தர்மம் செல்வத்தை அதிகரிக்கும்.

தமிழர் சமயம்


தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; 
வைத்து வழங்கி வாழ்வார். (ஏலாதி 78)

விளக்கவுரை 

  1. தாயை இழந்த பிள்ளை
  2. தலைமகனை இழந்த பெண்டாட்டி
  3. வாய்ப்பேச்சினை இழந்து ஊமையராய் வாழ்பவர்
  4. வாணிகம் செய்து பொருளை இழந்தவர்
  5. கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர்
  6. கண் பார்வையை இழந்தவர்கள்
ஆகியோருக்குக் கொடுத்தவர்கள் தம் கையில் எப்போதும் பொருள் வைத்துக்கொண்டிருப்பவராக வாழ்வார்கள். கொடையாளி கைக்குப் பொருள் வந்து சேரும். 

இஸ்லாம் 


(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (முஸ்லிம் 5047
 

கிறிஸ்தவம் 


பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார். (லூக்கா 6:38)

கடவுளை கேள்வி கேட்போர் உண்டா? *

இஸ்லாம்


அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (குர்ஆன் 21 : 23) 
 

கிறிஸ்தவம்


“நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? - (ரோமர்கள் 9:19-20)


அனைத்துக்கும் எஜமான்

தமிழர் சமயம்


அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே. - (திருமந்திரம் 8211)

பதப்பொருள்: அண்ணலை (அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை) வானவர் (அடியவர்களாகிய வானவர்கள்) ஆயிரம் (ஆயிரம் விதமான) பேர் (பெயர்களை) சொல்லி (சொல்லி போற்றி) 
உன்னுவர் (தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து) உள் (உள்ளம்) மகிழ்ந்து (மகிழ்ந்து) உள் (தமக்குள்) நின்று (நிற்கின்ற) அடி (அவனது திருவடியை) தொழ (தொழுவார்கள்) 
கண் (தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன்) அவன் (அவனே) என்று (என்று) கருதும் (எண்ணுகின்ற) அவர்கட்கு (அவர்களுக்கு உள்ளே இருந்து) 
பண் (இலயிக்கின்ற இசையைப் போல) அவன் (அந்த இறைவன்) பேர் (மாபெரும்) அன்பு (அன்பு காட்டி) பற்றி (அவர்களை அரவணைத்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்: அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

இஸ்லாம் 


அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - (குர்ஆன் 1:1)

முதலில் ரப்புல் ஆலமீன் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். ரப்பு என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன் என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன் என்ற சொல்.

அகில உலகையும் பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன் என்பதன் பொருள்.  

கிறிஸ்தவம் 


ஏனெனில் பூமியும் அதில் உள்ள அனைத்தும் இறைவனுடையது . - (1 கொரிந்தியர் 10:26)

'நிலம், மேலும், நிரந்தரமாக விற்கப்படாது, நிலம் என்னுடையது; ஏனென்றால் நீங்கள் என்னுடன் அந்நியர்களாகவும் வெளிநாட்டவர்களாகவும் இருக்கிறீர்கள். (லேவியராகமம் 25:23)

“ஏனென்றால், காட்டில் உள்ள ஒவ்வொரு மிருகமும், மலைகளில் உள்ள கால்நடைகளும் என்னுடையவை.  - (சங்கீதம் 50:10)

'வெள்ளி என்னுடையது, பொன்னும் என்னுடையது' என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (ஆகாய் 2:8)

இதோ, எல்லா ஆத்மாக்களும் என்னுடையவை; தந்தையின் ஆன்மா மற்றும் மகனின் ஆன்மா என்னுடையது. -  (எசேக்கியேல் 18:4)

ஆண்டவரே, உமது செயல்கள் எத்தனை! ஞானத்தில் அவை அனைத்தையும் உண்டாக்கினாய்; பூமி உங்கள் உடைமைகளால் நிறைந்துள்ளது. - (சங்கீதம் 104:24)

"நான் அவருக்குத் திருப்பிச் செலுத்தும்படி எனக்கு யார் கொடுத்தது? வானத்தின் கீழுள்ள அனைத்தும் என்னுடையது. - (யோபு 41:11)

விபச்சாரமும் வறுமையும்

தமிழர் சமயம்


அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும் (நல்வழி வெண்பா : 20)

விளக்கம்: கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

இஸ்லாம்


'விபசாரத்தை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1. முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2. வருமானத்தை அறுத்துவிடும்
3. ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4. நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

கிறிஸ்தவம் 


ஒரு விபச்சாரி உன்னை வறுமையில் தள்ளுவாள், ஆனால் வேறொருவரின் மனைவியுடன் உறங்குவது உங்கள் உயிரை இழக்க செய்யும்- (நீதிமொழிகள் 6:26)

தொடர்ந்து செய்யும் அறம்

தமிழர் சமயம் 


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல் (குறள் எண்:33)

பொழிப்பு (மு வரதராசன்): செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க.

இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும் செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

பரிமேலழகர் உரை: ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.

(இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: யாவருந் தத்தமக்கு இயலும் அளவாக இயலும் நெறியிலே, அறச்செய்கையைக் கைவிடாமல் செய்யத்தகும் இடங்களிலெல்லாஞ் செய்க. (உடம்பின் நிலைக்கும் பொருளினளவிற்குந் தக்கபடி செய்தலே இயலும்வகை செய்தலென்பது.) 
 
பொருள்கோள் வரிஅமைப்பு:

ஒல்லும் வகையான் ஓவாதே செல்லும்வாய் எல்லாம் அறவினை செயல்.

பதவுரை: ஒல்லும்-இயலும்; வகையான்-திறத்தால், வழிகளில்; அறவினை-அறச்செயல்; ஓவாதே-ஒழியாமல், இடைவிடாமலே; செல்லும்-இயலும், செய்யத்தகும், எய்தும்; வாய்-இடம்; எல்லாம்-அனைத்தும்; செயல்-செய்க.

இஸ்லாம்


 அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 5861)
 
நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது,(எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.  என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹுல் புகாரி: 6464. , அத்தியாயம்: 7. தயம்மும்)  
 

கிறிஸ்தவம் 


நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது. - (கலாத்தியர் 6:9)