நல்லோரால் நிலைக்கும் உலகு *

தமிழர் சமயம் 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 

பொருள்:  உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும்  புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்)  எல்லாருக்குமே பயனைத் தரும்.

இஸ்லாம்  

மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)

இது முஸ்லிம்களின் நன்மை, நம்பிக்கை மற்றும் பரவலின் ஒரு கட்டமாக இருக்கும். பின்னர் மற்றொரு கட்டம் வரும், அதில் விசுவாசிகளின் எண்ணிக்கை குறையும் வரை அல்லாஹ் அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் ஒரு காற்றை அனுப்பும் வரை, அந்த நேரம் வரும் மனிதர்களில் மிகவும் தீயவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். முஸ்லீம் (148)

கிறிஸ்தவம் 

நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார் (மத்தேயு 5:45)

முடிவுரை 

 நல்லோரால் தான் மழை பொழிகிறது ஆனால் அதனால் தீமை செய்வோருக்கும் சேர்த்துதான் பொழிகிறது. 

கூடா நட்பு

தமிழர் சமயம் 


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. - (மூதுரை)

பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்  கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே.

இஸ்லாம் 


குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (குர்ஆன் 74 : 45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும். 
 

கிறிஸ்தவம் 

ஏமாந்துவிடாதீர்கள்: "கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கத்தை அழிக்கிறது." - ( 1 கொரிந்தியர் 15:33 )

கோபம் கொண்ட மனிதனுடன் நட்பு கொள்ளாதே, கோபம் கொண்டவனுடன் செல்லாதே, அவனுடைய வழிகளைக் கற்று, கண்ணியில் சிக்கிக் கொள்ளாதே. ( நீதிமொழிகள் 22:24-25 )

ஞானிகளுடன் நடப்பவன் ஞானியாவான், ஆனால் மூடர்களின் தோழனோ கேடு அடைவான். (நீதிமொழிகள் 13:20 )

ஒரு முட்டாள் இருப்பை விட்டு விடுங்கள், ஏனென்றால் நீங்கள் அறிவின் வார்த்தைகளை சந்திக்கவில்லை. (நீதிமொழிகள் 14:7 )

விரயம் - வரவு எட்டணா செலவு பத்தனா

தமிழர் சமயம் 


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு நல்வழி வெண்பா : 25

விளக்கம் ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும், போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது 

இஸ்லாம் 

“இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்அன்ஆம்: 141)

“மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” (அல்அஃராஃப்: 31)

“(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (பனீ இஸ்ராயீல்: 26, 27)


கிறிஸ்தவம் 

 சில நாட்கள் கழித்து, அந்த இளைய மகன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். அங்கே அவன் மோசமான வாழ்க்கை* வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான்.  லூக்கா 15:13

பாவ புண்ணியம் பயனளிக்கும்

தமிழர் சமயம் 

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல் - (நல்வழி பாடல் 1)

விளக்கம்மனிதன் இறக்கும் போது அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…

இஸ்லாம்  

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள் எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டுகொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டுகொள்வான் (அல்குர்ஆன் 99:6-8)

கிறிஸ்தவம்  

6 கடவுள் “ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவாறு பிரதிபலிப்பார்.” 7 விடாமுயற்சியுடன் நன்மை செய்வதால் மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுபவர்களுக்கு அவர் நித்திய ஜீவனைக் கொடுப்பார். 8 ஆனால், சுயதேடும், சத்தியத்தை நிராகரித்து தீமையை பின்பற்றுகிறவர்களுக்கு கோபமும் கோபமும் இருக்கும். 9 தீமை செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும் துன்பமும் இருக்கும்: முதலில் யூதனுக்கும், பிற இனத்தவருக்கும்; 10 நன்மை செய்கிற யாவருக்கும் மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்: முதலில் யூதனுக்கும் பின்பு புறஜாதியாருக்கும். 11 ஏனெனில் கடவுள் தயவைக் காட்டுவதில்லை. 12 நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பாகப் பாவம் செய்கிற யாவரும் நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பாக அழிந்துபோவார்கள்; (ரோமர்கள் 2 கடவுளின் நீதியான தீர்ப்பு)

ஆசையே துன்பத்துக்கு காரணம் - பௌத்தத்தின் கூற்று மட்டுமல்ல

 பௌத்தம் 

ஆசை ஊற்றின் வெள்ளம் பரவுகிறது எங்கும்
மெல்லப்படரும் துயரக்கொடி வியாபிக்கிறது வெளியை
இதைக் காணும் மேனறிவு
அதன் வேர்களை வெட்டுகிறது (தம்மபதம் 340)

பொருள்: ஆசையினால் சூழப்பட்ட மனிதர்கள் வலையினில் சிக்கிய முயல் மாதிரி. அவர்கள் எப்போதும் பயத்துடன் நடுக்குறுகிறார்கள், அவர்களுக்குத் தடைகளும் துயர்களும் வந்த வண்ணம் இருக்கும். இதை அகற்ற வேண்டுமானால் ஆசையினை அகற்ற வேண்டும்.

ஆசைகள் அழிந்து அறிவின் திறன்பெற்று
எழுத்துகளின் பொருளறிந்து தொடரறிந்து
மேனறிவுப் பெற்றவர் மேன்மனிதர் (தம்மபதம் 352)

பொருள்: பௌத்தம் காட்டும் நான்கு உண்மைகள் எல்லா தானங்களையும் விஞ்சி நிற்கக் கூடியன. உண்மையின் நறுமணம் எல்லா இடங்களிலும் பரவுகிறது. உண்மையின் இன்பம் எல்ல இன்பங்களையும் விஞ்சுகிறது. அவாவை அறுத்தவர்கள் எல்லாத் துயர்களையும் வெல்கிறார்கள்.

காளைகள் வயல்களைச் சேதமாக்குகின்றன
ஆசை உயிர்களைச் சேதமாக்குகிறது
ஆசையற்றவர்க்க
பிறருக்கு உதவுதல் பெரும்பயனை அளிக்கிறது (தம்மபதம் 359) 

இந்துமதம் 

மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || கீதை - 9.12||

மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கி
மோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கி
மோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கி
விசேதஸ: | = குழம்பி
ராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போல
அஸுரீம் = அசுரர்களைப் போல
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்ரக்ருதிம் = இயற்கையில்
மோஹிநீம் = மயக்கம்  மற்றும் குழப்பம்
 ஸ்²ரிதா:  = அடைக்கலம் கொள்கிறார்கள்

ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில்  இருக்கிறார்கள்.

ஆசைகள், அந்த ஆசைகளை அடைய வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற அறிவு.... இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன்  உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள். 

தமிழர் சமயம் 

ஆசை அறுமின்கள்; ஆசை அறுமின்கள்!
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்!
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்!
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே! (திருமந்திரம், 2615)

அழுக்கை அறுங்கள்; அழுக்கை அறுங்கள். பதவிக்காக அல்ல, ஈசனோடு சும்மா ஒட்டிக்கொள்வதற்காகத்தான் என்றாலும்கூட ஆசையை விட்டுவிடுங்கள். ஆசைப்பட்டீர்கள் என்றால், ஆசைப்பட்டதை அடையவும் அடைந்த இடத்தைப் பாதுகாத்துத் தக்கவைத்துக்கொள்ளவும் படாத பாடுபட வேண்டியிருக்கும். அது மாபெரும் துன்பம். ஆசையை விட்டீர்கள் என்றால், ஏதோ ஒன்றை அடைய வேண்டுமே என்கிற துடிப்பும் அடைந்ததைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே என்கிற பொறுப்பும் இல்லாமல் விட்டு விடுதலையாகிவிட்ட பெரும் பேரின்பம்.

இஸ்லாம் 

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (குர்ஆன் 45:23

கிறிஸ்தவம் 

பிறகு ஆசை கருவுற்றவுடன் பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் முழுவதுமாக வளர்ந்தவுடன் மரணத்தைப் பிறப்பிக்கிறது. ( ஜேம்ஸ் 1:15)

எனவே துன்பத்தின் மூலம் உலக பொருட்களின் மீதான ஆசையே. எனவே அனைத்தையும் வெறுக்கவும் இந்த சமயங்கள் கூறவில்லை. மாறாக இந்த வாழ்வில் செய்யவேண்டிய நமது கடமைகளை உலக பொருட்களை கொண்டே செய்ய முடியும் ஆனால் அதில் பேரன்பு கொண்டுவிடக் கூடாது.