பிறர்மனை விரும்பாமை

தமிழர் சமயம்:


அறநெறிச்சாரம்:

பெண்விழைவார்க்கு இல்லை பெருந்தூய்மை பேணாதுஊன்
உண்விழைவார்க்கு இல்லை உயிர்ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறம் இன்மை மாணாது
தம்விழைவார்க்கு இல்லை தவம். (பாடல் - 104)

விளக்கவுரை அயலார் மனைவியை விரும்புபவர்க்கு மிக்க தூய்மை இல்லை. அருளை விரும்பாது புலால் உண்பதை விரும்புபவர்க்கு உயிரைக் காக்கும் தன்மை இல்லை. எப்போதும் அயலவரின் நாட்டை விரும்புபவர்க்கு அறம் இல்லை. பெருமைக்குத் தகாத செயல்களைச் செய்வதால் தவ ஒழுக்கம் உண்டாகாது. 
 
கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையில்
செல்வதூஉம் செய்வன கால்அல்ல - தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பால்சென்று
அறவுரை கேட்பிப்ப கால். (பாடல் 202)

விளக்கவுரை மற்ற உயிரைக் கொல்லவும் பிறர் பொருளைத் திருடவும் அல்லாது பிறர் மனைவியை விரும்பிக் கூடச் செல்வதற்கும் உதவுபவை கால்கள் அல்ல; துன்பம் தரும் பிறவிப் பிணியைப் போக்கும் பெருந்துறவியா¢டம் போய் அவர் கூறும் அறிவுரையைக் கேட்கச் செய்வன கால்கள் ஆகும்.

ஏலாதி:

கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,
புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,
குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், - கொல் யானை ஏறி
அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு. (ஏலாதி 42)

விளக்கவுரை பிறிதோருயிரைக் கொல்லாது, கொல்லுதற்குடன்படாது, கொல்லுவா ரினத்தைச் சேராது, பிறர் மனையாளை விரும்பாது, ஊனுண்டலோடு, கலவாது,பிறருடைய குடிகளை நிறுத்திக் கூழை யீந்தவன் கொல்யானையேறி மண்ணையாண்டிடப்படுவன்.

இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து. ஏலாதி 45 
 
விளக்கவுரை தானொழுகுநெறியைத் தப்பாது பிறர்க்கு இன்னாதனவற்றைச் செய்ய விரும்பாது, பிறன் மனை பிழையாது, பிறர் பொருள் வௌவாது தானொழுகுங்கா லொழுகி, குற்றமில்லாத வுணவினை யீவான், அரசாண்டு பகைவரை விரைந்து நீக்கி வெல்வான்.

திரிகடுகம்:

கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்
பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர்,
நாடுங்கால், தூங்குபவர். . . . .[திரிகடுகம் 19]

விளக்கம்: யானைக்கு அஞ்சி ஓடுகின்ற வீரனும், அயலான் மனைவியை விரும்புபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும், விரைவில் கெடுவர்.  
 
நல்வழி:

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். - நல்வழி 36

விளக்கம் நண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அது அழியும் காலம் வந்தவுடன் கன்று ஈனும். கன்று வருவதை வைத்து இது அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம். அது போல் ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை வருவதை அவர் பிறர் மனையை பார்க்கத் தொடங்கியதில் இருந்து நாம் அறியலாம்.  

குறள் : பிறன் இல் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

பொருள்: அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.

142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

பொருள்: அறத்தின் பக்கம் நிற்பவர் யாரும் பிறன் மனைவியை நாடி நிற்கும் பேதையர் இல்லை.

143. விளிந்தாரின் வேறல்லார் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.

பொருள்: நன்கு தெரிந்தவர் வீட்டில் தீமை ஏற்படுத்துபவர் பிணத்துக்கு ஒப்பானவர்

144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

பொருள்: தன் தவறான செயலைப் பற்றி திணையளவும் ஆராயாமல் பிறன் மனையில் நுழைபவருக்கு எவ்வளவு துணை இருந்தும் பழியிலிருந்து மீள முடியாது

145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

பொருள்: எளிதாக தன் இழி செயலை நிறைவேற்றலாம் என அடுத்தவர் வீட்டிற்கு செல்பவருக்கு என்றும் விலகாத பழி நேரும்

146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பொருள்: அடுத்தவன் மனைவியை கவர நினைப்பவனுக்கு வந்து சேரும் பகை, பாவம், அச்சம், பழி அகிய நான்கும் விலகாது

147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பொருள்: அறத்தினின்று வழுவாத இல்வாழ்க்கை நடத்துபவன், பிறன் மனைவியை நாடுவதில்லை.

148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பொருள்: பிறர் மனைவியை தவறாக நோக்காமை சான்றோருக்கு பேராண்மை மட்டுமன்றி அறன் சார்ந்த ஒழுக்கமும் ஆகும்.

149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

பொருள்: கடல் சூழ் உலகில் பிறன் மனைவியின் தோள் தீண்டாதவரே நம் நலத்துக்குரியவர் ஆவார்.

150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பொருள்: அறன் வழி நில்லாவிட்டாலும் பிறன் மனைவியை வேண்டாமை நன்று.

திருமந்திரம்  - 8. பிறன் மனை நயவாமை

1 ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே.

வி. உரை: ஊரார் உறவினர் உற்றார் பெற்றோர் சான்றோர் ஆசான் தெய்வம் சான்றாகப் பொற்றாலி புனைந்து கைக்கொண்ட மனையாளே ஆத்த மனையாளாவள். ஆத்த - புனைந்த; கட்டிய. அத்தகைய கற்பு நிறை ஆர்ந்த பொற்புறு மனையாள் மதிற்காவலும் வாயிற்காவலும் ஆகிய புறக் காவலமைந்த வீட்டகத்துத் தங்கியிருக்கவே, பிறரால் அப் புறக் காவலுடன் அகக் காவலாகிய நிறைக்காவலும் சேர்ந்து காக்கப்படும் பிறன் மனையாளைக் காமுறுவர் விளைவதறியாக் காளையர். முப்பழங்களுள் ஒன்றாய் இன்பப் பகுதியாய்க் காணப்பெறுவது பலாப்பழம். அது செவ்வியுறக் காய்ந்து நன்கு கனிந்தால் மிக்க இன்பந்தரும். அத்தகைய பலாமரத்தின் கனியை எவ்வகை அச்சமுமின்றிப் புகழும் புண்ணியமும் பெருகவும் நிலையாம் சிவனடி எய்தவும் நுகரலாம். அவ் இன்பத்தை உலைவின்றி நுகரமாட்டாத கொடியோரும் சிலராவர். அவர் எக்காலமும் நீங்கா அச்சமும், பெருகும் பழியும் பாவமும், நரகிடை வீழ்தலும், இன்ப மின்மையும், துன்ப நீங்காமையும், பிறப்பினைத் தருதலும் ஆகிய நுகர்வல்நுகர்வை நுகர்வதற்கு முயல்வர். அஃது ஈச்சம் பழத்தினை உண்ண விரும்பிக் கிட்டாது இடருற்று எய்த்தலை ஒக்கும்.

3 பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்ற கில்லாரே.

உரை: அன்பும் அருளுமின்றி முறை கடந்து பொருள் அவாவினால் குடிகொன்று இறைகொள்ளும் கோமகனாகிய கண்டன் எனப்படும் மன்னனும் பிறன் மனைவிழைந்து அறந்திறம்பி மயலுற்று வாழ்வான். அதுபோல் மெய்யுணர்வு எழாவண்ணம் அறிவினை அடக்கி ஆணவ முனைப்பாம் இருளினூடே மின்னொளி போன்று தோன்றிய புல்லறிவாளரும் பிறன்மனைவேட்டு மயலுறுவர். அத்தகைய பெண்டிரும் கற்பழிந்து பழிசேர் இழிகுலத்தவராவர். அறந்திறம்பிய செல்வமும் சிற்றினச் சார்பாம் புல்லறிவும் மருள் கொள்ளவும் மாதர் மயலுறவும் செய்யும் கருவிகளாகும்; இத்தகையோர் தாமாகவே மருள்கொண்ட சிந்தையை மாற்றிக் கொள்ளும் வன்மையிலாதவராவர்.
 
நாலடியார் : பிறர்மனை நயவாமை

81. அச்சம் பெரிதால்; அதற்கு இன்பம் சிற்றளவால்;
நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால்; நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால்;-பிறன் தாரம்
நம்பற்க, நாண் உடையார்!

(பொ-ள்.) நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல் காதல் மனையாளும் இல்லாளா - திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென்றன்மை வாய்ந்த அன்புடைய மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு - ஏன் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல் ?

(க-து.) காமத்தால் வரும் அச்சம் பொ¢து! அந்த அச்சத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெறும் இன்பம் சிறிதே! யோசித்துப் பார்த்தால் அரசனால் கொலைத் தண்டனையும் உண்டு! எந்நாளும் நரக வேதனையை அடைதற்குரிய மிக்க பாவச் செயலாகும் அது! ஆதலால் நாணம் உடையவர்கள் பிறன் மனைவியை விரும்பாதிருப்பாராக!
 
82. அறம், புகழ், கேண்மை, பெருமை இந் நான்கும்
பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா; பிறன் தாரம்
நச்சுவார்ச் சேரும், பகை, பழி, பாவம் என்று
அச்சத்தோடு இந் நாற் பொருள். 

(பொ-ள்.) அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம் புகழ் தக்கார் நேயம் ஆண்மை என இந் நான்கும் ; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் மனைவியை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா ; பகை பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் - பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் - பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.

(க-து.) புண்ணியம், புகழ், தக்கோர் நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் சேரமாட்டா, மாறாகப் பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் வந்து சேரும்.

83. புக்க இடத்து அச்சம்; போதரும் போது அச்சம்;
துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமைக் காப்பு அச்சம்;
எக் காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ,
உட்கான், பிறன் இல் புகல்?  

(பொ-ள்.) புக்கவிடத்து அச்சம் - புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் - திரும்பிவரும்போது அச்சம் ; துய்க்குமிடத்து அச்சம் - நுகரும்போது அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம் - பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் - இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும் ; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் - ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்?

(க-து.) பிறர் மனைவியை நாடி அவள் வீட்டிற்குள் புகும்போது அச்சம்; திரும்பி வெளியே வரும்போது அச்சம்; இன்பம் நுகரும்போது அச்சம்; பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது என்ன பயன் கருதியோ?

84. காணின், குடிப் பழி ஆம்; கையுறின், கால் குறையும்;
ஆண் இன்மை செய்யுங்கால், அச்சம் ஆம்; நீள் நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீ கண்ட
இன்பம், எனக்கு, எனைத்தால்? கூறு. 

 (பொ-ள்.) காணின் குடிப்பழியாம் - பிறர் கண்டு விட்டால் குடிப்பழிப்பாம்; கையுறின் கால் குறையும் - கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் - ஆண்மை யில்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - நெடுங்கால் நிரயத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி - தீயொழுக்க முடையோய் ; நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு - நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ? எனக்குச் சொல்.

 (க-து.) அயலார் கண்டால் தன் குலத்திற்குப் பழிப்பாகும்; கையில் அகப்பட்டால் கால் முறியும்; ஆண்மையற்ற இப்பிறர்மனை புகுதலைச் செய்யின் அச்சம் தோன்றும்; பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்!

85. செம்மை ஒன்று இன்றி, சிறியார் இனத்தர் ஆய்,
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ, உம்மை,
வலியால் பிறர் மனைமேல் சென்றாரே-இம்மை,
அலி ஆகி, ஆடி உண்பார். 

(பொ-ள்.) செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பவராவர்.

(க-து.) சிறிதும் நல்லொழுக்கம் இன்றிச் சிற்றினம் சேர்ந்து, அழகிய கோலம் எழுதப் பெற்ற கொங்கைகளையுடையவளின் தோளைச் சேர விரும்பி, தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே, இப்பிறப்பில் அலித் தன்மையுடையவராய்க் கூத்தாடி உண்டு வாழ்வர்.
 
86. பல்லார் அறியப் பறை அறைந்து, நாள் கேட்டு,
கல்யாணம் செய்து, கடி புக்க மெல் இயல்.
காதல் மனையாளும் இல்லாளா, என், ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு?  

(பொ-ள்.) நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல் காதல் மனையாளும் இல்லாளா - திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென்றன்மை வாய்ந்த அன்புடைய மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு - ஏன் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல் ?
 
(க-து.) பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்)

87. அம்பல் அயல் எடுப்ப, அஞ்சித் தமர் பரீஇ,
வம்பலன் பெண் மரீஇ, மைந்துற்று, நம்பும்
நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு-பாம்பின்
தலை நக்கியன்னது உடைத்து. 

(பொ-ள்.) அம்பல் அயல் எடுப்ப - அயலார் பழித்தல் செய்ய, அஞ்சித் தமர் பரீஇ - அதனால் தன்னைத் தடுப்பரென்று அஞ்சித் தம் உறவினரினின்றும் நீங்கி வம்பலன் பெண் மரீஇ மைந்து உற்று - அயலான் மனைவியைச் சேர்ந்து களிப்படைந்து, நம்பும் நிலைமை இல்நெஞ்சத்தான் துப்புரவு - எவராலும் நம்புதற்குரிய நிலைமையில்லாத நெஞ்சத்தையுடையானது அக் காமநுகர்ச்சி, பாம்பின் தலை நக்கியன்னது உடைத்து - பாம்பின் மழமழப்பான தலையை நாவினால் தடவி இன்புற்றத்தைப் போன்ற தன்மையையுடையது.
 
(க-து.) அயலார் பழித்துரைக்க, சுற்றத்தார் பயந்து வருந்தி நிற்க, அயலான் மனைவியைத் தழுவி மகிழ்ச்சியுற்ற, யாவராலும் நம்பத்தக்க இயல்பு இல்லாத மனத்தையுடையவனது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கியது போன்ற தன்மையுடையது! (பிறர் மனைவியை விரும்புதல் பாம்பின் தலையைத் தொடுவது போன்ற ஆபத்தானது)..

88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா,
உரவோர்கண் காம நோய்,-ஓஒ கொடிதே!-
விரவாருள் நாணுப்படல் அஞ்சி, யாதும்
உரையாது, உள் ஆறிவிடும். 

(பொ-ள்.) பரவா - அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா ; வெளிப்படா - ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா ; பல்லோர்கண் தங்கா - அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா ; உரவோர்கண் காமநோய் ஓ. கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடுமையுடையது!, விரலாருள் நாணுப்படல் அஞ்சி - அங்ஙனம் அவர்கள் மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து, யாதும் உரையாது உள் ஆறிவிடும் - சிறிதும் வெளிப்படாமல் உள்ளேயே தணிந்துவிடும்.
 
(க-து.) காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவா¢டம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தா¢டம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும்

89. அம்பும், அழலும், அவிர் கதிர் ஞாயிறும்,
வெம்பிச் சுடினும், புறம் சுடும்; வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப்படும்.  

(பொ-ள்.) அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும் - வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும், வெம்பிச் சுடினும் புறம் சுடும் - வெதும்பிச் சுட்டாலும், வெளிப்பொருளையே சுடும், வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம் அவற்றினும் அஞ்சப்படும் - அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தைச் சுடுவதனால் காமம் என்பது அவற்றைப் பார்க்கிலும் அஞ்சப்படும்.
 
(க-து.) அம்பும், தீயும், ஒளிவீசும் கதிர்களையுடைய சூரியனும் வெப்பத்துடன் சுட்டாலும், உடம்பை மட்டுமே சுடும். ஆனால் காமமானது வெப்பமாகி மனத்தை வருத்திச் சுடுதலால், அந்த அம்பு முதலியவற்றைக் காட்டிலும் அஞ்சத்தக்கதாம்.

90. ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள்
குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி
ஒளிப்பினும், காமம் சுடும்.

(பொ-ள்.) ஊருள் எழுந்த உரு கெழு செந்தீக்கு ஊர்நடுவில் பற்றிக்கொண்ட ஓங்கிய அச்சம் மிக்க செந்தழலுக்கு, நீருள் குளித்தும் உயலாகும் - அருகிலிருக்கும் நீருள் மூழ்கியும் பிழைத்தல் கூடும்; ஆனால், நீருள் குளிப்பினும் காமம் சுடும் குன்று ஏறி ஒளிப்பினும் காமம் சுடும் - நீருள் மூழ்கினாலும் காமம் எரிக்கும்; மலை ஏறி ஒளித்தாலும் காமம் எரிக்கும்.
 
(க-து.) ஊர் நடுவே பற்றிக் கொண்ட செந்தழலுக்கு, அருகில் இருக்கும் நீருள் மூழ்கியும் தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் நீருள் மூழ்கினாலும் காமம் சுடும்; மலைமீது ஏறி ஒளிந்துகொண்டாலும் அது சுட்டு எரிக்கும். 
 

யூதம்:


பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக்கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக்கூடாது’” என்றான்.  (உபாகமம் 5:21)

15-16 உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே. 17 உனது பிள்ளைகள் உனக்கு மட்டுமே உரியவர்களாக இருக்க வேண்டும். உன் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களோடு உன் பிள்ளைகளைப் பகிர்ந்துகொள்ளாதே.18 எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. 19 அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும். 20 ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.  (நீதிமொழிகள் 5:15-20)

அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார். (யாத்திராகமம் 20:17)

5 என் மகனே, எனது ஞானமுள்ள போதனையைக் கவனமுடன் கேள். அறிவைப்பற்றிய என் வார்த்தைகளில் கவனம் செலுத்து. 2 பிறகு ஞானத்தோடு வாழ்வதற்கு நினைவுகொள்வாய். நீ என்ன சொல்வாயோ அதில் கவனமாக இருப்பாய். 3 அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம். 4 ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும். 5 அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள். 6 அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல். (நீதிமொழிகள் 5: 1-6)

கிறிஸ்தவம்: 

 கற்பைக் குறித்த போதனை

27 ,“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ [c] என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று. (மத்தேயு 5:27-29)

இஸ்லாம்: 

(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்; அது மானக் கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (17:32)

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்’ என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் ‘நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்’ என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி) (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ) 
 
திருமணம் ஆனபின்பு விபசாரம் செய்பவருக்கு (ஆண் பெண் இருவருக்கும்) தண்டனை கல்லெறி கொள்ளப்படுத்தல் - நூல்: புஹாரி 3635

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 424)

முடிவுரை 

இன்று பாலியல் உறவு தொடர்பான பல்வேறான அசிங்கமான நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளது.

  • நடைமுறையில் பிறருடைய மனைவியியுடன் பலர் உறவு வைத்து இருப்பதை இந்த நூல்கள் கண்டித்து பேசுவதுடன் அதன் விளைவுகளை கூறும் அதே நேரத்தில், இதுபோன்ற உறவுகள் இருவரும் சம்மதித்து செய்தால் தவறல்ல என்று இன்றைய சட்டம் சொல்கிறது. 

  • திரைப்படத்தில் இதுபோன்ற உறவுகள் தமாஷாக காட்டப்படுகிறது. 

  • "ஆன்டி வெறியன்" என்று சினிமாவில் பிரபலப்படுத்துகிறார்கள், 

  • யூடூயூபில் எடுக்கப்படும் பல காணொளிகள் பிறரின் மனைவியை எப்படி கவர்வது என்ற அமைப்பில் தான் எடுக்கப்படுகிறது. 

  • திருப்தி இல்லா மனைவிகளுடன் பேச வென்றுமா என்று விளம்பரங்கள் இணையத்தில் வருகிறது, அதற்கு என்று இன்று மொபைல் ஆப் கள் உள்ளன. 

  • ஆபாச படங்களின் தாக்கம் வேறு. 

இந்த பாவத்தை செய்யும் தனிமனிதனின் எதிர்காலம், மறுமை வாழ்கை மிக மோசமாக அமையும் என்பதைத் தாண்டி, இது எப்படிப்பட்ட சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். சீரழியும் சமுதாயம் நமது சந்ததிகள் வாழப்போகும் சமுதாயம் என்பதை நினைவில் கொள்வோம். 


நம்பிக்கையும் நற்செயலும்

தமிழர் சமயம் 


வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. (ஏலாதி 59)

விளக்கம்: பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மையை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான்.

கருத்து: இம்மையில் வணக்கமும், ஒழுக்கமும், சான்றோர் மதிப்பும், ஆராய்ச்சியும் உடையவன், மறுமையில் இக்கல்வியுடன் பொருளும் ஒருங்கெய்தி வாழ்வான். 
 

கிறிஸ்தவம்


[ விசுவாசமும் நற்செயல்களும் ] எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? - யாக்கோபு 2:14
 

இஸ்லாம்


யார் ஈமான் (நம்பிக்கை) கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (குர்ஆன் :277)

 

விருத்தசேதனம்


விருத்தசேதனம் செய்வது கர்த்தரின் உடன்படிக்கையாக இருக்க, பவுல் எப்படி அதை முறிக்கிறார் என்பதை இந்த வசனங்களில் காணலாம்.

உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம்

இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். - (ஆதியாகமம் 17:10)

உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். - (ஆதியாகமம் 17:11)

ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். - (ஆதியாகமம் 17:12)

எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். - (ஆதியாகமம் 17:13)

இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார். - (ஆதியாகமம் 17:14)

அதனால், “எங்கள் சகோதரியை நீ மணந்துகொள்ள அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீ இன்னும் விருத்தசேதனம் செய்து கொள்ளவில்லை. அதனால் இந்த மணம் தவறாகும். - (ஆதியாகமம் 34:14)
தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது மகன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர். - (ஆதியாகமம் 17:23)

ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. - (ஆதியாகமம் 17:24)

ஆபிரகாமும் அவனது மகனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். (ஆதியாகமம் 17:26)

அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர். - (ஆதியாகமம் 17:27)

ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது - (ஆதியாகமம் 21:4) 

மோசேயின் மகன் விருத்தசேதனம் செய்யப்படுதல்
 
உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்குகொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப்போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப்படுவான். அவன் பஸ்கா உணவில் பங்குகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண  முடியாது. - (யாத்திராகமம் 12:48)

பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். - (அப்போஸ்தலர் 15:1)

எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர். - (அப்போஸ்தலர் 15:5) 

யோசுவா எல்லா மனிதருக்கும் விருத்தசேதனம் செய்து முடித்தான். அவர்கள் குணமடையும்வரைக்கும் அங்கேயே முகாமிட்டிருந்தார்கள். - (யோசுவா 5:8) 

சகரியா, இயேசு விருத்தசேதனம் செய்யப்படுதல்

குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். - (லூக்கா 1:59) 
குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும். - (லூக்கா 2:21)

விருத்தசேதனம் மட்டும் போதுமா? 

சரீரத்தில் மட்டும் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டவர்களை நான் தண்டிக்கப்போகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. - (எரேமியா 9:25)

எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் மற்றும் வனாந்திரத்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன், பாலைவனக் குடிகள் தங்கள் தாடி ஓரங்களை வெட்டினார்கள். இந்த நாடுகளில் உள்ள அனைத்து ஜனங்களும் சரீரத்தில் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளாதவர்கள். ஆனால், இஸ்ரவேல் குடும்பத்தில் வந்த ஜனங்களோ, தங்கள் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். - (எரேமியா 9:26)  

விருத்தசேதனம் செய்தால் மட்டும் போதாது, மனதளவிலும் செய்யப்படவேண்டும். ஆனால் உடலளவில் விருத்தசேதனம் செய்வதென்பது கர்த்தருக்கு காட்டுப்படுவதின் ஒரு பிரதானமான பகுதி என்பதை ஆதியாகாம வசனங்கள் தெளிவாக மேலே குறிப்பிடுகிறது.  

பவுல் விருத்தசேதன கட்டளையின் பொருளை திரித்தல் 

கவனியுங்கள்! நான் தான் பவுல். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டு சட்டத்தின் அடிமைகளானால் கிறிஸ்து உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படமாட்டார். மீண்டும் எல்லோரையும் நான் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும்.சட்டத்தைப் பின்பற்றி நீங்கள் தேவனுக்கு வேண்டியவராக முயன்றால், கிறிஸ்துவோடு உங்களுக்கு உள்ள தொடர்பு அற்றுப்போகும். தேவனுடைய இரக்கத்தை விட்டு விட்டீர்கள்.ஆனால் தேவனுடைய கிருபை மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆவோம் என்று விசுவாசிக்கிறோம். ஆவியானவரின் உதவியோடு அதற்காகக் காத்திருக்கிறோம்.ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்வானேயானால் பின்னர், அவன் விருத்தசேதனம் செய்துகொண்டானா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை. அன்பும் விசுவாசமுமே மிகவும் முக்கியமானது. - (கலாத்தியர் 5:2) - பவுல் கலாத்தியருக்கு எழுதிய கடிதம்

ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம். - (கலாத்தியர் 6:15) - பவுல் கலாத்தியருக்கு எழுதிய கடிதம்

ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். - (1 கொரி 7:19) பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதம்

பாவம் செய்கிற மக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் நீங்கள் விருத்தசேதனம் செய்யும்படி பலவந்தப்படுத்துவார்கள். - (பிலிப்பியர் 3:2) - பவுல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 
 
நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. - (ரோமர் 2:25)  

சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. - (ரோமர் 2:28) - பவுல் ரோமருக்கு எழுதிய கடிதம். 

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? (ரோமர் 3:1) 

இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும் விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர். - (கொலோசெயர் 3:11) - பவுல் தி அப்போஸ்தலன் மற்றும் தீமோத்தேயு ஆகியோரால் எழுதப்பட்டது
 
கர்த்தர் மனிதர்களுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையை நீக்கும் உரிமை கர்த்தருக்கு இருக்கிறதா? அல்லது பவுலுக்கு இருக்கிறதா? 

நோன்பு

தமிழர் மதம்


பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. -திருமந்திரம் 1.6.2

விளக்கம்: உள்ளிருக்கும் பண்டங்களை மறைக்கும் கூரை என்ற உடல் வயதாகி விழுந்தால் அவரது பொருளை உண்ட மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள். அவர் செய்த விரதமும் அவர் பெற்ற ஞானமும் மட்டுமே அவருடன் வரும் என்கிறார் திருமூலர்.


திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. - (முதுமொழிக் காஞ்சி 5:9)

விளக்கம்: தனது தகுதிக்கேற்ற வகையில் நோற்காதது நோன்பு அல்ல.


ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர். - நாலடியார் 57

விளக்கம் முயற்சியுடன் தாம் மேற்கொண்ட விரதங்களும் உள்ளமும் சிதையுமாறு, தடுக்க முடியாத துன்பங்கள் வந்தபோதும், எப்படியாவது அத்துன்பங்களை விலக்கித் தம் விரதங்களை நிலை நிறுத்தும் மன வலிமை மிக்கவரே ஒழுக்கத்தைக் காக்கும் சிறப்புடையவராவர்.  


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. குறள் 267

 விளக்கம்  சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும் - நோன்பு நோற்கின்றவருக்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து - குறள் 344

விளக்கம் நோன்பு செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். குறள் 160

விளக்கம் உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர் பெரியவர், ஆனாலவர் பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான். 
 

கிறிஸ்தவம்


"மோசே அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் கர்த்தருடனே இருந்தார். மேலும் அவர் உடன்படிக்கையின் வார்த்தைகளை - பத்துக் கட்டளைகளை பலகைகளில் எழுதினார்." யாத்திராகமம் 34:28 (NIV)

"நீங்கள் நோன்பு நோற்கும்போது, ​​நயவஞ்சகர்களைப் போல சோகமாக இருக்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் நோன்பு நோற்பதை மனிதர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் தங்கள் முகங்களைச் சிதைக்கிறார்கள், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாகப் பெற்றனர். ஆனால் நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் பூசவும். நீங்கள் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் என்பது மனிதர்களுக்குத் தெரியாமல், கண்ணுக்குத் தெரியாத உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியாமல் உங்கள் முகத்தைக் கழுவுங்கள்; மறைவில் நடப்பதைக் காணும் உங்கள் தந்தை உங்களுக்குப் பலன் அளிப்பார்.". - (மத்தேயு 6:16-18)

      நோன்பு எல்லா மக்களுக்கும் எல்லா வேதங்களிலும் கொடுக்கப்பட்டன ஒன்று.எனவே அதை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், ஆய்ந்து அறிந்து பின்பற்றுவதே சான்றோருக்கு அழகு.

பொய் தீர்க்கதரிசிகள்

சிவவாக்கியர் கூறும் பொய் குருக்கள்


யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னிறந்த தென்பரே

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரே

முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே

மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்

 

திருமூலர் கூறும் பொய்க் குருக்கள்


குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கிய
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே
அணிகுவார் கரன்யாசம் அங்கரனியாசம்
ஆனபின்பு கை அலம்பிக் கண் மூக்குயந்து
முணிகுவார் முண்முணென்று தொட்டுப் பின்பு
முழம் அளவு தாவத்தைக் கையில் தாங்கி
பணிகுவார் கை கூப்பி சூட்டிக் கொள்வார்
பட்டதனால் மூடி ஜெபம் பண்ணுவார் பின்
குணகுணென மந்திரத்தைக் குளறுவார்பின்
குருக்கள் என்று உலகோர்கள் மகிழுவாரே 285.  

விளக்கம்: பூஜை கிரமங்களை ஒரு சடங்காக செய்யும் ஒருவரைப் பற்றி அகத்தியர் இங்கே கூறுகிறார். இந்த மனிதர் அங்கன்யாசம் கரன்யாசம் ஆகிய தூய்மைப்படுத்திக்கொள்ளும் சடங்குகளை செய்து முழ நீள ருத்திராட்ச மாலையை அணிந்துகொண்டு முணுமுணுவென்று மந்திரத்தைச் சொல்லியவாறு தன்னை பட்டால் மறைத்துக்கொண்டு மந்திரங்களைக் கூறுவர். இவ்வாறு பூஜையை அனைவரையும் கவரும் ஒரு சடங்காகச் செய்யும் அவர்களை உலக மக்கள் பெரிய குருக்கள் என்று கூறி மகிழ்வர் என்கிறார் அகத்தியர்.

உலகோர் பிரமிக்கக் கண்ணை மூடி
ஓம் நம சிவாயமென்று தியானம் செய்வார்
கலகோரை தெட்சணை தாம்பூலம் கேள்ப்பான்
கருத்துடனே நல்முகூர்த்தம் போகுதென்பார்
அலகோரை விரதம் யார் என்று கேட்பான்
ஆராரிவார் பேர் வாரும் என்பன்
இலகோரைக் கைபிடித்து திரைக்குள் வைத்து
எழுத்தஞ்சும் அவர்க்குரைத்துப் பொருள் கேட்பாரே 286.  

பொய் குருக்களைப் பற்றி இங்கு அகத்தியர் மேலும் கூறுகிறார். கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல நமசிவய என்று முணுமுணுத்து விட்டு “இங்கே யார் விரதம் செய்யப்போகிறார்?” என்று உலகோரைப் பார்த்துக் கேட்பார். அவர்களை அருகில் அழைத்து ஒரு திரை மறைவில் நமசிவாய ஐந்தெழுத்தை அவர்க்கு மந்திர தீட்சை என்று ஓதி அவரிடம் பொருள் தருமாறு கேட்பார்.

கேட்பாரே (உலக) தாரை உடல் பொருள் ஆவித்தான்
கிருபையுடன் தந்துவிட்டால் சண்ணுவான்பின்
கேட்பானே சோமன் சோடாடு மாடு
கிருபையுடன் கொடுத்தவருக்கு வருத்திச் சொல்வான்
கேபானே பெண்டிர்க்குச் சேலை பூசல்
கிருகையிலே தவறாத புத்தி சொல்வான்
கேட்பானே வேதாந்தம் பாரா சந்தம்
கிருபையுடன் வேதம் சொல் உரைசொல்வானே 287.  

மேற்கூறிய பொய் குருக்களைப் பற்றி இப்பாடல் தொடருகிறது. அத்தைய குருக்கள் மக்களிடம் அவரது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பறிக்க முனைவான். மக்களுடன் சண்டைபிடித்து அவற்றைப் பெறுவான். மக்களிடம் தானமாக பல பொருட்களை- பாதணிகள், ஆடுமாடுகள், பெறுவான். அவர்களுக்கு பெரும் தொல்லை தந்தபிறகு அவர்களுக்கு ஐந்தெழுத்தைக் கூறுவான். பெண்களுக்காக சீலை, ஆபரணங்கள் கேட்பான். அவற்றைக் கொண்டு வந்தவர்க்கு பெரிதாக அறிவுரை கூறுவான். வேதம் வேதாந்தம் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக உபன்யாசம் செய்வான். இந்தக் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

உரை சொல்வான் பொருள் வாங்கிப் போக மட்டும்
உத்தமனே மனை விடுத்தால் மனதுள் வையான்
கரைசொல்வான் பின் ஒருக்கால் வந்தானானால்
காதலைந்து எழுத்துக்கோ நிலைதான் என்பான்
இரைதேடும் பக்ஷியைப் போல் இவ்வண்ணம் தான்
இறந்திறந்து இவன் மாண்டான் சீஷன் கூட
பரையேது சிவம் ஏது என்பான் பேயன்
பஞ்செழுத்தைக் காட்டி அவன் பலுக்குவானே 288.  

மேலே கூறிய பொய் குருக்கள் இவ்விதம் பொருள் பெறவே பல உபநியாசங்களையும் நிகழ்த்தி தனது நிலையை உயர்த்திக்கொள்ளவே முயல்வர். இரைதேடி அலையும் பறவையைப் போல எப்போதும் தனது நிலையில் முன்னேற்றம் என்ற குறியையே விடாமல் பற்றிக்கொண்டும் தானும் இறப்பர், தனது சீடரையும் இந்த முடிவை நோக்கியே அழைத்துச் செல்வார். இந்த பேய்ப் பிறவிகள் பரை என்றால் என்ன சிவம் என்றால் என்ன என்று கேட்பவர்களாக ஐந்தெழுத்து மந்திரத்தைக் காட்டி பிறரை ஏய்த்து வாழ்வர்.

பலுக்கினதால் என்ன பயன் அடிதான் முன்னே
பத்தினதும் லாபம் ஓர் லாபம் கேளு
கிலுக்கிமிகத் திரியாமல் காலந்தோறும்
கிரியையிலே நில்லென்றான் இதுவே லாபம்
குலுக்கி நீ திரியாதே அதனுள் தானே
குருமொழிதான்போகுதென்று மலைத்திடாதே
வலுத்து நீ கிரியை விட்டு யோகம் பாரு
வசப்பட்டால் ஞானத்தில் மாட்டும் தானே 289.  

மேலே கூறியபடி குலுக்கித் திரிவதால் எவ்வித பயனுமில்லை என்றும் அதனால் பெறக்கூடிய ஒரே பயன் அடி மட்டுமே என்கிறார் அகத்தியர். பொய்க்குருக்கள் மக்களை கிரியைகளை மட்டுமே செய்து கொண்டிருக்குமாறு கூறுவார். ஏனெனில் அதனால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் ஒருவர் கிரியையுடன் நின்றுவிடக் கூடாது என்கிறார் அகத்தியர். ஒருவர் கிரியையை அடுத்து யோகத்தை மேற்கொள்ளவேண்டும். அப்போது ஞானம் தானாக ஏற்படும்.

மாட்டுவான் உலக குரு மயக்கம் செய்து
மாளமட்டும் கிரியையிலே மாளச் சொல்வான்
காட்டுவான் அந்த மொழி வேதச் சொல்லில்
கண்டு நீ மகிழாதே குருவைத் தேடு
சூட்டுவார் ஞானகுரு வந்தாரானால்
சொல்லுவார் கிரியையெல்லாம் தள்ளச் சொல்லி
பாட்டிலே இவர் அனந்தம் பாட்டுச் சொல்வார்
பசுந்த மண்ணின் தண்ணீரின் பயன் சொல்வாரே 290.  

உலக குரு பசு பதி பாசம் என்பதைப் பற்றி ஒன்றும் அறிய மாட்டார். அவர் உலக மக்களை கிரியையை மட்டும் சாகும்வரை செய்துகொண்டிருக்குமாறு கூறுவார். தனது வார்த்தைகளுக்கு வலுவேற்ற அவர் வேதவாக்கியன்களைக் காட்டுவார். அந்த வார்த்தைகளைப் பார்த்து மகிழ வேண்டாம், சரியான குருவைத் தேடு என்று அகத்தியர் புலத்தியரை/நம்மை எச்சரிக்கிறார். தேடலுக்குப் பிறகு தகுந்த ஞான குரு வாய்த்தால் அவர் கிரியையைத் தள்ளிவிட்டு யோகத்துக்குச் செல்லுமாறு கூறி பல பாடல்களைப் பாடுவார் என்கிறார் அகத்தியர். இவ்விதத்தில் அகத்தியர் தான் ஒரு ஞானகுரு என்று நமக்குக் குறிப்பால் உணர்த்துகிறாரோ என்று தோன்றுகிறது! அந்த ஞான குரு பசும் மண் தண்ணீர் ஆகியவற்றைப் பற்றிய உண்மையைக் கூறுவார் என்கிறார் அகத்தியர். தண்ணீர் என்பது ஆணின் விந்துவையும் மண் என்பது அந்த விந்து வளரும் இடமான கருப்பையையும் குறிக்கும் என்று நாம் முன்னமே பார்த்தோம்.

வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே. - அகத்தியர் பாடல் 11

கொங்கணர் சித்தர் கூறும் பொய் குரு


பூணராய்ப் பூண்பார்கள் மூலத்துள்ளே
பெண்ணாசை பொன்னாசை மண்ணினாசை
ஆணராய்க் காமியத்தைச் சுழன்று நின்றே
யாச்சரியம் வேதாந்த மனைத்தும் பார்ப்பார்
காணராய்க் கண்டுவிட்டோம் ஞானமென்பார்
கழுதைகள்தான் மெத்தவுண்டு கண்டு கொள்ளே. 
 

சட்டை முனியார் கூறும் பொய் குருக்கள்


உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே
மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்
மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?
கூறான விந்துவிடக் கோப மோகங்
குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே

பதஞ்சலியார் கூறும் பொய் குரு


கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே

கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேன தொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே

தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே

காகபுஜண்டர் கூறும் பொய் குரு


பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவிபணம்
பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !

கருவூரார் சித்தர் கூறும் பொய் குரு


புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவுங் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோ மென்றே ;
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமான மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே.
பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார் :

ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்ப பேசு வானே.

பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப் பேசிப்
பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார்
நிர்மூட ரனேகவித சாலங் கற்றே

ஆச்சென்றா லதனாலே வருவ தேது ?
ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும் :
மோசமது போகாதே முக்கால் பாரே ! 
 

 பாம்பாட்டி சித்தர் கூறும் பொய் குரு


பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே !

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே :
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே !
கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் ;
கூத்தாடிக்கூத் தாடியே நீ ஆடு பாம்பே

வள்ளுவர்கூறும் போலித் துறவிகள்

அக்காலத்தில் தவம் செய்யும் துறவிகளில் சிலர், தலைமயிரை நீளமாக வளர்த்துச் சடையாகப் பின்னி, முடியாகக் கொண்டிருந்தனர். சிலர் தலை மயிரைப் போக்கி மொட்டையாக இருந்தனர். இத்தகைய புற வேஷம் கொண்டு வாழ்ந்த துறவிகளுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருந்தது. மன்னனும், வலிமையும் செல்வாக்கும் பெற்றிருந்த அவர்களைக் கண்டு அஞ்சினான். பல பேரரசுகளின் வீழ்ச்சிக்குத் துறவிகளே காரணமாக இருந்தனர். வள்ளுவர் இத்தகையப் போலித் துறவறத்தை, போலித் துறவிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்.

உலகில் உள்ளோர், பழித்துச் சொல்லக் கூடிய தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே தவம் செய்யும் துறவிகளும், உயர்ந்தோரும் செய்யும் செயல். இதை விட்டு விட்டு, வீணாகச் சடை வளர்த்தலும், மொட்டை அடித்தலும் ஆகிய புறச் சடங்குகள் எதற்கு? என்று வினவுகிறார் வள்ளுவர்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (குறள் எண்: 280)

 (மழித்தல் = மொட்டையடித்தல்; நீட்டல் = முடியை நீளமாக வளர்ப்பது)

உள்ளம் பக்குவப்படாத வரையில், பிறருக்குத் தீங்கு செய்வது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வரையில், புற வேஷங்கள் எவையும் பயன்படா என்கிறார் வள்ளுவர்.

இன்றைக்கும், அறிவியலில் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்திலும், புறவேஷதாரர்கள் சமயம் சார்ந்த துறவிகள் போன்று பொய்க்கோலம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர். புறத்திலே மாண்பு கொண்ட தோற்றமும், அகத்திலே மாசு கொண்ட எண்ணமும் உடைய இவர்களைப் போன்றோர் வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தனர். இப்போலித்துறவிகளை அடையாளம் காட்டவே, வள்ளுவர், மேற்குறிப்பிட்ட கருத்துகளைக் கூறினார்.  
 

அறநெறிச்சாரம் கூறும் பொய் குருக்கள் 


பாசண்டி மூடம் பாடல் - 63 
 
தோல்காவி சீரைத் துணிகீழ் விழஉடுத்தல்
கோல்காக் கரகம் குடைசெருப்பு - வேலொடு
பல்என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப்படும்.

விளக்கவுரை தோலையும், காவியாடையையும், மரவுரியையும் துணியையும், கீழே விழும்படி உடுத்திக்கொள்ளலும் தண்டையும், காவடியையும், கமண்டலத்தையும், குடையையும், செருப்பையும், வேலையும், பல்லையும் எலும்பையும் தாங்குதல் ஆகியவை புறச் சமயங்களின் அறயாமையாகப் பொய்வரால் கூறப்படும்.

பயன் அற்ற வெளிக்கோலம் பாடல் - 64

ஆவரணம் இன்றி அடுவாளும் ஆனைதேர்
மாஅரணம் இன்றி மலைவானும் - தாஇல்
கழுதை இலண்டம் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டி யார்க்கு.

விளக்கவுரை கேடயம் இல்லாது பகைவரைக் கொல்கின்ற வாளும், யானைப்படையும், தேர்ப்படையும், குதிரைப்படையும், அரணும் இல்லாமல் போர்செய்யும் வீரன் செயலும், குற்றம் இல்லாத கழுதையின் மீது ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவள் செயலும் போல் போலித் துறவியர்க்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயன் அற்றதாகும்.
 

இயேசு கூறும் போலி போதகர்கள் 

இருந்தாலும், பூர்வ காலத்தில் மக்கள் மத்தியில் போலித் தீர்க்கதரிசிகளும் வந்தார்கள், அப்படியே உங்கள் மத்தியிலும் போலிப் போதகர்கள் வருவார்கள். அழிவை ஏற்படுத்துகிற மதப்பிரிவுகளை அவர்கள் தந்திரமாக உண்டாக்குவார்கள். அதோடு, தங்களை விலைகொடுத்து வாங்கியb உரிமையாளரை ஒதுக்கிவிட்டு, சீக்கிரத்தில் தங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்வார்கள். 2 பேதுரு 2:1-2

23 ,“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன். 26 ,“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். 28 கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும். (மத்தேயு 24:23-28
 

எரேமியா கூறும் பொய் தீர்க்கதரிசி  

“‘கர்த்தர் எங்கே?’ என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை, சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை, இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுது கொண்டார்கள்.” - (எரேமியா 2:8)  

மோசஸ் கூறும் பொய் தீர்க்கதரிசி  

உபாகமம் 13 பொய்த் தீர்க்கதரிசிகள்

1 “ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான். 

2 அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான். 

3 அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார். 

4 உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்! 

5 அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான்.  

 

ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான குழப்பவாதிகள் தோன்றாதவரை மறுமைநாள் வராது, அவர்களில் ஒவ்வொரு வரும் தம்மை “அல்லாஹ்வின் ரசூல்” என்று வாதிடுவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூர்கள் : புகாரீ 3609, திர்மிதி 2144

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “தூதுத்துவம் (ரிசாலத்) நபித்துவமும் (நுபுவ்வத்) முற்றுப்பெற்றுவிட்டன. (நானே இறுதித் தூதர் ஆவேன்) எனக்குப் பின் எந்த ரசூலும் இல்லை எந்த நபியும் இல்லை” என்று கூறினார்கள். நூல் : திர்மிதி 2198

நபியே! கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனை விட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப் படாமலிருக்க தனக்கும் வஹீ வந்தது என்று கூறுபவனை விட அல்லது அல்லாஹ் இறக்கியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவனை விட அநியாயக்காரன் யார்?  குர்ஆன்: 6:93