மனிதர்கள் ஏன் மதங்களை உருவாக்கினார்கள்?

கேள்வியில் உள்ள பிழை என்னவென்றால், மதங்களாவன மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்ற கருதுகோளை கொண்டதாக உள்ளது. இந்த முடிவுக்கு வரும் முன்னர் சில விடயங்களை நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது.

நாம் காண்பனவற்றில் பெரும்பாலான மதங்கள் ஒரே மதத்தின் இடம் பொருள் காலத்திற்க்கான வெவ்வேறு பதிப்புகள் ஆகும், அவை அனைத்தையும் படைத்த ஒரே கடவுளிடமிருந்து வந்தவை. ஆனால் அவற்றில் சமீபத்தியது பின்பற்றப்பட வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ள ஒரு அரசாங்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் சட்டம் என்பது சூழ்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அவற்றில் சட்டத்தின் சமீபத்திய திருத்தம் பின்பற்றப்படும்.

உங்கள் வேதங்களைப் பாருங்கள், ஒரே புத்தகத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் பட்டியலைக் காணலாம்.

உதாரணமாக,

  • நீங்கள் இந்துவாக இருந்தால், RIG வேதத்தில் 356 ஆசிரியர்களைக் கொண்ட 10 புத்தகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும். அவர்களில் சிலர் அகினி, வாயு, இந்திரன், வருணன். இன்னும் உங்களிடம் மற்ற இரண்டு வேதங்களும் உள்ளன.
  • நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், குர்ஆன் என்பது உலகெங்கிலும் உள்ள மற்ற அனைத்து வேதங்களின் தொடர்ச்சியாகும் என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம், அதற்க்கான ஆதாரங்கள் நான்மறைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது என்று குர்ஆன் கூறுகிறது.
  • நீங்கள் தமிழராக இருந்தால், குறள், புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருமந்திரம், நல்வழி என்று பல்வேறு நூல்கள் உள்ளன. புறநானூற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதை 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். நமக்கு பரிச்சயமானது திருக்குறள் மட்டும் தான், ஆனால் அவ்வையாரின் ஞானக்குறளும் காகபுசுண்டரின் குறளும் நாம் அறியவேண்டிய சில பதிப்புகள். 

எனவே ஒவ்வொரு வேதத்திற்கும் பலவேறு ஆசிரியர்கள் பல்வேறு காலத்திலிருந்து இடம்பெற்று உள்ளனர் அவர்கள் கொள்கையில் ஒருவருக்கு ஒருவர் முரண் பட்டவராகவும் இருந்திருக்கவில்லை என்பது அந்த நூல்களை வாசிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

இப்போது சொல்லுங்கள், ஒரே புத்தகம் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து ஏராளமான ஆசிரியர்களால் தொடர்ந்து எழுதப்படுவது என்பது எப்படி சாத்தியம்? அவர்களின் அடிப்படைக் தத்துவத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. எனவே அவர்களின் கூற்றுப்படி - சக்திவாய்ந்த, மரணமில்லா,மேலும் ஆழமான அகலமான அறிவுடன் வேறு ஒன்று உள்ளது அது அவர்களை இணைக்கிறது என்று நாம் முடிவு செய்யலாம். அது கடவுள் என்று கொள்ளலாம்.

சரி இருக்கட்டும், இந்த ஆதாரங்கள் ஒரு பாரம்பரிய தொடர்ச்சி அல்லது ஒரே ஒரு நூலை உறுதி படுத்தலாம் ஆனால் அனைத்தும் ஒரே இறைவனிடம் இருந்து வந்தவை என்பதை நிறுவவில்லையே என்று கருதுவதாக இருந்தால், இதற்கான பதிலை திருமந்திரம் தருகிறது.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
 
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

இதை வலுப்படுத்த திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 14:4)

எனவே வெவ்வேறு வேத நூல்களில் உள்ள தொடர்ச்சி மட்டுமல்ல, அனைத்து வேத நூலும் ஒரே இறைவனிடம் இருந்துதான் என்று அறிய இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் திறந்த மானதுடன் உண்மையை தேட நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

குறிப்பு: "வேதம் நான்கு" என்றுநான்கு வேத பாரம்பரியங்களை குறிப்பிடும் இது போன்ற வசனங்களை தன்வயப்படுத்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி "அதர்வண வேதம்" ஆகும். நான்கு வேதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்று குறிப்பிடுவதற்காக ரிக், யஜுர் மற்றும் சாமத்துடன் அதர்வணம் என்கிற வேதமல்லாத நூலை வேதமாக குறிப்பிட துவங்கினர். எனவே நால்வேதம் இந்து மதத்துக்கு சொந்தமானதல்ல மாறாக உலகில் உள்ள இறைவனால் வழங்கப் பட்ட அனைத்து வேதங்களும் நான்கு பாரம்பரியங்களை கொண்டது என்று பொருள்.

முடிவுரை

இந்த சிக்கல்களெல்லாம் ஒரு சிறிய அடிப்படையை அறியாததால் தோன்றியது.

    1. ஒரு சமயத்தை யாரோ ஓர் மனிதன் நினைத்ததால் உருவாக்கிவிட முடியாது.
    2. ஒரு சமயம் ஒன்று அல்லது பல அந்நாள் ஒன்றுக்கொன்று முரண்படாத வேதத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும்.
    3. ஒரு வேதம் ஒரு முனைவனால் மக்களுக்கு தரப்படும். அந்த முனைவனை பற்றிய தீர்க்க தரிசனம் முன்னுள்ள மறை நூலில் சொல்லப்பட்டு இருக்கும், பின்வரும் வேதத்தில் சான்று அளிக்கப்பட்டு இருக்கும். 
    4. அந்த முனைவனுக்கு அவ்வேதம் தேவரால் தரப்படும்.
    5. அந்த தேவருக்கு அவ்வேதம் அனைத்தையும் படைத்த தெய்வத்தால் தரப்படும்
    6. இந்த அமைப்பில் உள்ள சமயங்கள்தான் உண்மை சமயம், இதுவல்லாமல் உள்ள சமயங்கள் அனைத்தும் பொய் மதங்கள்.
    7. சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் தெய்வத்தால் தரப்பட்டது. ஆனால் இவைகளை இணைத்து புது மதம் உருவாக்க யாருக்கும் அனுமதி இல்லை.
    8. அப்படி செய்தால் அதை நியாயப் படுத்த சிவனையும் விஷ்ணுவும் மாமன் மச்சான் போல கதை எழுத வேண்டி வரும். எனவே "அரியும் சிவனும் ஒன்னு" என்ற சத்தியத்தை கூறும் பொழுது அதை புரியாத நிலையில் தான் மக்கள் இருப்பர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் இருப்பதை மறுக்கமுடியாது ஆனால் அது சில தசாப்தங்களுக்கு மேல் நீடிக்காது. அவைகளை எளிதாக அடையாளம் காணலாம் ஏனென்றால் அவைகள் தங்களுக்குள்ளும் கடவுளின் புத்தகங்களுடனும் அடிப்படையிலேயே முரண்பாடுகளைக் கொண்டு இருக்கும்.

கடவுள் படைத்த இந்த பிரம்மாண்டமான வடிவமைப்பை (அறிவியலில் மட்டுமல்ல, சமயங்களிலும்) இந்த புத்தகத்தில் தெளிவுபடுத்தி இருப்பது போல நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் அவரை ஒருக்காலமும் மறுக்க முடியாது.

ஊழ் எனபது விதியா? அல்லது முன் ஜென்மமா?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். - குறள் 380

மு. வரதராசன் உரை: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

இக்குறளில் "ஊழ்" என்பதற்கு "முன் ஜென்மம்" என்பதைவிட "விதி" என்பதே பொருந்தும். 7 பிறவி என்றொன்று இருந்தால் முதல் பிறவி உள்ளவருக்கு முன் பிறவியின் வலிமை அல்லது தாக்கம் இருக்காது. எனவே இது  பொது விதியல்ல. ஆனால் விதியின் வலிமை ஒவ்வொரு உயிருக்கும் உண்டு.

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு. - நாலடியார் 110

பதவுரை
பிறழ் - vary / மாறுபடு
உறுகாலம் - உரிய நேரம்
ஊற்று - support / ஊன்றுகோல்
பொறி - (தலை) எழுத்து
பரிவு - வேதனை
இறுகாலம் - இறுதி நேரம் (மரண நேரம்

பொருள் கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் குறையமாட்டா, வளரமாட்டா, முறைமாறி வரமாட்டா, துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்டா, எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? (விதி குறைந்தும், வளர்ந்தும், மாறியும் வருவதில்லை. வரும் காலத்து நிச்சயம் வரும். ஆதலால் நேரும் துன்பங்கள் குறித்துத் துயருறுவது வீண்). 

உங்களுக்கான சில கேள்விகள்

  1. சில பொழிப்புரையாளர்கள் முன்ஜென்ம வினையின் பயன் என்றும் ஊழை குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால் நாம் செய்யும் செயலுக்கான பலன் நாம் செய்த அதே வரிசை முறையில் முறை பிறழாமல் நமக்கு கிடைக்கிறதா?
  2. விதி காலத்தின் அடிப்படையில் நடைபெறுமா? அல்லது வினைப்பயன் நடைபெறுமா?
  3. முந்தய பிறப்பின் வினைப்பயன் (அப்படி ஒன்று இருந்தால்) கரு அமைந்த காலத்தில் ஏற்படுமா அல்லது முந்தய பிறவியில் நம்மால் வினை ஆற்றப் படும்பொழுது ஏற்படுமா?
முடிவுரை

ஊழ்வினை என்பதை முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம் என்று சொல்கிறார்கள். முன் ஜென்மம் என்கிற ஒன்றே கிடையாது. அதை பல்வேறு சான்றுகள் மூலம் நிறுவ முடியும். காண்க.

"ஊழ்" என்பதும் "வினை" என்பதும் இருவேறு முரணான பொருளை கொண்ட சொற்கள்.

மனிதனின் வாழ்க்கை நிகழ்வுகள் சில கூறுகளின் கலவை ஆகும். அவையாவன,

    1. ஊழ் (அ) விதி (அ) கத்ர் (அ) fate
    2. வினை (அ) கருமம் (அ) அமல் (அ) deeds
    3. இரஞ்சுவதால் கிடைக்கும் இறைவனின் அருள் (அ) நாட்டம்

இதில் ஊழ் என்பது இறைவனால் ஏற்கனவே வகுக்கப் பட்டது

வினை என்பது மனிதனால் செய்யப்பட்டது

"ஊழ்வினை" என்கிற பதம் ஏதாவது முதல் அல்லது வழி நூலில் நேரடியாக இடம்பெற்றதாக நான் அறிந்ததில்லை. அறிந்தவர்கள் அதற்கான சான்றை கொடுத்தால் நலம். "ஊழ்" என்றே தனித்து பயன்படுத்த பட்டதன் காரணம் அது வினையின் விளைவல்ல என்பதால். இரண்டுக்கும் வெவ்வேறு வரையறைகள். பொழிப்புரையாளர்களின் கருத்து பிழை. ஊழ் என்பது விதித்தானே தவிர சென்ற பிறவியோ அல்லது முன்ஜெம பாவ புண்ணியமோ அல்ல. முன்ஜன்மம் என்ற ஒன்று இல்லவே இல்லை. 

ஊழிக்காலம் என்பது உலகம் தோன்றி பறந்து மீளவும் அழிந்து ஒடுங்கும் ஒரு பரந்த கால அளவை குறிப்பதாகும். இதன்மூலமும் ஊழ் என்பதை விதி என்றே விளங்கலாம். 

குறிப்பு சிலப்பதிகாரத்துக்கு முன் வந்த எந்த நூலிலும் "ஊழ்"-உம் "வினை"யும் ஒன்றாக கையாளப்பட வில்லை. ஊழ்வினை என்கிற வார்த்தை பிரயோகத்துக்கும் அது உண்டாக்கிய குழப்பத்துக்கு சிலப்பதிகாரம் தான் தொடக்கப் புள்ளி என்று கருத முடிகிறது.

மற்றவர்களின் தவறுகளை புறக்கணிக்க எந்த சிந்தனை, செயல்முறை எனக்கு உதவும்?

மன்னிக்கும் மனப்பான்மை தான் சிறந்த செயல்முறை அதுவே சிறந்த சிந்தனை..!

தமிழர் சமயம்


ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ். (திருக்குறள்:156)

பொழிப்புரை : [தமக்குத் துன்பம் இழைத்தவரைப் பொறுமை அற்றுத்] தண்டிப்போர்க்கு ஒரு நாளை இன்பம்; [மன்னித்துப்] பொறுத்தோருக்கு மரணத்திற்கு பிறகும் துணை நிற்கும் புகழ் [கிட்டும்].

பொருள்: ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

பொன்றும் - பொன்று - அழிதல்; இறத்தல்; தவறுதல்


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின்று நன்று (அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0152)

பொருள் வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் மன்னிக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.

இப்பாடலில் உள்ள பொறுத்தல் என்பதற்கு மன்னித்தல் என்று சிலரும் மறத்தல் என்றதற்கு வெகுளாமை என்று மற்றும் சிலரும் பொருள் கூறினர் 

இஸ்லாம்

…அவர்களை மன்னித்து விடவும், பொருட்படுத்தாது விட்டுவிடவும், அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். - (திருக்குர்ஆன் 24:22)

கிறிஸ்தவம்

பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். - (பைபிள் :சீராக் 28:1&2)

உமக்கு எதிராக பாவம் செய்தவர்களை மன்னித்தீர்களானால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை மன்னிப்பார். நீங்கள் மற்றவர்களை மன்னிக்க மறுத்தால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டார். (மத்தேயு 6: 14-15)

முடிவுரை:

உலகில் நிகழும் அனைத்து மத இன பூசல்கள் மன்னிப்பின் வெகுமதியை அறியாததாலே நடக்கிறது. விட்டுக்கொடுப்பவர் ஒருநாளும் கெட்டுப் போவதில்லை.

மன்னிப்பு எந்த அளவு சாத்தியம்? சில நிகழ்கால உதாரணங்கள்:


தந்தை தனது மகனின் கொலையில் தொடர்புடைய மனிதனை மன்னித்து அணைத்துக்கொள்கிறார்


இந்த அம்மா தனது மகனைக் கொன்ற வாலிபரை நேருக்கு நேர் சந்தித்தார். நீதிமன்ற அறை வீரர்கள் அவளைப் போன்ற பதிலைப் பார்த்ததில்லை


அசிம் கமிசாவின் மகன் தாரிக், 1995 இல் 20 வயதில் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர் டோனி ஹிக்ஸ், 14 வயது சிறுவன், பழைய கும்பல் உறுப்பினரால் தூண்டுதலுக்கு ஆளானான். ஆரம்ப அதிர்ச்சி தணிந்த பிறகு, துப்பாக்கியின் இருபுறமும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதை அசிம் உணர்ந்தார். டோனியின் தாத்தா பிளெஸ் பெலிக்ஸ் உடன் இணைந்து, இளைஞர்களின் துப்பாக்கி வன்முறையைத் தடுக்கும் நோக்கத்துடன் தாரிக் கமிசா அறக்கட்டளையை அசிம் நிறுவினார்

கடவுளின் பாலினம்

 இறைவனை எவரும் கண்டதில்லை என்பதும் அவன் நிகரற்றவன் எனபதும் அவன் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்பதற்கான போதுமான தகவல் ஆகும். இருந்த போதிலும் சிவன், அல்லாஹ், கர்த்தார் போன்ற இறைவனுக்கான வெவ்வேறு மாதத்தில் உள்ள பெயர்களை அவன் இவன் என்று அழைப்பதால், இறைவன் ஆண் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே நேரடியான மாறைநூல் ஆதாரமோ அல்லது அந்தந்த சமய வல்லுனர்களின் ஆய்வு கருத்தும் இங்கே பதிலாக கோர்க்கப்படுகிறது.

தமிழர் சமயம் 

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)

உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.

குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம். 
 
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு. - (ஞானக்குறள் 155.)

பெண்-ஆண்-அலி என்னும் பெயர் இல்லாததாகி, அறிவு உடலாய்(சிதாகாய) வியக்கும்படி நிற்கும் அவன் தான் சிவன்.

இஸ்லாம்

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இறைவனை எப்படி அழைக்கிறோம் என்பதை விட இறைவன் தன்னைப் பற்றி எப்படி அழைக்க சொல்கிறான் என்பதுதான் முக்கியம்!

112:1 "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
112:2 அல்லாஹ் தேவைகளற்றவன்.
112:3 (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
112:4 அவனுக்கு நிகராக யாருமில்லை.

 அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் போது 'ஹு' 'ஹுவ' என அவன் இவன் என்று குறிப்பிடுவதால் நாங்களும் அப்படியே அழைக்கிறோம் !

மேலும் ஆணா? பெண்ணா? என்றால் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கத் தேவையற்றவன் ! எந்த மனித பலவீனமும் இல்லாத எல்லையற்ற ஆற்றல் அவன்!

அல்லாஹ் என்னும் அரபுச் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ! அதற்கு பன்மையும் கிடையாது!

கிறிஸ்தவம்

கர்த்தருக்கு பாலினம் இல்லை என்று ஆரம்பகால கிறிஸ்த்தவர்கள் நம்பி வந்ததாக பல நூல்கள் வெளிவந்துள்ளன.

கத்தோலிக்க திருச்சபையின் கேடசிசம், புத்தகம் 239, கடவுள் "தந்தை" என்று அழைக்கப்படுகிறார், அதே நேரத்தில் மனிதனுக்கான அவரது அன்பு தாய்மையாகவும் சித்தரிக்கப்படலாம். இருப்பினும், கடவுள் இறுதியில் பாலினத்தின் மனிதக் கருத்தை மீறுகிறார், மேலும் "ஆணோ பெண்ணோ அல்ல: அது கடவுள். - Gender of God - Wikipedia

உண்மையில், யாத்திராகமம் 3 இல் மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் தனிப்பட்ட பெயர், யாவே, பெண் மற்றும் ஆண் இலக்கண முடிவுகளின் குறிப்பிடத்தக்க கலவையாகும். எபிரேய மொழியில் கடவுளின் பெயரின் முதல் பகுதி, "யா" என்பது பெண்பால், மற்றும் கடைசி பகுதி, "வே" ஆண்பால். யாத்திராகமம் 3 இன் வெளிச்சத்தில், பெண்ணிய இறையியலாளர் மேரி டேலி, “‘கடவுள்’ என்பது ஏன் பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்? ஏன் ஒரு வினைச்சொல் இல்லை - எல்லாவற்றிலும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் மாறும்." - What the early church thought about God's gender

முடிவுரை


தெய்வம் ஆணுமல்ல பெண்ணுமல்ல ஆனால் உயர்திணை பால் என்று அறிய முடிகிறது. தெய்வத்தை அவன் அவள் என்று கூறுவதற்கான காரணம், அது இது என்று அஃறிணையாக அழைக்க கூடாது என்ற அவாவாக இருக்கலாம்.

இறைவன் அருளால் தான், இது நடைபெற்றது என்பதான ஏதேனும் ஒரு சம்பவம் சொல்ல இயலுமா?

இறைவனின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது..! செல்வ வளங்கள் மட்டுமல்ல, அவனது சோதனையும் அவனது அருள்தான் என்று கூறும் மறைநூல்களின் வரிகள் உங்களுக்காக


தமிழர் சமயம்


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே - திருமந்திரம் கடவுள் வாழ்த்து

பொருள்: இரண்டவன் இன்னருள் – இரண்டவன் இன்னருள் என்பதில் அவனது அருள் இருதிறப்படும் என்ற பொருள்பட அறக்கருணை, மறக்கருணையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கு நடக்கும் நல்லவை தீயவை இரண்டையும் இறைவனே அருளாக வழங்குகிறான்.

நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன் - (அதிகாரம்:ஊழ் குறள் எண்:379)

உரை: நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு? இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.

இஸ்லாம்

ஒரு மனிதனை சோதிப்பதற்காக அவனது இறைவன் அருட்கொடைகளை அள்ளிகொடுத்து அவனை கண்ணியப்படுத்தும் போது, எனது இறைவன் என்னை கண்ணியப்படுத்தி விட்டான் என்று அவன் கூறுகிறான். அவனை சோதிப்பதற்காக பாக்கியங்களை சற்று குறைக்கும் போது எனது இறைவன் என்னை கேவலப்படுத்தி விட்டான் என்று அவன் உரைக்கிறான். அவன் அவ்வாறு கூறலாகாது. - (அல்குர்ஆன். 89.15.16)

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 57:22&23)

அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி) மற்றும் அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலம் அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிமுக்குத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவனுடைய தவறுகளுக்குப் பரிகாரமாக்காமல் இருப்பதில்லை’. (புகாரி, முஸ்லிம் (அல் வஸப்: நோய்)  ஹதீஸ் 37

கிறிஸ்தவம்

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? - (பைபிள்: புலம்பல் 3:37-42)

ஒளியை உருவாக்கி இருளை உருவாக்குபவன், நல்வாழ்வை ஏற்படுத்துபவன், பேரழிவை உருவாக்குபவன்; இவை அனைத்தையும் செய்யும் இறைவன் நானே. - (ஏசாயா 45:7

முடிவுரை

மனிதனுக்கு நிகழும் ஒவ்வொன்றும் இறைவனின் அருள் ஆகும். நடக்கும் நன்மைக்கு நன்றி சொல்லும் பொழுதும் நடக்கும் தீமைக்கு இறைவனுக்காக பொறுமையாக இருக்கும் பொழுதும் அந்த அருளின் முழு சுவையை நாம் அடைய முடியும்.