அதிகம் நம் அனைவரும் சந்திக்கும் கேள்வி!

ஒருவர் மிக நல்லவாராகவும் அதிகம் தான தர்மங்கள் செய்பவராகவும், உதவி செய்பவராகவும், பொறுமையானவராகவும், கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுபவராகவும் இருந்தாலும் முஸ்லீம் இல்லை என்றால் நரகமா? இது என்ன மத வெறியாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கிறது.!! ஒருவரின் கைகால்கள் மிக ஆரோக்கியமாக பலமாகவும் இருக்கிறது. மூளை , இதயம், நுரைஈரல் மற்றும் சிறுநீரகம் என அனைத்தும் மிக சரியாக இயங்கும் நிலையில் உள்ளது ஆனால் உயிர் இல்லை என்றால்? உயிர் இருந்தால் அவன் மனிதன், இல்லை என்றால் அவன் பிணம். இஸ்லாம் உயிர் போன்றது. இஸ்லாம் இருந்தால் அவன் முஸ்லீம்(இறைவனுக்கு கட்டுப்பட்டவன்) இல்லை என்றால் காபிர்(இறை மறுப்பாளன்). முஸ்லீம் என்கிற பதம் அரபியாக இருப்பதால் பலருக்கு பிரச்சனையாக உள்ளது. உலகம் ஓன்று, குலம் ஒன்று, தேவன் ஒன்று, எனவே உலக மக்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி படைத்த ஓர் இறைவனின் நெறி பல ஆதாரங்களுடன் வருமேயானால் பலகோணங்களில் ஆய்ந்து அறிந்து உண்மையாக இருக்குமேயானால் அதனை பின்பற்றுவது நம் கடமையாகிறது. அந்த அடிப்படையில் "இஸ்லாம்" ஒவ்வொரு உயிர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய இறைவனின் வாழ்க்கை நெறி.

மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம்

தமிழர் நெறி 

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் (அகநானூறு 66)

கருத்துரை - (இம்மை = இவ்வுலக வாழ்க்கை; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலக வாழ்க்கை; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் =பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.- (நாலடியார் 58)

கருத்துரை - பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக் கொள்வதல்லாமல் தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும். திருவத்தவர் - சிறப்பினை உடையவர்

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (குறுந்தொகை 49)

கருத்துரை - (இம்மை = இந்த வாழ்க்கை; மறுமை = அடுத்து வரும் வாழ்க்கை; நெஞ்சுநேர்பவள் = மனம் கவர்ந்தவள்)
இந்தப் வாழ்க்கை முடிந்து அடுத்தப் வாழ்க்கையிலும் நீ தான் எனக்குக் கணவன். நான் தான் உனக்கு மனைவி
 
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. - (குறள் 459)

கருத்துரை - மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. - (நாலடி 275)

கருத்துரை - மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது. (உலோபிகள் செல்வம் பெற்றிருப்பினும் வறியரான சான்றோரளவு கூட உதவார்).

மறுமை என்றால் என்ன ?


அகநானூறு 66-இல் குறிப்பிட்டு இருப்பதுபோல் மறுமை என்பது வேறு உலகம் ஆகும் இவ்வுலகத்தில் இருப்பதாக சொல்லப்படும் மறுபிறவி அல்ல என்பதும் உறுதியாகிறது.

இஸ்லாமிய நெறி 


(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின் மறுமையில்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.  - (திருக்குர்ஆன் 11:113)

ஏன் அனைத்து நூல்களும் மறுமை பற்றி பேசுகிறது? வாசிப்பார் சிந்தைக்கே..

மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம், அதில் நெருப்பை கொண்ட நரகம் என ஒன்று உண்டு
  

சான்றுகள் 


போகர் ஏழாயிரம் - பொய் மொழி


போகர் ஏழாயிரம் என்னும் நுலில் மூன்றாம் காண்டத்தில் போகர் மக்காபுரி கண்டது எனும் உட்தலைப்பு காணப்படுகிறது. போகர் மக்காபுரி சென்று வந்து சமாதியிருந்த இடம் என்று ஓரிடம் (இன்னும்) பழனியில் பேணப்பட்டு வருகிறது. நபி(ஸல்) அவர்களை தரிசிப்பதற்காக போகர்

"எழுந்துமே புகை ரதத்தை நடத்திக்கொண்டு
ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு" (3:222)

என்ற இடத்தில் ஜெருசலேம் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் மக்காவுக்கு சென்றபோது

"வந்திட்டேன் நபி பாதம் காண வந்தேன்" ( 3:227)

என்று போகர் கூறினார்

"பட்சமுடன் கோரிக்குள் சென்றேனப்பா
நேர்த்தியாம் நவரத்ன சமாதிக்குள்ளே
நேர்மையுடன் நபியிருக்கச் சொன்னாரப்பா" ( 3:230)

அங்கே அசரீரியாகச் சில சொற்களைக் கேட்டபின்பு

"துணையாக யானுமொரு மலுங்கானேனே" (3:231)

என்று போகர் நபியின் சீடர் (முஸ்லிம்) ஆனதாகக் கூறியுள்ளார்.

மேற்கண்ட செய்தி சில வலைப்பூக்களில் காணக் கிடைக்கிறது.

Fact Check 
 
முதலில், போகர் கிமு 550 மற்றும் 300 க்கு இடையில் வாழ்ந்தார் என்று விக்கிபீடியா தகவல் தரும் நிலையில் அவர் கிபி 570-இல் பிறந்து தனது 40-ஆவது வயதில் நபி ஆகிய முகமது நபியை அவர் சந்தித்ததாக சொல்வது வரலாற்றுப் புனைவு. 

இரண்டாவது, முகமது நபி-யின் போதனையை அறிந்த ஒருவர், போகர் ஏழாயிரத்தை படித்தால் அது நூறு சதவிகிதம் முரண்படுவதை மிக எளிதாக கண்டறிய முடியும்.

மூன்றாவது, போகர் பிரபஞ்ச பயணம் செய்ததாக கூறப்படும் சம்பவங்கள் 100% பொய் ஏனென்றால் முகமது நபி அவர்கள்தான் இறைவனின் தேவதூதர்களோடு நேரடி தொடர்புடை கடைசி நபர், எனவே தேவர்களின் தொடர்பில்லாமல் பிரபஞ்சப்பயணம் செய்ய சாத்தியம் இல்லை. இவ்வாறு ஒரு நபரோ சம்பவமோ நடந்திருந்தால் நபிகளாரால் அதை செய்தி அறிவிக்கப் பட்டு இருக்கும்.

இறை அடியாரை நிந்தித்தல் *

தமிழர் சமயம் 


ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே

சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே. 

 

இஸ்லாம்

நிச்சயமாக, எவர்கள் முஃமினான (அல்லாஹ்வின் அடியார்களான) ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா (பாவ மன்னிப்பு) செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. (குர்ஆன் 85:10)

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்ஆன் 4:93)


 

தீர்க்கதரிசிகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை!


இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம்!

“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (அல்-குர்ஆன் 2:213)

“(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:48)

“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)

“இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் – என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்” (அல்-குர்ஆன் 18:56)

ஒவ்வொரு தூதரும் அவருடைய சமுதாயத்தின் மொழியிலேயே போதித்தார்கள்!

“ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 14:4)

தூதர்களின் மூலம் இறைவன் போதித்தது என்ன?

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: ‘நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்’ என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (அல்-குர்ஆன் 21:25)

இறைத் தூதர்கள் அனைவரும் ஆடவரே!

“(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) ‘நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்’ (என்று கூறுவீராக)” (அல்-குர்ஆன் 16:43)

இறைத் தூதர்கள் அனைவருமே மக்கள் சிலரால் பொய்பிக்கப்பட்டார்கள்!

“எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை” (அல்-குர்ஆன் 15:11)

“இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்” (அல்-குர்ஆன் 35:25)

இறைவனின் தூதர்களைப் பொய்பித்த முந்தைய சமுதாயங்களை இறைவன் அழித்துவிட்டான்!

“பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்” (அல்-குர்ஆன் 23:44)

“(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை – குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்” (அல்-குர்ஆன் 10:13)

எந்த சமுதாயமும் அழக்கப்படுவதற்கு முன்னர் எச்சரிக்கை செய்யும் தூதர் அனுப்பப்படாமலில்லை!

“(நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை” (அல்-குர்ஆன் 28:59)

அன்னை மேரியின் மகனாகிய இயேசு நாதர் இறைவனின் தூதர் மற்றும் அடியார் அன்றி வேறில்லை!

“மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!” (அல்-குர்ஆன் 5:75)

“அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)

இறுதி தூதர் முஹம்மது(ஸல்)!

“முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:144)

“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 46:9)

இறுதி தூதர் அனுப்பப்பட்டதன் நோக்கம்!

“(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை” (அல்-குர்ஆன் 5:99)

“இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்” (அல்-குர்ஆன் 2:151)

“(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்” (அல்-குர்ஆன் 2:119)

முஹம்மது நபி (ஸல்) இறுதி தூதராவார்!

“முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்” (அல்-குர்ஆன் 33:40)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முந்தைய தீர்க்கதரிசிகளை உண்மைப்படுத்துகிறார்!

“அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்” (அல்-குர்ஆன் 37:37)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள்!

“(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு” (அல்-குர்ஆன் 6:42)

“உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன” (அல்-குர்ஆன் 6:34)

அனைத்து தூதர்களும் மனிதர்களேயன்றி வேறில்லை!

“(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம்” (அல்-குர்ஆன் 12:109)

“(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது” (அல்-குர்ஆன் 13:38)

“(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்” (அல்-குர்ஆன் 25:20)

முஹம்மது நபி (ஸல்) உலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய மனித குலம் முழுமைக்குமான இறுதி தூதராவார்கள்!

“இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 34:28

“(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” (அல்-குர்ஆன் 62:3)

முந்தைய தீர்க்கதரிசிகள் பொய்ப்பிக்கப்பட்டதைப் போன்றே இறுதி தூதரையும் பொய்ப்பிக்கிறார்கள்!

“(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)” (அல்-குர்ஆன் 13:32)

“இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது” (அல்-குர்ஆன் 21:41)

வேதமுடையவர்கள் மறைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை இறுதி தூதர் விளக்கி காட்டுகிறார்: –

“வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது” (அல்-குர்ஆன் 5:15)

முந்தைய வேதங்களிலும் இறுதி தூதரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது!

“எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்” (அல்-குர்ஆன் 7:157)

முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய அனைத்து தீர்க்க தரிசிகளின் மீதும் நம்பிக்கைக் கொள்கிறார்கள்!

“(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: ‘நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்’ என்று கூறுகிறார்கள்” (அல்-குர்ஆன் 2:285)

Ref : http://suvanathendral.com/portal/?p=467