உடலினை உறுதி செய்

இஸ்லாம்



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)

அன்றைய அரேபியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரரான ருகானாவை மல்யுத்தப் போட்டியில் வென்றார்கள். பல தடவை அவரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். (அபூதாவூத்)

ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்தால், மேடான பகுதியிலிருந்து கீழே இறங்கும்பொழுது எவ்வளவு வேகம் இருக்குமோ அவ்வளவு வேகமும், அவர்களின் கால்களுக்கு அவ்வளவு பலமும் இருக்கும்.” (திர்மிதீ)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:“நான் அண்ணலாரை விட வேகமாக நடக்கும் ஒரு நபரைக் கண்டதில்லை. அண்ணலாருக்காக பூமியை மடித்து வைத்தது போலிருக்கும். ஒரு இடத்தில் இருப்பார்கள். சில நொடிகளில் வேறொரு இடத்தில் இருப்பார்கள். அவர்கள் நடக்கும்பொழுது அவர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக நாங்கள் சிரமப்படுவோம். ஆனால் அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.” (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“அம்பெறிதலையும், குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)

பலகீனமாக இருப்பதை பற்றி நபி ஸல் அவர்கள் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு காலம் வரும். அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.” அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?”
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”இல்லை. மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனால் வெள்ளத்தின் நுரை போல ஆகி விடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.” அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?” அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: ”இவ்வுலகத்தின் மீது அதிகமான பற்றும், மரணத்தை அஞ்சுவதும்.”வெள்ளத்தின் நுரை போல என்பது பலஹீனத்தைக் குறிக்கும். ஆகையால் அனைத்து விதமான பலஹீனங்களையும் நாம் களைய வேண்டும். அனைத்து விதமான பலங்களையும் நாம் பெற வேண்டும்.

 

தமிழர் சமயம் 


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (திருமந்திர பாடல் 724)
 
பொழிப்புரை : உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன். 

"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' (திமந்திர பாடல் 725)

பொழிப்புரை : முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.

உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம்?

சாலையில் வாழைப்பழ வியாபாரி தலையில் வாழைப்பழங்களைச் சுமந்தபடி செல்கிறார். அவரை "வாழைப்பழம்... இங்க வாங்க' என அழைப்போம்... கீரை சுமந்து விற்பவரை அழைக்க வேண்டும் எனில், "கீரை....' எனக் குரல் கொடுத்து அழைப்போம். ஒருவர் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாரோ, அதைக் கொண்டு அவரை அழைப்பது வழக்கம். நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர்.

கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்...

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'

இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும்.

உணவு குறைய உயிர் குன்றும் 

இறைஇறை யின்சந்தித்து என்பொடு ஊன்சார்த்தி
 முறையின் நரம்புஎங்கும் யாத்து - நிறைய
 அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
 புகாச்சுருக்கில் பூட்டா விடும். - (அறநெறிச்சாரம் பாடல் - 112)

பொழிப்புரை: உறுப்புகளில் மூட்டு வாயை ஒன்றுடன் ஒன்று பொருத்தி எலும்புடனே தசையைச் சேர்த்து முறையே உடம்பில் நரம்பால் எல்லா இடங்களையும் உறுதியாய்க் கட்டி மிகுதியாக ஆசையை நிரப்பிய உடல் என்ற வண்டியை ஏறிச் செலுத்தும் உயிர் என்னும் பாகன் உணவைக் குறைத்தால் செலுத்துவதை விட்டுவிடுவான்.

3 கருத்துகள்:

  1. உடல் பெற்றதால் உண்டாகும் பயன் அறநெறிச்சாரம் பாடல் - 171

    பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாள்செறிந்து
    விட்டுஒழிவது அல்லால் அவ் வெங்கூற்றம் - ஓட்டிக்
    கலாய்க் கொடுமை செய்யாது கண்டது பாத்து உண்டல்
    புலால்குடிலால் ஆய பயன்.

    விளக்கவுரை முந்தைய பிறவியில் அறம் செய்யாது குறைவான வாழ் நாளை இப்பிறவியில் பெற்றவர்களைக் கொன்றும், முன் பிறவியில் அறம் செய்ததால் நீண்ட வாழ்நாளைப் பெற்றார்க்கு அவர்க்கு முன் தம் வாளை உறைக்குள் வைத்து அவரைக் கொல்லாது விட்டுச் செய்வதன்றி அக்கொடிய இயமன் தன் மனம் போனபடி முறையில்லாது சினம் கொண்டு துன்பம் செய்யான். (ஆதலால்) ஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல், புலாலினாலாய உடம்பினைப் பெற்றதாலுண்டாம் பயன்.

    பதிலளிநீக்கு
  2. தன்னைப் போற்றுவதும் ஈகையே யாகும் அறநெறிச்சாரம் பாடல் - 180

    சோரப் பசிக்குமேல் சோற்றுஊர்திப் பாகன்மற்று
    ஈரப் படினும் அதுஊரான் - ஆரக்
    கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும்; அதனால்
    முடிக்கும் கருமம் பல.

    விளக்கவுரை உணவால் நிலைபெறும் உடலான ஊர்தியைச் செலுத்தும் உயிர்ப் பாகன், மிக்க பசியை அடைவானாயின் வாளால் அறுப்பினும் அதைச் செலுத்தமாட்டான். (ஆயினும்) அந்த உடலால் முடிக்க வேண்டிய கருமங்கள் பல உள்ளன. ஆதலால் அந்த உடலைத் தொழிற்படச் செய்வதற்கு ஏற்ப உண்பித்துச் செயல்களை முடித்துக்கொள்ளல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. உடம்பின் இன்றியமையாமை
    அறநெறிச்சாரம் பாடல் - 213

    அளற்றுஅகத்துத் தாமரையாய் அம்மலர்ஈன்ற ஆங்கு
    அளற்று உடம்பாம்எனினும் நன்றுஆம் அளற்றுஉடம்பின்
    நல்ஞானம் நல்காட்சி நல்லொழுக்கம் என்றவை
    தன்னால் தலைப்படுத லான்

    விளக்கவுரை
    சேற்றில் வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல், தூய்மையற்ற உடம்போடு கூடி வாழும் போதே, நல்ல ஞானமும், நல்ல காட்சியும், நல்ல ஒழுக்கமும் ஆகிய மும்மணிகளை ஒருவனால் அடையக் கூடும். ஆதலால் உடம்பு மலமயமானது என்றாலும் அதனுடன் சேர்ந்து வாழ்தல் நன்று.

    பதிலளிநீக்கு