எத்தனை இறைவன்?

அகத்தியர்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு - ஞானம் 1:1

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - ஞானம் - 1:4

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள்.

இடைக்காட்டுச் சித்தர்

ஆதியந்தம் இல்லாத அனாதியைத்
தீது அறும்ப வந்த தீப்படு பஞ்சுபோல்
மோதுறும்படி முப்பொறி ஒத்துற
ஆதலாகக் கருத்திற் கருதுவாம். - பாடல் 1

கருத்து: தொடக்கம் முடிவு இல்லாமல் இணை துணை இல்லாமல் அனாதையாக இருப்பவனை (இறைவனை) பற்றியே நினைக்க வேண்டும்.

திருமூலர்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - திருமந்திரம்

பதவுரை:  ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது
நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..
நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - திருமந்திரம் 5

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. - திருமந்திரம் 109

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. - திருமந்திரம் 110

கருத்து: சிவனை விட்டால் வேறு தெய்வம் இல்லை அவன் தனியானவன் அவனுடனோ அவனல்லமலோ வேறு தெய்வம் இல்லை. இதன் மறை பொருள் இன்று சிவன் என்ற அறியப்படுகிற உருவத்திற்கும் கதைக்கும் இங்கே சொல்லப்படும் கருத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லை. எனவே சிவன் என்று சொல்லப்படும் இறைவனை நாம் தவறாக உருவகபடுத்தி புரிந்து வைத்து உள்ளோம்.

சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

கருத்து: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவம் உள்ள தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது(தவம் என்பது சிவத்துக்காக செய்யப் பட வேண்டும்); அவ்வாறு செய்ய தலைப்படுபவர்களுக்கு அவம் (கேடு) அல்லாமல் வேறு இல்லை. ஆறு சமயங்களை பின்பற்றுவதும் தவமல்ல(பல சமயங்களை பின்பற்ற கூடாது), எனவே நந்தி தேவர் கூறும் வேதத்தை பின்பற்றி சிவனை வணங்கி வீடு பெருவீராக.

கடுவெளிச் சித்தர்

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. - (பாடல் 27)

காகபுசுண்டர்

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே - (பாடல் 1)

கருத்து: தானாய் உருவாகி அனைத்தையும் படைத்த இறைவனை பணிவோம்.

சிவவாக்கியர்

எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே. - (பாடல் 224)

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே! - (சிவவாக்கியம் 225)

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே - (சிவவாக்கியம் 133)

கருத்து: உங்களின் இறைவன் இவன், எண்களின் இறைவன் இவன் என்று வேறு வேறு கிடையாது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. 


முகமது நபி

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. இறைவன் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை;  பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - (அல்குர்ஆன் 112:4)

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22)

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91)  

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

இயேசு

இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கர்த்தர் ஒருவரே - (மாற்கு 12:29)

மோசஸ்

இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! - (உபாகமம் 6:4)

எசேக்கியா

கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் அரசன். நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். - (2 இராஜாக்கள் 19)

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (நெகேமியா 9:6)

 அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25]

முடிவுரை

சிவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்று தமிழர் அறமும், 
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று இஸ்லாமும், 
கர்த்தரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கிறிஸ்தவமும் 
கூறுவதை எப்படி புரிந்து கொள்வது? 
    • வெவ்வேறு கடவுள்கள் தங்களுக்குள் முரண்பட்டு தங்களை பின்பற்றுபவர்களை அதிகரிக்க போட்டி போடுகின்றன என்று புரிந்து கொள்வதா? அல்லது ஒரே இறைவன் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயருடன் அறியப்படுகிறான் என்று புரிந்து கொள்வதா? 
    • வெவ்வேறு மதத்தில் கூறப்பட்ட கடவுளின் வரையறையை ஆய்ந்து அவனுக்கு ஒருவனைத்தான் குறிக்கிறது என்று முடிவு செய்வதா? அல்லது பெயரை கொண்டு அவர்கள் வெவ்வேறுதான் என்று முடிவு செய்வதா? 
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்லும் பொழுது மதவாதமாக பார்க்கும் சகோதரர்கள், அவரவர் குருமார்களால், சித்தர்களால், மெசாயாக்களால், ரிஷிகளால் படத்த இறைவனை மட்டுமே வணங்குமாரு போதிக்க பட்டுள்ளனர். அதை அவர்கள வாசித்தால் அவர்களுக்கு அது நலம் பயக்கும்.

உலகின் இறுதி தூதர் (நபி, ரசூல், மெசாயா, சித்தர், நாதன், குரு, ரிஷி) மூலம் மற்றும் இறுதிவேதம் இதை பற்றி தெளிவாக கூறுகிறது. 

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளித்து அழிக்கும் ஏக இறைவனைத் தவிர, வணங்கப்படும் மற்ற) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (திருக்குர்ஆன் 16:36)

அதிகம் நம் அனைவரும் சந்திக்கும் கேள்வி!

ஒருவர் மிக நல்லவாராகவும் அதிகம் தான தர்மங்கள் செய்பவராகவும், உதவி செய்பவராகவும், பொறுமையானவராகவும், கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுபவராகவும் இருந்தாலும் முஸ்லீம் இல்லை என்றால் நரகமா? இது என்ன மத வெறியாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கிறது.!! ஒருவரின் கைகால்கள் மிக ஆரோக்கியமாக பலமாகவும் இருக்கிறது. மூளை , இதயம், நுரைஈரல் மற்றும் சிறுநீரகம் என அனைத்தும் மிக சரியாக இயங்கும் நிலையில் உள்ளது ஆனால் உயிர் இல்லை என்றால்? உயிர் இருந்தால் அவன் மனிதன், இல்லை என்றால் அவன் பிணம். இஸ்லாம் உயிர் போன்றது. இஸ்லாம் இருந்தால் அவன் முஸ்லீம்(இறைவனுக்கு கட்டுப்பட்டவன்) இல்லை என்றால் காபிர்(இறை மறுப்பாளன்). முஸ்லீம் என்கிற பதம் அரபியாக இருப்பதால் பலருக்கு பிரச்சனையாக உள்ளது. உலகம் ஓன்று, குலம் ஒன்று, தேவன் ஒன்று, எனவே உலக மக்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி படைத்த ஓர் இறைவனின் நெறி பல ஆதாரங்களுடன் வருமேயானால் பலகோணங்களில் ஆய்ந்து அறிந்து உண்மையாக இருக்குமேயானால் அதனை பின்பற்றுவது நம் கடமையாகிறது. அந்த அடிப்படையில் "இஸ்லாம்" ஒவ்வொரு உயிர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய இறைவனின் வாழ்க்கை நெறி.

மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம்

தமிழர் நெறி 


தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.- (நாலடியார் 58)

கருத்துரை - பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக் கொள்வதல்லாமல் தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும். திருவத்தவர் - சிறப்பினை உடையவர்

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் (அகநானூறு 66)

(இம்மை = இவ்வுலக வாழ்க்கை; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலக வாழ்க்கை; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் =பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (குறுந்தொகை 49)

(இம்மை = இந்த வாழ்க்கை; மறுமை = அடுத்து வரும் வாழ்க்கை; நெஞ்சுநேர்பவள் = மனம் கவர்ந்தவள்)
இந்தப் வாழ்க்கை முடிந்து அடுத்தப் வாழ்க்கையிலும் நீ தான் எனக்குக் கணவன். நான் தான் உனக்கு மனைவி
 
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. - (குறள் 459)

மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. - (நாலடி 275)

மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது. (உலோபிகள் செல்வம் பெற்றிருப்பினும் வறியரான சான்றோரளவு கூட உதவார்).

மறுமை என்றால் என்ன ?


அகநானூறு 66-இல் குறிப்பிட்டு இருப்பதுபோல் மறுமை என்பது வேறு உலகம் ஆகும் இவ்வுலகத்தில் இருப்பதாக சொல்லப்படும் மறுபிறவி அல்ல என்பதும் உறுதியாகிறது.

இஸ்லாமிய நெறி 


(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின் மறுமையில்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.  - (திருக்குர்ஆன் 11:113)

ஏன் அனைத்து நூல்களும் மறுமை பற்றி பேசுகிறது? வாசிப்பார் சிந்தைக்கே..

மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம், அதில் நெருப்பை கொண்ட நரகம் என ஒன்று உண்டு
  

சான்றுகள் 


போகர் ஏழாயிரம் - பொய் மொழி


போகர் ஏழாயிரம் என்னும் நுலில் மூன்றாம் காண்டத்தில் போகர் மக்காபுரி கண்டது எனும் உட்தலைப்பு காணப்படுகிறது. போகர் மக்காபுரி சென்று வந்து சமாதியிருந்த இடம் என்று ஓரிடம் (இன்னும்) பழனியில் பேணப்பட்டு வருகிறது. நபி(ஸல்) அவர்களை தரிசிப்பதற்காக போகர்

"எழுந்துமே புகை ரதத்தை நடத்திக்கொண்டு
ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு" (3:222)

என்ற இடத்தில் ஜெருசலேம் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் மக்காவுக்கு சென்றபோது

"வந்திட்டேன் நபி பாதம் காண வந்தேன்" ( 3:227)

என்று போகர் கூறினார்

"பட்சமுடன் கோரிக்குள் சென்றேனப்பா
நேர்த்தியாம் நவரத்ன சமாதிக்குள்ளே
நேர்மையுடன் நபியிருக்கச் சொன்னாரப்பா" ( 3:230)

அங்கே அசரீரியாகச் சில சொற்களைக் கேட்டபின்பு

"துணையாக யானுமொரு மலுங்கானேனே" (3:231)

என்று போகர் நபியின் சீடர் (முஸ்லிம்) ஆனதாகக் கூறியுள்ளார்.

மேற்கண்ட செய்தி சில வலைப்பூக்களில் காணக் கிடைக்கிறது.

Fact Check 
 
முதலில், போகர் கிமு 550 மற்றும் 300 க்கு இடையில் வாழ்ந்தார் என்று விக்கிபீடியா தகவல் தரும் நிலையில் அவர் கிபி 570-இல் பிறந்து தனது 40-ஆவது வயதில் நபி ஆகிய முகமது நபியை அவர் சந்தித்ததாக சொல்வது வரலாற்றுப் புனைவு. 

இரண்டாவது, முகமது நபி-யின் போதனையை அறிந்த ஒருவர், போகர் ஏழாயிரத்தை படித்தால் அது நூறு சதவிகிதம் முரண்படுவதை மிக எளிதாக கண்டறிய முடியும்.

மூன்றாவது, போகர் பிரபஞ்ச பயணம் செய்ததாக கூறப்படும் சம்பவங்கள் 100% பொய் ஏனென்றால் முகமது நபி அவர்கள்தான் இறைவனின் தேவதூதர்களோடு நேரடி தொடர்புடை கடைசி நபர், எனவே தேவர்களின் தொடர்பில்லாமல் பிரபஞ்சப்பயணம் செய்ய சாத்தியம் இல்லை. இவ்வாறு ஒரு நபரோ சம்பவமோ நடந்திருந்தால் நபிகளாரால் அதை செய்தி அறிவிக்கப் பட்டு இருக்கும்.

இறை அடியாரை நிந்தித்தல் *

தமிழர் சமயம் 


ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே

சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே. 

 

இஸ்லாம்

நிச்சயமாக, எவர்கள் முஃமினான (அல்லாஹ்வின் அடியார்களான) ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா (பாவ மன்னிப்பு) செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. (குர்ஆன் 85:10)

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்ஆன் 4:93)