பிறரின் பொருளை அபகரித்தல்

தமிழர் சமயம்

 
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். (வெஃகாமை - 171)

பொருள்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் (குறள் - 178)

பொருள்: ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும் 
 

கிறிஸ்தவம் 


மற்றொருவனிடமிருந்து நான் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை. நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது. நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன். ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை. நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால் அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான் (யோபு 31:38-40)

“லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது, “ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும். (உபாகமம் 27:25)

ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார். (சங்கீதம் 12:5)

பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. (நீதிமொழிகள் 23:10

இஸ்லாம் 

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள். (புஹாரி :2453 அபூஸலாமா (ரலி))

 நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (குர்ஆன் 4:10)

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (குர்ஆன் 89:17-20)

யூகம்

தமிழர் சமயம் 

காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் (உலக நீதி 68)

பொருள்: கண்ணால் காணாதவற்றைப் பற்றிக் கட்டுக்கதைகள் சொல்லாதே 

 

இஸ்லாம்

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். -  (குர்ஆன் 10:36)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (அல்குர்ஆன் 49:12
 

கிறிஸ்தவம் & யூத மதம் 

அவர்கள் கடவுளை அறிந்திருந்தாலும், அவர்கள் அவரைக் கடவுளாக மதிக்கவில்லை அல்லது நன்றி செலுத்தவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் யூகங்களில் பயனற்றவர்களாகி, அவர்களின் முட்டாள்தனமான இதயம் இருண்டுவிட்டது. (ரோமர் 1:21)

மனிதர்கள் அமீபாவிலிருந்து அல்ல, ஆதமிலிருந்து வந்தவர்கள்.

இஸ்லாம் 


மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1) 
 

கிறிஸ்தவம் 


"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்." - (அப்போஸ்தலர் 17:26)

தமிழர் சமயம் 


திருமந்திரம் - மனித இன மூலம்

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. (இரண்டாம் தந்திரம் - 9. பாடல் 6)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பதவுரை: ஆதி - தொடக்க; பகவன் - ‘பகு’ என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும். பகுத்தவன் பகவன் எனப்பட்டான். எனவே தன்னுடம்பை பகுத்து/பிரித்து தன் துணைக்கு தந்த முதல் மனிதன் ஆதி பகவன் எனப்பட்டான். அவரிடமிருந்தே உலகில் உள்ள மக்கள் அனைவரும் தோன்றினார். 

மணக்குடவர் உரை: உலக மொழிகளில் உள்ள எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. 
 

இந்து மதம்  


அவர் மகிழ்ச்சியாக இல்லை. எனவே மக்கள் (இன்னும்) தனியாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இல்லை. அவர் ஒரு துணையை விரும்பினார். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கட்டித்தழுவுவது போல் அவர் பெரியவரானார். இந்த உடலையே இரண்டாகப் பிரித்தார். அதிலிருந்து கணவனும் மனைவியும் வந்தனர். எனவே, யாஜ்ஞவல்கியர் கூறினார், இது (உடல்) ஒரு பாதி, பிளவுபட்ட பட்டாணியின் இரண்டில் ஒன்று போன்றது. எனவே இந்த இடம் மனைவியால் நிரப்பப்படுகிறது. அவன் அவளுடன் ஐக்கியமானான். அதிலிருந்து மனிதர்கள் பிறந்தார்கள். (பிருஹதாரண்யக உபநிஷத் 1.4:3)

அரசியலில் மதம் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

அரசியலும் மதமும் பிரிந்தது எப்போது? Quora 

திருக்குறள் அரசியல் பேசவில்லையா?

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு” (குறள் 384)

பொருள்: சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

முதுமொழிக் காஞ்சி அரசியல் பேசவில்லையா? 

முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று. -  (நல்கூர்ந்த பத்து 9:1)
பதவுரை: முறையில் - முறைமையில்லாத; நல்கூர்ந்தன்று - வறுமையுறும் 
பொருளுரை: முறை செய்யாத அரசனுடைய நாடு எந்நாளும் வறுமையுடையதாகும். 

திருமந்திரம் அரசியல் பேசவில்லையா?

நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்
நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே. - (பாடல் 239: முதல் தந்திரம் 13. இராசதோடம் (அரசாட்சி முறை)) 
 

விளக்கம்ஒரு நாட்டுக்கு அரசனாக இருக்கின்றவன் அந்த நாடு முழுவதிலும் தினந்தோறும் தவ வழியில் வாழ்பவர்களுக்கு எந்தவொரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசனுக்கு என்று விதிக்கப்பட்ட நீதியிலும் தர்மத்திலும் சிறிதளவும் பிழை வந்துவிடாமல் தினந்தோறும் நடந்துகொள்ள வேண்டும். இதில் எதை செய்யத் தவறிவிட்டாலும் அவனுடைய நாட்டின் வளம் குன்றும். மக்களிடையே அறியாமை தோன்றும். அந்த நாட்டில் இருக்கும் செல்வங்கள் எல்லாம் தினந்தோறும் குறைந்து கொண்டே வந்து அரசனும் விரைவில் இறந்து போவான்.

திருக்குர்ஆன் அரசியல் பேசவில்லையா?

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 4:58)

திருவிவிலியம் அரசியல் பேசவில்லையா?

அரசன் நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் அரசன் சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் அரசனுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும். - (நீதிமொழிகள் 29:4)  

இவைகள் கூறும் அரசின் மாண்பும், அரசனின் மாண்பும், குடிமக்கள் மாண்பும் பேணப்பட்டால் அதுதான் பொற்காலம். இவைகள் கூறும் அரசியலின் கூறுகளை தனித்தனியாக பிரித்தது இன்று குடியரசு என்றும் பொதுவுடைமை என்றும், சோசியலிசம் என்றும், கேப்பிடலிசம் என்றும் தனித்தனியே முழுமைபெறா சிக்கலான உருக்களாக உலாவருகிறது. இவை அனைத்தின் பண்புகளும் சரியான விகிதத்தில் ஒருங்கே அமையப்பெறும் பொழுதுதான் பொற்கால ஆட்சி நடைபெறும்.

ஆனால் அறநூல்கள் கூறும் நல்ல அரசாட்சியின் பண்புகளை கூறுபோட்டு பிரித்தவர்களின் வாக்குமூலம் இதோ!

முழுமையாக வாசிக்க : Must_Readable.pdf 


தெய்வத்தை கற்பனை செய்து வரையறுக்க முடியுமா?

தமிழர் சமயம்


உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)


பொருள்: உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன். கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது என்பது கருத்தாம்.

பதவுரை: புரைஒத்திரு, போன்றிரு; திரை - அலை; புரி - மிகுந்திரு; சடை - படர்ந்த, விரிந்த; 

கிறிஸ்தவம்

தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது: எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது! தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது! - (ஏசாயா 40:18) 

இஸ்லாம்

இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள். (குர்ஆன் 3:94)

மேலும், “எண்ணப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரக)நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது” என அவர்கள் கூறுகின்றார்கள்; (அதற்கு நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் வாக்குறுதியை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வாறாயின், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (கற்பனை செய்து) கூறுகின்றீர்களா? - (குர்ஆன் 2:80)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (குர்ஆன் 4:48)

முடிவுரை 

  • இறைவன் யார்? 
  • அவனது ஆற்றல் என்ன? 
  • அவனது பண்புகள் என்ன? 
  • அவனது பெயர் என்ன? 
  • அவன் எதை விரும்புகிறான்? 
  • யாரை விரும்புகிறான்? 
  • எதை வெறுக்கிறான்? 
  • யாரை வெறுக்கறான்? 
  • அவனது விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணம் என்ன? 
  • உலகை எப்படி படைத்தான்? 
  • விதியை எப்படி வடிவமைக்கிறான்? 
  • எது அறம்? 
  • எது மறம்?  

போன்றவற்றை மனிதர்கள் கற்பனை செய்து வரையறுக்க முடியாது. அவனது நான்மறைகள் மூலம் அவனே சொன்னவைகளை ஏற்பதுதான் குணமுடைய மனிதன் செய்ய வேண்டிய செயல் ஆகும்!