தெய்வத்தின் வரையறை

தெய்வத்த்துக்கு நாம் வரையறை தர முடியுமா? முடியாது.

ஏன்? நம்மில் தெய்வத்தை கண்டவர் யாரும் இல்லை.

பிறகு தெய்வத்தை எப்படி அறிவது? அவன் வழங்கிய மறைநூலில் அவனே அவனை எப்படி வரையறுக்கிறான் என்பதை கற்று அறிவதன் மூலம் தெய்வத்தை அறியலாம்.

அவன் வழங்கிய மறைநூல் எவை என்று எவ்வாறு அறிவது? அவற்றை அவனது மறைநூல்கள் மூலமே அறிய முடியும். இதை தேடி கற்று தெளிவத்தைத்தான் கல்வி என்பர்.  

எத்தனை தெய்வம் உண்டு? உண்மை தெய்வம் ஒன்று மற்றதெல்லாம் பொய் தெய்வங்கள் - அதையும் மறைநூல்கள் வாயிலாகவே அறிய முடியும். தெய்வத்தின் வரையறையாக தெய்வமே கூறியவற்றை சரியான மறைநூல்கள் வாயிலாக அறிய முடியும்.

இந்நூலின் அடுத்து வரும் பக்கங்கள் இதை விவரித்து கூறுகிறது. 


சரி பிழை-களை வரையறுப்பது யார்?

தமிழர் மதம்

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் - நல்வழி 38

விளக்கம்நல்லது இது என்றும், கெட்டது எது என்றும்இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் அதுதான் உண்மை என்றும் எண்ணாதே. கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது. 

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே (திருமந்திரம் - 1647)

விளக்கம்புண்ணியம், பாவம் என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின் பயனாக நன்மையும், பாவத்தின் பலனாகத் தீமை, துயரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள் சிலரே. அவர்கள் ஞானிகள் எனப்படுவார்கள். புண்ணியம், பாவம் எனும் இவை இரண்டும், ஜீவன்களைப் பற்றிட வரும் பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின் ஆணி வேரையே அறுத்து, மனதைத் தீய வழிகளில் செல்லாதபடித் தடுக்கும் மன உறுதி பெற்றால், பரம்பொருள் இருக்குமிடம் அறியலாம். ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்!

இஸ்லாம்


(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? (குர்ஆன்:90:10)

"அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) சிலவற்றை விலக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை ஆகுமாக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே! (நபியே! இவர்களிடம்) கேளுங்கள் ‘இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கிறீர்களா?'” (குர்ஆன் 10:59)

கிறிஸ்தவம் & யூத மதம்


எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9, 17

"நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்" என்ற VIRAL பதிவிற்கு இந்து புத்தகங்களின் பதில்கள்

இந்துவாக பெருமை கொள்ளுங்கள்!
அதோடு கொஞ்சம் அதன் உண்மை நிலையை வாசியுங்கள், ஆய்வு செய்யுங்கள்.


இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....




1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்?

அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் சஸம்ஷயாத்மா வினஷ்யதி நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன - கீதை 4:40

பொருள்: ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. - பகவத் கீதை 4.40

பதில் : இறை உணர்வை அடையாதவர்களுக்கு இன்பம் இல்லை எனவே குற்றம் என்றுதானே இந்துமதம் சொல்கிறது.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்?


பதில்: கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது 
என்பது இந்துமத மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி. - கோவில் எதற்கு? 

ஆலயம் தொழுவது சாலமும் நன்று - ஆத்திச்சூடி 
என்பதற்கு என்ன பொருள்?

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்?

பதில்: மற்ற மதமும் கட்டாய படுத்துவதில்லை, எல்லாமே வசதி வாய்ப்பை பொறுத்துதான். மேலும் தமிழர்களை அவர்கள் கட்டயப் படுத்த முடியாது ஏனென்றால் இந்து வேறு சைவம் வேறு.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்?

பதில்: வேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே! (திருமந்திரம் 51)

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்?

பதில்: திருநீர் இடுவதும், ராமம் போடுவதும், கையிலும் கழுத்திலும் கயிறு காட்டுவதும், காது குத்துவதும், தாலி கட்டுவதும், தலையில் சிண்டு வைப்பதும், பூணூல் போடுவதும் தாழ்ந்த சாதிகளை தவிர அனைவரும் கட்டாயம். தாழ்ந்த சாதிகள் எதுவும் அணியததே இங்கு அடையாளம் தான்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

பதில்: இந்தியாவிற்கு வாரணாசியிலும், தமிழகத்திற்கு காஞ்சியிலும் இருக்கும் சங்கராச்சாரிகள் காதில் விழாமல் பேசுங்க சகோ. இப்பொழுது ஆர்.எஸ்.எஸ் அதை கையில் எடுக்க முயற்சிப்பது அனைவரும் அறிந்தது.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

பதில்: பிறகும் நித்தியானந்தா போன்றவர்கள் பின்னே செல்பவரும் இந்துக்களே. உண்மையில் இது போன்றவர்களை தலையை துண்டிக்கும் தைரியம் கொண்ட மதங்களும் உண்டு. தமிழர்களுக்கு இதுபோன்ற சாமியார்ளும் தேவையில்லை, ஏமாற்றமும் தேவையில்லை.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.?

👉மரமும் கடவுள், 👉கல்லும் கடவுள், 👉நீரும் கடவுள்(கங்கை), 👉காற்றும் கடவுள் (வாயு), 👉குரங்கும் கடவுள் அனுமன், 👉நாயும் கடவுள் (பைரவர்), 👉பன்றியும் கடவுள் (வராகம்).

பதில்: என்ன? இழி பிறவி என்று ஏதுமில்லையா?

‘‘ப்ராஹ்மனோஷ்ய முஹமாஸீத் பாஹு ராஜ்ன்யூ க்ரூதஹ் ஊரு ததஸ்ய்ய யதைவஷ்யஹ் பத்பியாம் ஸுரூத்ரோ அஜாயத’’ (ரிக் வேதம் 10:90:12)

பொருள்: கடவுளின் முகத்திலிருந்து பிராமணர்களும் அவனின் கரங்களிலிருந்து சத்திரியர்களும் முதுகிலிருந்து வைஷ்யர்களும் பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர்.

இயற்கையாக தோன்றியது என்று ஏதுமில்லை, அனைத்தும் படைக்கப் பட்டது என்பது இந்து வேதேங்களின் கூற்று.

இயற்கை கடவுளா?

'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே' - யஜீர்வேதா அதிகாரம் 40 :9 
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.'

9. நீயும் கடவுள், நானும் கடவுள்... பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

பதில்: நீயும் நானும் கடவுள் என்றால்,

"எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக் கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்) என்பது கடவுளுக்கு கடவுள் இட்ட கட்டளையா?

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பண்ணிருதிருமறை?

பதில்: என்னிடம் 12 வீடு உள்ளது ஆனால் நடைபாதயில் உறங்குகிறேன் என்பது போல் உள்ளது. மக்களிடம் போதிக்க படாத மக்களை பண்படுத்த பயன்படாத நூல்கள் 1000 இருந்து என்ன பயன். பண்ணிருதிருமறை சைவ சமய நூல்.. சைவத்திற்கும் வைணவத்திற்கும் வரலாற்றில் யுத்தம் நடந்தது ஏன்?

பெண் ஆசையை ஒழிக்க 👉இராமாயணம், -
மண் ஆசையை ஒழிக்க 👉மகாபாரதம்,

பதில்: ராமயாணம் மற்றும் மகாபாரதங்கள் வேதங்கள் இல்லை, இதிகாசங்கள் இரண்டுக்கும் மாபெரும் வேறுபாடு உள்ளது. நான் சொல்லல, வேதாந்திகள் சொல்வது.

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த 👉பகவதம்,
அரசியலுக்கு 👉அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு 👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு 👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு 👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு 👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு 👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு 👉கோள்கணிதம்.

பதில்: இவை அனைத்தும் வெவ்வேறு கொள்கை மற்றும் வெவ்வேறு பிராந்திய பண்பாடு மற்றும் கலாச்சார நூல்களின் தொகுப்பு, ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் அடிப்படை கொள்கையில் முரண்கள் பல.

11. யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்...?

பதில்: தமிழகத்தல் சமண மதம் அழிந்த வரலாறும் சைவ வைணவ மதங்களுக்கான இடையில் நடந்த யுத்தங்களும் பதியபடாமல் இல்லை. ரிக் யசுர் வேதங்களே மத யுத்தத்தின் வரலாற்று பதிவுகளே..

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து "கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்?

புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே! - சிவ வாக்கியர் பாடல் 147

13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது?

பதில்: வேதங்களே புனிதமானவை என்று கீதை சொல்கிறது 

முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்?

பதில்: அனைத்து மதத்தினரும் முயற்சிப்பது இதற்காகவே.. யார் வழி சரி என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று..

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.?


பதில்: சகிப்புத்தன்மைக்கும் முறையான வரையறை அற்ற தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்?

எந்த மதம் இதற்கு விதி விலக்கு ?

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

எல்லாவற்றையும் தக்க முறையான காரணத்துடனும் ஆதரத்துடனும் மறுத்து கொண்டேயும் போகலாம்

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்?

இந்து இயற்க்கையாலன் அல்ல..! ஓர் இறைவன் மேலே இருக்கிறான் என்பது இயற்கையாக எல்லோர் மனதிலும் உள்ள ஓர் கருத்துக்கு முரணான பல கடவுள் கொள்கை கொண்டவன் எப்படி இயற்கையாலனாவான்? அவரவரின் நம்பிக்கையை புகழ்வது பிழையில்லை, மற்றவரை இழிப்பது பிழை..

முடிவுரை

இந்த பதிவு சொல்லும் அனைத்து காரணங்களும் புரிதல்களும் அறியாமையின் வெளிப்பாடு ஆகும் அல்லது தெரிந்தே மறைக்கும் செயலாகும். மேலும் எதிர்மறை கருத்துக்களை நேர்மறையாக சித்தரிக்கும் முயற்ச்சி.. இவை அனைத்தும் தமிழன் ஏன் இந்துவாக இருக்க கூடாது என்பதற்கான பட்டியல்.

நடைமுறைக்கு ஏற்ற எதார்த்தமான சாதிய ஏற்ற தாழ்வற்ற முரண்பாடற்ற நெறியை பின்பற்றுவதில் தெளிவு பெறுவோம்.

நூலின் வடிவமைப்பு

"வாய்மை" என்ற இந்த நூல் ஒவ்வொரு தனி மனித வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் காரணங்களையும், நம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதையும் அப்பயணத்தில் வெற்றி அடைய அனைத்து மெய்யியலை சேர்ந்தவர்களுக்கும் வகுக்கப்பட்ட பொதுவான விதிகள் என்னென்ன என்பதை ஒப்பிட்டு அறியவும், அதை மீறும் பொழுது தனி மனிதனாக, குடும்பமாக, சமூகமாக எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அறியவும், அதை ஒழுங்கு படுத்ததும் முறையினை ஆய்ந்து அறிவதும் இந்த நூலின் முதல் நோக்கம் ஆகும்.

எல்லோரும் அறிய வேண்டிய மெய்மை அடங்கிய இந்நூலுக்கு "வாய்மை" என்று பெயரிட்ட காரணங்கள் இரண்டு.

1) இந்த நூலின் மூலம் சாதி மத இன மொழி பேதமின்றி ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை விளைவதை விரும்புகிறோம்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.  - (குறள் 291)

விளக்கம்: வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திருமந்திரம் - 1795)

பொருள்: இறைவனை குறித்து இடையறாது எண்ணி இருப்பதும், தீதில்லாததை கூறுவதும், என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது. 

2) வாய்மை என்பது பொய் சொல்லாமையைக் குறிக்கும். மனம், சொல் & மெய்யால் பொய்யின்றி இருப்பதை முறையே உண்மை, வாய்மை & மெய்மை எனக் கூறுவர். சமகாலத்தில் "வாய்மை" என்கிற பதம் இந்த அனைத்து பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஆழமான, வெளிப்ப்டையான & இரகசியமான உண்மையை உலகுக்கு கூறும் இந்நூலுக்கு "வாய்மை" தலைப்பாக பொருந்தும் என்று கருதியதால் இந்நூல் "வாய்மை"யானது.  

பொய்யும், புரளியும், மற்றும் குறை ஞானமும் நிரம்பி வழியும் காலத்தில் "வாய்மை"-யை எழுத ஆதார கூறுகளை தேர்ந்தெடுக்க சில விதிகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அந்த விதியும் சுய விருப்பத்தால் எடுக்கப் பட்டதல்ல. மாறாக இந்நூலை வாசித்து முடிக்கும் தருவாயில் இந்த விதிமுறைகள் எப்படி ஏற்படுத்தப் பட்டது என்று ஒவ்வொருவரும் உணரலாம்.

முதலாவதாக என்னென்ன ஆதாரங்களை பயன்படுத்தலாம் அதற்கான முறையான காரணம் என்ன என்று முடிவு செய்யவேண்டும். அவையாவன,

  1. தொல்பொருள் ஆய்வு முடிவுகள் & வரலாற்று நூல்கள் 
  2. சமய நூல்கள் & அற நூல்கள்  

ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடிய இவ்விரண்டு விதமான தரவுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றா என்று சிந்திக்கும் பொழுது, இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். 

தொல்பொருள் ஆய்வுகளை அப்படியே ஏன் ஏற்க முடியாது? அதற்கான காரணங்களாவன,

  • அதிகாரிகளின் சமய நம்பிக்கையும் அரசியல் நிலைப்பாடும் அறிவின் தாரமும்: ஆய்வு முடிவுகளை எழுதிய மற்றும் சரிபார்த்த மனிதர்களின் அறிவுத் தரமும் அரசியல் மற்றும் சமய நிலைப்படும் அவைகளுக்கு பிழையான விளக்கங்களை தந்திருக்க வாய்ப்பளிக்கும் அல்லது அவர்களின் நிலைப்பாட்டிற்கு சார்பாக முடிவுகளை வெளியிட்டு இருக்க கூடும்.
  • விடுபட்ட தரவுகள்: தொல்பொருள் ஆய்வில் கிடைத்தது முழுமையான தரவாக இல்லாமல் இருக்கலாம். தொடர் ஆய்வுகள் அதன் முழு தரவுகளைத் தரலாம்.
  • தரவுகளின் விளக்கம்: கிடைக்கப்படும் படிமங்கள் மற்றும் தரவுகள் அதன் முழுப் பொருளை தருவதில்லை. அது கிடைக்கப்பெற்ற மற்ற சில தரவுகளோடு இணைத்துபுரிந்துகொள்ளப் படவேண்டும்.
  • அரசியல் தலையீடு: உதாரணமாக கீழடி போன்ற புராதான இடங்களை அரசுகள் காழ்ப்புணர்வின் காரணமாக புறந்தள்ளுகிறது.
எனவே இவ்வாறு கடுமையான முயற்சியில் கண்டறிந்த தொல்பொருள் ஆய்வு தரவுகளை பல்வேறு நிலத்தை சார்ந்த நூல்களில் உள்ள தரவுகளோடு ஒப்பு நோக்கினால் ஆய்வு முடிவு உண்மையை நெருங்கி அமைந்து இருக்கும். இதை வள்ளுவர் கூறும் பொழுது,  
 
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை (அதிகாரம்:அமைச்சு குறள் 636)

பொருளுரை: மனிதன் கடும் முயற்சியால் வளர்த்துக்கொள்ளும் நுட்ப அறிவை நூலறிவோடு. ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன? 

எனவே நூல்களோடு ஒப்பிட எண்ணும் பொழுது "எந்த நூல்களோடு ஒப்பிட வேண்டும்?" என்ற பெரும் கேள்வி எழுகிறது. பொதுவாக நூலகள் என்பவைகள் காலம், மொழி, சமையம் மற்றும் துறை போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு முரண்பட்ட கருத்துக்களை மொழிகிறது. இவ்வாறு இருக்கையில் எந்த நூலை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் ஏற்படும் பொழுது, அதை கண்டறிவதற்கான ஒரு விதியை அல்லது ஒரு சூத்திரத்தை யாராவது கூறினால் நலமாக இருக்கும் என்று தோன்றியது. 

ஆச்சரியமான விடயம் என்றால் அப்படி ஒரு சூத்திரம் உலகெங்கும் உள்ள மறைநூல்களில் விரவிக் கிடக்கிறது. அவைகளை ஒப்பு நோக்கி ஆய்ந்து "உண்மை"யை வேலியில் விழுந்த ஆடையை கவனமாக எடுப்பது போல இந்நூலில் நாம் எடுக்க முயன்றுள்ளோம். நூல் என்கிற வார்த்தை மறைநூல்களையே அக்காலத்தில் குறித்தது. மேலும் போலி நூலின் வரையறையும் அவைகளைக் களையும் முறையினையும் அறிவது மிக மிக அவசியம். இவ்விளக்கங்களை "புனித நூல்கள்" தலைப்பில் காணலாம்.

வாய்மை என்ற இந்த நூலில் பல்வேறு சமயங்களின் ஆதார நூல்களை ஒப்புநோக்குவது  இந்நூலின் பிரதான வழிமுறைகளில் ஒன்றாக இருக்கும். இதில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் தவிர மற்ற நூல்களுக்கான நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. ஏனென்றால் வேதம் புனிதம் என்று நம்பும் இவர்கள் அதை வாசிக்கவோ அதன்படி வணங்கவோ, வழிபடவோ, தனது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதலை அதிலிருந்து பெறவோ முயலவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் அவர்களின் வேதங்கள் வெகுஜனமயப் படுத்தப்பட்ட நூல்களாக இருக்கவில்லை. 

உதாரணமாக, ஒரு இஸ்லாமியரிடம் "தர்மம்" எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? என்று கேட்டால், தனது வேத வரிகளை முன்மொழிந்து அதன் விளக்கமாக அவர் புரிந்த காரணத்தை அடுக்குவார், அப்படியே கிறிஸ்தவரும். ஆனால் ஒரு இந்து அல்லது தமிழரிடம் கேட்டால் சோதிடரையோ, ஏதுமறியா சாமியாரையோ அல்லது ஆன்மீக சார்ந்த வார பத்திரிக்கையை அடிப்படையாக கொண்டோ, அல்லது மத அரசையால் வாதிகளின் கருத்துக்களை மூலமாக கொண்டோ பேச துவங்குவர். சுருக்கமாக சொன்னால் இந்துக்களும் தமிழர்களும் அவரவர் சமயத்தின் அடிப்படை நூலை கூட அறியாமல் உள்ளனர். அதை மத குரு என்கிற பெயரில் பலரும் பலவிதங்களில் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, தமிழர் அல்லது இந்து சமயத்திலோ புனிதத்தையும் தீட்டையும் தீர்மானிப்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயமே என்று நாம் கருதுகிறோம். அவர்கள் அது சார்ந்த நூல்களை கற்றவர்கள் என்று நம்புகிறோம். ஆனால் அந்த குறிப்பிட்ட வகுப்பினர் அதில் எந்த நூல்களில் எந்த அளவு ஞானத்தை வளர்த்துக் கொண்டுள்ளார் என்பதை பற்றியும், அதை எந்த அளவு அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்றும் நாம் கவலை கொள்வதில்லை, அவ்வாறு கவலை கொண்டாலும் அதை நாம் கற்று அறியாததால் அவர்களின் தரத்தை அளந்து பார்க்கும் இடத்திலும் அச்சமயத்தார் இல்லை. உலக பயன்பாட்டிற்காக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் தரத்தையும் கவனமாக ஆராயும் நாம், மறுமை வாழ்வில் மாபெரும் பங்களிக்கும் அறம் எது, மறம் எது என்கிற வரையறை பற்றிய கவனம் நம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது. நாம் எந்த செயலை செய்தாலும் வீடுபேரு அடையலாம் என்று கருதுகிறோமா அல்லது அதை பற்றிய எந்த அறிவும் உணர்வும் இல்லாமல் இருக்கிறோமா என்று தெரியவில்லை.

இதற்கு நேர் முரணாக, இறந்த உடலை அடக்கம் செய்யும் பொழுது, வெட்டியான் சொல்லும் முறையை அப்படியே செயல்படுத்தும் நாம், எந்த கல்வியை கொண்டு அவர் அந்த செயல் முறைகளை செய்கிறார் என்பதை யாரும் ஒரு கேள்வியாக கூட முன் வைக்கவில்லை. வெட்டியான் மட்டுமல்ல தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஒவ்வொருவரும் ஒரு முறையை சொல்லும் நிலையை நீங்கள் அடக்கத்தலங்களில் காணலாம். இறந்த உடலுக்கு செய்யும் முறையான மரியாதையை யார் தீர்மானிப்பது? நாம் செய்வனவெல்லாம் அந்த உடலுக்கு மரியாதை ஆகுமா? அல்லது முறையாகுமா?கற்றவர்களாக கற்பனை செய்யப்படும் பார்ப்பனர்களையே அவர்கள் எதன் அடிப்படையில் இதை செய்கிறார்கள் என்று வினவாமல் இருப்பதே பிழை என்கிற பொழுது எழுதபடிக்க கூட தெரியாத உடலை அடக்கம் செய்யும் மனிதரை அவர் அடக்கம் செய்யும் முறையின் காரணத்தை கேள்வி கூட கேட்கும் உணர்வில்லாமல் அல்லது அறிவில்லாமல் நாம் கடந்து செல்கிறோம். 

விமர்சனம் செய்வதற்காக கிறிஸ்தவ இஸ்லாமிய வேதத்தை வாசிக்கும் வாய்ப்பு இருக்கும் அளவுக்கு கூட நமது வேதம் எதுவென்று அறிந்து அதை வாசித்து அதில் உள்ளதை புரியும் வாய்ப்பு கூட நம்மை போன்ற பல சமயத்தவரும் இல்லை. அதற்கான ஆர்வத்தையும் நடப்பு உலகமயமாக்கல் இல்லாமல் செய்துவிட்டது. மேலும் தமிழர்கள் தங்கள் மறைநூலாக சம்ஸ்கிருத வேதங்களை கருதுவது பரிதாபத்தன் உச்சம். வேதத்தின் வரையறை என்ன? உலகில் வேதங்கள் எவ்வாறு கொடுக்கப்படுகிறது? யாரால் கொடுக்கப் படுகிறது? அதன் தொடக்கமும் முடிவும் என்ன? என்கிற விளக்கங்கள் தமிழத் தவிர வேறெந்த வேதத்திலும் இல்லை. அதை அறியாமல் இருப்பது அறிவீனம். 

"நல்ல செயலை கடவுளின் பெயரால் சொன்னால் மக்கள் கேட்பார்கள் எனவே சாமி பெயரில் சில நல்லவைகளை நல்லோர் சிலர் கூறி உள்ளனர், ஆனால் கடவுள் என்று ஏதுமில்லை" என்ற சிலரின்  கருத்தாக்கம் உண்மையா? இல்லையா? என்பது இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் புலப்படும். பகுத்தறிவு என்பது நம் தாய்மொழியில் உள்ள நூற்களை விட மேற்கிலும், வடக்கிலும் உள்ள நூல்களில் உள்ளது என்று நம்புகிறவர்கள் பேதைகளல்லாமல் வேறு யாராக இருக்க முடியும். 

பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு என்றால், கடவுள் என்கிற கருப்பொருளை மறைநூலுக்கு முரணாக உருவகப் படுத்தும் மக்களின் செயல்பாட்டை வெறுத்து, பொய் குரு, பொய் வேதம், பொய் தெய்வம், பொய் மதம் இவற்றுக்கும் சத்தியத்துக்கும் இடைப்பட்ட வேற்றுமையை பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியும். அவ்வாறு எவ்வித முயற்சியும் இன்றி நாத்தீக சார்புடைய நூல்களை மட்டும் வாசித்து நேரடியாக நாத்தீகத்தை ஆதரிப்பதும் ஆன்மீகத்தின் மீது தவறான புரிதல் கொள்வதும் பகுத்தறிவு ஆகாது.

வெவ்வேறு சமயங்களை, அதன் மறைநூல்களை அணுகும் பொழுது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படைகள் உண்டு.
  1. உலகில் மனிதர்கள் அனைவரின் உடலமைப்பும் அதன் செயல்பாடுகளும் ஒரே அமைப்பில் உள்ளது, எல்லோரும் ஒரே வானையும் ஒரே காற்றையும் ஒரே மழையையும் பகிர்ந்து கொள்கிறோம். எனவே இவைகளை படைத்த தெய்வம் பலவாக இருக்க வாய்ப்பில்லை. 
  2. ஒரே தெய்வம் என்கிற முடிவுக்கு வந்தால், மதம் மொழி மற்றும் இனம் ஆகியவற்றை தாண்டி நம்மை இணைப்பது எது என ஆய்ந்து அறிய முற்படும் பொழுது நமக்கு உள்ள ஒரே ஆதாரம் மறை நூல்கள். 
  3. மறை நூலை அணுகும் முன் ஒரு அடிப்படையை நாம் அறிய வேண்டும் : பாலையும் மில்க்-யும் இருவேறு பொருட்களாக கருத இயலாது. ஏனென்றால் இரண்டு சொற்களின் வரையறையும் ஒன்று என்று நாம் அறிவோம். அதாவது பால் என்றால் என்ன என்கிற விளக்கத்துக்கும், மில்க் என்றால் என்ன என்கிற விளக்கத்துக்கும், பாலின் பண்புக்கும் மில்க்-இன் பன்புக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே இது ஒரே பொருளை குறிக்கும் இருவேறு சொற்கள் அல்லது ஒரே பொருளை குறிக்கும் இருவேறு மொழிச்சொற்கள் என்று நாம் எளிமையாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். அதே போல இறைவனின் வரையறை மட்டுமல்ல, ஒவ்வொரு அடிப்படை கூறுகளையும் ஒப்பிட்டு சொற்கள் வேறானாலும் வரையறை ஒன்றா இல்லையா என்று ஆய்ந்து அறிய வேண்டும்.
விளைவுகள்: இந்த அடிப்படைகளை மறந்தால் ஏற்படும் சில விளைவுகள்  
  1. சமூக கலப்பின் பொழுது அவர்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்த வெவ்வேறு பாரம்பரியங்களில் உள்ள ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களை வெவ்வேறு பாத்திரமாக்கி புராணம் எழுதிய துயரம் நமது நாட்டில் ஏராளம்.
  2. இந்த புரிதலின்மை மேலும் பல தீமைகளுக்கு உள்ளாக்க நேரிடும். உதாரணமாக, பாலும் மில்கும் ஒன்று என்று அறியாமல் இருந்தால் சில வேளைகளில் உங்களுக்கு கடுமையான பசியின் பொழுது நீங்கள் அதை நிராகரிக்க நேரிடும்.
  3. ஆனால் இதைவிட மிகமிக ஆபத்தான ஒன்று என்னவென்றால் அறியாமல் அவர்களின் தெய்வத்தை நீங்கள் ஏசினால், அது நீங்கள் வணங்கும் ஏக தெய்வமாக இருந்து மொழியின் காரணமாக பெயர் வேறுபாட்டால், உங்கள் நிலை?
  4. உங்கள் புனித நூலின் தொடர்ச்சியாக அந்த செய்தி இருந்து அதை நீங்கள் புறக்கணித்தால், உங்கள் நிலை?
  5. ஒருவேலை அது உண்மையான கடவுளாக இருந்து நீங்கள் பொய்யானவற்றை வணங்கி வந்தால், உண்மை மறை நூலின் ஞானம் உங்களை வந்தடைந்தும் புறக்கணித்தால், உங்கள் நிலை?
இதற்காகத்தான் கல்வியை அனைத்து சமயமும் அறநெறி நூல்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தன. கல்வி உங்களை விடுதலை செய்யும், மரணம் வரை உங்களை காத்து நிற்கும். மரணத்துக்கு பிறகு வெற்றியை தரும். ஆகவே இன்று நாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பது கல்வி அல்ல, மாறாக இவைகள் வெறும் தொழிற்பயிற்சி மட்டுமே. கல்வியின் அம்சங்களும் பயனும் எக்காலத்திலும் மாறாது, தொழிற்பயிற்சியின் அம்சங்கள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த வரையரையின் அடிப்படையில் கீழ்கண்ட நூல்களை நாம் ஆதாரங்களாக பயன்படுத்தவுள்ளோம்.
இதில் "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" சற்று அந்நியமாக இருக்கும். உண்மைதான், ஆனால் அது நிச்சயமாக பயன்படுத்தப்பட வேண்டிய நூல். ஏனென்றால் அதை தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து நூல்களும் மக்களிடையே அறநெறிகளை வளர்ப்பதற்கான வழிகளை சொல்கிறது ஆனால் இந்த குறிப்பிட்ட நூல் மட்டும் மக்களிடையே அறியாமையை வளர்த்து உலக சமூகங்களில் அக்கிரமங்களை எப்படி வளர்த்தெடுப்பது என்கிற திட்டத்தின் செயல்முறை வடிவ நூலக அமைந்துள்ளது. சுருக்கமாக சொன்னால் சமய நூல்கள் மனிதனை பக்குவப்படுத்தும் நூலாகவும் இது மனிதனை மிருகமாக்கும் நூலாகவும் அமைந்துளளது. அதுமட்டுமல்ல இந்த திட்டத்தின் அடிப்படையில் இன்று உலகம் வழிநடத்தப் படுகிறது என்பதும் ஒரு முக்கிய காரணம் இந்த நூலை ஒப்பாய்வுக்கு எடுத்துக் கொண்டதற்கு. 

அறம் என்றால் என்ன? ஒரு நிகழ்கால பிரச்சனைக்கு எப்படி தீர்வு தரப்படுகிறது? எப்படி தரப்படவேண்டும்? என நாத்திகர்களிடம் கேட்டால்,

"மனிதன் தான் விரும்பியதை செய்வதும் பிறருக்கு துன்பம் தராததும் அறம் ஆகும்" என்பர். "பிறருக்கு துன்பம் தராத வழிமுறைகளை நாம் நம் கடந்தகால அனுபவத்தில் படிப்பினை பெற்று அதை சட்டமாக அல்லது நெறியாக முறைப்படுத்தி, அதை நாம் அனைவரும் ஏற்று கடைபிடிக்க வேண்டும்" என்றும் கூறுவர்.

இந்துக்களிடம் கேட்டால்,

வேதமே அறம் என்பர். மனுநீதி என்பது வேதத்தின் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாக கூறுவர். ஆனால் எந்த வேத வசனத்தின் அடிப்பையில் மனுநீதியின் ஒரு குறிப்பிட்ட சட்டம் சொல்லப்படுகிறது என்கிற ஆதாரமம் சான்றும் அதில் குறிப்பிடுவதில்லை. மேலும் சமகால இந்து மத அறிஞர்கள் அல்லது பக்தர்கள் இதுபோன்ற எந்த நூலின் வசன ஆதாரம் எதையும் குறிப்பிடாமல் கேட்கப் படும் கேள்விக்கு தான்தோன்றி தனமாக பதில் தரும் நிலை நிலவுகிறது. அதிக பட்சமாக இது ஆகமத்தில் அல்லது வேதத்தில் அல்லது புராணத்தில் அல்லது மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுவர். எந்த நூலில்? எந்த வசனத்தில்? என்ன பொருளில்? என்ன சூழ்நிலையில்? கூறப்பட்டுள்ளது என்கிற எந்த ஆதாரமும் அவர்களால் தரமுடியாது. வாழ்வின் அறத்தை கூறும் நூல் என்றால், அதை வாசித்து புரிந்து செயல்படுத்தும் வாய்ப்பு எல்லோருக்கும் இருப்பது தானே நியாயம். கடவுள் நியாயமானவர் தானே!

தமிழ் பற்றளர்களை கேட்டால்,

திருக்குறள் தான் அறம் அல்லது வேதம் என்போம். ஆனால் நிகழ்கால பிரச்சனைக்கு நாம் அதை தீர்வுதரும் நூலாக பார்ப்பது இல்லை. கேட்கப்படும் கேள்விக்கு தான் தோன்றித்தனமாக கற்பனையில் பதில் சொல்கிறோம்! தமிழில் வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மறைநூல்களும் அறநூல்களும் திருக்குறளோடு சேர்த்து வேறென்னென்ன உள்ளது என்பதை அறிய முற்படாததால் "நீயா? நானா?" போன்ற தொலைக் காட்சி நிகழ்வுகள் நிகழ்கால பிரச்சனைக்கு இரு தரப்பை மோதவிட்ட பணம் பார்க்கிறது. 

கிறிஸ்தவர்களை கேட்டால்,

பைபிள் தான் அறம் என்பர். அவர்களும் அதை கொண்டு தீர்வு தரும் பொழுது பெரும்பாலானவர்கள் வசன எண்களை தான் குறிப்பிட்டு அதன் சாரத்தை சுருக்கமாக எழுதுகிறார்கள் தவிர, வசனத்தை முழுவதும் கூறி அவ்வசனத்தை விளக்கி தீர்வை கூறுவதில்லை. மக்களுக்கு bore அடிக்கும் என்று கருதுகிறார்களோ?

இஸ்லாமியர்களை கேட்டால்,

திருக்குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு அதன் வசன எண்ணையும் குறிப்பிட்டு அவ்வசனத்தின் விளக்கமாக நபிகள் கூறிய விளக்கம் நிறைந்தநபி மொழி நூலை குறிப்பிட்டு அதன் வசன எண்ணை குறிப்பிட்டு அது யாரால் பதியப்பட்டது என்பதையும் குறிப்பிட்டு அதன் நம்பக தன்மையையும் குறிப்பிட்டு அந்தநபி மொழி வசனத்தையும் குறிப்பிட்டு தீர்வு தரும் நிலையை காணலாம்.

முடிவாக, இந்நூல் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதென்றால், தமிழ் பேசும் நல்லுலகில் பிரதான தத்துவங்களாக பின்பற்றப் படும் சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மற்றும் நாத்தீக சிந்தனைகளுக்கு அவர்கள் ஏற்ற தத்துவத்தின் மூல நூல்களை கொண்டு "மெய்" எது என்று விளக்கும் முகமாக முயற்சி செய்யப் பட்டுள்ளது.

தவம்

தவமும் பிராத்தனையும் ஏன்?

 

தமிழர் சமயம்


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (குறள் 265)

பொருள்: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (குறள் - 266)

பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்; வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்; கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை; நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது; சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்; யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று வேண்டுறோம்.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். (மூதுரை பாடல் 7)

பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோஅவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. நாம் செய்யும் தவத்தின் அளவே நாம் பெரும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின் அளவே. 
 

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை”. அறி: உக்பா பின் ஆமிர் (ரலி), (நூல்: முஸ்லிம்-397)
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள். அறி: ஸவ்பான் (ரலி). (நூல்: அஹ்மத்-22414 (22467)
 
உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.(அல்குர்ஆன்-2:186)

தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன் 39:53)

கிறிஸ்தவம்

உங்களில் யாருக்காவது ஞானம் இல்லாதிருந்தால், குறை காணாமல் அனைவருக்கும் தாராளமாகக் கொடுக்கும் கடவுளிடம் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் கேட்கும்போது, ​​நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் சந்தேகப்படுகிறவர் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட கடல் அலையைப் போன்றவர் - (யாக்கோபு 1:5-6) 
 

ஆற்றல் பெற தவம் அவசியம்  
தமிழர் சமயம்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (குறள் - 270)

பொருள்ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். 

கருத்து: தவம் செய்யாதவற்கு ஆற்றல் இல்லை  

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332) 
 
பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரைசத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி; 

குறிப்பு: எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ, பெண்ணோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். இதுமட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், சமயத்தை (சிவன் சொல்லா பொருளில் கையாண்டால் அது சிவா சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம்.  

இஸ்லாம் 

நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். - (குர்ஆன் 7:10)

மக்கள், உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான். (அல் அன்பால் : 26)

கிறிஸ்தவம் 

எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள் “கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். பயப்படாதே, நான் உனது தேவன். நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்” - (ஏசாயா 41:10)

கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார். ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.” - (ஏசாயா 40:29)

கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப் போங்கள்(1 நாளாகமம் 16:11)