சாதி

தமிழர் சமயம் 


சிவவாக்கியர் பாடல்கள்


பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38)

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்திஏது சம்புஏது சாதிபேதம் அற்றெது
முத்தி ஏது மூலம் ஏது மூலமந்திரங்கள் ஏது
வித்தில்லாத வித்திலே இன்னதென்று இயம்புமே (43)

சித்தமற்று சிந்தையற்று சீவன்றறு நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே (44)

கிரியை விலக்கிச் சாதி ஒன்றெனல்
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (45)

ஒவ்வையார் பாடல்கள்


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2)

பதவுரை:
சாதி - சாதி என்பது
இரண்டொழிய (இரண்டு + ஒழிய): இரண்டைத் தவிர
வேறில்லை - வேறு ஏதும் இல்லை
சாற்றுங்கால் (சாற்றும் + கால்): சொல்லும் பொழுது (சாற்றுதல் - சொல்லுதல்)
நீதி வழுவா - நீதி தவறாத (வழுவுதல் - விலகுதல்)
நெறிமுறையின் - நல்வழியில்
மேதினியில் - பூமியில், உலகில் 
இட்டார் - இடுபவர்கள் (வறியவர்களுக்கு உதவி இடுபவர்கள்)
பெரியோர் - உயர்ந்தவர்கள், உயர் சாதியினர்
இடாதார் - இடாதவர்கள் (வறியவர்களுக்கு கொடுக்காதவர்கள்)
இழி குலத்தோர் - இழிந்த குலத்தவர்கள் (சாதியினர்)
பட்டாங்கில் - அற நூல்களில் (பட்டாங்கு - அற நூல்கள்)
உள்ளபடி - இருப்பதின் படி

பொருளுரை:
அற நூல்களில் உள்ளதன்படியும் நீதி தவறாத நெறிமுறையின்படியும் சொல்வதென்றால், இந்த உலகில் இரண்டு சாதியைத் தவிர வேறு இல்லை; அவை, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த சாதியினர், பிறருக்குக் கொடுக்காத தாழ்ந்த  சாதியினர்.

கருத்து: உலகில் இரண்டு சாதிகள் மட்டுமே உண்டு வேறு சாதிகள் இல்லை - அவர்கள் ஒருவர்  கொடுப்பவர்கள் (உயர்குலத்தினர்); மற்றொருவர் கொடுக்காதவர்கள் (இழிகுலத்தினர்). 

திருஞானசம்பந்தர் பாடல்கள்


சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேரரே. (தேவாரம் 5.60.3)
  
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே (திருமந்திரம் 2104)

பதவுரை: ஒன்றே குலமும்: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது - எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும்: அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். கடவுள் இரண்டோ, மூன்றோ, முப்பாத்தது முக்கோடியோ கிடையாது

நன்றே நினைமின்: நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை: அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..

நாணாமே: வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை: நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து: உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே: எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள் 

பொழிப்புரை: ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். அனைத்து மக்களுக்கும் கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள். 

நாலடியார் பாடல்கள்


நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195)

பொருள்: நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும்.

கபிலதேவ நயனார் பாடல்கள்


மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறுஇலை தரணியோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே 
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல்
எந்நாளாயினும் இரப்பவர்க் கிட்டுப்
புலையுங் கொலையுங் களவுந்தவிர்ந்து
நிலைபெற அறத்தில் நிற்பதை யறிந்து
ஆணும்பெண்ணும் அல்லதை யுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப் படாது
சிறப்புஞ்சீலமும் அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே. (கபிலர் அகவல் 124 - 133)

வள்ளுவன் வாக்கு


பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள். 972

பொருள்எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை 

குறிப்பு - இக்குறளை மேற்கோள் காட்டி வருணாசிரமத்தை உண்டென்று வாதிடுவோர் உண்டு.. ஆனால் வருணம்/சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இங்கே 'தொழில்' என்பது ஒருவர் செய்யும் செயல்/வேலை அறம் சார்ந்ததா இல்லையா என்பதை பொறுத்து வேற்றுமை படும் என்கிறது.

அதே போல, 

பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை – (புறநானூறு 335) 
 
ஒரு சிலர் இதனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால் இது மக்களை இன்னாரென்று குறிப்பிட்டு காட்டவே பயன்படுத்தப்பட்ட ஒரு குறியீடு. இன்று சாதி என்று சொல்லப்படும் அந்த கட்டமைப்புக்கும் ஏற்றதாழ்வுக்கும் இதற்கும் அணு அளவு கூட தொடர்பில்லை.

எனவே சாதியை தூக்கி பிடிப்பது தவறு மட்டுமல்ல அது தமிழர் பண்பாட்டிற்கு மட்டுமல்ல மனித குல பண்பாட்டிற்கே செய்யும் துரோகம்.. ஏனென்றால் அறிவுள்ள பண்பட்ட சமூகம் மொழி கொண்டோ சாதி கொண்டோ நிறம் கொண்டோ பிரிவினைகளை ஏற்காது.. பிரிவுகள் கொள்கையில் ஏற்படுமே தவிர வேறெதிலும் இல்லை.. பண்பட்ட சமூகம் அதிலும் இணக்கம் ஏற்பட வழியை கண்டே தீரும்.. 

 

கீதை 

“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச” (கீதை 18:41-44)

கருத்து: வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக குணமும் செயலும் ஒருவரது வர்ணத்தை (தரத்தை) முடிவு செய்கிறது.

வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள்.  
 
எனவே, வர்ணம் என்பதற்கு தன்மை, வகை, தரம் அல்லது பிரிவு எனப் பொருள்படுகிறது.

ப்ராமணன் எனும் தன்மை இறைவனை உணரும் தண்மையை குறிக்கிறது. பொருள்சார்ந்த உலகத்திலேயே கரைந்து விடாமல், விழிப்புணர்வுடன் இறைவனை உணர்பவன் ப்ராம்மணன். இருப்பதிலேயே இதுதான் உயர்ந்த நிலை. தர்மத்தை பரிபாலிப்ப‌து, எது தர்மம் என்பதை வேதாந்த‌ ஆராய்சியால் எடுத்துரைப்பது இவர்கள் கடமை. விழிப்புணர்வை குறிக்கும் சத்வ குணத்தை இது குறிக்கிறது.

சத்ரீயன் என்று சொல்லப்படுகிற தன்மை. ஆளுமையை மற்றும் நிர்வாகத்தை குறிக்கிறது. தர்மத்தை காப்பாற்றுவதும், அதர்மத்தை எதிர்ப்பதும் இவர்களின் தலையாயக் கடமை. சத்வ குணம் கலந்த ரஜோ குணம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

வைசிய தண்மை நாட்டுக்கும், சமூகத்துக்கும் பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. இது தமோ குணம் கலந்த ரஜோ குனம் அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

சூத்திரன் எனும் தண்மை அடிப்படை வேலைகளை குறிக்கிறது. சூத்திரதாரி என்றால் ஒன்றிற்கு அடிப்படையாய், ஆதாரமாய் இருப்பவன் என்பது பொருள். ஆக சூத்திரன் ஆதாரமான பல வேலைகளை செய்கிறான். மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் இவன் ஆதாரமாய் இருந்து உதவுகிறான். ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை அதிகம் உள்ளவர்களை இது குறிக்கிறது.

குறிப்பு: எனவே இது பிறப்பால் ஏற்படுவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் குணத்தாலும் செயலாலும் ஏற்படுகிறது. இதற்கு மாறாக கீதையை திரித்தவர்கள் நயவஞ்சகர்கள். கீதையின் பொருளை திரித்தும் அதை மகாபாரதம் போன்ற கதையில் திணித்தும் அதுதான் இந்த இந்திய பாரதம் என்கிற அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யப்பட்ட இந்த கருத்தானது இடிந்து விழும் பொய்யிலே கட்டிய கோட்டை ஆகும். இப் போலி கோட்டையை நம்புவதை விட சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தும் சமயத்தை தழுவுவதுதான் அறிவுடைமை. சாதி கூடாது என்று அனைத்து மொழியிலும் இறைவன் சொல்லியிருக்க, அதை பின்பற்றுவோரை விரும்புவானா? அல்லது புறந்தள்ளியவரை விரும்புவானா? அது இருக்கட்டும், அவர்களில் மெத்த படித்தவராக அறியப்பட்ட திரு.சோ ராமசாமி சாதியை நடைமுறைப் படுத்துகிறவர்களைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?   

சோவின் எங்கே பிராமணன்?


ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. போன்றவை இவர் பேசிய எங்கே பிராமணன் தொடரின் சுருக்கம். இந்த தொடரின் ஆதார செய்திகள் பெரும்பாலும் கீதை, இதிகாசம் மற்றும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. (எங்கே பிராமணனை வாசிக்க, to download)

சோவும் சாதிப்பற்றுள்ளவர், "சாதி வெறியை மட்டும் அடிப்படயாக கொண்ட, தெய்வ நம்பிக்கை அற்ற" சாவர்க்கரால் வளர்த்தெடுக்கப்பட்ட RSS-ஐ ஆதரித்தார் என்றறிந்த பின் அவரை "கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" குறளுடன் உரசிப் பார்த்தால், திரு சோ.ராமசாமி நூல்களை கசடற கற்கவுமில்லை கற்றவைகளின்படி கூட நிற்கவுமில்லை என்று உலகுக்கு முடிவுரைக்கிறது. 

 

இஸ்லாம் 

 
 
முகமது நபி அவர்கள் தனது இறுதிப் பேருரையில்: மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர! (நூல்: அஹ்மத் 22391)

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)

‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (குர்ஆன் 30:22) 

 “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)

இஸ்லாத்திலும் பிரிவுகள் இருக்கிறதே என்று கூறுவோர் உண்டு, அவர்கள் கொள்கையின் அடிப்படியில் பிரிந்து நிற்கிறார்கள், அவர்கள் மத்தியில் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. கம்யூனசித்தில் உள்ள வகைகளை சாதி என்று குறிப்பிட முடியுமா? முடியாது அல்லவா? ஏனென்றால் அவர்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்து நிற்கிறார்கள் மேலும் தீண்டாமையும் அந்த வகையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வும் கிடையாது. அது போலத்தான் இஸ்லாத்திலும் சன்னி, ஷியா, காதியானி போன்ற முக்கிய பிரிவுகளும் அதன் உட்பிரிவுகளும் உண்டு ஆனால் தீண்டாமையோ ஏற்றத்தாழ்வோ கிடையாது. பிரிவு அல்லது வகை என்பது குணங்களை அடிப்படையாக கொண்டது, சாதி என்பது பிறப்பை அடிப்படையாக கொண்டது. 

 

 பேதுரு மக்களை நோக்கி. "....எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது....." (அப்போஸ்தலர் 10:28)

“மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவருக்கு வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார்.  (அப்போஸ்தலர் 10:34, 35)


 whatsapp status - வைக்க இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்  

வேதத்தில் ஒன்றை பின்பற்றி ஒன்றை விட அனுமதி இல்லை! *

கிறிஸ்தவம் 

ஒருவன் திருச்சட்டத்தில் இருக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, ஒரேவொரு கட்டளையை மட்டும் மீறினால், அவன் எல்லா கட்டளைகளையும் மீறியவனாக ஆகிவிடுவான். - (யாக்கோபு 2:10)

இஸ்லாம் 

நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து (மற்றும்) சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இதைச் செய்கிறவருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. (குர்'ஆன் 2:85)

(நபியே!) ...பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த சிலர் இவ்வேதத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. (நபியே!) தெளிவாகக் கூறிவிடும்: “அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக்கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்...” - (குர்ஆன்13:36) 


கடவுள் உலகைப் படைத்தாரா? அல்லது கடவுள்கள் உலகத்தை படைத்தார்களா?

இந்த கேள்விக்கும் பதில் எந்த கோணத்தில் தரமுடியும் என்றால், கடவுள் என்கிற கருத்து வேதத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிச் சொல்லப்படுகிறது என்பதால் உலகில் உள்ள பல்வேறு வேதங்கள் என்ன சொல்கிறது என்று அறிவது அவசியம்.

தமிழர் சமயம் 

சைவ சித்தாந்த நூலான திருமூலரின் திருமந்திரம் இவ்வாறு இறைவன் உலகை படைத்ததை விளக்குகிறது.

445. உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே. 5

446. படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரமாகி நின்றானே. 6

447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
ஆதி படைத்தது அவை தாங்கி நின்றானே. - திருமந்திரம் 445–447

கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே எங்குமாகி நிற்பனே. - சிவவாக்கியம் 241

இஸ்லாம்  


‘வானங்களும், பூமியும் இணைங்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா ?… (திருக்குர்ஆன் 21:30)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன் 7:54)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈ யைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்:22:73.

கிறிஸ்தவம்  


துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:1-2
 

முடிவுரை


இதுபோல எத்தனை வேத ஆகம மறை நூல்களை எடுத்து பார்த்தாலும் இறைவனுக்கு அந்த நூலில் பயன்படுத்தப்படும் சொல் பன்மையில் இல்லை. ஒருமையில் தான் உள்ளது. இதுவே ஒரே கடவுள் தான் இவ்வுலகை படைத்தார் என்பதற்கு போதுமான சான்று. 

மேலும் தர்க்க ரீதியாக யோசித்தால், பல்வேறு கடவுள்கள் உலகத்தை படைத்து இருந்தால் மனித உடல் கூறுகளையும் பண்புகளையும் உட்பட ஒவ்வொரு பொருளும் ஒரே அமைப்பில் ஒரே விதிக்கு கட்டுப்பட்டு உலகம் முழுதும் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

இங்கே மனிதனுக்கு எப்படி இரண்டு கண், ஒரு மூக்கு, ஒரு இதயம் போன்ற அனைத்து உறுப்புகளும் சீராக இருக்கிறதோ, அப்படிதான் உலகம் முழுதும் உள்ளது.  இங்கு நெருப்புக்கு  சுடும் பண்பும், ஆப்பிரிக்காவில் குளிரும் பண்பும் உள்ளதா என்ன? ஒரே இறைவன்தான் அனைத்தையும் படைத்தான் என்பதற்கு வேறு எந்த தர்க்கமும் தேவை இல்லை. படைப்பு பற்றிய தரவுகள் ஒவ்வொரு வேதத்திலும் முரண்படுகிறதென்றால் அதற்கான சரியான காரண காரியத்தை ஆய்ந்து அறிவது அறிவுடைமை.  

குறித்த நேரம் வந்துவிட்டால் *

தமிழர் சமயம் 


இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். - (நாலடியார், செல்வம் நிலையாமை 6)

கருத்து: உனக்கென்று வழங்கியுள்ள நாளின் எல்லையை நீ கடக்க முடியாது. உடலையும் உயிரையும் கூறுபடுத்தும் கூற்றம் குதிக்கும்போது விலக்கிவிட்டுப் பிழைத்து வாழ்ந்தவர் இங்கு யாரும் இல்லை. பயன்படுத்த முடியாத பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குங்கள். ஒரு நாள் “தழீம் தழீம்” என்னும் ஓசையுடன் உனக்குச் சாவு மேளம் கொட்டப்படும்.

(பொ-ள்.) இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள்.

இஸ்லாம்  


ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும்.’ (ஆலுஇம்ரான்: 185)

மேலும் கூறுகின்றான்: ‘நீங்கள் எங்கிருத்த போதிலும் உங்களை மரணம் வந்தடையும். பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் வசித்தாலும் சரியே!’ (அந்நிஸா: 78)

மேலும் கூறுகின்றான்: ‘(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எந்த மரணத்தை விட்டும் நீங்கள் விரண்டோடிச் செல்கின்றீர்களோ அம்மரணம் உங்களைச் சந்தித்தேயாகும்.’ (அல்ஜுமுஆ: 08)

கடவுளை படைத்தது யார்?

இது மிக ஆழமான ஒரு கேள்வி. இது கடவுளைப்பற்றி என்பதால், வேதங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

தமிழர் சமயம்


ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து) 

 இந்த திருமந்திர பாடலின் முதல் வரி இறைவன் ஒருவனே அவன் தானே உருவானவன் என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதன் உள்ளடக்கம் என்னவென்றால்

ஒன்று - அவனை போல வேறு எதுவும் இல்லை, உண்மையில் ஈடு இணை ஏதும் இல்லா ஒரே ஒருவன்
அவன் தானே - அவன் தானே ஆனவன், அவனுக்கு தாயோ தந்தையோ அலல்து இன்னொரு கடவுளோ, வேறொரு படைப்பாளனோ இல்லை

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே (திருமந்திரம் 2684)

பொருள் : விளங்குகின்ற ஒளியே திருமேனியாகவுடைய சிவன் ஒருபோதும் பிறக்காதவன். பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் அவனது கண்கள். வளப்பம் மிக்க ஞானஒளியை வீசுவதாகிய அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். இவ்வாறாக விளக்கமான ஒளியைத் தருகின்ற மூன்றும் ஞானிகளின் உடலில் அமையும். (இலங்கு-இளங்கு-செய்யுள் விகாரம்)

இஸ்லாம் 

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.- (குர்ஆன் 112:3&4)

அல்லாஹ் வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா(குர்ஆன் 35:3)

மக்கள் (இதைப் படைத்தவர் யார்? அதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக்) கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில் ‘அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, ‘அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்’ (ஆமன்து பில்லாஹ்) என்று சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 212)

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். - (திருக்குர்ஆன் 21:22)

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 23:91) 
 

கிறிஸ்தவம் 


என்றென்றைக்கும் நீரே கடவுள் - (சங்கீதம் 90:2)

ஏனென்றால், நான் என் கையை வானத்திற்கு உயர்த்தி, நான் என்றென்றும் வாழ்கிறேன் என்று சொல்கிறேன் - (உபாகமம் 32:40)

 மேலும், அவர் எல்லாவற்றுக்கும் முந்தியவர்.  -  (கொலோசெயர் 1:17) 

முடிவுரை

எப்பொழுதும் அழிவில்லா ஆற்றல் பிறந்த பிறப்பிடமாம் கடவுள், யாரும் படைக்கும் ஒன்றாக இருக்க வில்லை.