இனவெறி!


ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து, 
இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா?” 
என்று கேட்டார்கள். 

அதற்கு நபி அவர்கள்,

 “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” 
என்றார்கள். - நூல்: அஹ்மத்
    • இறைவன் ஞானம் வழங்கிய எந்த இஸ்லாமிய அறிஞரும் இன மத வெறியர்களாக இருக்கவில்லை.
    • உலக தீவிரவாத்தில் மிக சொற்பமாக இஸ்லாமிய தீவிர வாதிகள் இருந்த போதிலும்,  ஐ.எஸ் உட்பட அனைத்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அறிஞர்களும் பிரச்சாரம் செய்பவராகவே இருக்கின்றனர்.
    • கொடுமைகளுக்கு குண்டு வெடிப்பு போன்று தீவிரமாக மார்கத்திற்கு முரணான முறையில் எதிர்வினை ஆற்றிய ஒரு சிலர்ர்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் ஆதரிக்கவில்லை.
    • எத்தனையோ நிழல் உலக தாதக்கள் இந்த துணைக்கண்டத்தில் இருந்தும் ஒரு சில அரபி பெயர்தாங்கிகளை ஊடகங்கள் முன்னிலைபடுத்தி பேசி வருகின்றன ஆனால் அவர்களையும், கொலை கொள்ளை நிகழ்த்துபவர்களையும் அவர்கள் செயல்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் விமர்சிப்பவர்களாகவே கண்டனம் செய்பவர்களாகவே உள்ளனர்.
    • தினமும் அறிஞர் வாயிலாக இறைவனின் போதனைகளை கேட்கும் திருக்குரானை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்த உண்மை இது.
எனவே இஸ்லாம் இதை போதிப்பது மட்டுமின்றி அதிகார, மத, இன வெறி என அனைத்தையும் நடைமுறையில் தடை செய்துள்ளது.

பற்று வேறு வெறி வேறு.

அல்ஹம்துலில்லாஹ்.

இன்பமும் துன்பமும் இணைந்தே வரும்

தமிழர் சமயம்


இன்பம், இடர்என்று இரண்டுஉற வைத்தது;
முன்புஅவர் செய்கையி னாலே முடிந்தது;
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்புஇலார் சிந்தை அறம்அறி யாரே(திருமந்திரம் 267)

இன்பம், நன்மை, அறம் என்று நேராக மட்டுமே வகுத்துவைக்காமல் இன்பத்தோடு துன்பம், நன்மையோடு தீமை, அறத்தோடு மறம் என்று எதிராகவும் வகுத்து இரண்டையும் இணைத்தே வைத்தான் இறைவன். நன்மையோ தீமையோ, ஒருவர் முன்பு செய்தது எதுவோ அதுவே அவர்க்குப் பின்னும் விளைந்தது என்றால் எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்தால் அறமாகும் என்று அறியாமல் முட்டிக்கொள்கிற மூடர்களைப் பற்றி என்ன சொல்ல? அன்பைக் கொடுத்தால் இன்பம் விளையாதா?

இஸ்லாம்


நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. - (குர்ஆன் 94:5-7)

கிறிஸ்தவம் 


[கடவுளின்] கோபம் ஒரு கணம் மட்டுமே, அவருடைய தயவு வாழ்நாள் முழுவதும் இருக்கும். அழுகை இரவைத் தாமதப்படுத்தலாம், ஆனால் காலையில் மகிழ்ச்சி வரும். - (சங்கீதம் 30:5)

இரண்டு உலகம்

தமிழர் சமயம் 


இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. - (குறள் 374)

பதவுரை
இருவேறு உலகம் - மனித உலகம், அசுரர் உலகம் 
இயற்கை - இயல்பு, அமைப்பு, பண்பு; 
திரு வேறு - சிறப்பு வேறு; 
தெள்ளியர் ஆதலும் வேறு - ஞானம் பெறுதலும் வேறு.

பொருளுரை: இரு வேறு உலகத்தின் இயல்பு வேறு, அதன் சிறப்பு வேறு, அதில் அறிவுடையார் ஆதலும் வேறு. அதாவது அறிவின் தன்மையும் அளவும் வேறு வேறு.

இதில் "இருவேறு உலகம்" என்பதன் பொருளாக அனைத்து பொழிப்புரையாளர்களும் இவ்வுலகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் இருவேறு நிலைகளை குறிப்பிடுவதாக எழுதியுள்ளனர். ஆனால் அது இருவேறு இயற்கை இயல்பை குறிக்கிறது. 

"திரு"-வுக்கு செல்வந்தர் என்று குறிப்பிடும் உரையாசிரியர்கள், செல்வந்தருக்கு உலகத்தின் இயற்க்கை மாறுபடவில்லை என்பதை சிந்திக்க வில்லை என்றே கருதுகிறேன். ஞானம் பெற்றோருக்கும் பெறாதோருக்கும் உலகம் இரு வேறு இயற்கையை வழங்கவில்லை. ஞானம் என்பதே இயற்கையை புரிந்து கொள்ளும் அறிவுதான். எனவே இது இயற்கை மாறுபடும் இரு உலகை குறிப்பிடுகிறது. அது மனித மற்றும் அசுர (ஜின்) உலகமாக இருக்கலாம் அல்லது பூவுலக மற்றும் மேலுலகமாக இருக்கலாம்.

 

இஸ்லாம்


இஸ்லாம் ஒரே பூமியில் இரண்டு வகையான உலகத்தை குறிப்பிடுகிறது. மனித உலகம், ஜின்கள் உலகம். நம்முடைய உலகின் இயல்பும் சிறப்பும் நாம் அறிந்ததே. அதில் உள்ள ஞானத்தை அறியவே நாம் கல்வி கற்கிறோம். ஜின்கள் உலகம் பற்றியும் அதன் இயல்பு பற்றியும் இஸ்லாம் கூறும் செய்திகள் கீழே தொகுக்கப் பட்டுள்ளது.  

ஜின்னுலக இயற்கை  

நம் கண்களுக்கு புலப்படாத ஜின்கள் உலகம்  

ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!

ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!

நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)

ஜின் படைப்பு 

இந்த உலகில் அல்லாஹ் மனிதர்களை படைக்கும் முன்பே ஜின் இனத்தை அல்லாஹ் படைத்துவிட்டான்!

மனிதர்களை அல்லாஹ் மண்ணால் படைத்தான் என்றால் ! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்த்தவன் தான்! ஜின் இனத்தை அல்லாஹ் நெருப்பால் படைத்தான் ! (அல்குர்ஆன் :15 : 27 | 55 : 15 | 18 : 50)

உருவ அமைப்பு  

ஹதீஸ்களில் உள்ள செய்திகளை வைத்து ஜின்களில் மொத்தம் மூன்று வகையினர் உள்ளனர் !

1 ) நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ளவைகள்!
2 ) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழும் ஜின்கள்!
3 ) ஆகாயத்தில் பறக்கக்கூடிய ஜின்கள்! (நூல் : முஷ்கிலுல் ஆஸார் : 2473)

வசிப்பிடம்  
 
ஜின்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

1 ) இருட்டான இடங்கள்
2 ) பாழடைந்த இடங்கள்
3 ) பராமரிப்பில்லாத கட்டிடங்கள்
4 ) பராமரிப்பில்லாத மைதானங்கள்
5 ) பாலை வனங்கள்
6 ) அடர்ந்த காடுகள்
7 ) மலைகள்
8 ) ஓடைகள்
9 ) மையவாடிகள்
10 ) பாழடைந்த பள்ளிவாசல்கள்
11 ) கிணறுகள்
12 ) சமுத்திரங்கள்
13 ) வயல் வெளிகள்
14 ) சுரங்கங்கள்
15 ) பொந்துகள்
16 ) வீட்டின் முகடுகள்
17 ) மரங்கள்
18 )குகைகள்
19 ) ஒட்டகம் போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள்
20 ) அசுத்தமான (நஜீஸ்) இடங்கள் போன்றவைகளில் ஜின்கள் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. (நூல் : மஜ்முஉல் பதாவா : பாகம் 19 : பக்கம் 40 : 41)

உணவு  

ஜின்களும் மனிதர்களை போன்று உண்ணும் ஆனால் அவைகளின் உணவுகள் மாறுபடும்!

1) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியின் எலும்புகள்!
2) கெட்டியான சாணம்!
3) இது அல்லாமல் சில ஜின்கள் நம்மை போன்று நெருப்பு மூட்டி பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிட கூடியவைகளும் உண்டு! (நூல் : புகாரி : 3860 | முஸ்லீம் : 762 |திர்மிதி : 3311)

ஆற்றல்

நபி சுலைமான் (அலை) அவர்களிடம் ஒரு பலம் பொருந்திய ஜின் கூறியது : நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் பைத்துல் முகத்திஸில் ராணியின் சிம்மாசனத்தை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறிய ஒரு பலம் பொருந்திய ஜின் அதையும் செய்தும் முடித்தது! (அல் குர்ஆன்: 27 : 39)  
 
ஆனால் அல்லாஹ் அதற்கு பின்பு ஜின்களால் வானம் செல்ல முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பை உண்டாகினான் அது தான் நெருப்பு கல் (வால் நட்சத்திரம்) அவர்கள் வானம் பக்கம் சென்றால் அல்லாஹ் அவர்களை நெருப்பு கல் மூலம் விரடி அடிப்பான் அல்லது அதனை கொண்டு நெருப்பில் பொசுக்கி விடுவான் (அல்குர்ஆன் : 72:9)  
 
பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டி முடிக்க முடியும்! (அல் குர்ஆன் : 38 : 37)  
 

ஜின்னுலக ஞானம்   


ஜின்களுக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் 
 
மனிதர்களுக்கும் மற்றும் ஜின் படைப்புகளுக்கும் நேர் வழி படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி உள்ளான்!

ஜின்களில் நபி மார்களின் பேச்சை கேட்டு கட்டுப்பட்டவர்களும் உண்டு அவர்களை மறுத்துவர்களும் உண்டு! (அல்குர்ஆன் : 6 : 130)

 

மேலுலகம் 

இரு உலகம் என்று குறள் கூறுவது பூவுலகையும் மேலுலகையும் குறிப்பிடுவதாக இருந்தால், அதன் சிறப்பும் ஞானமும் வேறுபட்டே இருக்கிறது. 

மேலுலக இயற்கை  

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - (திருக்குர்ஆன் 2:25

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒருநாள் தினம் ஹதீஸ் கூறிக் கொண்டிருந்த போது அவர்களுடன் கிராமப்புற மனிதர் ஒருவரும் கூட அமர்ந்திருந்தார். அப்போது ‘சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார். அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக் கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன் ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள் கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும். அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான் விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று கூறுவான். உடனே அக்கிராமவாசி: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)

முடிவுரை

இரண்டு உலகம் என்பது இங்கேயே என்றால் அது மனிதர் மற்றும் அசுரர் (ஜின்) உலகை குறிக்கிறது. பூவுலக அல்லது மேலுலகை குறிக்கிறது என்று கருத முடியுமா என்று தெரியவில்லை. மேலும் வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. கீழுலகை அது குறிப்பிட வாய்ப்பில்லை ஏனென்றால் அங்கு எந்த "திரு"-வும் அதாவது சிறப்பும் இல்லை.

 

"தென்னாட்டுடைய சிவனே போற்றி" என்ற மாணிக்கவாசகர் கூற்றில் தென் நாடு எது? புரியும் படி விளக்கம் கொடுக்க முடியுமா?

திருமந்திரம் இதற்கான பதிலை தருகிறது!

ஏன் திருமந்திரம் சொல்வதை நம்ப வேண்டும்? ஏனென்றால் திருமந்திரம் ஒரு வேதநூல்!

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (10.01 பாயிரம் - 05. திருமூலர் வரலாறு, பாடல் 5)

திருமூலருக்கு குருவாக (நாதனாக) இருந்து திருமந்திர வேதத்தை தந்தவர் யார்? நந்தி!

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

எதத்னை நந்தி உண்டு? நான்கு!

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

இதில் திருமூலரின் ஆசிரியரான நந்தி யார்? எண்மர்!

இந்த நால்வரும் மனிதரா? பசுவா? தேவரா? தேவர்கள்!

சரி இந்த நான்கு பேரின் வேலை என்ன? ஒவ்வொரு திசைக்கும் குருவாக இருந்து வேதத்தை கொடுப்பவர்கள்!

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நால் விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

ஒவ்வொரு திசைக்கும் ஒரு நந்தி!

அதில் தென்னாட்டவர்க்கு இறைவனின் வேதத்தை உபதேசிக்க வந்த நந்தி தேவரின் பெயர் எண்மர்!

மற்ற மூவரும் மற்ற மூன்று திசைக்கு உறியவர்கள்!

இப்போ தென்னாடு என்பதை புரிய வேண்டுமென்றால், சைவ வேதம் என்னென்ன மொழிகளில் உண்டு என்று அறிவதால் கிடைக்கும்! தமிழில் மட்டும்தான். மற்ற மொழிகளில் இதிலிருந்து தழுவி எழுதப்பட்டது, அதுவும் பொருள் புரியாமல்.!

தென்னாடு என்பது ஏறக்குறைய இந்தியா முழுவதும்! நான்கு திசைகளில் வடக்கு தெற்கை எங்கிருந்து பிரிப்பது? பூமிப்பந்தை சரியாக பிரித்தல் இமயமலைக்கு மேலே உள்ள பகுதி வடக்காகவும் கீழே உள்பகுதி தெற்க்காகவும் விளங்கும்! எப்படி?

இதற்கான ஆதாரங்கள்,

  • ஆரியர்கள் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிற வரலாற்று தகவல் வடக்கு என்பதை இன்னும் தெளிவாக பிரித்தது அறிவிக்கிறது.
  • சமஸ்கிருத மொழியின் இடமாக விக்கிபீடியா சொல்வது : சம்ஸ்கிருதத்தோடு ஒத்துப்போகும் மொழிகளாவன, இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் வேத சமஸ்கிருதத்தின் நெருங்கிய பழங்கால உறவினர்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கு இமயமலையின் தொலைதூர இந்து குஷ் பகுதியில் காணப்படும் நூரிஸ்தானி மொழிகள், அத்துடன் அழிந்துபோன அவெஸ்தான் மற்றும் பழைய பாரசீக மொழிகள் - இரண்டும் ஈரானிய மொழிகள். சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த பூர்வீக மொழியின் இலக்கணத்தோடும் பொறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.
  • ரிக் வேதங்கள் முழுவதும் மாடு மற்றும் குதிரையினை பெருமை பேசுவதன் காரணம் ஸ்டெப்பி புல்வெளியில் கால்நடைகளை மேப்பதை தவிர வேறெந்த பொருளாதாரமும் கிடையாது.
  • இமயமலையில் உள்ள ஸ்ரீநகர் என்கிற ஊர் "திருநகர்" என்று முக்காலத்தில் வழங்கப் பட்டது என்கிற தகவல்
  • சிந்துசமவெளியில் தமிழன் மூல எழுத்துக்களோடு ஒத்துப் போகிறது என்கிற தகவல்

இதுவெல்லாம் போதுமான சான்றுகள்.

தமிழ் கூறும் நல்லுலகம் இமயமலைக்கு கீழயேயும், சமஸ்கிருதம் அதற்கு வெளியேயும் இருந்து வந்தது என்று.

எனவே தென்னாடு என்பது ஏறக்குறைய இன்றைய இந்தியா முழுவதும்! 

கர்மா

இந்து மதத்தில் கர்மா என்று அழைக்கப்படும் சொல்லுக்கு தமிழ் சமய நூல்களில் கருமம் என்றும், பைபிளில் கிரியை என்றும், இஸ்லாத்தில் அமல் என்றும் சொல்லப்படுகிறது.
 
அது அல்லாமல் செயல், வினை, தொழில், வேலை, காரியம் போன்ற வார்த்தைகளாலும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் Deeds, Actions, doings போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப் படுகிறது.

கருமம் இருவகைப்படும் அவை வெவ்வேறு மொழியில் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு சொற்க்களால் அடையாள படுத்தப்பட்டுளள்து. அவையாவன,
அறம் மறம்
நல்லறம் புல்லறம் 
நற்செயல் தீச்செயல்
சரி தவறு 
பாவம் புண்ணியம்
நல்ல காரியம் தீய காரியம் 
நீதி அநீதி
நியாயம் அநியாயம்
கிரமம் அக்கிரமம் 
ஹலால் ஹராம்
அனுமதிக்கப்பட்டது தடுக்கப்பட்டது 

தமிழர் சமயம் 

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல் - (நல்வழி)  

 

விளக்கம்பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அறியும் அறிவாகிய பிரணவத்தை உணர்ந்தால்அதை விட்டு நீங்கிப் பிறப்பெடுத்து இன்னலுற வேண்டாம். 


அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து. ( ஞானக்குறள் 172) 

விளக்கம்: மனிதன் இறக்கும் போது அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான். 

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. (நல்வழி வெண்பா : 37)

விளக்கம்: பாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களை போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. அதை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.

கிறிஸ்தவம் 

ஏனெனில், கடவுள் ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு இரகசியமான காரியத்தையும், நல்லதோ தீயதோ, நியாயத் தீர்ப்புக்குக் கொண்டுவருவார் (பிரசங்கி 12:14)

யூதம் 

ஒருவன் தீயச் செயல்கள் மூலம் பொருள் சம்பாதித்திருந்தால் அவை பயனற்றவை. ஆனால் நல்ல செயல்களைச் செய்வது உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும். (நீதிமொழிகள் 10:2)

இஸ்லாம் 

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். ( குர்ஆன் 6:151)

இவைகள் பெரும்பாலும் அனைத்து பண்பாடுகளிலும் ஒரே வரையறையுடன் காணப்படுகிறது. அவைகளின் பட்டியல் ஆதாரங்களுடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 

இந்துவோ, தமிழரோ, முஸ்லீமோ, கிறிஸ்தவனோ அல்லது அவர் எந்த சமையத்தை சார்ந்தவராகிலும், தான் எதை நம்புகிறானோ குறைந்தபட்சம் அந்த நம்பிக்கையின் படி எது சரியோ அதைச் செய்யவும், எது பாவமோ அதை விட்டு விடவும் ஆர்வம் ஏதுமமின்றி, அடுத்தவர் நம்பிக்கையையும் சமையத்தையும் நோக்கி விரல் சுட்டுவதும், பொறாமை படுவதும், வெறுப்பை உமிழ்வதும் யாருக்கு என்ன பயனைத் தரும்? 

ஆய்வாளர்கள் பெரும்பாலும் சமய பண்பாடுகளிடையே உள்ள வேற்றுமையை மட்டுமே முதல் பொருளாக கைக்கொண்டு பட்டியலிட முனைந்துள்ளார். ஆனால் நான்மறை தத்துவத்தின்படி ஒற்றுமையயை பட்டியலிட்டு அவற்றை மக்களிடையே செயல்பாட்டுக்கு கொண்டுவர இயன்றால் அது மகத்தான சமூக இணக்கப்பாட்டிற்கு வழிவகுக்கும். 

கருமங்களில் நல்லதும் தீயதும் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளது.