சற்குரு வரைவிலக்கணம் என்ன? சற்குரு மற்றும் சத்குரு இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா?

சற்குரு என்றால் யார்? 

அவரது பண்புகள் என்ன? 

என்று யோசிக்கும் பொழுது எதோ ஒரு வார இதழில் வந்த துணுக்கை அடிப்படையாக கொண்டு இதற்கு பதில் அளிப்பதை விட, அல்லது எனது சிந்தனை அறிவை சுழற்றிவிட்டு ஒரு பதிலை தருவதை விட இதற்கு தமிழர் சமய, அற, இலக்கண நூல்கள் என்ன கூறி உள்ளது என்று நோக்கும் பொழுது திருமந்திரம் சற்று விளக்கமாக பாடிஇருப்பதை அறிந்து உங்களுடன் பகிர ஆசைப் படுகிறேன்.

சத்குரு என்று சிலர் தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நிலையில் அச்சொல்லுக்கு இலக்கணமாக தமிழர் வேதமமாம் திருமந்திரம் கூறும் விளக்கத்தை காண்போம்.! 

திருமந்திரம் ஏழாம் தந்திரம்

27. சற்குரு நெறி

1 தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன்
தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே.

விளக்கம்:
 தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு - ஞானம் தந்து அளிக்கும் தலைவனே சத்குரு;
தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன் - ஞானத்தை தருவதன் மூலம் தன்னை அறிய உதவுபவன்;
தாள் தந்து தத்துவ ஆதீதத்துச் சார் சீவன் - 
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே

சொற்ப்பொருள்  தாள் - ஞானம், உணர்வு. 
 

2 தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்
தவிர வைத்தான் பிறவித் துயர் தானே.
 

3 கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.
 

4 பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம் அற நீக்கு வோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே.
 

5 நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.
 

6 பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகும் மா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரி மலம் தீர்ந்து சிவகதி ஆமே.
 

7 தானே என நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப் பெற வேண்டும் சதுர் பெற
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே.
 

8 வரும் வழி போம் வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும் வழியா நந்தி பேசும் வழியைக்
குரு வழியே சென்று கூடலும் ஆமே.
 

9 குரு என்பவனே வேத ஆகமம் கூறும்
பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே.
 

10 சத்தும் அசத்தும் சத சத்தும் தான் காட்டிச்
சித்தும் அசித்தும் சிவ பரத்தே சேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச் சுகம் ஆன சொல்
அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே.
 

11 உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித்
தற்பரம் மேவும் ஓர் சாதகர் ஆமே.
 

12 எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லாச் சிவ கதி சேர்தல் விளையாட்டே.
 

13 ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித்
தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுஉற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே.
 

14 அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு சித்து அறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐம் கருமத்து இடும் தன்மையே.
 

15 ஈ சத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உள்ளே நின்ற நின் மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளிய வைத்தானே.
 

16 மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப் பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.
 

17 அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க
இசைத்திடு பாசப் பற்று ஈங்கு அறு மாறே
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத் தானும் ஒன்று அறிவிப்போன் இறையே.
 

18 ஏறு நெறியே மலத்தை எரித்தல் ஆல்
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால்
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குரு வாம் இயம்பிலே.
 

யாரெல்லாம் சற்குரு அல்ல..

26. அசற்குரு நெறி 

1 உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேத ஆகம நெறி காணான்
பணி ஒன்று இலா தோன் பர நிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசல் குரு ஆமே.
 

2 மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவுயாது ஊண் பொருள்
அந்தகர் ஆவோர் அசல் குரு ஆமே.
 

3 ஆம் ஆறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காம ஆதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமா அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்று
கோமான் அலன் அசனத்து ஆகும் குரவனே.
 

4 கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற் பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே.

5 குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின்
குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.
 

முடிவுரை:

மக்களுக்கு போதனை வழங்கி அதை தானும் ஒழுகி வருபவர் தான் சத்குரு என பாடல் 1 கூறுகிறது.

அவருக்கு கட்டுப்படும் மக்கள் செய்த வினையை போக்க உதவுபவன், தனது பாதத்தில் விழுந்து மக்கள் வணங்குவதை தவிர்ப்பவன், எமனின் தூதர்களை தவிர வைப்பவன், பிறவித் துயரை நீக்க செய்பவன் சற்குரு ஆவான் என பாடல் 2 கூறுகிறது.

பொய்யான மாயையான வழி அல்லாது, தவறான வழி அல்லாது, நந்தி தேவர் மூலம் பெறப்பட்ட இந்த வேத ஆகமாமான திருமந்திரத்தில் கூறப்படும் வழியே சற்குருவின் வழியாக இருக்கும் என்று பாடல் 8 மற்றும் 9 கூறுகிறது. அதாவது திருமந்திரத்துக்கு முரணாக எந்த கருத்தையும் சற்குரு கூறவோ செய்யவோ மாட்டார் என்று பொருள்.

சற்குரு தான் சமஸ்கிருத மொழி தாக்கத்தில் சத்குரு என்று அழைக்கப்படுகிறது. சர்குரு என்று எந்த சொல்லும் தமிழில் இல்லை.

கடவுள் ஏன் ஒரு ஏலியனாக இருக்கக் கூடாது?

 அதற்கு

முதலில் ஏலியன் என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்று நாம் அறிந்து இருக்க வேண்டும்.

இரண்டாவது கடவுள் என்பதன் வரையறை என்னவென்று அறிந்து இருக்க வேண்டும்.

மூன்றாவது, இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கடவுள் என்பது வேறு கோளிலிருந்து வந்த உயிரினமோ அல்லது அயல் நாட்டை சார்ந்த மனிதரோ அல்ல. ஏன்?

  • கடவுள் பூமிக்கு வருவது இல்லை, அவன் உயர்ந்த வானத்தில் இருக்கிறான் - இறைவன் எங்கே இருக்கிறான்?
  • கடவுளை கண்டவர் எவரும் இல்லை - கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
  • ஏலியன்களுக்கும் ஏதோ ஒரு வகையான உணவும் சுவாசிக்க காற்றும் தேவை, தெய்வத்துக்கு அதுவெல்லாம் தேவை அல்ல.
  • ஏலியன்கள் இந்த பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டது, பிரபஞ்ச விதிகளை ஏற்படுத்திய இறைவன் அவர்களுக்கு அப்பாற்பட்டவன்.

இறைவன் அவதாரம் எடுப்பானா?

இந்துமதம் 

யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || கீதை 10- 3||

அஜம் அநாதி³ம் லோகமஹேஸ்²வரம் ச = பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று
ய: வேத்தி = எவர் அறிவாரோ
மர்த்யேஷு அஸம்மூட⁴: ஸ = மானிடருக்குள்ளே மயக்கம் அவர்< /span>
ஸர்வபாபை: ப்ரமுச்யதே = பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்

விளக்கம்: பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கமடைந்தான்.

தமிழர் சமயம்

பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. - (திருமந்திரம் 86)

சொற்பொருள்:

பிறப்பு இலி - பிறப்பற்ற
நாதனைப் - ஆசிரியனை
பேர் நந்தி - பெருமையுடைய நந்தியும் 
தன்னைச் -  தன்னைப் (நந்தியைப்) போல 
சிறப்பொடு - சிறப்புடைய 
வானவர் - வானவரும் 
சென்று கை கூப்பி - சென்று கை கூப்பி 
மறப்பிலர் - மறக்க மாட்டார்கள்
நெஞ்சினுள் - நெஞ்சினுள் 
மந்திர மாலை - திருமந்திர மாலைமந்திர மாலை
உறைப்போடும் - பொருளுணர்ந்து 
கூடிநின்று ஓதலும் ஆமே - கூடிநின்று ஓதுவார்கள்

விளக்கம்: பிறப்பற்ற நாதனை பெருமையுடைய நந்தியும் அவனைப் போல சிறப்புடைய வானவரும் சென்று கை கூப்பி மறக்காமல் தனது நெஞ்சில் திருமந்திர மாலையை பொருளுணர்ந்து கூடிநின்று ஓதுவார்கள். 

இஸ்லாம்

 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

கிறிஸ்தவம் / யூதம் 


God is not a man, that he should lie; Neither the son of man,..  (Numbers 23:19)
தேவன் ஒரு மனிதனல்ல; அவர் பொய்ச் சொல்லமாட்டார். அவர் மானிடனின் மகனும் அல்ல. அவரது முடிவு மாறாதது. கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் அவர் அதனை நிச்சயம் செய்வார். கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார். (எண்ணாகமம் 23:19)

For I am God, and not a man.. (Hosea 11:9)
நான் தேவன். மனிதனல்ல (ஓசியா 11:9)


பகுத்தறிவை விட வேதங்களை நம்பும் மனிதர்கள் முட்டாள்களாக மாறுகிறார்களா?

 பகுத்தறிவு என்றால் மனிதன் தனது அறிவு மற்றும் ஆற்றலை கொண்டு, எந்த ஒன்றையும் பல்வேறு கூறுகளை அடிப்படையாக கொண்டு, சரியான முறையான அணுகுமுறை மூலம் பகுத்து அறிதல் ஆகும். அதாவது கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் விளையும் அறிவு ஆகும்.

வேதம் எனும் சமய நெறி நூல்கள் என்பது மனிதனின் அனுபவத்தின் மூலம் விளைவதல்ல. மேலும் இது மனித கண்களிலிருந்து மறைந்த விடயங்கள் என்பதால் இது மறைநூல் என்றும் அறியப்படுகிறது.

இரண்டும் முற்றிலும் முரண்படுவது போல தோன்றினாலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைகள் ஆகும். ஒன்று மற்றொன்றை சார்ந்துதான் மனித வாழ்வில் பயணிக்க முடியும்.

மனித முயற்சியின் மூலம் விளையாத அறிவை (இறைவனால் வழங்கப்பட்ட வேதம்) மனித முயற்சியை கொண்டு பகுத்து அறிவது அவசியம், ஏனென்றால் பெறப்படும் அறிவு எதுவும் வாழ்வின் நெறிகளாக பயன்படுத்தப்படவே வழங்கப்படுகிறது.

வேதங்களை பகுத்தறியாத மனிதர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியாது. எதிர்ப்படும் எதையும் பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆவர்.

  • ஒரு சில செய்திகளை மட்டும் அறிந்து கொண்டு, அல்லது
  • ஒருசில மதத்தில் நிகழும் நிகழ்வுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, அல்லது
  • அறிவியல் ஆதாரங்கள் எனும் மனிதன் ஆய்ந்து அறிந்த உலகியல் விதிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு

இறை மறுப்புக்கு செல்வோர் எவரும் இறை மறுப்பாளர்கள் மட்டுமே, பகுத்தறிவாளர்கள் அல்ல.

உதாரணமாக,

  • இந்து மத மக்கள் பின்பற்றுவதில் பிரச்சனை என்றால், இந்து மத போதனையில் அந்த பிரச்சனை உண்டா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்ய துவங்கும் பொழுது இந்து மதத்துக்கு என்று தனியாக மறைநூல் கிடையாது ஏனென்றால் இந்துமதம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் உருவானது என்று அறிய வருவோம். இந்து மதம் எனபது அரசியல் காரணங்களுக்காக, தத்துவங்களில் முரண்பட்ட பல சமயங்களை வலுக்கட்டாயமாக இணைத்ததன் மூலம் உருவானது என்று ஆய்வில் கண்டறிந்தால், அவைகளை தனித்தனியே பிரிக்க முடிகிறதா என்று பார்க்கவேண்டும். அதில் உள்ள சமணம், சைவம், வைணவம், சனாதனம் உட்பட பல சமயங்களின் வரலாறு மற்றும் மறைநூல்கள் ஆகியவற்றை அறிந்து, அதை கற்று, பகுத்து அறிய வேண்டும்.
  • அதே போல சமகாலத்தில் நம்முடன் வாழும் இஸ்லாமிய கிறிஸ்தவ சமயத்தை வாசிக்க வேண்டும். ஒரே உலகத்துக்கு ஒரே கடவுள்தான் என்றால் ஏன் இத்தனை சமயங்கள், ஏன் கடவுளின் பெயர் வேறுபடுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும். அவைகளின் வரையறைகள் மறைநூலின் படி வேறுபடுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • உலக சமயங்கள் அனைத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா? அதற்கான விதிகள் எதேனும் உண்டா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • இயற்பியலுக்கான விதியும் மெய்யியலுக்கான விதியும் வேறு படும் ஏனென்றால் இரண்டின் இயல்பும் வேறு வேறு என்று பகுத்து அறிந்து இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுளை நம்ப வேண்டும் என்றால் நான் என் கண்களால் பார்த்தல் தான் நம்புவேன் என்று கூறுவது பொருத்தமற்றது என்று உணர வேண்டும். ஏனென்றால் மெய்யியல் விதியின் இயல்பும் இயற்பியல் விதியின் இயல்பும் வெவ்வேறு தன்மைகளை உடையது ஆகும்.
  • இதையெல்லாம் பகுத்து அறிந்த பிறகு கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று ஒரு முடிவுக்கு வந்து இருக்க வேண்டும்.

வேற வேலை இல்லையாப்பா என்று கேட்டால், இவைகளை செய்பவர்தான் பகுத்தறிவாளர், இல்லையேல் வெரும் நாத்திகர் மட்டுமே.

சரி, ஒருவர் வேதத்தை நம்பும் பொழுது ஒருவர் முட்டாளாக ஆகிறாரா என்று கேட்டால்…

  • வேதம் என்றால் என்ன என்று பகுத்து அறியாமல்,
  • எது வேதம் என்று பகுத்து அறியாமல்,
  • வேதம் கூறும் அறம் என்ன என்பதை கற்று அறியாமல்,
  • அதை சரியான இடத்தில் பயன்படுத்தாமல்,

வேதத்தை நம்பினால் மூட்டாள் என்ற நிலைக்குத்தான் செல்ல நேரிடும்.

சரியான வேதத்தை கண்டறிந்து, அதை ஓதி, உணர்ந்து, தானும் அடங்கி, பிறருக்கும் உரைத்தல், ஒவ்வொரு பகுத்தறிவு ஆன்மீகவாதிக்கும் அடிப்படை ஆகும்.

ஒவ்வொரு பகுத்தறிவாளரும் கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு தான் வரமுடியும். வேதத்தை நம்பும் ஒவ்வொருவரும் பகுத்து அறிந்தால் தான் முட்டாள் ஆவதை தவிர்க்க முடியும்.

இந்து மதத்தில் உள்ள நபிமார்கள் யார்?

மிக நல்ல கேள்வி.. இவ்வாறு கேட்டவுடன் மாற்றுமத அன்பர்களுக்கு பிழையான கண்ணோட்டம் உண்டாக வாய்ப்பு உண்டு.

காரணம், இறைவன் ஒரு தேவதூதர் வாயிலாக ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக மக்களுக்கு வேதத்தை உபதேசம் செய்யும் முறை சைவ சமண வைணவ சமயங்களில் இருப்பதாக யாரும் கற்பனை கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால். ஆன்மீக சிந்தனை கொண்ட எம் மக்கள் தனது மொழியில் இறைவன் வேதம் வழங்கி உள்ளதாக கூட அவர்கள் நம்புவதில்லை.

சரி அது இருக்கட்டும், இந்து மதம் என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழர் சமயமான சைவ சமயத்தின் வேதமான திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்..!

முதலில் திருமந்திரம் வேதமா? ஆம், திருமூலரின் வாக்கு இந்த பாடல்களில் அவ்வாறுதான் கூறுகிறது.

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - (திருமந்திரம் 135.)

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (திருமந்திரம் 138.)

ஆப்ரஹாமிய மதங்களைப் போல வேதம் வழங்கப்படும் வழிமுறை உண்டா? திருமந்திர பாடல்கள் இவ்வாறு கூறுகிறது..

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

சொற்பொருள்:

நந்தி: தேவர் இனத்தில் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் செய்தி பரிமாறும் செயலை செய்பவர்கள்.

நாதன்: ஆசிரியன், குரு  

குறிப்பு: நந்தி தேவர்கள் நால்வர், ஒவ்வொரு திசைக்கு ஒருவர் பொறுப்பு, நந்தி தேவர் மூலமாக இறைவனை நாடலாம், நந்தி தேவர் திருமூலர் போன்ற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாதராக வழிகாட்டியாக இருக்கிறார். திருமூலர் போன்றவர்கள் மக்களுக்கு நாதனாக வழிகாட்டியாக மக்களுக்கு ஆக்கப் படுகிறார்கள்.

எனவே ஆப்ரஹாமிய சமயங்களைப் போலவே தமிழர் சமயங்களும் புனித செய்திகள் கீழ்கண்ட முறையில்தான் வேத உபதேசம் நடைபெற்றது.

கடவுள் >> நந்தி >> முனைவன் >> சீடர்கள் > >  மக்கள்

அதாவது அனைத்தையும் படைத்த இறைவன் ஆசிரியராக இருந்து தேவர்களின் தலைவரான சிவயோக மாமுனியிடம் கூறிய வேதத்தை, மற்ற மூன்று தேவர்களுக்கு (நந்திகளுக்கு) உபதேசித்து, இவர்கள் நால்வரும் அவரவருக்கு உரிய முனைவருக்கு ஆசிரியராக இருந்து வேதத்தை உபதேசிக்கின்றனர். இப்பொழுது வேதம் உபதேசிக்கப்பட்ட முனைவர் ஆசிரியராக இருந்து மக்களுக்கு அந்த வேதத்தை உபதேசிக்கிறார். அவரிடம் வேதத்தை கற்ற சீடர்கள் அதை மக்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்து உபதேசிப்பதன் மூலம் வேதம் மக்களிடம் பரவுகிறது. இந்த முனைவர்கள் காலத்துக்கு காலம் வேறுபடுகின்றனர், அவர்கள் முன்னே உள்ள வேதத்தில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டு தான் வருவார். 

மேலும் இவ்வாறுதான் உலக சமயங்களில் செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக திருமந்திரம் கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் கூறிய அனைவரும் நபிமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் வேதம் என்றால் என்ன, அதை எப்படி கண்டறிவது என்ற பதில் நீண்ட ஆய்வு பயணத்துக்கு பிறகுதான் கிடைக்கும்.

அந்த வகையில் கீழ்கண்டவர்கள் தமிழுக்கு வந்த நபிமார்களாக இருக்கலாம்.

    1. அகத்தியர்
    2. தொல்காப்பியர்
    3. திருவள்ளுவர்
    4. அவ்வையார் (இவர் பெண் என்பது கற்பனை)
    5. புறநானூறு எழுதிய 150 ஆசிரியர்கள்
    6. அகநானூறு எழுதியவர்கள்
    7. முனைப்பாடியார்
    8. அருஞ்செக்கலப்பு எழுதியவர்
    9. காயத்தூர் பெய்வாயின் முள்ளியார்
    10. கபில தேவர்
    11. பூதஞ் சேந்தனார்
    12. நாதகுத்தனார்
    13. காரியாசான்
    14. கணி மேதாவியார்
    15. நல்லாதனார்
    16. அப்பர்
    17. சுந்தரர்
    18. ஞானசம்பந்தர்
    19. திருமூலர்
    20. மாணிக்கவாசகர்
    21. சிவவாக்கியர்

போன்றவர்கள் சிலராக இருக்கலாம்.