தானம்

இன்று நமது மக்களிடம் குறைந்து போன விடயங்களில் மிக முக்கியமான ஒன்று தானம். அதற்கான காரணங்களாவன:
  1. தேவையை பெருக்கி கொண்டது - ஒன்றுக்கு பல செருப்புகள், ஆடைகள், கைக்கடிகாரம், கைபேசி என அனைத்தையும் வாங்கி குவிப்பது 
  2. தேவைக்கு அதிகமாக உண்ணுதல் - அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் - அதனால் ஏற்படும் மருத்துவ செலவுகள் 
  3. ஆடம்பர செலவுகள் - திருமணம் உள்ளிட்டட சடங்குகளுக்கும்  விழாக்களுக்கும் ஏறக்குறைய வாழ்நாள் சம்பாத்தியத்தை செலவிடும் மனோநிலை. 
  4. குறை வாழ்நாளுடைய நுகர்வு பொருட்கள் - ஒரு காலத்தில் இது எங்க தாத்தாவோடைய தாத்தா செஞ்ச கட்டில், ரொம்ப ராசியானது என்பார்கள். இப்போ வரும் கட்டிலெல்லாம் ஒரு சில வருடங்கள்தான், அதை தாண்டி நாம் வைத்து இருக்கவும் விரும்புவதில்லை அப்படி அது தயாரிக்கப்படுவதும் இல்லை. 20 வருடத்துக்கு முன் இருந்த கைபேசியை அல்லது தொலைக்காட்சியை யாராவது வைத்து உள்ளோமா? அவ்வாறு தாமான பொருளை தாயரிக்கவே முடியாதா? அல்லது இவர்கள் தயாரிக்க விரும்புவதில்லையா?
இது போல பல காரணங்களால் மக்களுக்கு தங்களது சம்பாத்தியம் போதுமானதாக இல்லை. எனவே தானம் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது ஆனால் தானம் கொடுக்க 10 ரூபாயை விட அதிகமாக நாம் எடுப்பதில்லை. சரி தானம் பற்றி உலக நெறிகள் என்ன கூறி உளள்து என்று காண்போம் வாருங்கள். 

ஒவ்வொரு நூலிலும் உள்ள ஏதாவது ஒரு உதாரணத்தை சொல்லி முடிக்க முடியும். ஆனால் தானத்தின் முக்கியத்துவம் கருதி கிடைக்கும் அனைத்துசெய்திகளும் பதியப்படுகிறது. ஏதேனும் விடுபட்டு இருந்தால் பின்னூட்டம் இடவும் .

தமிழர்சமயங்கள்:  


உடம்பும் கிளையும் பொருளும் பிறவும்
 தொடர்ந்துபின் செல்லாமை கண்டும் - அடங்கித்
 தவத்தொடு தானம் புரியாது வாழ்வார்
 அவத்தம் கழிகின்ற நாள். - -  128 

பொருள்: உடலும், சுற்றமும், செல்வமும், வீடு முதலியனவும், தம்மை உடையவன் இறந்த பின்பு அவன் பின் போகாதிருத்தலைப் பார்த்தும், மனம் சொல் உடம்புகளால் அடங்கி, தவத்தையும் தானத்தையும் செய்யாமல் வாழ்பவர்களுக்கு கழியும் நாட்கள் வீண் ஆகும்

செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
 பல்கிளையும் வாடாமல் பார்த்துண்டு - நல்லவாம்
 தானம் மறவாத தன்மையரேல் அ·து என்பார்
 வானகத்து வைப்பதுஓர் வைப்பு.  - 178

பொருள்: பொருட் செல்வத்தைப் பெற்றவர்கள் சினத்தை அகற்றி காண்பதற்கு எளியராய்ச் சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாதபடி அவர்கட்கும் பகுத்துத் தந்து தாமும் உண்டு இம்மை மறுமைப் பயன்களை அடையச் செய்கின்ற கொடை அறத்தையும் மறவாமல் செய்யும் தன்மை உடையவராயின் அச்செயல் மேல் உலகத்தில் தமக்கு உதவும்படி வைக்கின்ற சேமநிதி என்று சான்றோர் உரைப்பர்.


விரதத்தின் பெயர்

தானம் செயல்வையா வச்சம் அறம்நோக்கி
மானமில் மாதவர்க்கு நற்கு. 135

இதுவும் அது

இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே
படுமெனப் பண்புடை யார்க்கு. 136

உத்தம தானம் தரும் முறை

உத்தமற்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது
உத்தம தானம் எனல். 137

தானம் செய்ய வேண்டும்

உத்தம தானம் தயாதானம் தம்மளவில்
வைத்தொழியான் செய்க உவந்து. 138

உத்தம தானத்தின் பயன்

மனைவாழ்க்கை யால் வந்த பாவம் துடைத்தல்
மனைநீத்தார்க்கு ஈயும் கொடை. 139

இதுவும் அது

தான விடயத்தில் தடுமாற்றம் போந்துணையும்
ஈனமில் இன்பக் கடல். 140

தானத்தில் சிறந்து நின்றார்

சிரிசேன் இடபமா சேனையே பன்றி
உரைகோடல் கொண்டை உரை. 141

அதிசாரம்

பசியதன் மேல்வைத்தல் மூடல் மறைத்தல்
புரிவின்மை எஞ்சாமை கேடு. 142

ஆத்திசூடி 

தானமது விரும்பு” (56)  

பொருள்: யாசிப்பவர்களுக்கு தானம் செய்.


பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிழ்வோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
'தந்திரத்து வாழ்தும்!' என்பார். 34

பொருள்: பத்து திசையினையும் மறைத்துக் கொண்டு, அந்தரத்தில் செய்வதாக நினைத்துக் கொண்டு எச்சில் உமிழ்தலும், மலங்கழித்தலும் செய்ய வேண்டும். இந்திர பதவியே கிடைத்தாலும் வெளிப்படையாக செய்யக்கூடாது.

இனியவை நாற்பது

மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே,.
தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே,.
ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை.
மானிடவர்க்கு எல்லாம் இனிது.. (பாடல்-13).

பொருள்: தன்னுடைய மானம் கெட்டபின் உயிரை இழத்தல் மிக இனியது. கொடுப்பதைக் குறைக்காமல் அடக்கமாய் கொடுத்து வாழ்தல் இனியது. முறையான வழியில் செல்வத்தைப் பெற்றிருத்தல் இனியது.

தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது. 27 
 
பொருள்: தானம் கொடுப்பது தகைமை; ஆண்மை. தானம் கொடுப்பவனின் தகையாண்மை இனிது. மானம் போனால் வாழாமை. உடலிலுள்ள உறுப்பு ஊனத்தைப் பொருட்படுத்தாமல், உறுதிப்பாடுடைய செயல்களை, செய்யவேண்டிய முறைமையால் செய்துகொள்ளுதல் ஆகியவை இனியவை

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. 16

ஈதல் - கொடுத்தல்

பொருள்: கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;
பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது. 19

பேணி - பாதுகாத்து
ஈதல் - கொடுத்தல்

பொருள்: நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது. 22

வழங்கல் - கொடுத்தல்
ஊக்கம் - மனவெழுச்சி

பொருள்: தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.


தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது. 3

பொருள்: யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது பெரியோர்க்குக் குற்றத்துக்குள்ளாதல் அரிது; நன்னெறியி லொழுகுதல் எளிது. கெடுதலில்லாத இன்பநெறி தடுமாறிச் சென்றால்பிறப்பிற் பொருந்துதல் எளிது. அவ்வாறு பிறந்ததின்கணுண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது.


இல் இயலார் நல் அறமும், ஏனைத் துறவறமும்,
நல் இயலான் நாடி உரைக்குங்கால், நல் இயல்
தானத்தான் போகம்; தவத்தான் சுவர்க்கம் ஆம்;
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு! 34

தானம் - கொடை

பொருள்: இல்லறத்தார் செய்த அறமும், துறவறத்தார் செய்த அறமும் ஆராய்ந்து பார்த்தால், கொடையால் செல்வமும், தவத்தால் சுவர்க்கமும், ஞானத்தால் வீடும் கிடைப்பது உறுதி.


தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்
பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு. 23

பொருள்: தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.

வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண்
தக்கது அறியும் தலைமகனும், - இம் மூவர்
பொத்து இன்றிக் காழ்த்த மரம். 75

பொருள்: கொடையாளியிடம் உள்ள செல்வமும், உள்ளத்தில் நினைத்துப் பார்க்கும் நூல் புலமையும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியத்தை அறியும் தலைவனும், உறுதியான மனம் படைத்தவர்கள் ஆவார்.

அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்
தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை. 41

பொருள்: துன்பப்படுவோருக்கு ஈதலும், வறுமையான காலத்திலும் ஒழுக்கத்தோடு இருத்தலும், நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறங்களாகும்.

நல்வழி

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி - நல்வழி வெண்பா : 16

விளக்கம்: கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம்/பெருமை அது இருக்கும் நிலத்தின் தன்மையினாலும், நல்ல மனிதர்களின் குணம்/பெருமை அவர் செய்யும் தான காரியங்களினாலும், கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலமும், சிறந்த பெண்ணின் குணம் /பெருமை அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினாலும் நீ அறியலாம்

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு - நல்வழி வெண்பா : 3

விளக்கம்: நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்

நான்மணிக்கடிகை

வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்
இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,
கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,
இன்மைக் குழியுள் விரைந்து. 14

இன் சொல் - நயவுரை
கண் - கண்ணோட்டம்

விளக்கம்: செல்வ வளம் எனும் பாத்தியுள் ஈகைக் குணம் வளரும். இன்சொல் எனும் பாத்தியுள் உறவினர் கூட்டம் வளரும். கருணையற்ற கடுஞ்சொற்களைப் பேசும் பாத்தியுள் வஞ்சனை வளரும். வறுமையாகிய பாத்தியுள் இரத்தல் எனும் பயிர் விளையும். 
 
மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த
அறக் களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்;
வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களி
ஊரில் பிளிற்றிவிடும். 34

பிளிற்றுதல் - ஆரவாரித்தல்

விளக்கம்: அரசனுக்கு முன்னால் போரிடும் போது வீரர்களுக்கு வீரக்களிப்பு (மகிழ்ச்சி) உண்டாகும். வறியார்க்கு ஒன்றீவதே செல்வர்கட்கு உண்மையான ஈகைக் களிப்பாம். ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு ஏழைகட்குண்டு. கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாம் தெரிவித்து ஆரவாரம் செய்தலேயாகும்

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல்
செய்யாமை, செல்சார் உயிர்க்கு. 37

கரப்பவர் - மறைப்பவர்

விளக்கம்: இல்லையென்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பவர்களைக் கண்டால் முகம் கவிழ்வார். இரப்பவர்களுக்கு ஈகைக் குணம் உடையவரே பற்றுக் கோடாவர். பரபரப்புள்ள சேனைகளுக்கு வீரமே ஒரு பற்றுக்கோடு. ஊன் உண்ணாமல் இருத்தல் அருளொழுக்கத்தோடிருக்கும் உயிர்களுக்குப் பற்றுக்கோடாகும்.

திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்
வன்மையின் வன்பாட்டது இல். 29

இன்னாதது - இன்பம் தருவது

விளக்கம்: செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.

முதுமொழிக் காஞ்சி

2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.

விளக்கம்இரக்கம் உள்ளவன் என்பது அவன் கொடுப்பதனால் தெரியும்.

4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.

விளக்கம்: விருப்பமில்லாமல் கொடுத்தால் அது கொடைத்தன்மை ஆகாது

 9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.

விளக்கம்: வறுமையுடையவனின் ஈயாமையை யாரும் பழிக்கமாட்டார்கள்.

3. ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது.

விளக்கம்: இரக்கம் உடையவன் கேட்டவுடன் பொருள் தருவான்.

6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.

விளக்கம்: பொய்யாகச் செய்யும் உதவி கீழ்மைத் தன்மையாகும்.

8. அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.

விளக்கம்நல்ல வழியில் வராத செல்வத்தைக் கொடுப்பது தர்மமாகாது.

 5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.

விளக்கம்கொடுக்கக்கூடியதை மறைத்து வைத்தல் பெரிய கொடுமையாகும்

 பழமொழி நானூறு

64. கொடுக்கக் கொடுக்கப் பெருகும்

இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
'இறைத்தோறும் ஊறும் கிணறு'.

பொருள்: கொடையால், பொருள் மிகுதியாகும் நல்லூழ் ஒருவனுக்கு வந்து வாய்க்கும். 'இறைத்தொறும் ஊறும் கிணறு' என்பது பழமொழி. 'இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்' என்று இந்நாளில் வழங்குவதையும் நினைக்கவும்.

86. கீழ்மக்களுக்குச் செய்த உதவி

தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்(று) ஆற்றி
நிகராகிச் சென்றாகும் அல்லர் - இவர்திரை
நீத்தநீர்த் தண்சேர்ப்ப! செய்தது 'உவவாதார்க்(கு)
ஈத்ததை எல்லாம் இழவு'.

பொருள்: உதவியின் பயனை அனுபவித்தும், அதனை உதவியவரின் செயலுக்கு நன்றி காட்டாத பயனற்ற மக்களுக்கு உதவுதல் கூடாதென்பது கருத்து. 'உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு' என்பது பழமொழி.

98. இன்சொல்லின் சிறப்பு

உடுக்கை மருந்து உறையுள் உண்டியோ(டு) இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கும் ஆறு'.

பொருள்: எல்லாக் கொடையிலும், இன்சொல் வழங்குதலே சிறப்புடையது என்பது கருத்து. 'எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்குமாறு' என்பது பழமொழி. இன்சொல் வழங்காத கொடை மதிப்பிழக்கும் என்பதும் கருத்தாகும்

126. சிறந்தவர் கொடுத்தல்

நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார் - புனத்த
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
'கடிஞையில் கல்லிடுவார் இல்'.

பொருள்: கொடுப்பவர் பலராயினும், வருபவர் குறிப்பறிந்து, அவர் கேளாததன் முன்பே அவர் கருதி வந்ததைக் கொடுத்து உதவுவதே சிறந்த கொடையாகும் என்பது கருத்து. 'கடிஞையில் கல் இடுவார் இல்' என்பது பழமொழி. கடிஞையில் கல் இடுவார் மிகவும் கொடியவர் என்பதாம்.

172. கொடையும் கூலிவேலையும்

பயன்நோக்கா(து) ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!
'கூலிக்குச் செய்துண்ணு மாறு'.

பொருள்: கூலிக்கு வேலை செய்பவன் கூலியைக் கருத்தாகக் கொண்டவனே அல்லாமல், செய்யும் வேலையின் தராதரங்களையோ, அல்லது அதனால் வரும் பயனையோ நினைக்க மாட்டான். அது போன்றதே இவர் கொடையும் என்க. 'கூலிக்குச் செய்துண்ணுமாறு' என்பது பழமொழி.

180. கொடையின் அளவு

தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர என்றாற்று வாழியரோ என்றான்
தொடுத்தின்னார் என்னலோ வேண்டா 'கொடுப்பவர்
தாமறிவார் தஞ்சீர் அளவு'.

பொருள்: கொடை, கொடுப்பவர் தகுதியை ஒட்டியதே, வாங்குபவர் தகுதியை ஒட்டியதன்றென்பது கருத்து. 'கொடுப்பவர் தாமறிவார் தம் சீர் அளவு' என்பது பழமொழி. இங்கே குறித்தது பாலைக் கோதமனாரை. இயன்ற அளவு மட்டுமே கொடுத்தல் நலல்து.

15. பயன்நோக்கிச் செய்வது உதவியாகாது

சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே; - விரிபூ
விராஅம் புனலூர! வேண்(டு); 'அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்'.

பொருள்: 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; பிறவெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்ற குறளின் கருத்தினைக் கொண்டது இச்செய்யுள். ஈகையால் இம்மையிற் கைம்மாறையோ, மறுமையில் இன்பத்தையோ பெறலாம் எனக் கருதாது, அதனைக் கடமையாகக் கருதிச் செய்க என்பது கருத்து. 'அயிரை விட்டு வரால் வாங்குபவர்' என்பது பழமொழி.

20. ஈகையே செல்வத்திற்கு அழகு

முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
'அழகொடு கண்ணின் இழவு'.

பொருள்: அவள் அழகும் வடிவும், அவள் கண்ணிழந்த ஒரு காரணத்தால் தம் பெருமையற்றுப் போவது போல, அவன் செல்வமும் அவனது ஈயாத் தன்மையால் பயனற்ற செல்வமாகும் என்பது கருத்து. 'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி.

93. போர் வீரரின் முனைப்பு

தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'

பொருள்: ஓடேந்தி அமணர் சென்றால் ஈகைப் பயன் உணர்ந்தவர் தாமே வந்து மனதார இட்டுச் செல்வது போல, வீரர்கள் போரிலே தம் கடனாகவே எண்ணித் தம் க்டமையைச் செய்ய, அதனால் அரசனும் வெற்றி பெறுவான் என்பது கருத்து. 'ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு' என்பது பழமொழி.

29. வல்லவன் காரியம் கெடாது

பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், - வல்லே
வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
'குளநெடிது கொண்டது நீர்?'.

பொருள்: 'செல்வத்தின் பயனே தக்கவர்க்கு ஈதல்'. அதனால், அவர் செல்வமும் குறையாது. 'அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி.

நாலடியார்

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம். 5

ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.)

இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும். 6

ஆயுட் காலத்தின் எல்லையைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! அதைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை 'தழீம் தழீம்' என்னும் ஓசையுடன் எழும்

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு. 91

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. 92

எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகியிருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால். 93

பிறருக்குக் கொடுத்துத் தானும் அனுபவித்தாலும் பொருள் சேரும் காலத்தில் சேரும். (நம்மிடத்தில் பொருளைச் சேர்த்த) நல்வினை தொலைந்தபோது, அப் பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கிவிடும். (இந்த உண்மையை அறியாதவர்) வறுமையால் வாடி வருந்தித் தம் உதவி நாடி வந்தவா¢ன் துயரைப் போக்க மாட்டார்கள் (அறிந்தவர்கள் பிறர் துன்பம் களைவர் என்பது கருத்து).

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். 94

ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும். 95

மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறா¢டம் சென்று பிச்சை எடுக்காமல் இருத்தல், கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது. (வறுமையால் பிறருக்கு ஒன்றும் தர முடியாவிட்டாலும் பிறா¢டம் பிச்சை கேட்காமல் இருத்தல் மிக நன்று).

நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை. 96

பலரும் தம்மை விரும்புமாறு வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், ஊர் நடுவிலே மேடையால் சூழப்பட்ட பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர், தன் குடும்பம் வளமுடையதாயிருக்கும் போதும் பிறர்க்குக் கொடுத்துத் தான் உண்ணாத மாக்கள் சுடு காட்டில் உள்ள ஆண் பனை மரமே ஆவர். (ஊர் நடுவில் பழம் தரும் பெண் பனையும் இருந்து, அதைச் சுற்றிலும் திண்ணையும் இருந்தால், பலரும் வந்து பழத்தைப் பறித்துத் திண்ணையில் அமர்ந்து உண்பர். அதுபோலச் செல்வர் தம்மை அடைந்தவர்க்கு உண்ண உணவும், இருக்க இடமும் தருவர். செல்வம் பெருகியிருந்தும் யாருக்கும் கொடாதவர் அனைவராலும் வெறுக்கத்தக்க சுடுகாட்டில் உள்ள ஆண் பனை போல்வர்).

ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து. 98

வளம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரையையுடைய வேந்தே! ஏந்திய கையை மறுக்காது, எதையாவது, இன்னார் இன்னார் என ஒரு வரையறை செய்யாது, திருப்பித்தர முடியாத வறியருக்கு ஒன்று ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். மீண்டும் திருப்பிக் கொடுப்பவர்க்கு ஒன்றை ஈதல் யாவரும் அறிந்த 'கடன்' என்னும் பெயருடையது.

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும். 99

நாம் தருவது மிகவும் சிறியது என்று கருதாது, இல்லை என்று சொல்லாது, எப்போதும், பயனுடைய அறத்தை அனைவா¢டத்தும் செய்க! அது, வாயில் தோறும் பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பாத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல, மெல்ல மெல்லப் புண்ணியப் பயனைப் பூரணமாக்கும்

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல். 100

குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர். (இதனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் உணர்த்தப்பட்டது

இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள. 146

சிறந்த மாணிக்க மணிகள் முத்துக்களுடன் சேர்ந்து ஒளி வீசுவதற்கு இடமான ஒலிக்கும் கடலின் குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! நல்லோர் தொடர்பு, இன்சொல் கூறுதல், வறியார்க்கு ஒன்றைக் கொடுத்தல் மற்றும் மனத்தூய்மை என்னும் இப்படிப்பட்ட நற்குணங்கள் எல்லாம் நல்லகுடியில் பிறந்தவா¢டம் பொருந்தியிருக்கின்றன.

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற. 134

வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாது; தமக்குக் கிடைத்துப் பிறருக்குக் கொடுத்தால் அழிவதில்லை; மேலான படை வலிமையையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால், ஒருவன் தன் மக்கட்குப் 'செல்வம்' எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல!

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
ஆஅயம் கண்ணும் அரிது. 184

மழை இல்லாத கோடைக் காலத்தும், நீர் சுரக்கும் கிணறு தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போல, பொ¢யோர் வறுமையால் தளர்ந்த போதும் பிறர்க்குக் கொடுப்பர். ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்குத் தரமாட்டார்கள்.

உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை. 185

(மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போதும்) மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது (கோடைக் காலத்தில்) நீரற்றபோதும், தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில், நீர் சுரந்து உதவி செய்யும். அந்த ஆற்றைப் போல, பொ¢யோர் தமது செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து வறுமையுற்ற காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவி செய்வர். (வறுமையிலும் பிறர்க்குத் தருவது பெருமை).

திருக்குறள்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. - குறள் 221

உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - குறள் 222

உரை: பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
 
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. - குறள் 223

உரை: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. - குறள் 224

உரை: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். - குறள் 225

உரை: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. - குறள் 226

உரை: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. - குறள் 227

உரை: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். - குறள் 228

உரை: தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். - குறள் 229

உரை: பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக ள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. - குறள் 230

உரை: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

புறநானூறு

பாடல் பின்னணி: பாரியின் கொடைச் சிறப்பைக்கூற கபிலர் இயற்றிய பாடல் இது.

‘பாரி பாரி’ என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. - புறநானூறு 107

பொருளுரை: செம்மையான நாக்கை உடைய புலவர்கள் எல்லாம் அவனுடைய புகழை வாழ்த்தி அவன் ஒருவனையே ‘பாரி பாரி’ என்று புகழ்கின்றனர். இங்கே பாரி ஒருவன் மட்டும் இல்லை, மழையும் உண்டு இந்த உலகைக் காப்பதற்கு

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோ,
நிழலில் நீள் இடைத் தனி மரம் போலப், 5
பணை கெழு வேந்தரை இறந்தும்,
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே? - புறநானூறு 119

பொருளுரை: பாரி இருந்த பொழுது, கார் காலத்தில் மழை பெய்து ஓய்ந்த இனிய நேரத்தில், யானையின் முகத்தில் உள்ள புள்ளிகளைப் போல் தெறுழ்ப் பூக்கள் மலர்ந்தன. செந்நிறப் புற்றில் உள்ள ஈசல் இனிய மோருடனும் புளியுடனும் சமைக்கப்பட்டது. மென்மையான தினையுடன் செழிப்பு உடையதாய் இருந்தது பறம்பு நாடு. நிழல் இல்லாத நீண்ட வழியில் நின்று நிழலளிக்கும் தனி மரம் போல, முரசுடை வேந்தர்களை விட அதிகமாக வழங்கிய வள்ளலின் நாடு இனி அழிந்து விடுமோ?

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்,
வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்,
அது நற்கு அறிந்தனை ஆயின், 5
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே. - புறநானூறு 121

பொருளுரை: பரிசில் பெற வேண்டி பலரும் நான்கு திசைகளிலிருந்தும் உன் ஒருவனின் திசை நோக்கி வருவார்கள். மிகுதியாகக் கொடை கொடுப்பது எளிது. ஆனால் பரிசில் பெறுவோரின் தகுதி அறிவது அரிது. பெரும் வண்மையுடைய மன்னனே! அதை நன்கு அறிந்தாய் என்றால் புலவர்களின் தகுதியைக் கருதாமல் ஒரே விதமாய் யாவரையும் நடத்துவதைக் கைவிடுவாயாக.

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியில்
கேட்பின் அல்லது காண்பு அறியலையே,
காண்டல் வேண்டினை ஆயின், மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, 5
மாரியன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே. - புறநானூறு – 133

பொருளுரை: மென்மையான இயல்புடைய விறலியே! நீ ஆய் அண்டிரனின் புகழைப் பற்றிக் கேட்டிருப்பாய். ஆனால் அவனைக் கண்டிருக்க மாட்டாய். அவனைக் காண வேண்டும் என்று விரும்பினாய் ஆயின், அழகுடைய உன் நறுமணமான கூந்தலை மலை காற்றுப் புகுந்து கோதிட, தோகை விரித்த மயில் போலக் காட்சியளிக்கும்படியாகச் செய்து, மழை போல் கொடை வழங்கும் தேரை உடைய ஆய் அண்டிரனைக் காண்பதற்குச் செல்வாயாக.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன், பிறரும்
சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே. - புறநானூறு – 134

பொருளுரை: இவ்வாழ்வில் செய்யும் ஈகை மறு வாழ்வில் நன்மை சேர்க்கும் என்று எண்ணி, நன்மை செய்து அறப் பயனை விலையாகக் கொள்ளும் அறவிலை வணிகன் அல்ல ஆய் அண்டிரன். சான்றோர்கள் பலரும் பின்பற்றிய, நல்வழி என்று உலகத்தார் கருதும்படியான அந்த உயர்ந்த வழியையே தனது வழியாகக் கொண்டது அவனது கொடைச் செயல்கள்.

திருமந்திரம்

ஆர்க்கும் இடுமின்; அவர்இவர் என்னன்மின்;
பார்த்து இருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்;
வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்;
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினரே (திருமந்திரம். 250)

பொருளுரை: ‘இவருக்கு இடு, அவருக்கு இடாதே,’ ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்றெல்லாம் பழைய மரபுகள் பலவாறு சொல்லும்; அவற்றையெல்லாம் போற்ற வேண்டாம். பசி என்று ஒருவர் வந்துவிட்டால் அவர் யாராக இருந்தாலும் உணவிடுங்கள்; அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டாம்.

அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றுவந்து உண்ணும் பயன் அறியாரே (திருமந்திரம். 253)

பொருளுரைபசி போக்கிக்கொள்ளும் வழியற்று நின்றார்க்கு உணவு ஊட்டுவதே அறம் என்று கற்றிருக்கிறோம். கற்ற அறிவைச் செயலுக்கும் கொண்டு வருபவரே மனிதர். கண்டு தெளிக.

இஸ்லாம்

அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம்.(குர்ஆன் 9 : 11)

அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பிலிருந்தும்) பாவத்திலிருந்து(ம்) விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (குர்ஆன் 9 : 5)

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப் பிடித்து, மார்க்க வரியையும் (ஸகாத்து) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் 2 : 277)

 அல்லாஹ் சொல்கின்றான், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத் கொடுத்து, அல்லாஹ்வை என்னையும் மறுமையையும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் மகத்தான கூலியை நான் உங்களுக்கு தருகின்றேன். (அல்குர்ஆன்4 : 162)

என்னுடைய பொருத்தத்திற்காக நீ செலவு செய்ததற்காக, இன்று நான் உன்னை பொருந்திக் கொண்டேன். உன்னை கொண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்று அல்லாஹ் சொல்லுவான். (அல்குர்ஆன்9 : 72)

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான் - அல்குர்ஆன் : 3:92

அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன் மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும், யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான் - அல்குர்ஆன் : 2:261

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அப்படிச் செய்பவனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித் துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள் - அல்குர்ஆன் : 2:264)

(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, நீங்கள் தான தருமங்கள் செய்தால் தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் கிடைக்கும் என்று வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான கொடையுடையவன்; யாவற்றையும் நன்கறிபவன். - அல்குர்ஆன் : 2:268

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதையெல்லாம்   அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். அல்குர்ஆன் : 2:271

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் - ஸஹீஹ் புகாரி : 1426

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.'அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் - ஸஹீஹ் புகாரி : 1410 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். - ஸஹீஹ் புகாரி : 1417

கிறிஸ்தவம் 

அரசர் பதிலளிப்பார், 'உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய இந்தச் சிறிய சகோதர சகோதரிகளில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்'.— மத்தேயு 25:40

ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, ​​உங்கள் வலது கை என்ன செய்கிறது என்பதை உங்கள் இடது கைக்குத் தெரியப்படுத்தாதீர்கள், அதனால் நீங்கள் கொடுப்பது இரகசியமாக இருக்கும். அப்போது, ​​மறைவில் நடப்பதைக் காணும் உன் தந்தை உனக்குப் பலன் அளிப்பார்” என்றார். - மத்தேயு 6:3-4

உன்னிடம் கெஞ்சுகிறவனுக்குக் கொடு, உன்னிடம் கடன் வாங்குபவனுக்கு மறுக்காதே. - மத்தேயு 5:42

ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, ​​உங்கள் வலது கை என்ன செய்கிறது என்பதை உங்கள் இடது கைக்குத் தெரியப் படுத்தாதீர்கள், அதனால் உங்கள் கொடுப்பது இரகசியமாக இருக்கும். அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்குப் பலன் அளிப்பார். -  மத்தேயு 6:3-4 

நான் பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள், நான் தாகமாக இருந்தீர்கள், நீங்கள் எனக்கு குடிக்கக் கொடுத்தீர்கள், நான் அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னை வரவேற்றீர்கள், நான் நிர்வாணமாக இருந்தீர்கள், நீங்கள் எனக்கு ஆடை அணிந்தீர்கள், நான் நோயுற்றிருந்தீர்கள், நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள், நான் சிறையில் இருந்தீர்கள், நீங்கள் என்னிடம் வந்தார்.' அப்பொழுது நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியாகப் பார்த்து உமக்கு உணவளித்தோம், அல்லது தாகமாகி உமக்குக் குடிக்கக் கொடுத்தோம்? நாங்கள் உங்களை எப்போது அந்நியராகக் கண்டு வரவேற்றோம், அல்லது நிர்வாணமாக உடுத்தினோம்? எப்பொழுது உன்னை நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது சிறையில் இருந்தாலோ பார்த்துவிட்டு உங்களைச் சந்தித்தோம்?' -  மத்தேயு 25:35-45

யூதம்

"உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின்படியே அவனவன் தன் இயன்றவரைக் கொடுக்கவேண்டும்." — உபாகமம் 16:17

 ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு ஒன்றும் குறையாது, ஆனால் அவர்களைக் கண்களை மூடுபவர்கள் பல சாபங்களைப் பெறுகிறார்கள். — நீதிமொழிகள் 28:27, 

ஏழைகளுக்கு இரக்கம் காட்டுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான், அவர்கள் செய்ததற்கு அவர் அவர்களுக்குப் பலன் அளிப்பார். — நீதிமொழிகள் 19:17,

தாராள மனப்பான்மையுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் உணவை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். — நீதிமொழிகள் 22:9

அவர்களுக்கு தாராளமாகக் கொடுங்கள், மனக்கசப்பு இல்லாமல் செய்யுங்கள்; இதினிமித்தம் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லா வேலைகளிலும், நீங்கள் கைவைக்கும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார் .— உபாகமம் 15:10

ஒரு நபர் இலவசமாகக் கொடுக்கிறார், இன்னும் அதிகமாகப் பெறுகிறார்; மற்றொன்று தேவையில்லாமல், ஆனால் வறுமைக்கு வருகிறது. — நீதிமொழிகள் 11:24


இறைவன் ஒருவனே என்பதை ஏற்றால் பாவம் மன்னிக்கப்படுமா?

தமிழர் சமயம் 

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். - (ஞானக்குறள் 124) 
 
கருத்து: உயிர்கள் எல்லாவற்றுக்கும் ஒரே தெய்வம் என்று ஆய்ந்து உணர்ந்த பலருக்கு அவர் முன் செய்த பாவம் அவரது கணக்கில் இருக்குமா? 

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவர் முன்பு செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் கூலியை விதிப்பான், மேலும் அவர் முன்பு செய்த ஒவ்வொரு பாவமும்  அழிக்கப்படும். அதன் பிறகு கணக்கு உண்டு; ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு வரை வெகுமதி அளிக்கப்படும். வல்லமையும் மேன்மையுமான அல்லாஹ் மன்னிக்காத வரையில் ஒவ்வொரு கெட்ட செயலும் அப்படியே பதிவு செய்யப்படும். (சுனன் அல்-நசயீ)

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்ல செயல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (குர்ஆன் 47:2)

 இஸ்லாத்தை ஏற்கும் முறைமை என்ன?

"அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" (புகாரி 3861)

கருத்து: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். 

கிறிஸ்தவம்

 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான். (அப்போஸ்தலர் 10:43)

இயேசுவின் முக்கிய போதனை என்ன? 

வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை (மாற்கு 12:28-29)

மரணத்தை எதிர்நோக்கிய வாழ்வு

தமிழர் சமயம் 

ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல். (இனியவை நாற்பது 28)

ஆற்றானை - செய்யமாட்டாதவனை
கூற்றம் - எமன்

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

இஸ்லாம் 

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்; உங்களுடைய சிற்றின்பங்களை, உங்களது அற்ப ஆசைகளை விட்டு உங்களை துண்டிக்க வைக்கக்கூடிய மரணத்தை நினைவு கூறுங்கள். வாழ்க்கையில் நெருக்கடியாக இருக்கும் போது மரணத்தை நினைவு கூர்ந்தால் அந்த வாழ்க்கை மரணத்தின் நினைவை விசாலமாக்கி விடும். ஒருவன் வசதியாக இருக்கும் போது, விசாலமான வாழ்க்கையில் இருக்கும் போது, மரணத்தை நினைத்தால் அந்த மரணம் அவனது அந்த வாழ்க்கையை நெருக்கடி ஆக்கிவிடும். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, (நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ 1211)


கிறிஸ்தவம் & யூதம் 

ஏனெனில் இந்த உலகம் நம் வீடு அல்ல; இன்னும் வரவிருக்கும் பரலோகத்தில் உள்ள எங்கள் நகரத்தை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். (1 பேதுரு 2:11).