போதும் என்ற மனம்

தமிழர் சமயம்

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான் - நல்வழிவெண்பா : 28

விளக்கம் நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.

இஸ்லாம்

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புஹாரி: 6446

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். - நூல்: முஸ்லிம் 1903

கிறிஸ்தவம்  

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். (1 தீமொ 6:6)

உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள். (லூக் 3:14)

நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. (எபி 13 : 5).

கஞ்சத்தனம்

தமிழர் சமயம்


நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு. (நாலடியார் 271)

விளக்கம்: நண்பர்க்கும், நண்பர் அல்லாதார்க்கும் தம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு சமைத்த உணவினைப் பகுத்துக் கொடுத்துப் பின் தாமும் உண்பதுதான் உண்மையில் சமைத்து உண்பதாகும். அவ்வாறின்றிச் சமைத்த உணவினை, கதவை அடைத்துக் கொண்டு, உள்ளேயிருந்து தாம் மட்டும் உண்டு வாழும் நன்மையில்லாத சுயநலமாக்கள் உள்ளே புக முடியாதபடி மேல் உலகத்தின் கதவுகள் அடைக்கப்படும். (இம்மையில் பகுத்து உண்ணாதவர்க்கு மறுமை இன்பம் இல்லை என்பது கருத்து).

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும். (நாலடியார் 28 ஈயாமை 274)

விளக்கம்: பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும். (உலோபியின் செல்வத்தை அயலாரே அனுபவிப்பர்).

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் - (நல்வழி வெண்பா : 18)

விளக்கம்: அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று - [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல் குறள் 438]

விளக்கம்: பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை (உலோபித்தனம் - கஞ்சத்தனம்), குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. குறள் ஈகை 230

உரை: சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது

கிறிஸ்தவம்


“உண்மையுள்ள ஒருவன் அபரிமிதமான ஆசீர்வாதத்தைப் பெறுவான், ஆனால் பணக்காரனாக ஆசைப்படுகிறவன் தண்டிக்கப்படாமல் போகமாட்டான். பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல - ஒரு ரொட்டிக்காக ஒரு மனிதன் தவறு செய்வான். கஞ்சன் பணக்காரனாவதற்கு ஆர்வமாக இருக்கிறான், வறுமை தங்களுக்கு காத்திருக்கிறது என்பதை அறியாது” (நீதிமொழிகள் 28:20-22)


இஸ்லாம்


அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபித்தனம் தெய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக்கு தீங்குதான் அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். (3-180)

அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி,  அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.   (அல்குர்ஆன், அந் நிஸா 4:37)

“(இறைவா!) நான் உன்னிடம்ஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)

உலகில் பற்றற்று வாழ்

தமிழர் சமயம் 


எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு - (நல்வழி வெண்பா : 7)

விளக்கம்: எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.

கிறிஸ்தவம் 


உலகத்தையோ உலகத்தில் உள்ள பொருட்களையோ நேசிக்காதீர்கள். ஒருவன் உலகத்தை நேசித்தால், தந்தையின் அன்பு அவனில் இல்லை. ஏனென்றால், உலகத்தில் உள்ள அனைத்தும் - மாம்சத்தின் ஆசைகள் மற்றும் கண்களின் ஆசைகள் மற்றும் உடைமைகளில் பெருமை ஆகியவை - தந்தையிடமிருந்து அல்ல, ஆனால் உலகத்திலிருந்து வந்தவை. மேலும் உலகம் அதன் ஆசைகளுடன் அழிந்து வருகிறது, ஆனால் கடவுளின் சித்தத்தின்படி செய்கிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான். - (1 ஜான் 2:15-17)

இஸ்லாம் 


ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்! அதைச் செய்தால் அல்லாஹ்வும் என்னை நேசிக்க வேண்டும்! மனிதர்களும் என்னை நேசிக்க வேண்டும்!” எனக் கேட்டார். “உலகில் பற்றற்று வாழ்! அல்லாஹ் உன்னை நேசிப்பான்! மனிதர்களிடத்தில் தேவையற்று இரு! அவர்கள் உன்னை நேசிப்பார்கள்!” எனக் கூறினார்கள். (இப்னுமாஜா 4102)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்கüல் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாüல் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். - (நூல்: புகாரி 6416

 

பொய்சாட்சி

தமிழர் சமயம் 


வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. (பா-23)

பொருள்: நீதி மன்றத்தில் பொய் சாட்சியம் சொன்னவரின் வீட்டில் வேதாளம் குடியேறும். சூடத்தகாத வெண்மையான எருக்கம் பூக்கள் பூக்கும். படரக் கூடாத பாதாள மூலி படரும். மூதேவி சென்று நிலையாகத் தங்குவாள். பாம்புகள் குடிபுகும். பொய்சாட்சி சொன்னவர்கள், இவ்வாறு தன் சுற்றத்துடன் அழிவர். 
 

இஸ்லாம் 


நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரி-2653)

கிறிஸ்தவம்


நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால், நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். - (உபாகமம் 19:18-19)

பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான். (நீதிமொழிகள் 19:9)

நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். (மாற்கு 10:19)

பகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே

தமிழர் சமயம் 


பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. குறள் 773

பொருள்: பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

யூதம் 

17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே. 18 நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காக கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார். - (நீதிமொழி 24:17-18) 

கிறிஸ்தவம் 

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். - லூக்கா 6:27

 பழிவாங்குதல் பற்றிய போதனை

38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’  என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.

அனைவரையும் நேசியுங்கள்

43 ,“‘உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும் (மத்தேயு 5)

 இஸ்லாம் 

“மார்க்கம் (தீன்) என்பதே பிறர் நலம் நாடுவதுதான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்-95 

மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி-7376 

மேலுள்ள வசனங்கள் முஸ்லிம்களுக்கு நலம் நாடுவதென்றோ அல்லது முஸ்லிம்களுக்கு மீது கருணை காட்டாதவர்கள் என்றோ கூறாமல், பகைவர் உட்பட அனைத்து மனிதர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.