இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று (அதிகாரம்:இரவு குறள் எண்:1058)
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.
பதவுரை: இரப்பாரை-ஏற்பவர் ('ஐகாரம்' அசைநிலை); இல்லாயின்-இல்லாமல் இருந்தால், இல்லாவிடில்; ஈர்ங்கண்-குளிர்ந்த இடம்; மா-பெரிய; ஞாலம்-உலகம்; மரப்பாவை-மரத்தால் செய்யப்பெற்ற பதுமை; சென்றுவந்துஅற்று-செல்வதும் வருவதும் போலும், போய்வந்தாற் போல்வது.
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை 222)
பதவுரை:நல்-நல்ல;
ஆறு-நெறி;
எனினும்-என்றாலும்;
கொளல்-ஏற்றல்;
தீது-கொடிது;
மேல்உலகம்-உயர்வாகிய உலகம் (வீட்டுலகம்);
இல்லெனினும்-இல்லை என்றாலும்;
ஈதலே-கொடுத்தலே;
நன்று-நன்மையுடையது.
மணக்குடவர் உரை: ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
பதவுரை: மறுமையும் இம்மையும் நோக்கி --- மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் --- கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் --- அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை --- பிறரை இரவாமலிருப்பது, ஈதல் இரட்டி உறும் --- அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.
வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை.
முழுக்கருத்து: இரப்பார் இல்லையென்றால் உலகம் இயங்காது என்று கூறும் வள்ளுவம், இரத்தல் தீது என்கிறது.
____________________________
‘ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹன்ழலா (ரலி), நூல்: அபூதாவூத்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது, மக்களிடத்தில் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். நூல் : புகாரி-1480 , 1471
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும். அல்லது அதிகமாக யாசிக்கட்டும். நூல் : முஸ்லிம்-1883
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் என்னை விட ஏழைக்கு இதைக் கொடுங்களேன் என்பேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள். நூல் : புகாரி-1473
முழுக்கருத்து: தேவை இருப்பின்பெற்றுக்கொள்வதை தடுக்காத மார்க்கம், ஆனால் தேவைக்கு அதிகமாக கேட்பவரை சபிக்கிறது. இயன்றால் உழைத்து உண்பதையே வலியுறுத்துகிறது.
_____________________________
உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். Luke 11:41
இப்படி கடினமாக உழைத்து பலவீனமானவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், 'வாங்குவதைவிட கொடுப்பதே அதிக பாக்கியம்' என்று கர்த்தராகிய இயேசு சொன்னதை நினைவுகூர வேண்டும் என்றும் எல்லாவற்றிலும் நான் உங்களுக்குக் காட்டினேன்- சட்டங்கள் 20:35