தூய மனிதன் உண்டா?

தமிழர் சமயம்


ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும், இல். (சிறுபஞ்சமூலம் 29)

விளக்கம்: எல்லாம் அறிந்தவனும், ஏதும் அறியாதவனும், நற்குணமே இல்லாதவனும், குற்றமில்லாதவனும், எல்லா நூல்களையும் கற்றவனும் இவ்வுலகில் இல்லை

இஸ்லாம் 

ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே. தவறு செய்பவரில் சிறந்தவர், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுகிறவர்தாம்” (இப்னுமாஜா)   

கிறிஸ்தவம் & யூதம் 

"எல்லோரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள்" (ரோமர் 3)

“ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12)

தூதர்கள் ஆண்களே

தூதர்கள் என்பவர்கள், முந்தய வேதங்களில் முன்னறிவிக்கப் பட்டவர்களாகவும், பின்வரும் வேதங்களில் உறுதி செய்யப்பட்டவர்களாகவும், மக்களுக்கு இறைவனிடமிருந்து வரும் கட்டளைகளை போதிப்பவர்களாகவும்,  ஒரு தனி வேதமோ அழல்தி ஏற்கனவே உள்ள வேதத்தில் ஒரு பகுதியாகவோ அந்த போதனைகள் இருக்கும். வேதம் பற்றிய விளக்கம் புனித நூல்கள் தலைப்பில் விரிவாக எழுதப்பட்டுளள்து. 

அவ்வாறு அனுப்பப் படும் தூதர்கள் ஆண்கள் மட்டுமே என்று சில மதங்களும், சில சமயங்கள் பெண்களும் அதில் உள்ளனர் என்றும் வாதிடுகின்றனர். பெண்களில் தூதர்கள் இல்லை என்ற உண்மையை கூறினால் ஆணாதிக்க சிந்தனையாளனை நோக்குவது போல நோக்குவது இயல்பாகிவிட்டது. அது ஒவ்வொரு ஆணின் உடல் வலிமையுடன் இன்னபிற இயல்புகளை பொறுத்து வழங்கப் பட்ட பொறுப்பு அவ்வளவுதான். இப்பொழுது உண்மையை ஆதாரங்களுடன் நோக்குவோம். 

தமிழர் சமயம் 


ஆண், ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த
மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்
நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். (சிறுபஞ்சமூலம் 27)

இயைந்த - பின்தொடர் 
கடிந்தான் - ஒழித்தவன்

பொருள்: ஆசான் என்பவன் விளக்கம் பெற வினை ஆற்றும் தேவை அற்ற ஆண்மகன் ஆவான், அவனை பின் தொடர்பவன் மாணாக்கன் ஆவான். மாணாக்கன் ஆசானை அன்பு செய்வான், கட்டுப்படுவான். மாணவர்கள் காமம், வெகுளி, மயக்கங்கள் ஆகிய மூன்றையும் விட்டுவிடுவான். இல்லையெனில் அவர்கள் ஆசிரியருக்கு நோயாவார்கள்.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)

குறிப்பு: வேத நூலுக்குஇலக்கணம் வகுத்து தரும் இப்பாடல், வேதம் முனைவனுக்கு அதாவது ஆணுக்கு தான் வழங்கப்படுமே தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று கூறவில்லை. எனவே சித்தர்கள்/ரிஷிகள்/நபிகள்/தூதர்கள் ஆண்களே. 

அவ்வையார் சில முக்கிய நூல்களை எழுதிய பெண் ஆசிரியர் என்றும், அவர் இவ்வாறு முனைவி-யாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சிலர் கூறுவார்.  
 
முதலில், பாடல் பாடுவோரெல்லாம் முனைவரல்ல, தொல்காப்பியம் மரபியல் பாடல் 60-இல் சொன்னபடி நூலை எழுதினால் மட்டுமே முனைவர்.  
 
இரண்டாவது, வரலாற்றில் அவ்வையார் ஒருவரல்ல, இருவர் என்றும், மூவர் என்றும், நால்வர் என்றும், ஆறு பேர் என்றும், எட்டு பேர் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அவ்வையார் பெண் அல்ல என்று கூறுவோரும் உண்டு. மொத்தத்தில் அவ்வை பற்றிய நேரடியான உறுதிபட கூறும் செய்திகள் ஏதுமில்லை. எனவே இவரை விதிவிலக்காக குறிப்பிட முடியாது.
 

இஸ்லாம்  

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 16:43)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 21:07)

உமக்கு முன் (பல்வேறு ஊர்களுக்கு அந்தந்த) ஊர்களைச் சேர்ந்த ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். (குர்ஆன் 12:109)

யூத கிறிஸ்தவ மதங்கள் 

கிறிஸ்தவத்திலும் யூதமதத்த்திலும் சில பெண் தூதர்கள் இருந்தததாக வாதிடுவார்கள். அவர்கள் தூதர்கள் என்ற வார்த்தையின் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடமிருந்து வரும் தூத்துச் செய்தியை மக்களுக்கு எடுத்து கூறுபவர்களாகவும், அந்த போதனைகள் ஒரு தனி வேதமாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வேதத்தின் ஒரு பகுதியாகவோ அமைந்து இருக்கும். 

யூத கிறிஸ்தவ மதத்தில்கீழே குறிப்பிடப் படுவோர்கள் பெண் தீர்க்கதரிசிகனாக அறியப்படுகிறார்கள்.

1. சாரா
2. மிரியம்
3. டெவோரா
4. ஹன்னா (ஷ்முவேலின் தாய்)
5. அவிகாயில் (அவர் தாவீது மன்னரின் மனைவியானார் )
6. ஹல்தா ( எரேமியாவின் காலத்திலிருந்து )
7. எஸ்தர்
8. மர்யம் - இயேசுவின் தாய்

ஆனால் இவர்கள் எழுதிய அல்லது இவர்கள் மூலம் வழங்கப்பட்ட உபதேசங்கள் அடங்கிய நூல்கள் ஏதும் உண்டா? "இல்லை" என்பதே பதில். இவர்கள் மதிப்பிற்க்குரிய பெண்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் இவர்கள் தூதர்கள் அல்ல என்பதே நிதர்சனம். மேலும் மோசே செய்த மற்றும் இயேசு தீர்க்கதரிசிகள் பற்றிய முன்னறிவிப்புகள் அனைத்தும் ஆண்களைப் பற்றியே. 

கீழுள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றாலும் யூத கிறிஸ்தவர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. 

“ஒரு பெண் கற்பிக்கவோ அல்லது ஆண் மீது அதிகாரம் செலுத்தவோ நான் அனுமதிக்கவில்லை; மாறாக, அவள் அமைதியாக இருக்க வேண்டும்” (1 கொரி. 14:33-35)

ஒரு பெண் தீர்க்கதரிசியாக அனுப்பப்படுவதில்லை என்பது உண்மை என்ற போதிலும் அவர் தான் கற்றதை மக்களுக்கு கற்பிக்க கூடாது என்கிற கருத்தில் யாருக்கும் உடன்பாடு இருக்க முடியாது. இஸ்லாத்தில் அன்னை ஆயிஷா நபிமொழிகளை மக்களுக்கு அறிவிப்பவராகவும், படையை வழி நடத்துபவராகவும் இருந்துள்ளார்.

மரணம்

தமிழர் சமயம்

 

அடப்பண்ணி வைத்தார்; அடிசிலை உண்டார்;

மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார்;

இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்;

கிடக்கப் படுத்தார்; கிடந்து ஒழிந்தாரே! (திருமந்திரம் 148)

 
பொருள்: அருமையாய்ச் சமைத்து வைத்துவிட்டுச் சாப்பிடக் கூப்பிட்டாள் மனைவி. வந்தவர் உண்டார். மனைவியைக் கமுக்கமாகக் கொஞ்சினார். ‘இடப் பக்கம் லேசாக வலிக்கிறது’ என்றார். ‘வாய்வுப் பிடிப்பாக இருக்கும்; சற்றுப் படுத்துக்கொள்ளுங்கள்’ என்றாள் மனைவி. படுத்தார் போய்விட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதுதான் கதி. 
 
நாட்டுக்கு நாயகன்; நம்ஊர்த் தலைமகன்;
காட்டுச் சிவிகைஒன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. (திருமந்திரம் 153)
 
பொருள்: இந்த நாட்டுக்கே நாயகன்; நம் ஊரின் தலைமகன்; காலால் நடந்து அறியாதவன். ஏறினால் பல்லக்கு; இறங்கினால் அரசுக் கட்டில். புடை சூழ வருவதற்குப் படை உண்டு. வருகை அறிவிக்க முன்னே முரசொலிக்கும். போகும் வழியெல்லாம் பூச்சொரிந்து வரவேற்பார்கள். முன்னறிவிப்பில்லாமல் எங்கேயும் போகாத அவனுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சாவு வந்தது. கிளம்பினான். நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை: இப்போதும் புடைசூழ ஆட்கள் வந்தார்கள்; போகும் வழியெல்லாம் பூச்சொரிந்தார்கள். மாற்றம் சிலவற்றில்தான்: பல்லக்கு, பாடை ஆகிவிட்டது; முரசு, பறை ஆகிவிட்டது. அவ்வளவே.

பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்;
கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து,
தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;-
வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. (சிறுபஞ்ச மூலம் 24
 
கழிமின் - விடுங்கள்

விளக்கம்: நன்மைக் குணமுடையவர்களைச் சேரவேண்டும். பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தீக்குணத்தாருடன் நட்பு விடவேண்டும். தீய சொற்களைச் சொல்லாதிருக்க வேண்டும். எமன் நிச்சயம் வருவான். இஃது உலக வழக்கமாகும்.


இஸ்லாம் 

நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். (குர்ஆன் 62 : 8

நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (குர்ஆன் 4 : 78) 

மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்து விடும் பட்சத்தில் அவனை நோக்கி நீ தப்பிவிட கருதியது இதுதான் என்று கூறப்படும். (குர்ஆன் : 50:19) 

கிறிஸ்தவம் & யூதம் 

உயிருள்ளவர்கள் தாங்கள் இறப்பதை அறிவர்; ஆனால் இறந்தவர்களுக்கு எதுவும் தெரியாது, மேலும் அவர்களுக்கு ஒரு வெகுமதியும் இல்லை, ஏனென்றால் அவர்களின் நினைவகம் மறந்துவிட்டது.  (பிரசங்கி 9:5)

என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.. (சங்கீதம் 73:26)

உங்கள் தந்தையர், அவர்கள் எங்கே? மேலும் தீர்க்கதரிசிகள், அவர்கள் என்றென்றும் வாழ்கிறார்களா? (சகரியா 1:5)

அவன் தாயின் வயிற்றிலிருந்து நிர்வாணமாக வந்ததைப் போல, அவன் வந்தபடியே திரும்புவான். அவர் தனது உழைப்பின் பலனில் இருந்து எதையும் கையில் எடுத்துச் செல்ல மாட்டார். (பிரசங்கி 5:15)

எந்த மனிதனுக்கும் காற்றினால் காற்றை அடக்குவதற்கு அதிகாரம் இல்லை, அல்லது மரண நாளின் மீது அதிகாரம் இல்லை; மேலும் போரின் போது எந்த வெளியேற்றமும் இல்லை, அதைச் செய்பவர்களை தீமை விடுவிக்காது. (பிரசங்கி 8:8)

விபச்சாரியை மணத்தல் கூடாது

தமிழர் சமயம் 


வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்;
புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல்
கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்;
கொடும் புலி கொட்கும் வழி. (சிறுபஞ்ச மூலம் 78)

கொட்கும் - சுழன்று திரிகின்ற
நள்ளார் - நட்புக் கொள்ளார்

விளக்கம்: அறிஞர்கள் பொதுப் பெண்டிரை மணம் கொள்ள மாட்டார். புற்றின் மேல் ஏறமாட்டார். தமக்கு நிகரில்லாதவரோடு நட்பு கொள்ளார். போர்த் தொழிலில் வல்ல அரசனின் மலைபோன்ற உருவத்தினையுடைய கடுமையான குணம் கொண்ட யானையை விட்ட இடத்தில் செல்ல மாட்டார். கொடும்புலி செல்லும் வழியில் செல்ல மாட்டார். 
 

இஸ்லாம் 

ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது. (குர்ஆன் 24:3)

 உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கின்றான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்கவேண்டும். விபச்சாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகின்றாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (குர்ஆன் 4:25) 

கிறிஸ்தவம் 

 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது (லேவியராகமம் 21:7)

நல்ல மனைவி

தமிழர் சமயம் 


கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;
நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்
ஆகவே செய்யின், அமிர்து. (சிறுபஞ்ச மூலம் 2
 
விளக்கம்கற்புடைய பெண் அவன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள், கற்றுப் பொறி களைந்தையும் அடக்கியவன் உலகத்திற்கு அமிர்தம் போன்றவன், நற்செய்கைகளையுடைய நாடுகள் அந்நாட்டிற்கு நன்மையைச் செய்யும் வேந்தனுக்கு அமிர்தம் போன்றது, அவனுக்கு நன்மை செய்யும் சேவகன் அவனுக்கு அமிர்தமாகும். 
 

இஸ்லாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவிப்பவர்: உமர் (ரலீ), (நூல்: அபூதாவூத் 1412
 

கிறிஸ்தவம் 


நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள் (நீதிமொழிகள் 12:4)

அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான். “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான். (நீதிமொழிகள் 31:28-29)

ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள். (நீதிமொழிகள் 31:30)

ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள். (நீதிமொழிகள் 14:1

கருணையும் ஒழுக்கமும் உள்ள பெண் மதிக்கப்படுவாள். வல்லமையுள்ளவர்களோ செல்வத்தை மட்டுமே பெறுவார்கள். (நீதிமொழிகள் 11:16)