உள்ளத்தில் உள்ளதை அறிபவன்

தமிழர் சமயம் 

விளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.
(தேவாரம் 5ஆம் திருமுறை பாடல் எண் 1280) 
 
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்;
அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை;
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

பொ-ரை: அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும், தன்னடியார் மனத்து அன்பினை அளப்பவனும். தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொளவேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன். 
 
கு-ரை: விளக்கும் - தோன்றச் செய்யும். பிறர் உள்ளத்தில் வேறுபட விளக்கும் என்க. பிறர் - தன்னிடம் அன்பு பாராட்டாதவர். தன்னடியார் மனத்து அன்பினை அளக்கும் என்க. அளக்கும் - உள்ளவாறறியும் என்னைக் குறிக்கொளவேண்டி இளக்கும் என்க. குளக்கும் - தன்னோடு தொடர்பு கொள்ளும். குளக்கும் என்றதைக் குழக்கும் என்பதன் போலியாகக் கொண்டு என்னை வசீகரிக்கும் என்றலும் ஒன்று. 
 

இஸ்லாம்


வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். 4:126

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். 50:16

2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

3:29. (நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”

6:3. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.58:7

அல்லாஹ் மனிதன் தன் மனதிற்குள் எண்ணுவதையும், நாம் மட்டுமே அறிவோம் என்று நினைத்து இரகசியமாக பேசிக் கொள்வதையும், எங்கிருந்தாலும் அனைத்தையும், உள்ளும், புறமும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். 
 

கிறிஸ்தவம் / யூதம் 


தயவு செய்து கவனியும். நீர் உமக்குரிய இடமாகிய பரலோகத்தில் இருந்தாலும் கவனியும். அவர்களை மன்னித்து உதவிசெய்யும். உமக்கு மட்டுமே மனிதர்கள் உண்மையாக நினைப்பது தெரியும். எனவே, ஒவ்வொருவரையும் அவரவர் செய்கிறபடி நடத்தும். (1 இராஜாக்கள் 8:39)

“என் மகனே, சாலொமோனே, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு இருதயத்தோடும் விருப்பமுள்ள மனத்தோடும் அவருக்குச் சேவை செய்; ஏனென்றால், கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, எண்ணங்களின் ஒவ்வொரு நோக்கத்தையும் புரிந்துகொள்கிறார். நீங்கள் அவரைத் தேடினால், அவர் உங்களைக் கண்டுபிடிக்க அனுமதிப்பார்; ஆனால் நீங்கள் அவரைக் கைவிட்டால், அவர் உங்களை என்றென்றும் நிராகரிப்பார். (1 நாளாகமம் 28:9)

ஆனால் கர்த்தர் சாமுவேலை நோக்கி, “அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே, ஏனென்றால் நான் அவனை நிராகரித்தேன்; ஏனென்றால், கடவுள் மனிதனைப் பார்ப்பது போல் பார்க்கவில்லை, ஏனென்றால் மனிதன் வெளிப்புற தோற்றத்தைப் பார்க்கிறான், ஆனால் கர்த்தர் இதயத்தைப் பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7)

கர்த்தாவே , என்னைச் சோதித்து , என்னைச் சோதித்துப்பார்; என் மனதையும் இதயத்தையும் சோதித்து பார். (சங்கீதம் 26:2)

ஆண்டவரே, என் ஆசையெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் பெருமூச்சும் உன்னிடமிருந்து மறைக்கப்படவில்லை. (சங்கீதம் 38:9)

கடவுள் இதைக் கண்டு பிடிக்க மாட்டாரா? ஏனெனில் அவர் இதயத்தின் இரகசியங்களை அறிந்தவர். (சங்கீதம் 44:21)

நான் உட்காருவதும் எழுவதும் உங்களுக்குத் தெரியும்; தூரத்திலிருந்து என் எண்ணத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் என் பாதையையும் என் படுத்திருப்பதையும் ஆராய்ந்து பார்க்கிறீர்கள், மேலும் என் வழிகள் அனைத்தையும் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். என் நாவில் ஒரு வார்த்தை வருவதற்கு முன்பே, இதோ, ஆண்டவரே , நீங்கள் அனைத்தையும் அறிவீர்கள். (சங்கீதம் 139:2-23)


தன்னை விட அதிகமாக இறைவனை நேசித்தல்

தமிழர் சமயம் 


என்னில் யாரும் எனக்கினியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்
கென்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே

பொருள் நம் எல்லோருக்குமே மிகவும் பிடித்த நபர் முதலில் நாம் தான். நம்மை விட நமக்கு இனியவர் யாரும் இல்லை. என்னை விட எனக்கு இனிமையானவன் ஒருவன் இருக்கின்றான். அவன் இன்னம்பர் ஈசனே
 

இஸ்லாம் 


 “உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்” என்று கூறுவீராக! (அல்குர் ஆன்: 9 : 24)

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31) 

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அளைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி). நூல்: புகாரி 15)

அல்லாஹ்வே! உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பாளர்: முஆத் பின் ஜபல் (ரலி), நூல்: திர்மிதீ )

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ, தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள். அறி: அனஸ் பின் மாலிக் (ரலி), ( நூல்: புகாரி-6171 )

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை) 1.  அல்லாஹ்வை நம்புதல், 2. அல்லாஹ்வை நேசித்தல், 3.இணை வைப்பிற்குத் திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக இருத்தல். (நூல்: அஹ்மத்)

கிறிஸ்தவம் / யூதம் 


உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்,  உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை (மாற்கு 12:30) (Deut 6:5)

என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. (மத்தேயு 10:37)

யூதர்களின் பூர்வீகம்?

ஆப்ரஹாம் மெசபட்டோமியாவை சேர்ந்தவர். அங்கு அவருடைய ஊர் கஸ்திம் (Ur Kasdim) ஆகும். அவர் பின்னாளில் கானான் தேசத்துக்கு குடி பெயர்ந்தார். இதில் உள்ள ஊர் எனும் சொல் தமிழ் சொல்லா என்று கேட்டால் இருக்கலாம். காரணம் 1) சிந்துசமவெளி எழுத்துக்கள் தமிழை ஒட்டி இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. 2) தமிழுக்கும் எபிரேயத்துக்கும் உள்ள ஒற்றுமையைகளை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார் சொல்லியல் அறிஞர் M.S. விக்டர் அவர்கள்.  

இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்ட ஜேக்கப் கானானிலிருந்து லெபனானுக்கு குடி பெயர்ந்தார்.

அவர் கடைசி காலத்தில் அவரது தந்தை வாழ்ந்த ஊரான கானானின் உள்ள பெத்தேல் க்கு மீண்டும் வந்து வாழ்ந்து இறந்தார். ஆதியாகமம் 35

எனவே ஆப்ரஹாமியின் பூர்வீகமும் பாலத்தீன் அல்ல, ஜேக்கோப்பும் தனது இளமை காலத்தில் வாழ்ந்தது பாலத்தீனம் அல்ல.

இந்த யூதர்கள் ஜேக்கப்-இன் சந்ததியான 12 கோத்திரத்தில் ஒரே ஒரு கோத்திரத்தினர் ஆவர். எனவே இவர்கள் கொலை செய்வது யாரை? மீதி 11 கோத்திரத்தினர் எங்கே சென்றனர்?

அன்று அங்கு வாழ்ந்தவர்கள் தான் இன்று உள்ள பாலஸ்தீனியர்கள் ஆவர் அல்லது இஸ்ஹாக்கின் சந்ததியினர் ஆவர் அலல்து மீதி உள்ள 11 கோத்திரத்தினர் ஆவர் அல்லது இதுவெல்லாம் கலந்த மக்கள் ஆவர். இப்போ யூதர்களும் எனும் ஒரே ஒரு கோத்திரத்தினர் மட்டும் எங்கே போவார்கள்? சரி வந்து வாழ்ந்துவிட்டு போகட்டும் ஆனால், பூர்வகுடிகளை விரட்டுவதும் பட்டினி போடுவதும், கொலை செய்வதும் என்ன நியாயம்?  

கடவுள் பேரன்புடையவன், மன்னிப்பபவன், கருணை உடையவன் என்பதால் இது இறைவனின் தவறு அல்ல, எனில் தவறு யார் மீது உள்ளது?

சிறிதளவேனும் தானம் செய்க *

தமிழர் சமயம் 

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். (நாலடியார் 4)

பொருள்: நாள்தோறும் அரிசியின் உமி அளவாவது நம்மால் கொடுக்கக் கூடிய பொருட்களை இரவலர்க்குக் கொடுத்து உண்ண வேண்டும். இல்லையேல் கடல் சூழ்ந்த இவ்வுலகில், இரவலர் நம்மைப் ‘பிறர்க்கு உதவாதவர்கள்’ என்று இகழ்வர்

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும். (நாலடியார் 9)

பொருள்: நம்மிடம் இருப்பது மிகவும் சிறிது என்று கருதாமலும், இல்லை என்று மறுத்து விடாமலும் எப்போதும் அறத்தைச் செய்ய வேண்டும். வாயில்கள் தோறும் இரக்கும் தவசியின் உண்கலம் போல புண்ணியம் மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும்.

இஸ்லாம் 

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தானம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1417 அதீ இப்னு ஹாத்திம் ரலி)

கிறிஸ்தவம் / யூதம் 

 "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின்படியே அவனவன் தன் இயன்றவரைக் கொடுக்கவேண்டும்." — உபாகமம் 16:17

அரியும் சிவனும் ஒன்னு

"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." இது இடம் பெற்ற நூலின் பெயர் என்ன?

இதற்கு நெருக்கமான பொருள் கொண்ட பாடல்…

அரியுமாகி அய்யனுமாகி அண்டம் எங்கும் ஒன்று அதாய்ப்
பெரியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவது என்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கு அங்கும் எங்கும் ஒன்று அதே - சிவவாக்கியம் 224

பொ-ரை: தானாக அரியுமாகி சிவனுமாகி இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்கி அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே அல்லவா?. ஒன்றை இரண்டாக்கி விரித்து வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! அறிவோடு பாருங்கள் இங்கும், அங்கும், எங்குமே தெய்வம் ஒன்றே!

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. - தேவாரம் 67

பொ-ரை: ஒளிவடிவினனாய்,உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய், அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய், பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய், மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.

அரியும் சிவனும் ஒன்று. ஆனால் திருமாலும் அரியும் வேறு வேறு.