தூய்மை

தமிழர் சமயம் 

தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று
வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள். (திரிகடுகம் 78)

பொருள்: தூய்மையுடையவராய் இருத்தலும், உண்மையுடையவராயிருத்தலும், தீமையைத் தருவதனை நினையாமலும், சொல்லாமலும் இருத்தலும், தவத்தார் மேற்கொண்ட கொள்கைகளாகும்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும் (அதிகாரம்:வாய்மை குறள் எண்:298)

பொழிப்பு (மு வரதராசன்): புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.இஸ்லாம் 

இஸ்லாம் 

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்…. நூல்: புகாரி-381

அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : புகாரி-382 கிறிஸ்தவம் 

கிறிஸ்தவம் 

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். -தீத்து 1:15

யாசிப்போரை விரட்டாதீர்

தமிழர் சமயம்


கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், 'இல் எனக்கு ஒன்று;
ஈக!' என்பவனை நகுவானும், - இம் மூவர்
யாதும் கடைப்பிடியாதார். - திரிகடுகம் 74

பொருள்: கொலை செய்து உண்பவனும், பெரியோரைத் தழுவுகின்ற அறிவில்லாதவனும், இரப்பவனை இகழ்வானும் யாதொரு அறத்தையும் பின்பற்றாதவர் ஆவார்.

இஸ்லாம் 


தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். - (குர்ஆன் 9:60)

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன் 107:1-3

யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு) -  (குர்ஆன் 70:25)

"அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். யாசிப்போரை விரட்டாதீர் - (குர்ஆன் 93:10) 

 

கிறிஸ்தவம் 

எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன். -  உபாகமம் 24:18

உன்னால் முடிந்த எல்லா நேரத்திலும், உன் உதவியைத் தேவையானவர்களுக்குச் செய். உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே. - (நீதிமொழிகள் 3:27-28)

ஒருவன் ஏழைகளுக்கு உதவ மறுத்தால், அவனுக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். - (நீதிமொழிகள் 2113)

அறவோனை அஞ்சும் தீமை *

தமிழர் சமையம்


நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;
மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள். திரிகடுகம் 72

பொருள்: ஐம்புலன்களை அடக்கியவனைப் பார்த்து வறுமை பயப்படும். அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும். வீரனுக்கு எல்லா உயிர்களும் பயப்படும். இம்மூன்றும் மிகவும் வலிமை மிக்கவனாகும்.

இஸ்லாம் 

ஷைத்தான் கூறும் ஆசைவார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் தீமைகளை வெறுத்து ஒதுக்குவதில் உறுதியாக இருந்தால் ஷைத்தான் நம்மைப் பார்த்து பயப்படுவான். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு இருந்ததால் அவர்களைப் பார்த்து ஷைத்தான் அஞ்சியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.....(அப்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள். - அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி (3294)

விருந்தோம்பல்

தமிழர் சமயம்  


'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்
குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்' - ஔவையார் தனிப்பாடல்கள்

பொருள்: செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.

நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்
இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்
மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன். திரிகடுகம் 64

பொருள்: விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.

வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்
கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,
வாளால் மண் ஆண்டு வரும். ஏலாதி 48

பொருள் பழிதருஞ் செயலை விரும்பானாகி, வந்த விருந்தினர்க் கஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும்படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை யறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லுங் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசுரிமையுடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டுகொண்டிருப்பான்.

இஸ்லாம் 


“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்” என்று கேட்டார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் (அபூதல்ஹா (ரலி) எழுந்து) , “நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, “(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே!” என்று சொன்னார்.
அதற்கு அவர் (உம்மு சுலைம்) மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவர், “(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாüக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்” என்று சொன்னார்.
அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தüத்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள், “இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் “வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) “சிரித்துக்கொண்டான்’ என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்…” எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4889)

 கிறிஸ்தவம் 

தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். - தீத்து 1:8 

என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார். என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.  - உன்னதப்பாட்டு 2:4

அமானிதம்

தமிழர் சமயம் 


நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்
எச்சம் இழந்து வாழ்வார். (திரிகடுகம் 62)

பொருள்: நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல். 30

மாண்பு - மாட்சிமை
வௌவாத - அபகரியாத

பொருள்: பிறர் செய்த நன்றியின் பயனை மறவாமல் இருப்பது இனியது. நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாகச் சாட்சி சொல்லாதிருத்தல் இனியது. தம்மிடம் ஒருவர் அடைக்கலமாகக் கொடுத்த பொருளை இன்னொருவர் இல்லாத நேரத்தில் அபகரிக்காமல் இருப்பது இனியது
 
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு. 90

பொருள்: செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்

இஸ்லாம் 

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன்4:58)

கிறிஸ்தவம் & யூதம் 

 7 “ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும். 8 ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்றவாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார். - (யாத்திராகமம் 22:7-8)