பகுத்தறிவு என்றால் மனிதன் தனது அறிவு மற்றும் ஆற்றலை கொண்டு, எந்த ஒன்றையும் பல்வேறு கூறுகளை அடிப்படையாக கொண்டு, சரியான முறையான அணுகுமுறை மூலம் பகுத்து அறிதல் ஆகும். அதாவது கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் விளையும் அறிவு ஆகும்.
வேதம் எனும் சமய நெறி நூல்கள் என்பது மனிதனின் அனுபவத்தின் மூலம் விளைவதல்ல. மேலும் இது மனித கண்களிலிருந்து மறைந்த விடயங்கள் என்பதால் இது மறைநூல் என்றும் அறியப்படுகிறது.
இரண்டும் முற்றிலும் முரண்படுவது போல தோன்றினாலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைகள் ஆகும். ஒன்று மற்றொன்றை சார்ந்துதான் மனித வாழ்வில் பயணிக்க முடியும்.
மனித முயற்சியின் மூலம் விளையாத அறிவை (இறைவனால் வழங்கப்பட்ட வேதம்) மனித முயற்சியை கொண்டு பகுத்து அறிவது அவசியம், ஏனென்றால் பெறப்படும் அறிவு எதுவும் வாழ்வின் நெறிகளாக பயன்படுத்தப்படவே வழங்கப்படுகிறது.
வேதங்களை பகுத்தறியாத மனிதர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியாது. எதிர்ப்படும் எதையும் பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆவர்.
- ஒரு சில செய்திகளை மட்டும் அறிந்து கொண்டு, அல்லது
- ஒருசில மதத்தில் நிகழும் நிகழ்வுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, அல்லது
- அறிவியல் ஆதாரங்கள் எனும் மனிதன் ஆய்ந்து அறிந்த உலகியல் விதிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு
இறை மறுப்புக்கு செல்வோர் எவரும் இறை மறுப்பாளர்கள் மட்டுமே, பகுத்தறிவாளர்கள் அல்ல.
உதாரணமாக,
- இந்து மத மக்கள் பின்பற்றுவதில் பிரச்சனை என்றால், இந்து மத போதனையில் அந்த பிரச்சனை உண்டா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்ய துவங்கும் பொழுது இந்து மதத்துக்கு என்று தனியாக மறைநூல் கிடையாது ஏனென்றால் இந்துமதம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் உருவானது என்று அறிய வருவோம். இந்து மதம் எனபது அரசியல் காரணங்களுக்காக, தத்துவங்களில் முரண்பட்ட பல சமயங்களை வலுக்கட்டாயமாக இணைத்ததன் மூலம் உருவானது என்று ஆய்வில் கண்டறிந்தால், அவைகளை தனித்தனியே பிரிக்க முடிகிறதா என்று பார்க்கவேண்டும். அதில் உள்ள சமணம், சைவம், வைணவம், சனாதனம் உட்பட பல சமயங்களின் வரலாறு மற்றும் மறைநூல்கள் ஆகியவற்றை அறிந்து, அதை கற்று, பகுத்து அறிய வேண்டும்.
- அதே போல சமகாலத்தில் நம்முடன் வாழும் இஸ்லாமிய கிறிஸ்தவ சமயத்தை வாசிக்க வேண்டும். ஒரே உலகத்துக்கு ஒரே கடவுள்தான் என்றால் ஏன் இத்தனை சமயங்கள், ஏன் கடவுளின் பெயர் வேறுபடுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும். அவைகளின் வரையறைகள் மறைநூலின் படி வேறுபடுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
- உலக சமயங்கள் அனைத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா? அதற்கான விதிகள் எதேனும் உண்டா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
- இயற்பியலுக்கான விதியும் மெய்யியலுக்கான விதியும் வேறு படும் ஏனென்றால் இரண்டின் இயல்பும் வேறு வேறு என்று பகுத்து அறிந்து இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுளை நம்ப வேண்டும் என்றால் நான் என் கண்களால் பார்த்தல் தான் நம்புவேன் என்று கூறுவது பொருத்தமற்றது என்று உணர வேண்டும். ஏனென்றால் மெய்யியல் விதியின் இயல்பும் இயற்பியல் விதியின் இயல்பும் வெவ்வேறு தன்மைகளை உடையது ஆகும்.
- இதையெல்லாம் பகுத்து அறிந்த பிறகு கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று ஒரு முடிவுக்கு வந்து இருக்க வேண்டும்.
வேற வேலை இல்லையாப்பா என்று கேட்டால், இவைகளை செய்பவர்தான் பகுத்தறிவாளர், இல்லையேல் வெரும் நாத்திகர் மட்டுமே.
சரி, ஒருவர் வேதத்தை நம்பும் பொழுது ஒருவர் முட்டாளாக ஆகிறாரா என்று கேட்டால்…
- வேதம் என்றால் என்ன என்று பகுத்து அறியாமல்,
- எது வேதம் என்று பகுத்து அறியாமல்,
- வேதம் கூறும் அறம் என்ன என்பதை கற்று அறியாமல்,
- அதை சரியான இடத்தில் பயன்படுத்தாமல்,
வேதத்தை நம்பினால் மூட்டாள் என்ற நிலைக்குத்தான் செல்ல நேரிடும்.
சரியான வேதத்தை கண்டறிந்து, அதை ஓதி, உணர்ந்து, தானும் அடங்கி, பிறருக்கும் உரைத்தல், ஒவ்வொரு பகுத்தறிவு ஆன்மீகவாதிக்கும் அடிப்படை ஆகும்.
ஒவ்வொரு பகுத்தறிவாளரும் கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு தான் வரமுடியும். வேதத்தை நம்பும் ஒவ்வொருவரும் பகுத்து அறிந்தால் தான் முட்டாள் ஆவதை தவிர்க்க முடியும்.