எளிமையாக தேடி வாசிக்கும் அளவுக்கு குர்ஆன் மக்களிடமும் சென்று சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியே.
ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தோகோடு பிற மதங்களின் / குறிப்பாக தான் வெறுக்கும் சமயத்தின் நூலை வாசித்து நேரத்தை வீணாக்குவதை விட, தான் நம்பும், விரும்பும் சமய நூலை வாசித்தாலாவது அதை ஏற்று நடக்க அவரவருக்கு உதவியாக இருக்கும்.
ஏனென்றால் வேதம் தான் அறம். தத்தமது வேதத்தை ஓதி, உணர்ந்து, பிறருக்கு சொல்லி தானும் அடங்கினால்தான் வீடு பெற முடியும் என்பது நிதர்சனம்.
சரி விடயத்துக்கு வருவோம். இப்பொழுது குர்ஆன் வசனம் 4:89 என்ன சொல்கிறது என்பதை அதன் முன் பின் வசனத்தோடு வாசித்தால் ஒருவேளை முழு பொருளை அது கொடுக்கலாம்.
நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர். (குர்ஆன் 4:88)
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். (குர்ஆன் 4:89)
ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை. (குர்ஆன் 4:90)
- முதலில், இது இஸ்லாமிய அரசுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறை, எனவே ஒரு தனி மனிதன் இதை செய்ய அனுமதி இல்லை.
- இரண்டாவது, இந்த செய்தியை பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு புரியலாம். இது உள்ளுக்குள்ளே இருந்து நயவஞ்சகமாக செயல்பட்டவர்களைப் பற்றிய செய்தி. மேலும் அவர்கள் வேறு நாட்டவருடன் சேர்ந்து இவர்களுடன் போர் புரியவோ இடையூறு தரவோ திட்டமிடுபவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட சட்டம்.
- மூன்றாவது, நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி வந்த பிறகும் யூதர்களும், கிறிஸ்தவர்களும், சிலையை வாங்குபவர்களும் சம உரிமையோடு அங்கே வாழத்தான் செய்தார்கள். அதற்கு ஆதாரம் உலகில் முதல் முதலில் எழுதப்பட்ட மதீனாவின் அரசியல் அமைப்பு சட்டம்.
நான்காவது, கட்டாயமாக ஒருவரை இஸ்லாத்தை ஏற்க சொல்லுவது நபிக்கே தடை செய்யப்பட்ட ஒன்று என்கிற பொழுது வேறு யார் அதை செய்ய அனுமதி உண்டு?
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)
என்ன தான் அரசாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்ய சொல்வதெல்லாம் தவறு என்று யாராவது நினைத்தால்.. இந்த கட்டுப்பாடு இல்லாத சமயமே இல்லை எனலாம். ஏனென்றால் அனைத்து சமயமும், மறைநூல்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்துள்ளது என்று இஸ்லாம் சொல்கிறது. சரி இது உண்மையா என்று ஆய்வு செய்வோமா?
தமிழர் சமயம் - சைவம்
தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே - (திருமந்திரம் - 246)
கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.
கிறிஸ்தவம் / யூதம்
இறைவன் கொடுத்த நெறியை பின்பற்றாத யூத மக்களுக்கு இறைவன் மோசஸ் மூலம் கொடுத்த தண்டனை என்ன?
19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். …….. 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். 27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான். 28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். (யாத்திராகமம் 32:26–28)
எனவே ஒரு கட்டமைப்பை ஏற்று அதன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அந்த கட்டமைப்பு தண்டனை வழங்குகிறது. இது வேண்டும் என்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கோடு வருபவர்களையும் இந்த கட்டமைப்பை சீகுலைக்கும் எண்ணத்தோடு வருபவர்களையம் எச்சரிக்க இந்த தண்டனைகள் ஏற்படுத்த பட்டுள்ளது. இது ஏறக்குறைய நம்ம நாட்டில் உள்ள அரசியல் அமைப்பு போல, நம் நாட்டில் இருந்த IPC போல. நமது நாட்டு சட்டங்கள் சில குற்றத்துக்கு இப்படி சொல்லுகிறதே, இது நியாமா?
இயல்பாக எல்லா கட்டமைப்புக்குள்ளும் இருக்கும் ஒழுங்குகளை அடையாளம் காணாமல் ஒரே ஒரு சமயத்தை மட்டும் குறை கூறுவது என்பது நிச்சயம் அவரது நோக்கம் பிழை என்று உரக்க சொல்கிறது. ஒரு விடயத்தில் விமர்சிக்கும் முன் தனது மதத்தில் இது போன்று விதிமுறைகள் உண்டா என்று சோதித்து அறிவது அவசியம். ஆனால் ஆன்மீக சிந்தனையும், அறநூல் கல்வியும், தனது சமய நூலின் கல்வியும் , நேர்மையும் தன்னிடம் உண்டா என்று அவரவர் சொத்து கொள்ளட்டும். ஐந்தே விரிவான பதிலை கேள்வி கேட்டவர் முழுதாக வாசிப்பார் புரிந்துகொள்ள முயல்வாரா என்று கூட தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அவரவர் கர்மா அவரவர்க்கே.