தமிழர் சமயம்
மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே. (திருமந்திரம் 31)
பொருள்: உள்ளத்தில் இசையானான்! தேவர்கள் பூவுலக வாசிகளுக்கு மனித வடிவிலும், புவர் லோக வாசிகளுக்கு ஒளிவடிவிலும், சுவர்லோக வாசி களுக்கு தேவவடிவிலும், சித்திகளை விரும்பியவர்க்கு சித்தராகவும், நிறைவு பெற்ற மனத்தை உடையவர்க்கு நாத மாகவும் காட்சியளிக்கிறான். அத்தகைய சிவனை அகக் கண்ணில் அறிவாக எண்ணி அன்பு பூண்டிருக்க வேண்டும்.
இஸ்லாம்
ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது மிக வெண்மையான ஆடை அணிந்த கடும் கறுத்த நிறமுடைய முடி நிறைந்த ஒரு மனிதர் வந்தார். அவரிடத்தில் பயணத்தின் அடையாளம் தென்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்ததுமில்லை. அவர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தனது முழங்கால்களை நபி(ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் இணைத்து தனது இரு உள்ளங்கைகளை தனது இரு தொடைகளின் மேல் வைத்தார். (பிறகு) நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் மற்றும் மறுமை நாள் பற்றியும் அதன் அடையாளங்கள் பற்றியும் கேட்டார். நபி (ஸல்) அவர்களும் விளக்கப்படுத்தினார்கள். பிறகு அவர் போய் விட்டார். பிறகு நபி(ஸல்) அவர்கள் உமரே! இப்போது வந்து கேள்வி கேட்டவரை அறிவீரா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிக அறிந்தவர்கள் எனக் கூறினேன். "நிச்சயமாக அவர்தான் ஜிப்ரீல். உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு உங்களிடம் வந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்). அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப்(ரலி) (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 1)
கிறிஸ்தவம்
அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான். அதற்கு தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர். (ஆதியாகமம் 19:1-2)