தவம்

தவமும் பிராத்தனையும் ஏன்?

 

தமிழர் சமயம்


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (குறள் 265)

பொருள்: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (குறள் - 266)

பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்; வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்; கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை; நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது; சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்; யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று வேண்டுறோம்.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். (மூதுரை பாடல் 7)

பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோஅவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. நாம் செய்யும் தவத்தின் அளவே நாம் பெரும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின் அளவே. 
 

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை”. அறி: உக்பா பின் ஆமிர் (ரலி), (நூல்: முஸ்லிம்-397)
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள். அறி: ஸவ்பான் (ரலி). (நூல்: அஹ்மத்-22414 (22467)
 
உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.(அல்குர்ஆன்-2:186)

தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன் 39:53)

கிறிஸ்தவம்

உங்களில் யாருக்காவது ஞானம் இல்லாதிருந்தால், குறை காணாமல் அனைவருக்கும் தாராளமாகக் கொடுக்கும் கடவுளிடம் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் கேட்கும்போது, ​​நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் சந்தேகப்படுகிறவர் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட கடல் அலையைப் போன்றவர் - (யாக்கோபு 1:5-6) 
 

ஆற்றல் பெற தவம் அவசியம்  
தமிழர் சமயம்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (குறள் - 270)

பொருள்ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். 

கருத்து: தவம் செய்யாதவற்கு ஆற்றல் இல்லை  

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332) 
 
பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரைசத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி; 

குறிப்பு: எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ, பெண்ணோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். இதுமட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், சமயத்தை (சிவன் சொல்லா பொருளில் கையாண்டால் அது சிவா சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம்.  

இஸ்லாம் 

நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். - (குர்ஆன் 7:10)

மக்கள், உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான். (அல் அன்பால் : 26)

கிறிஸ்தவம் 

எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள் “கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். பயப்படாதே, நான் உனது தேவன். நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்” - (ஏசாயா 41:10)

கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார். ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.” - (ஏசாயா 40:29)

கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப் போங்கள்(1 நாளாகமம் 16:11)