விபச்சாரியை மணத்தல் கூடாது

தமிழர் சமயம் 


வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்;
புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல்
கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்;
கொடும் புலி கொட்கும் வழி. (சிறுபஞ்ச மூலம் 78)

கொட்கும் - சுழன்று திரிகின்ற
நள்ளார் - நட்புக் கொள்ளார்

விளக்கம்: அறிஞர்கள் பொதுப் பெண்டிரை மணம் கொள்ள மாட்டார். புற்றின் மேல் ஏறமாட்டார். தமக்கு நிகரில்லாதவரோடு நட்பு கொள்ளார். போர்த் தொழிலில் வல்ல அரசனின் மலைபோன்ற உருவத்தினையுடைய கடுமையான குணம் கொண்ட யானையை விட்ட இடத்தில் செல்ல மாட்டார். கொடும்புலி செல்லும் வழியில் செல்ல மாட்டார். 
 

இஸ்லாம் 

ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது. (குர்ஆன் 24:3)

 உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கின்றான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்கவேண்டும். விபச்சாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகின்றாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (குர்ஆன் 4:25) 

கிறிஸ்தவம் 

 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது (லேவியராகமம் 21:7)

நல்ல மனைவி

தமிழர் சமயம் 


கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;
நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்
ஆகவே செய்யின், அமிர்து. (சிறுபஞ்ச மூலம் 2
 
விளக்கம்கற்புடைய பெண் அவன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள், கற்றுப் பொறி களைந்தையும் அடக்கியவன் உலகத்திற்கு அமிர்தம் போன்றவன், நற்செய்கைகளையுடைய நாடுகள் அந்நாட்டிற்கு நன்மையைச் செய்யும் வேந்தனுக்கு அமிர்தம் போன்றது, அவனுக்கு நன்மை செய்யும் சேவகன் அவனுக்கு அமிர்தமாகும். 
 

இஸ்லாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவிப்பவர்: உமர் (ரலீ), (நூல்: அபூதாவூத் 1412
 

கிறிஸ்தவம் 


நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள் (நீதிமொழிகள் 12:4)

அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான். “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான். (நீதிமொழிகள் 31:28-29)

ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள். (நீதிமொழிகள் 31:30)

ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள். (நீதிமொழிகள் 14:1

கருணையும் ஒழுக்கமும் உள்ள பெண் மதிக்கப்படுவாள். வல்லமையுள்ளவர்களோ செல்வத்தை மட்டுமே பெறுவார்கள். (நீதிமொழிகள் 11:16)

நிர்வாணம்

தமிழர் சமயம் 


உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர்
தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்
ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும்
காண அரிய, என் கண். (திரிகடுகம் 71)

விளக்கம்: ஆடையின்றி நீராடுவதும், பெண்கள் வழக்கு தொடுத்தலும், கொடையாளர்கள் வறுமையும் பார்க்கத் தகுந்தன அல்ல
 

இஸ்லாம் 

அறைக்குள் ஒருவர் தனியாகக் குளிக்கும் போது ஆடையின்றி குளிக்கலாம்; ஆனால் மறைத்துக் கொண்டு குளிப்பது சாலச் சிறந்தது. ஒருவர் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா பின் ஹைதா (ரலி) அறிவித்துள் ளார்கள்.

இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா(அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் `அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை` என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா(அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா(அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து `கல்லே! என்னுடைய ஆடை!` என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா(அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு `அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை` என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (புஹாரி 278)

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்.  (அல்குர்ஆன் 7:26)

''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், ''உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள்.  ''ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், ''முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள்.  ''ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு, ''அல்லாஹ் வெட்கப் படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி),  (நூல் : திர்மிதி 2693)  

இந்து மதம்  


 ஒரு ஆடையை மட்டும் உடுத்தி அவன் உண்ணக் கூடாது; அவர் நிர்வாணமாக குளிக்க வேண்டாம்; சாலையிலோ, சாம்பலிலோ, மாட்டுத் தொழுவத்திலோ சிறுநீர் கழிக்கக் கூடாது (ந நாக்ன ஸ்நானம் ஆச்சரேத்) - (மனு ஸ்மிருதி, அத்தியாயம் 4 வசனம் 45)

நிலையான தர்மம் *

தமிழர் சமயம் 


மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். (திரிகடுகம் 16)

விளக்கவுரை:
  1. மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், 
  2. கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், 
  3. கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்
எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். 
 

இஸ்லாம் 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
  1. நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா)
  2. பயன்பெறப்படும் கல்வி 
  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3358)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
  1. "ஒருமுஃமினான மனிதன் கற்பித்த கல்வியும்,
  2. (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் ,
  3. அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும்,
  4. (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும்,
  5. அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும்,
  6. வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும்,
  7. அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும்,
  8. அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும்
கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (இப்னுமாஜா : 242)

மறுமணம்

இந்து மதம்


ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணத்தில், இந்த வாழ்நாளில் சந்ததி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கிறார்:: 
 
ஓ பெண்ணே, வாழும் உலகத்திற்கு மேலே செல்; இறந்த இவருக்காக நீ நிற்கிறாய்; வா! உங்கள் கையைப் பிடித்தவருக்கு, உங்கள் இரண்டாவது மனைவி ( திதிசு) , நீங்கள் இப்போது மனைவியுடன் கணவன் உறவில் நுழைந்துவிட்டீர்கள்.  ரிக் (x.18.8) 

புதிய கணவர் விதவையை அழைத்துச் செல்லும் போது, ​​அவரது மனைவி கூறுவது போல்: 
 
நம்மைத் தாக்கும் அனைத்து எதிரிகளையும் முறியடித்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வீரமும் வலிமையும் கொண்ட புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம்.

தனுர் ஹஸ்தாத் ஆதாதானோ ம்ருதஸ்யாஸ்மே க்ஷத்ராய வர்சஸே பாலாய |
அத்ரைவ த்வம் இஹ வயம் சுவீரா விஸ்வா ஸ்ப்ருதோ அபிமதிர் ஜயேம || ரிக் (X.18.9)

விதவை தற்போதைய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆசீர்வதிக்கிறது: 
 
ஓ மீற முடியாதவரே! (விதவை) உன் முன் ஞானத்தின் பாதையை மிதித்து, இந்த மனிதனை (மற்றொரு பொருத்தனை) உன் கணவனாகத் தேர்ந்தெடு. அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, நீங்கள் இருவரும் மகிழ்ச்சியின் உலகத்தை ஏற்றுங்கள்.

ப்ரஜானதி அக்னியே ஜீவலோகம் தேவானம் பந்தம் அனுஸஞ்சரந்தி |
அயந் தே கோபதிஸ் தஸ் ஜுஷஸ்வ ஸ்வர்கம் லோகம் அதி ரோஹயீனம் ||4 AV( XVIII.3.4)
 

தமிழர் சமயம் *

கணவனை இழந்த பெண்களை,

    1. ஆளில் பெண்டிர் (நற்.353)
    2. கழிகல மகளிர் (புறம்,280)
    3. பருத்திப்பெண்டிர் (புறம்.125)
    4. தொடிகழி மகளிர் (புறம்.238)
    5. கைம்மை (புறம்.125, 261)
    6. படிவமகளிர் (நற்.273)
    7. உயவற்மகளிர் (புறம்.246)
    8. பேஎய்ப் பெண்டிர் (ஐங்.- 70) என்று பல்வேறு பெயர்களில் தமிழ் நூல்கள் குறிப்பிடுகிறது. 
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய
கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்
சால்போடு பட்டது இல. (திரிகடுகம் 66)

விளக்கம் புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும். (இவை மூன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்படவேண்டும் என்று இப்பாடல் மறைமுகமாக கூறுகிறது.)  

கிறிஸ்தவம் & யூதம்  

ஒரு மனைவி தன் கணவன் வாழும் வரை அவனுக்குக் கட்டுப்பட்டவள். ஆனால் அவள் கணவன் இறந்துவிட்டால், அவள் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது. (1 கொரிந்தியர் 7:39)

அதனால் நான் இளைய விதவைகளை திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, அவர்களது குடும்பங்களை நடத்தவும், எதிரிக்கு அவதூறு சொல்ல வாய்ப்பளிக்கவும் செய்வேன். (1 தீமோத்தேயு 5:14)

திருமணமாகாதவர்களிடமும், விதவைகளிடமும், என்னைப் போலவே தனிமையில் இருப்பது நல்லது என்று கூறுகிறேன். ஆனால் அவர்களால் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உணர்ச்சியுடன் எரிவதை விட திருமணம் செய்வது நல்லது. (1 கொரிந்தியர் 7:8-9) 

குறிப்பு: கொரிந்தியர் எனும் இந்த சுவிசேஷம் (வேத வாக்கியம் அல்ல) கிறிஸ்தவத்தை உருவாக்கிய பவுல் எனும் நபரால் எழுதப்பட்டது,  அவர்தான் துறவரத்தை கிறிஸ்தவத்தில் புகுத்தினார், அவர் கூட விதைவளுக்கு மறுமணம் செய்யும் அவசியத்தை கூறி உள்ளார்.

இஸ்லாம் 

(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 24:32)

(விதவையான) பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை (அவர்களின்) இத்தா காலத்தில் நீங்கள் சாடையாகத் தெரிவிப்பதிலோ, உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தத் தவறுமில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் (இதோ பாருங்கள்:) அவர்களிடம் இரகசிய உடன்படிக்கை எதுவும் செய்யாதீர்கள்! அவர்களிடம் பேச வேண்டியிருந்தால், வெளிப்படையாக நேர்த்தியாகப் பேசுங்கள்! நிர்ணயிக்கப்பட்ட (இத்தா) தவணை நிறைவடையும் வரை நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்யத் தீர்மானிக்காதீர்கள்; மேலும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; எனவே, அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், சகிப்புத் தன்மையுடையோனுமாய் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (குர்ஆன் 2:235)