க்கை, எனும் தலைப்புகளில் செய்ந்நன்றியறிதல் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இல்வாழ்க்கை எனும் தலைப்பில் செய்ந்நன்றியறிதல் குறித்துத் தம் சுற்றத்தான் என்று நினைத்து நமக்கு நாழி அரிசி கொடுத்தவன் கோபப்பட்டாலும் அதற்காக அவனை இகழாமல் அவன் செய்த உதவியை நினைத்து நன்றியுடன் இருக்க வேண்டும் (345) என்று கூறுகிறது.

மற்றொரு பாடல்களில் உதவி செய்தவர்கள் என்பதை மறந்து அவனைப் போற்றாமல், அவனைப் போற்றாமல், அவன் மீது கோபப்படக்கூடாது என்றும் 346 செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக் கோடின்றி அழிவது விதி 347 என்றும் கூறுகிறது. நன்றியணர்வு இன்றி உதவி செய்தவரை அவருடைய பகைவருடன் சேர்ந்து கொண்டு புறங்கூறுதல் கூடாது. கீழ்மக்கள் இயல்பு எனும் தலைப்பில் கொடியவர்க்கு நன்மை செய்தாலும் அவர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற கருத்தை கூறுகிறது.

நன்றியில் செல்வம் எனும் தலைப்பில் உறவினர்களாலும்,நண்பர்களாலும் நேருமானால் அவர்களுக்கு உதவி செய்து வாழ்வோர் இல்லை உதவி செய்ததை நன்றியுடன் போற்றாதவர்க்கு உதவிகள் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை,நன்றி கொன்றவர்க்கு உதவுவதால் நன்மை இல்லை என்பதை,

தமராலும், தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி
நிகராகச் சென்றாரும் அல்லர் - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப செய்தது உதவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு (227)

நான்மணிக்கடிகையில் செய்நன்றியறிதல் பற்றி செய்திகள் இடம்பெறுகின்றன. 

பிறர் செய்த நன்றியை நன்றாக கொளல் (11:1) என்றும் 

 பிறர் செய்த நன்மையை மறந்த காலத்து செய்ந்நன்றி கெடும் என்பதை 

நன்றி சாம் நன்றறிய தார் முன்னர் (47:1) என்றும்,

 நன்மை செய்தாரைவிடப் பிறர் செய்த நன்றியை மறவாதவர் மிக மேலானவர் (70:3-4) என்று குறிப்பிடுகிறது.

நன்றிப் பயன் தூக்கா நாணிலி எச்சம் இழந்து வாழ்வார் (திரி.62) 

என்று திரிகடுகம் செய்ந்நன்றியறிதலைக் குறிப்பிட்டமைகின்றது (1:1), 

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனியினிது (30) 

 என்று இனியவை நாற்பது ஒரிடத்தில் மட்டும் செய்ந்நன்றியறிதலை வலியுறுத்துகிறது.

சிறுபஞ்சமூலத்தில் அமையும் நல்ல வெளிப்படுத்தி இயல்புடைவன் இனத்தைக் காப்பவனாகவும், பழிவந்த விடத்து உயிர்விடுபவனாகவும் காணப்படுகின்றனர். மேலும் அவர்கள் தீயதை மறக்க வேண்டும் என்ற கருத்தை சிறுபஞ்சமூலம் நவில்கிறது.

முதுமொழிக்காஞ்சி உள்ளொன்று வைத்து புறமொன்று பொய்யாக நடித்து செய்யப்படும் உதவி கீழ்மையிலும் கீழ்மையானது என்பதை,

பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது  (முது.4:6)

என்ற பாடலடியில் அறியலாம். இன்னா நாற்பது, ஏலாதி போன்ற நூல்கள் செய்ந்நன்றியறிதல் எனும் நெறியைக் கூறவில்லை. மேற்கூறப்பட்ட கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் பிற்காலத்தில் தோன்றிய நீதி இலக்கியங்களும் இக்கருத்தைக் குறிப்பிடுகின்றன. இந்நெறியை ஒளவையார்,

நன்றி மறவேல் (ஆத்தி.21)

என்றும் மேலும் கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை,

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்  (மூது.1)

என்ற பாடலில் வேர் மூலம் உண்ட நீரிலை உச்சியிலே இளநீர்க் காய்களாகத் தந்து நன்றியை வெளிப்படுத்துகிறது தென்னை. அது போல நல்லவர்களும் தாங்கள் பெற்ற உதவியைத் தக்க சமயத்தில் திருப்பிச் செய்வார்கள் என்று குறிப்பிடுகிறார். செய்த நன்றி மறக்க வேண்டாம் என்று உலகநீதியும் இயம்புகிறது இதனை,

செய்த நன்றி ஒரு நாளும் மறக்க வேண்டாம்  (உலக.8:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

இஸ்லாம்

“ (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் – எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை (குர்ஆன் 31:32)

” (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்(குர்ஆன் 7:10)

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 4:147)

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (குர்ஆன் 14:07)

எவர் மனிதர்களுக்கு நன்றி நவிழவில்லையோ, அவர் அல்லாஹ்விற்கும் நன்றி நவிழமாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ) (403)

‘மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.' (லுக்மான் : 14)

நூஹ் நபி அவர்கள் பல நூறு ஆண்டுகள் பல்வேறு சோதனைகளை அனுபவித்தும், அவர் நன்றி மறக்கவில்லை என்பதை ‘அவர் நன்றி மிக்க அடியாராக இருந்தார்’ (அல் இஸ்ர :03) 

கிறிஸ்தவம் 

“கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது” -  சங்கீதம் 106:1

“ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக” -  1 நாளாகமம் 16:34