அனைத்தும் அறிந்ததாக உங்களை கருதாமல் இந்நூலினுள்ளே நீங்கள் நுழையும் முன் இதுவரை நீங்கள் அறிந்த அனைத்தையும் சிறிது காலம் மறந்து, பின் உண்மையை தேடும் நோக்கில் இதனுள் நுழைந்தால் இந்த வாய்மை உங்களுக்கு பலன் தரலாம்.
இது சுய சரிதை அல்ல, அதற்கு நான் தகுதி உடையவனும் அல்ல, எந்த சுயசரிதையில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஏனென்றால்,
- சுயசரிதை எழுதுவோரின் நேர்மையும், நியாபக திறனும், மொழி ஆற்றலும் அதில் எழுதப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும். ஆனால் அதற்கான தகவல்களை நாம் அவரின் சுயவரலாற்றிலிருந்து பெறமுடியாது. எனவே எழுதுபவரின் நேர்மையையும் நியாபக சக்தியையும் உறுதி செய்ய முடியாத நிலையில், சுயசரிதையை கொண்டு ஒருவரை எடை போட முடியாது.
- சான்றோரின் வரலாறுதான் மக்களையும், சமூகத்தையும் பண்படுத்தும். ஆனால் யார் சான்றோர்? அதற்க்கான வரைவிலக்கணத்தை எங்கே பெறுவது? தொல்காப்பியரும், வள்ளுவரும், திருமூலரும், ஆப்ரஹாமும், இயேசுவும், முகமதுவும், மேலும் நாம் அறிந்த எந்த சான்றோரும் சுய சரிதையை எழுதி இருக்கவில்லை. ஏன் என்று நாம் சிந்தித்ததுண்டா? அதற்கு அவசியமில்லை என்பதுதான் கரணமாகும்.
- வரலாறு என்பது சமகாலத்தில் வாழ்ந்த பல்வேறு மக்களால் பேசப்பட்டு, நேர்மையான அறிஞர்களால் எழுதப்பட்டு, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் படுவதாகும்.
வாழ்கைக்கு சான்றாக எடுத்துக்கொள்ள பட வேண்டியவனின் தகுதி என்ன என்று கற்று அறியாமல் சமகாலத்தில் பெண்பித்தன், தற்பெருமைக்காரன், பொய்யன், திருடன், ஏமாற்றுக்காரன், நடிகன், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவன், போலி நல்லவன் என்று யார் யாரையோ குருவாக, தலைவனாக, சான்றோனாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். பரிதாபமான நிலையல்லவா இது?
- ____________ஐ செய்வது சரியா? தவறா?
- ____________ஐ செய்யலாமா? வேண்டாமா?
- இதன் விளைவுகள் நமையாக இருக்குமா? அல்லது கெடுதியாக இருக்குமா?
ஆனால் இதற்கான பதிலை நாம் யாரிடம் அல்லது எதில் தேடுகிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த தேடலுக்கு பதில் தரும் நூலாக இது அமையும் என்று நம்புகிறேன்.
நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வி, இன்ப துன்பம், சரி பிழை போன்ற நமது அன்றாட தேடலுடன் தொடர்புடைய நூலக இது அமையும். சுய விளக்கங்களைவிட, சரியான நூலிலிருந்து ஆதாரங்களையும் அதற்கான அறிஞர்களின் விளக்கங்களையும் குவித்து உங்களின் சிந்தனையை முடுக்கிவிடுவதே இந்த நூலின் நோக்கம்.